Thursday, January 23, 2020

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு தேசிய தூய்மை உற்பத்தி விருது..!








(அஸ்லம் எஸ்.மௌலானா)

சுகாதார சேவையை வினைத்திறனுடன் சிறப்பாக மேற்கொண்டமைக்காக கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலைக்கு 2019ஆம் ஆண்டுக்கான 'தேசிய தூய்மை உற்பத்தி விருது' கிடைக்கப் பெற்றுள்ளது.

கொழும்பு வோட்டர் எட்ஜ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய தூய்மை உற்பத்தி விருது விழாவில் இதற்கான வெண்கல விருது மற்றும் சான்றிதழ் என்பவற்றை இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

சுகாதார சேவை வழங்கல் நிறுவனங்களினாலும் ஏனைய தொழில்சார் நிறுவனங்களாலும் விண்ணப்பிக்கப்பட்ட பல விண்ணப்பங்களுக்கு மத்தியில் கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலை அதிக மதிப்பெண் பெற்று இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது .

இவ்விருது பெற்றமையை கௌரவித்து வைத்தியசாலை நிர்வாகத்தினாரால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட வரவேற்பு நிகழ்வு ஒன்று நேற்று புதன்கிழமை (22) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது விழாவில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை தேசிய மட்டத்தில் வெள்ளி விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Wednesday, January 22, 2020

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!



சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அன்றைய தினம முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் இந்நேர்முகப் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் அன்றைய தினம் உரிய ஆவணங்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியும் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரம் தேவைப்படுவோர் 0672055344 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய மார்க்கக் கல்வி பாதிக்கப்படுவதுடன் அல்-ஆலிம் மற்றும் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைகளுக்கு மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்..

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனர். அத்துடன் அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தின் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்திருப்பதுடன் இதுவரை 09 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Sunday, January 19, 2020

சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இலங்கைக்கு முதலிடம்..! கல்முனை மாணவி ஷைரீன் இந்தோனேஷியாவில் தங்கம் வென்று சாதனை..!



அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாமுல்லாஹ் மௌலானா, இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இச்சாதனையுடன் நேற்று சனிக்கிழமை (18) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தேசிய தொலைகாட்சி ஊடகங்கள் பலவும் அங்கு வருகைதந்து இந்த சாதனை மாணவியை நேர்காணல் செய்திருந்தன.

இந்த சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது இறுதிச் சுற்றுக்கு தெரிவான 24 நாடுகளுள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய பாத்திமா ஷைரீன் முதலிடம் பெற்று தங்க விருதை வென்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொறியியல் நிறுவனத்தில் துறைசார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் கொழும்பில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இவர் தேசிய மட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார். கொங்க்ரீட் கட்டிடங்களினால் புவியில் ஏற்படும் வெப்பத்தாக்கம் தொடர்பில் இவரது  விஞ்ஞான ஆராய்ச்சி அமைந்திருந்தது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரீன், கடந்த 2012ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 ஏ சித்திகளைப் பெற்றிருந்தார்.

அத்துடன் தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, தேசிய, மாகாண மட்டங்களில் இவர் முதலிடம் பெற்றுள்ளதுடன் இம்முறை தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் திறமை காட்டி வருகின்ற இம்மாணவியின் பல்துறை சாதனைகளுக்காக அண்மையில் கல்லூரி சமூகத்தினரால் 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாமுல்லாஹ் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 9, 2020

ஆதம்பாவா மதனியின் 'பனூ உமையா' நூல் வெளியீட்டு விழா தலைநகரில் இன்று..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)


சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி எழுதிய 'பனூ உமையா' ஆட்சிக் காலம் தொடர்பிலான வரலாற்று நூலின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (09) பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு-10, டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்ட்து விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருக்கிறார்.

அத்துடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கௌரவ அதிதியாகவும் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

விஞ்ஞான ஆராய்ச்சி போட்டிக்காக ஷைரீன் மௌலானா இந்தோனேசியா பயணம்..!


அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானா, சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை (12) இந்தோனேசியா பயணமாகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் கொழும்பில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதிச்சுற்றில் பங்குபற்றி, முன்னிலைக்கு வந்த இம்மாணவி, அதன் பிரகாரம் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை இந்தோனேசியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரின், கடந்த 2012ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 ஏ சித்திகளைப் பெற்றிருந்தார்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் திறமை காட்டி வருகின்ற இவர் தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்து போட்டி  நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, தேசிய, மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளதுடன் இம்முறை தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இத்தகைய பல்துறை சாதனைகளுக்காக இம்மாணவி அண்மையில் கல்லூரி சமூகத்தினரால் 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.