Monday, May 30, 2022

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள தகுதியான மாணவிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, இதே காலப்பகுதியில் இக்காரியாலயத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Saturday, May 28, 2022

தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்கள் மீளவும் நியமனம்; கிழக்கு கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம் வரவேற்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்கள் அப்பாடசாலைகளிலேயே மீளவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருப்பதை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

அண்மையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிலர், நிரந்தர நியமனத்தின்போது அப்பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படாமல் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட காரியாலயங்களில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நடைமுறை தவறானது எனத் தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் போன்றோருக்கு எமது சங்கத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள், மூன்று வருடங்களுக்கு பின்னரே தேசிய பாடசாலை கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும் எனவும் அதுவரை அவை மாகாண சபைகளாலேயே நிருவகிக்கப்படும் எனவும் இந்த நடைமுறையை கருத்தில் கொள்ளாமல் அப்பாடசாலைகளில் கடமையாற்றியோர் வேறு காரியாலயங்களுக்கு இணைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர் எனவும் அக்கடிதங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதைத்தொடர்ந்து, தற்போது இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டு, கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள காரியாலயங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருந்த அனைவரும் அவரவர் கடமையாற்றிய பாடசாலைகளுக்கே மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை நாம் வரவேற்கின்றோம்- என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Friday, May 27, 2022

கல்முனை சந்தையில் நியாய விலையில் பொருட்களை விற்க நடவடிக்கை; சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (25) ஆசாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெற்றபோது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 250 இற்கு மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் முன்னணி வர்த்தக மையமாகத் திகழ்கின்ற இந்த சந்தையை முன்னேற்றுவதற்கான விடயங்கள் பற்றியும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக்கர்கள் எதிர்வரும் காலங்களில் பெரிதாக இலாபங்களை எதிர்பார்க்காமல் நுகர்வோருக்கு உணவுப் பொருட்களை முடிந்தளவுக்கு குறைந்த விலையில் விற்பதற்கு முன்வர வேண்டுமென சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளுக்கு அனைத்து வர்த்தகர்களும் இணக்கம் தெரிவித்ததுடன் எதிர்காலங்களில் நியாயமான விலைகளில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உறுதியளித்துள்ளனர்.

இந்த விடயத்தை எமது சந்தை வர்த்தக சங்கம் மிகவும் கரிசனையுடன் கண்காணித்து, வழிநடாத்தும் என அதன் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

கடந்த கொரோனா அசாதாரண சூழ்நிலையின்போது கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக அமுல்படுத்துவதிலும் பொது மக்களை பாதுகாக்கின்ற விடயத்திலும் இப்பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம், மாநகர சபையுடனும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து ஆக்கபூர்வமான செயற்பாட்டுகளில் ஈடுபட்டு, முன்னுதாரணமாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.










Monday, May 23, 2022

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் வீசும் துர்வாடை விவகாரம்; நீதிமன்றில் வழக்குத் தாக்கல்; 06ஆம் திகதி ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்திலும் கல்முனையின் சில பகுதிகளிலும் அண்மைக்காலமாக வீசும் துர்வாடையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளருமான சட்டத்தரணி ரொஷான் அக்தர் இவ்வழகைத் தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 08 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை (23) மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் அவர்கள், எதிர்வரும் 06ஆம் திகதியன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்ததுடன், அன்றைய தினம் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

மனுதாரரான சட்டத்தரணி ரொஷான் அக்தர் சார்பில் சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.ரஸ்ஸாக், ரைசுல் ஹாதி, ஜாவித் ஜெமீல், சுஹால் பிர்தௌஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சாய்ந்தமருது பிரதேசத்திலும் அண்மைய நாட்களாக கல்முனையின் சில பகுதிகளிலும் மிக மோசமான துர்நாற்றம் வீசி வருகின்ற போதிலும் அத்துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது என்பதை துல்லியமாகக் கண்டறியவோ அதனை இல்லாமல் செய்வதற்கோ சந்தேகத்திற்கிடமான இடங்களை முறைப்படி கண்காணிப்பு செய்து,  நடவடிக்கை எடுக்கவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தவறியிருக்கிறார்கள் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டியிருப்பதாக சட்டத்தரணி ரொஷான் அக்தர் தெரிவித்தார்.

இத்தூர்நாற்றத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே பொது நலன் கருதி 1979ஆம் ஆண்டு 15ஆம் இழக்க குற்றவியல் நடவடிக்கை கோவையின் பிரிவு 136 (1) (அ) பிரிவின் கீழ் இவ்வழகைத் தாக்கல் செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, May 17, 2022

சாய்ந்தமருது துர்நாற்ற விவகாரம்: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள்; மேயரிடம் யஹியாகான் வேண்டுகோள்..!

சாய்ந்தமருது பகுதியில் அண்மைக்காலமாக வீசும் துர்நாற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த கல்முனை மாநகர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாய்ந்தமருது துர்நாற்ற விவகாரம் தொடர்பாக முதல்வரின் அறிக்கையை அவதானித்ததன் பின்னர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளின் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

துர்நாற்றம் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணமான நபர் அல்லது நபர்கள் எமது மு.கா. கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பின்வாங்கக் கூடாது.

சாய்ந்தமருது மக்கள் மிகக்கடுமையான துர்நாற்றத்தை தற்காலத்தில் எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக நான் சாய்ந்தமருதில் இருந்தபோது இதனை நன்கு உணர முடிந்தது. இது மிகப் பெரும் நோயை உண்டாக்கும் துர்நாற்றமாகவே மக்கள் பார்க்கின்றனர்.

கல்முனை மாநகர முதல்வர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று கனகச்சிதமாக ஆய்வு செய்து, துர்நாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரியவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் யஹியாகான் வலியுறுத்தியுள்ளார்.

Sunday, May 15, 2022

சாய்ந்தமருதில் வீசும் துர்வாடைக்கு விலங்கறுமனைதான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க பின்நிற்க மாட்டேன்..! -கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் உறுதி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் சகிக்க முடியாதளவு வீசும் துர்வாடையானது விலங்கறுமனையில் இருந்து வெளிவருவதற்கான காரணிகள் தென்படவில்லை என களப்பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறாயினும் இத்துர்வாடைக்கு அந்த விலங்கறுமனைதான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்நிற்க மாட்டேன் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளில் மிக மோசமான துர்வாடை வீசி வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நானும் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திருந்தோம். இதன்போது முதலில் துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தனக்கு அறியத்தருமாறும் அதன் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் அவரிடம் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில், எமது மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டத்திற்கப்பால் அமைந்துள்ள விலங்கறுமனையை பகல் வேலைகளிலும் இரவு வேளைகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் திடீர் விஜயம் மேற்கொண்டு, பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த துர்வாடை வீசுவதற்கான வாய்ப்புகள், காரணங்கள் எவையும் விலங்கறுமனையிலோ அதன் சுற்றுச் சூழலிலோ கண்டறியப்படவில்லை என்பதாக குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் இத்துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது கல்முனையை நோக்கி செல்லும் வண்ட் வீதி என்றழைக்கப்படுகின்ற குளக்கரை பாதையோரமாக நீர்நிலைகளில் மாட்டுக்கழிவுகளும் கோழிக்கழிவுகளும் இதர கழிவுகளும் மூடை மூடையாக போடப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டம் என்பவற்றை அண்மித்துள்ள வண்ட் வீதியின் ஒரு பகுதியிலுள்ள நீர்நிலையினுள் நூற்றுக்கணக்கான மூடைகளில் ஆடு, மாடு மற்றும் கோழிக்கழிவுகள் காணப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் எழுகின்ற துர்வாடைக்கு இவைதான் காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத்துறையினரால் ஊகிக்கப்படுகிறது.

இதையடுத்து, மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் பிரிவினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் முடியுமானளவு கழிவுகள் மீட்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. இங்கு இன்னும் ஆழமான பகுதியில் இவ்வாறான கழிவுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவற்றையும் ஏனைய குளக்கரை பகுதிகளிலும் இவ்வாறான கழிவுகள் இருக்குமாயின் அவற்றையும் அகற்றுவதற்கு மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

விடயம் இவ்வாறிருக்க சிலர் முகநூல்களில் இத்துர்வாடையானது மேற்படி விலங்கறுமனையில் இருந்துதான் வெளிப்படுகிறது எனவும் இதனை மாநகர சபை கண்டுகொள்ளவில்லை எனவும் மாநகர முதல்வராகிய நான் விலங்கறுமனை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் அபாண்டங்களை சுமத்தியுள்ளனர்.

இத்துர்வாடை விலங்கறுமனையில் இருந்து வெளிவரவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் களப்பரிசோதனை செய்து, உறுதிப்படுத்தியிருக்கின்றபோது காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் என் மீது வேண்டுமென்றே சேறு பூசுவதற்காக வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். சரி- நாற்றம் இங்கிருந்துதான் வருகிறதோ இல்லையோ- இவர்கள் கூறுவது போன்று விலங்கறுமனையை பூட்டி விடுவது பெரிய காரியமல்ல. ஆனால் மாட்டிறைச்சியை எமது மக்கள் நுகர முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு- முடக்கம் காரணமாக சந்தைகளையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது எமது மக்கள் மாட்டிறைச்சிக்காக அங்கலாய்த்ததை மறந்து விட முடியாது. அதனால் மாட்டிறைச்சியை நடமாடும் விற்பனை மூலம் கிடைக்கச் செய்வதற்கு எமது மாநகர சபையினால் விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததை நினைவூட்ட விரும்புகின்றேன்.

தற்போதும் ஏதாவது காரணத்தின் நிமித்தம் ஒரு நாளாவது மாடறுக்கப்படா விட்டால், அதுவும் வெள்ளிக்கிழமை என்றிருந்தால் நாம் எவ்வளவு பாடுபடுகின்றோம். மாடறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் நாம் எப்படியெல்லாம் கொதிக்கிறோம். ஆனால் நமது பகுதியிலுள்ள விலங்கறுமனையொன்றின் தேவையை உணராமல், யதார்த்தங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, அதனைப் பூட்டி விட வேண்டும் எனவும் இல்லையேல் மேயருக்கு வருமானம் கிடைக்கிறது என்றும் சிலர் இலாபகமாக சொல்லி விடுகிறார்கள்.  

சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்கனவே அமையப்பெற்றிருந்த விலங்கறுமனை குடியிருப்புப்பகுதியை அண்மித்திருந்தமையினால், பொது மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே அது அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் விலங்கறுமனையொன்றின் அவசியம் கருதி ஊரில் இருந்து வெகு தொலைவில் கரைவாகு வயல் பகுதியொன்றில் அதனை அமைப்பதற்கு கல்முனை மாநகர சபையினால் 2009/2010 காலப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அது சுமார் 13 வருடங்களாக அவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக மக்களை விசனப்படுத்துமளவுக்கு சாய்ந்தமருது பிரதேசமெங்கும் வீசி வருகின்ற பெரும் துர்நாற்றம் முன்னொருபோதும் ஏற்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.

எனவே, துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதை சரியாக கண்டறிய வேண்டும். சுகாதாரத்துறையினர் கூறுவது போன்று, கரைவாகு ஆற்றங்கரை நீர்நிலைகளில் கொட்டப்பட்டிருக்கின்ற ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குக் கழிவுகள்தான் அதற்குக் காரணமாக இருக்குமாயின், சாய்ந்தமருது தொடக்கம் கல்முனை வரை நீண்டு செல்லும் நீர் நிலைப்பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்து, அக்கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கபட வேண்டும். இது பெரும் செலவுடன் கூடிய பாரிய வேலைத்திட்டமாக இருக்கும்.

இல்லை, குறித்த விலங்கறுமனையில் இருந்துதான் அந்த நாற்றம் வருகிறது என்று நிரூபிக்கப்பட்டால், அந்த விலங்கறுமனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். அங்கு கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்ட சுத்தம், சுகாதாரத்திற்கு கேடான விடயங்கள் குறித்து அவ்வப்போது அதன் உரிமையாளரை அழைத்து, தேவையான அறிவுறுத்தல்களையும் பணிப்புரைகளையும் விடுத்து, சீர்செய்திருக்கிறோம். இந்த விடயத்திலும் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவே இருக்கிறேன். மேலும், பொது மக்கள் கோரிக்கை விடுத்தால் இதனைப் பூட்டி விடுவதற்கும் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆகையினால், எதைச் செய்வதானாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். குறித்த நீர்நிலைகளில் இவ்வாறான கழிவுகளைக் கொட்டுகின்ற ஈனப்பிறவிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்- அவர்களை அடையாளப்படுத்துவதற்கு பொது மக்கள் முன்வர வேண்டும் என்று நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம். சில தினங்களுக்கு முன்னர் இக்கழிவுகள் அகற்றப்பட்ட நீர்நிலைப்பகுதியில் மீண்டும் கழிவுப்பொதிகள் போடப்பட்டிருக்கின்றன. அவ்வாறாயின் இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

எமது மாநகர சபைக்குட்பட்ட ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக வீடுகளிலும் பஸார்களிலும் சந்தைகளிலும் அரச, தனியார் நிறுவனங்களிலும் வைத்தியசாலைகளிலும் பாடசாலைகளிலும் அன்றாடம் திண்மக்கழிவகற்றல் சேவையை மேற்கொள்வதே பெரிய சவாலாக இருந்து வருகின்றது. ஆளணி மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் சேகரிக்கின்ற குப்பைகளை டம்மிங்க் செய்வதற்கான இடமொன்று இல்லாத நிலையிலும் பலத்த சவால்களுக்கு மத்தியிலேயே இச்சேவை முன்னெடுக்கப்படுகிறது.

தவிரவும், நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருட்களினதும் வாகன உதிரிப்பாகங்களினதும் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு என்பன ஒருபுறம், மாநகர சபைக்கான வருமானம் வீழ்ச்சியடைந்து, நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இன்னொரு புறம், இவற்றுக்கு மத்தியிலேயே திண்மக்கழிவகற்றல் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சட்டவிரோதமாக நீர்நிலைகளில் மூடை மூடையாக கொட்டப்படுகின்ற கழிவுகளை நாளாந்தம் அகற்றுவதென்பது சாத்தியமற்ற விடயம் என்பதை எல்லோரும் புறிந்து கொள்ள வேண்டும்.

ஆகையினால், துர்வாடைக்கான உண்மையான காரணிகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒண்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதேவேளை, விலங்கறுமனையை தொடர்ந்தும் கண்காணிப்பு செய்து, அங்கிருந்துதான் இந்த மோசமான துர்நாற்றம் எழுகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அந்தளவுக்கு இல்லா விட்டாலும் அங்கு சுத்தம், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கத்தக்க ஏதாவது குறைபாடுகள் தென்படுமாயினும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்விடயங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முன்வைக்கப்படுகின்ற எவ்விதமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முழுமையாக செயற்படுத்துவதற்கு மாநகர சபை முழுமையாக முன்னிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விடயத்தில் அரசியல் காரணங்களுக்காக எம்மீது சேறு பூசுவதை விடுத்து, நேர்மையுடன்  அறிவுபூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் சிந்தித்து செயற்படுவதற்கு முன்வருமாறு அன்பாய் அழைக்கின்றேன்.

மேலும், சாய்ந்தமருது தொடக்கம் கல்முனை வரையான குளக்கரை வீதியின் இரு மருங்கிலுமுள்ள நீர் நிலைகளில் விலங்குக்கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாக- முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாக இருக்கிறது. இங்கு விலங்குக் கழிவுகளை கண்மூடித்தனமாக கொட்டுகின்ற நபர்கள் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கோ மாநகர சபைக்கோ வழங்க பொது மக்கள் முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்றோம். கிடைக்கப்பெறுகின்ற தகவல்களைக் கொண்டே உரிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலே எதிர்காலங்களில் நீர்நிலைகளிலும் பொது இடங்களிலும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Saturday, May 14, 2022

இயலாது என்று ஒதுங்குகின்றவர்களை விட சவாலை ஏற்றுக்கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி பார்க்கலாம்; மயோன் முஸ்தபா கருத்து

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மிகவும் இக்கட்டான கட்டத்தில்- நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்வராமல் பயந்து ஒதுங்குகின்றவர்களை விட- சவாலை ஏற்றுக் கொண்டு துணிச்சலுடன் முன்வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கிப் பார்க்கலாம் என்று முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; 

 அதிகரித்த கடன் சுமை, கடனை மீள செலுத்த முடியாமை, ரூபாவின் மதிப்பிறக்கத்தின் மூலம் உள்நாட்டு வர்த்தக பாதிப்பு, ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடு, இறக்குமதியில் கட்டுப்பாடு- இவற்றால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவதில் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவை அனைத்தும் உடன் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை விடயங்களாகும்.

இந்த பின்னணியில்தான் மக்கள் போராட்டம் உருவானது, எல்லோரும் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கினார்கள், பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியது, தீர்வுகள் இன்றி நாட்கள் கடந்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆள் ஆளுக்கு குற்றம் சுமத்தி நாட்களை கடத்தினர். அரசை பொறுப்பேற்குமாறு பல தடவை எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் யாரும் முன்வராத சூழல் காணப்பட்டது. 

இறுதியாக அகிம்சை வழியில் போராடிய போராட்டகாரர்கள் தாக்கப்பட்டனர், போராட்டக்காரர்களை தாக்கியதால் மக்கள் ஆத்திரத்தில் ஆளும்தரப்பு எம்.பி.க்கள், அமைச்சர்களின் வீடுகள், சொத்துகளை தேடித் தேடி தீ வைத்தனர், பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

இத்தகைய அபாய சூழலில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை ஏற்ப்பட்டது. உடனடியாக ஆட்சியை அமைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல தடவைகள் ஜனாதிபதி அழைத்தார். இறுதி நேரம் வரை இருந்து விட்டு தனது கட்சிக்காரர்கள் ஒரு சிலரின் அழுத்தத்தின் பின்னணியில், அதுவும் ரணிலை நியமிக்க முடிவானதன் பின்னரே- தான் பதவியேற்கப் போவதாக சஜித் அறிவித்தார். இது மிகவும் கோழைத்தனமான முடிவாகும்.

நாட்டில் இவ்வளவு பிரச்சினை உருவாகியும் எதிர்கட்சிகளால் மக்கள் சார்பாக ஒன்றுபட்டு தீர்மானம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டு மக்கள் குறித்து எந்தவித கவலையும் அவர்கள் கொள்ளவில்லை. தங்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தையே குறிக்கோளாக கொண்டு நிபந்தனைகள் பல விதித்தனர். ஒவ்வொருவரும் தனித் தனியாக ஆட்சியமைக்க நினைத்தனர். அது முடியவில்லை. இத்தகைய பின்னணியில் யாரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்க முன்வராத சூழலில்தான் வேறு வழியின்றி ரணிலை அழைத்து பொறுப்பை கொடுத்துள்ளனர்.

இருந்த போதிலும் ரணிலின் நியமனம் காலத்திற்கு ஏற்றதாகும். நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து மிகச்சிறந்த முடிவினை எடுக்கும் ஆற்றல் அனுபவம் வாய்ந்தவர், சர்வதேச இராஜதந்திர உறவும் மதிநுட்பமும் நிறைந்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கொண்ட பல திட்டங்களை கடந்த காலங்களில் நாட்டுக்கு அவர் முன்வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கு மக்களோ பிற அரசியல் தலைமைகளோ சரியான இடம் கொடுக்கவில்லை.

எவ்வாறாயினும் இன்றைய சூழலில் ரணிலால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை அவரின் எதிரிகள் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். எவரும் அவர் தகுதியற்றவர், திறமையற்றவர் என்று கூறவில்லை. பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு உதவுவதாகவும் உறுதியளித்திருக்கின்றன. இது நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கன்ற எமது மக்களின் விடிவுக்கு நல்ல சமிக்ஜையாகவே தெரிகிறது.

அதேநேரம் அவர் பதவி ஏற்ற கையோடு டொலரின் விலை ஸ்திரமடைய தொடங்கியுள்ளது, ஜப்பான் மற்றும் எக்ஸிம் வங்கி என்பன உடனடியாக எமக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. பல பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வரவுள்ள நல்ல செய்திகள் எமக்கு கிடைக்கின்றன. 

விரைவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் அரபு நாடுகளையும் உள்ளடக்கி இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டினை நடத்தி, அதன் மூலம் நிலையான உதவித் திட்டத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை அமைப்பதற்கு பிரதமர் ரணில் திட்டமிட்டுள்ளார். அவரது இந்த இராஜதந்திர முயற்சி வெற்றியளிக்குமாயின்- இலங்கை பொருளாதார மீட்சி பெறுவதற்கு வெகுகாலம் எடுக்காது என்பது திண்ணம். 

இவ்வாறான விடயங்கள்- சிதைந்து போயுள்ள எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும் சிறந்த வழி முறைகளாக நாம் நோக்கலாம். என்னால் இயலாது என்று ஒதுங்குகின்றவர்களை விட- முடியும் என சவாலை ஏற்றுக்கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி குறிப்பிட்ட கால அவகாசத்தினையும் வழங்கி பார்க்கலாம் என்று மயோன் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Monday, May 2, 2022

கல்முனை ஸக்காத் நிதியத்தின் உப பொருளாளர் ஹாரூன் மறைவுக்கு முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) 

கல்முனை பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் உப பொருளாளரும் பிரபல வர்த்தகருமான முஹம்மட் ஹாரூன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துக்கமும் அடைந்துள்ளேன். அன்னாரது மறைவு கல்முனை மாநகருக்கு பேரிழப்பாகும் என்று கல்முனை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நானும் ஒரு வாடிக்கையாளர் என்ற ரீதியில் அன்னாருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளேன். எனது நீண்ட கால உறவுக்குச் சொந்தக்காரர்.

எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். சமூக சேவைகளிலும் மிகவும் அக்கறையுடன் கூடிய ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார். ஏழைகளுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர். அதனால் பைத்துஸ் ஸக்காத் அமைப்பிலும் அங்கம் வகித்து, முக்கிய பொறுப்பை வகித்து வந்திருக்கிறார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் ஹாரூன், அதற்கான  மருத்துவங்களை மேற்கொண்டு வந்திருந்தார். அப்போதெல்லாம் நாங்கள் ஆறுதலையும் தெம்பையும் வழங்கி வந்தோம்.

இந்நிலையில் அவரது திடீர் மறைவானது எமது கல்முனை மாநகருக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது. றமழான் மாதத்தின் ஒரு புனிதமான தினத்தில் அவரை இறைவன் தன்னகத்தே அழைத்திருக்கிறான்.

அன்னாரது மறைவினால் துயறுற்றிக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.