Tuesday, August 30, 2022

இடைக்கால பட்ஜெட்டில் அரச ஊழியர்கள், ஓய்வூதியருக்கு பாரிய அநீதி; பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோருக்கு பெருத்த ஏமாற்றமே பரிசு; -தென்கிழக்கு கல்விப் பேரவை கவலை..!

(செயிட் ஆஷிப்)

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் அரச சேவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தென்கிழக்கு கல்விப் பேரவை கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பேரவையின் தவிசாளர் ஏ.எல்.எம்.முக்தார், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவை ஊழியர்களின் சம்பளமோ ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவோ சற்றும் அதிகரிக்கப்படாமல் கைவிடப்பட்டமை பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.  

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரச சேவை ஊழியர்களும் ஓய்வூதியர்களும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் மூலம் இவர்கள் அரசாங்கத்தினால் கணக்கில் எடுக்கப்படாமல் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அவர்களது சமபளத்தை அதிகரிப்பதற்கு கடந்த பட்ஜெட்டில் நிதியொதுக்கப்பட்டிருக்கிறது. அப்போது கூட அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதை விட தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மூன்று, நான்கு மடங்காக அதிகரித்துள்ள சூழ்நிலையில் இவர்களுக்கு ஒரு சதம் கூட சம்பள அதிகரிப்போ விசேட கொடுப்பனவோ வழங்க எந்த முன்மொழிவும் மேற்கொள்ளப்படவில்லை.

அரச சேவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்க்கைச் சுமைக்கு ஓரளவாவது ஆறுதலளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் சிறுதொகை அதிகரிப்பைக்கூட வழங்க அரசாங்கம் முன்வராதிருப்பதையிட்டு எமது அதிருப்தியையும் கணடனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலையில் இத்தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவர்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கும் வகையிலான திட்டமொன்றை விசேடமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் - என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 04 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்துள்ளனர் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இவ்வாறு சித்தியடைந்த மாணவிகளுள் 04 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இவர்கள் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 06வது தொகுதி மாணவியர்களாவர். முன்னைய 05 தொகுதி மாணவிகளும் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்து, பெரும்பாலானோர் பல்கலைக் கழகங்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தெரிவாகியிருந்தனர்.

ஏற்கனவே இக்கல்லூரியை சேர்ந்த 15 மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இக்கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர்.

இதுவரை இங்கிருந்து 30 பேர் மெளலவியாக்களாக வெளியேறியுள்ளனர். இவர்களுள் பலர் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்பது சிறப்பம்சமாகும்- என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாதனை என்றாலும் தண்டனைக்குரிய குற்றமே; 09ஆம் வகுப்பு மாணவன் A/L பரீட்சை எழுதிய விவகாரம் தொடர்பில் கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம் அறிக்கை..!

-செயிட் ஆஷிப்- 

09ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சை எழுதியுள்ளமையானது பொதுப் பரீட்சை விதிமுறைகளை மீறும் செயற்பாடாகும். இது குறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு, தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம், இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது விடயமாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

பரீட்சை விதிமுறைகளை மீறி, க.பொ.த.உயர்தர பரீட்சை எழுதி சித்தி பெற்றுள்ள இம்மாணவனை பாராட்டி, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறன. உண்மையில் இம்மாணவனை பரீட்சைத் திணைக்களம் பரீட்சையை எழுதுவதற்கு எவ்வாறு அனுமதித்தது என்பது பெரும் மர்மமாக உள்ளது.

இம்மாணவனது சாதனை பரீட்சை சட்ட விதிமுறைகளுக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.

இம்மாணவன் மேற்படி பரீட்சையை வெளிவாரியாகவே எழுதியுள்ளான். இம்மாணவன் தம்மை எவ்வாறு மாகாணக் கல்வித்திணைகளத்தில் பதிவு செய்து கொண்டான்? இவனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட அதிகாரி யார்?

இம்மாணவனது பரீட்சைக்கான விண்ணப்பத்தை உறுதிப்படுத்திய கிராம சேவகர் என்ன அடிப்படையில் இவனது விண்ணப்பத்தினை உறுதிப்படுத்தினார்?

தரம் ஒன்பது கற்கும் மாணவன் என்பவன் 14 அல்லது 15 வயது உடையவனாக இருப்பான். இவனுக்கு தேசிய அடையாள அட்டை எவ்வாறு வழங்கப்பட்டிருக்கும்? 

தேசிய அடையாள அட்டை க.பொ.த.உயர்தரத்திற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை இன்றி எவ்வாறு பரீட்சை மண்டபத்தில் மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்?

இம்மாணவனுக்கு தேசிய அடையாள அட்டை இம்மாணவனுக்கு இல்லாதிருப்பின் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் DCX எனும் Cover இல் இரகசிய அறிக்கையினை அனுப்பி இருப்பார். அந்த அறிக்கை பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே முடிவு வெளியிடப்படும்.

இந்நடைமுறை இம்மாணவன் விடயத்தில் ஏன் பின்பற்றப்படவில்லை?

இவ்விடயங்களுக்கு முதலில் தெளிவு காணப்பட வேண்டும். பொதுப் பரீட்சை சட்ட விதிகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள இக்காலப் பகுதியில் பரீட்சை விதிமுறை மீறல் இம்மாணவன் விடயத்தில் கடுமையாக மீறப்பட்டுள்ளது.

இம்மாணவன் ஏற்கனவே 08ம் தரத்தில் கல்வி பயிலும்போது க.பொ.த.சா.தர பரீட்சைக்கு தோற்றி திறமைச் சித்திகளை பெற்றதாகவும் தெரிய வருகிறது.

பிழைகளையும் சரியாக செய்தால் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் கலி காலத்தில் வாழ்கின்றோம் என்பதை எண்ணும்போது இலங்கையில் கல்வித்துறை எங்கே போகிறது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்- என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை, நற்பிட்டிமுனையில் யானைத் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் இரவு நேரங்களில் அதிகரித்துள்ள யானைகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மின்னொளி வசதிகளை அதிகரிப்பதற்கு கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 53ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று (29) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபை உறுப்பினர் சீ.எம்..முபீத் விடுத்த கோரிக்கையையடுத்து, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் இப்பிரச்சினையை பிரஸ்தாபித்து உரையாற்றுகையில்;

இரவு நேரங்களில் நற்பிட்டிமுனை பிரதேசத்தினுள் காட்டு யானைகள் பட்டி பட்டியாக திரண்டு வந்து, விவசாய நிலங்களையும் பொது மக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. ஊருக்குள் அத்துமீறி நுழையும் யானைகளினால் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

ஆகையினால், யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக இப்பிரதேசத்தில் விசேடமாக மின்னொளி வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்காக வெளிச்சம் கூடிய மின்குமிழ்கள் அவசரமாக பொருத்தப்பட வேண்டும். அத்துடன் யானைகளை துரத்துவதற்காக பட்டாசுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து முதல்வரின் ஆலோசனைக்கமைவாக குறித்த பிரதேசத்தில் மேலதிக மின்குமிழ்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, கல்முனை அஹமட் பஸாருக்கு பின்னாலுள்ள பகுதியிலும் யானைகள் ஊடுருவுவதாக சுட்டிக்காட்டிய மாநகர சபை உறுப்பினர் எம்.சிவலிங்கம், இப்பகுதியையும் வெளிச்சமூட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து குறித்த நடவடிக்கையின்போது இப்பகுதியையும் உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது.



Monday, August 29, 2022

இலக்கை அடைய நினைப்பவருக்கு எதுவுமே தடை இல்லை; A/L பரிட்சை முடிவு குறித்து யஹியாகான் கருத்து.

க,பொ,த (உ/த)ப் பரீட்சை முடிவுகளின் படி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தனது வாழ்த்துக்கள், உரித்தாகட்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். 

வாழ்க்கையில் மேடு - பள்ளங்கள் - வெற்றி- தோல்விகள் ஏற்படுவது சகஜம். அந்த வகையில், பல்கலைக்கழகம் நுழைவதற்கான பெறுபேறுகளை பெறத் தவறிய மாணவர்களின் எதிர்காலம் சுபீட்சம் பெற பிரார்த்திப்பதாகவும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதற்கு ஏற்ப - மேற்படி மாணவர்கள் மிகச் சுறுசுறுப்பாக தம்மை அடுத்து வரும் உயர்தர பரிட்சைக்கு தயார்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகிறேன்.

இரு கரங்களை இழந்து - கால்களால் பரிட்சை எழுதிய மாணவி ஒருவர் 3 ஏ சித்திகளை பெற்றிருப்பது - இலக்கை அடைய நினைக்கும் எவருக்கும் எதுவுமே தடை இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பொருளாதார நெருக்கடி - அரசியல் பூகம்பம் என்பவற்றுக்கு மத்தியில்  பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கும் - சிறந்த பெறுபேறுகளைகளைப் பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும் என்றும் யஹியாகான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, August 28, 2022

சாய்ந்தமருது மக்களைமீ ண்டும் குழப்பாதீர்கள்; சவீமின் அறிக்கைக்கு யஹியாகான் பதில்..!

இறைவன் உதவியுடன் சாய்ந்தமருது நகர சபை மலர்வது உறுதி - என்ற முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்திருப்பதானது சாய்ந்தமருது மக்களை மீண்டும் ஏமாற்ற எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்க முடிகின்றது.

இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் விடுத்துள்ள பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நண்பர் சலீமின் அறிக்கையை அவதானித்தபோது அழுவதா ? சிரிப்பதா ? என்றே தோன்றுகின்றது.

சாய்ந்தமருது மக்களை மீண்டும் நகர சபை கோஷத்தை முன்வைத்து குழப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் எந்தவொரு விடடுக்கொடுபபுக்கும் இடமில்லை. அதில், நானும் எங்கள் கட்சியும் தலைமைத்துவமும் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால், கல்முனையை அழித்து ஒழித்து விட்டு சாய்ந்தமருது நகர சபை மலர்க் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். 

நான் அறிந்த வகையில், அமைச்சு மட்டத்தில் - சாய்ந்தமருது நகர சபை தொடர்பான எந்தவொரு நகர்வும் இடமபெறறதாக தெரியவில்லை. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் அதனை பகிரங்கமாக ஆதாரத்துடன் மக்கள் முன் சம்ர்ப்பிக்க வேண்டும். அதைவிடுத்து மாயாஜால கருத்துக்களை கூறி ஏமாற்ற முயலக் கூடாது.

சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி வெளிவந்தால் மட்டுமே உண்மை. அதற்கும் நீங்களோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவரோ உரிமை கோர முடியாது. 

சாய்ந்தமருது மக்களே மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் இருங்கள். இவ்வாறான போலி பிரச்சாரங்கள் - பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி விடாதீர்கள். இது ஏதோ ஒரு காரணத்துக்காக எம்மை ஏமாற்ற எடுக்கப்படும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

கருஜயசூரியவுடனான சந்திப்பில் நானும் நீங்களும் பங்குபற்றினோம்.

ரவூப் ஹக்கீமை சந்திக்க முடியாமல் நீங்கள் இருந்தபோது - தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தது நான்.

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக சந்திக்க - விமான நிலையம் சென்று கொண்டிருந்த பைசால் காசீம் எம்பியை திருப்பி அழைப்பித்து பாராளுமன்றத்தில் சந்திப்பை மேற்கொண்டமை என அனைத்தையும் இப்போது நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை.

எனவே தயவு செய்து, சாய்ந்தமருது மக்களை இன்னும் இன்னும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். மக்களே நீங்களும் ஏமாறாதீர்கள் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Saturday, August 27, 2022

அதாவுல்லாவின் கட்சியைச் சேர்ந்த சபீஸ் இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும்; யஹியாகான் அறிவுரை

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை விமர்சிப்பதற்கு சபீஸஸுக்கு எந்தவொரு அருகதையும் இல்லை என முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அதாவுல்லா அணியைச் சேர்ந்த சபீஸ் - அதாஉல்லாவுக்கு முதலில் விசுவாசமாக இருந்து காட்டட்டும். இரட்டை வேடம் போடுவதை அவர் முதலில் நிறுத்த வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்திற்கு கடந்த 3 தசாப்தங்களாக தலைமைத்துவம் வழங்கி வரும் ரவூப் ஹக்கீமை விமர்சிக்க எந்தவொரு தகுதியுமற்றவர் சபீஸ். 

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு பூராகவும் சர்வதேசம் வரை அறியப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் தலைமை என்றால் அது முகா தலைவர் ஹக்கீம் மட்டும்தான்.

சமூகம் சார்ந்த விடயங்கள் மாத்திரமன்றி தேசியப் பிரச்சினை வரை அனைத்து விடயங்களிலும் பொறுப்புணர்ச்சியோடு செயலாற்றி வரும் தலைவர் என்றால் அதுவும் ரவூப் ஹக்கீம் தான். 

சபீஸ் என்பவர் தேசிய காங்கிரஸை சேர்ந்தவர். முஸ்லிம் காங்கிரஸை அழிக்க துடிக்கும் அதாஉல்லா அணியைச் சேர்ந்தவர்.

ரணில் சாரதியாக இருக்கும் வாகனத்தில் ஒருபோதும் ஏறப்போவதில்லை என்ற மு.கா ஸ்தாபகத் தலைவரின் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படும் - அதேபோல் ,  அண்மைக்காலமாக ரணிலை தரக்குறைவாக விமர்சித்த அதாஉல்லா - இன்று பிரயோசனமற்ற அமைச்சுப் பதவி எனும் எலும்புத் துண்டுக்காக ரணிலை புகழ்வது மிகவும் வெட்கக்கேடானது.

அது குறித்து கேட்க, அறிவுரை கூற திராணியற்ற சபீஸ்- மு.கா தலைமையை விமர்சிப்பது கேவலத்திலும் கேவலமான செயற்பாடாகும்.

வடக்கு, கிழக்கு பிரிப்பு  விடயத்தில் தலைவர் ஹக்கீம் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளார்.  முஸ்லிம்களின் நிலைப்பாடானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் பிரிந்திருக்க வேண்டும் என்பதாகும். அந்த நிலைப்பாட்டில் ஹக்கீம் உறுதியாக இருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், ரவூப் ஹக்கீமை எவ்வித சந்தேகமுமின்றி பூரண விசுவாசத்துடன் ஏக தலைமைத்துவமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் சவாலுக்குட்பட்ட விடயமாக இருக்கவே இருக்காது என்பதை சபீஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவூப் ஹக்கீம் - கட்சிக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தலைமை வகிக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கிறார். அதற்கு நிகர் அவரேதான்.

முடிந்தால் - ரவூப் ஹக்கீமை விட அல்லது அவருக்கு சமனான ஒருவரை மு.கா தலைமையாக இணங்காட்ட சபீஸால் முடியுமா என்ற கேள்வியை சவாலாக விடுக்க விரும்புகிறேன் என்றும் யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, August 25, 2022

மு.கா.தலைவர் ஹக்கீம் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதற்கு சபீஸ் போன்ற அரசியல் கற்றுக்குட்டிகளுக்கு அருகதையில்லை; கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் சாட்டை..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வகிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதற்கு சபீஸ் போன்ற அரசியல் கற்றுக்குட்டிகளுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதல்வர் றகீப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ரவூப் ஹக்கீம் எனும் ஆளுமை கடந்த 03 தசாப்தங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்திற்கு தலைவராக இருந்து வருகிறார். வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவை சம்மந்தமான தகவல்களையும் புள்ளி விபரங்களையும் தனது விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஒரு தலைமையென்றால் அது ரவூப் ஹக்கீம் மாத்திரம்தான்.

சமூகம் சார்ந்த விடயங்களாயினும் தேசியப் பிரச்சினைகள் என்றாலும் அனைத்து விடயங்களிலும் அவர் முனைப்போடு செயலாற்றி வருவதை நாட்டின் புத்திஜீவிகளும் சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த உண்மையை அவரது அரசியல் எதிரிகள் கூட மறுப்பதற்கில்லை.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை ரவூப் ஹக்கீம் அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவும் சக்தியாகவும் திகழ்கிறார் என்பதை எவராலும் மறுத்து விட முடியாது.

சபீஸ் என்பவர் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அரசியலை செய்து வருகின்றவர். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் சம்மந்தமாகவோ அதன் தலைமைத்துவம் பற்றியோ உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறி, நியாயமற்ற முறையில் விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையுமில்லை.

தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், அதன் தலைவரான அதாஉல்லா பற்றி பேசிக்கொள்ளட்டும். அவருக்கான அறிவுரைகளை வழங்கட்டும். அதில் குறுக்கிடுவதற்கான எந்த விதமான தேவையும் எமக்கில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வடக்கு, கிழக்கு சமூகம் தொடர்பில் போதிய அறிவு இல்லையென்று சொல்வதற்கான எந்த உரிமையும் சபீஸ் போன்ற அரசியல் கற்றுக்குட்டிகளுக்கு இல்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பான விடயத்தில் தமிழர்களின் நிலைப்பாடு இணைக்கப்பட வேண்டும் என்பதாகும். முஸ்லிம்களின் நிலைப்பாடானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் பிரிந்திருக்க வேண்டும் என்பதாகும். பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் நிலைப்பாடும் இணையக்கூடாது என்பதுதான். இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது உரிய தருணத்தில் அரசாங்கம்தான் அது பற்றித் தீர்மானிக்கும். இப்போது அது பற்றிப்பேசி இன முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை. இந்த விடயத்தில் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறையையே தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கடைப்பிடித்து வருகிறார்.

இப்போது, பிரிப்பதா இணைப்பதா என்று பேசி இன முரண்பாட்டுச் சூலை உருவாக்குவது ஒரு பொறுப்புவாய்ந்த கட்சித் தலைமைக்கு பொருத்தமானதல்ல, அந்த அடிப்படையில்தான் தமிழ் சமூகத்தினருடன் அவர் இணக்க அரசியலை செய்து வருகின்றார்.

சிறுபான்மைச் சமூகம் என்பது தமிழர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாகும். ஒரு சில விடயங்களில் முரண்பாட்டுத் தன்மைகள் இருந்தாலும் கணிசமான விடயங்களில் பொது உடன்பாடு இருக்கிறது. முஸ்லிம்களோ தமிழர்களோ தனித்து நின்று தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் அடைந்து விட முடியாது.

ஆகையினால், பொது விடயங்களில் ஒருமித்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இரு சமூகங்களுக்கும் இருக்கிறது. முரண்பாடான விடயங்களில் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, தீர்த்துக் கொள்வதே ஆரோக்கியமான வழிமுறையாகும். இதை விடுத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் சாதித்து விட முடியாது. அது புத்திசாதுர்யமான முடிவாகவும் இருக்காது. இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் தெளிவோடு செயற்பட்டு வருகின்றார்.

சாமான்ய முஸ்லிம் மக்கள் இதனை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ரவூப் ஹக்கீம் அவர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 

தேசியப் பிரச்சினைகளிலும் சரி, சமூகம் சார்ந்த விடயங்களிலும் சரி, தேசிய காங்கிரஸ் கட்சியோ அதன் தலைவர் அதாஉல்லா அவர்களோ இதுவரை ஆற்றியிருக்கின்ற பங்களிப்பு என்ன? முஸ்லிம்கள் தொடர்பிலான எதிர்கால வேலைத்திட்டம் என்ன என்பது பற்றியெல்லாம் பேசாமல் முஸ்லிம் காங்கிரஸை பற்றியும் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றியும் பேசுகின்றனர் என்றால், தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரசும் ரவூப் ஹக்கீமும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டிருப்பதையே பறைசாற்றுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், ரவூப் ஹக்கீம் அவர்களை எவ்வித சந்தேகமுமின்றி பூரண விசுவாசத்துடன் ஏக தலைமைத்துவமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் சவாலுக்குட்பட்ட விடயமாக இருக்கவே இருக்காது என்பதை சபீஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சிக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தலைமை வகிக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கிறார். தேசிய ரீதியில் அனைத்து இனங்களும் மதிக்கக்கூடிய அப்பழுக்கற்ற ஒரு மிதவாதத் தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். சர்வதேச மட்டத்தில் நன்கு அறியப்பட்டிருக்கின்ற ஒரு தேசியத் தலைமையாகவும் இராஜதந்திர தொடர்புகளை பேணக்கூடிய மதிநுட்பமிக்க தலைமையாகவும் அவர் திகழ்கிறார்.

முஸ்லிம் சமூகம் அவ்வப்போது எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் தேசிய விவகாரங்கள் தொடர்பிலும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சர்வதேச மட்டத்திலும் குரல் எழுப்பி வருகின்ற ஒரு துணிச்சல்மிகு தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்களின் வகிபாகம் இருந்து வருகிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டீசல் பற்றாக்குறையால் திண்மக்கழிவகற்றல் சேவையில் மட்டுப்பாடு; நிலைமையை புரிந்து செயற்படுமாறு முதல்வர் ஏ.எம்.றகீப் உருக்கமான வேண்டுகோள்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

டீசல் பற்றாக்குறை நீடித்து வருவதன் காரணமாக, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. இந்த இறுக்கமான சூழலில், நிலைமையை புரிந்து கொண்டு, செயற்படுமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் கடந்த பல மாதங்களாக நிலவி வருகின்ற பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வுகள் காணப்பட்டு வருகின்ற போதிலும், அதன் ஊடாக பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் டீசல் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதிலும் இன்னும் நீடித்தே வருகின்றது.

எரிபொருள் நிறைவாக வருகிறது என்று கூறப்பட்டாலும் கள நிலைவரம் அவ்வாறில்லை. அடுத்த சில தினங்களில் டீசல் கப்பல் ஒன்று வருவதாக சொல்லப்பட்டாலும் அது சுப்பர் டீசல் என்று தெரிய வருகிறது.

இதற்கு மத்தியில் அரச நிறுவனங்களின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் QR Code முறைமை அமுல்படுத்தப்பட்டு வருவதால், கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களுக்கு போதியளவு டீசலை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.

இந்த முறைமை உள்ளூராட்சி மன்றங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. இதனால் கல்முனை மாநகர சபையின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுகின்ற 27 வாகனங்களுக்கும் வாராந்தம் சுமார் 2000 (இரண்டாயிரம்) லீட்டர் டீசல் தேவையாக இருக்கிறது. எனினும் QR Code முறைமையின் கீழ் இவ்வாகனங்களுக்கு 540 லீட்டர் மாத்திரமே டீசல் கிடைக்கிறது. இதன்படி வழமையான சேவையுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியளவிலான சேவையையே முன்னெடுக்க முடியுமாக இருக்கும். ஆனால் தையும் தாண்டி- முன்னுரிமை அடிப்படையில் முடியுமான குப்பைகளை சேகரித்து, அகற்றி வருகிறோம்.

இந்த QR Code முறைமைக்கப்பால் போதியளவு டீசல் தருவதற்கு எமக்குரிய எரிபொருள் நிரப்பு நிலையம் முன்வருவதாக இல்லை. இந்த முறைமை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற உத்தரவு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. QR Code முறைமையை மீறி செயற்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை பற்றி எம்மிடம் சுட்டிக்காட்டப்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பல தடவைகள் பேசியும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம்.

QR Code முறைமையில் இருந்து எமக்கு விதி விலக்களிக்குமாறு கோரி தற்போது எரிசக்தி அமைச்சு மட்டத்திலும் பேசி வருகிறோம். எமது முயற்சிகள் வெற்றியளிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இந்நிலையில், மாநகர சபை எதிர்நோக்கியிருக்கின்ற டீசல் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் வரை எமது திண்மக்கழிவகற்றல் சேவையை மட்டுப்படுத்தி முன்னெடுப்பதென்பது தவிர்க்க முடியாத விடயமாகும். இந்த இறுக்கமான கட்டத்தில், நிலவும் அசாதாரண நிலைமையை பொது மக்கள் புரிந்து கொண்டு, சகிப்புத்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் உங்களது வீதிகளுக்கு வரும்வரை குப்பைகளை முகாமை செய்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக குப்பைகளை வகைப்படுத்தி, சமையலறைக் கழிவுகளை மாத்திரம் எமது வாகனங்களில் ஒப்படையுங்கள். ஏனைய உக்காத குப்பைகளை சில நாட்கள் வீடு, வாசல்களில் வைத்து முகாமை செய்து, நிலைமை சீரான பின்னர் ஒப்படையுங்கள். இவற்றை உடனுக்குடன் தெருக்களிலோ பொது இடங்களிலோ நீரோடைகளிலோ வீசாதீர்கள். நமது சுற்றுச்சூழலை நாமே பேணிப் பாதுகாக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அதேவேளை, கடந்த கால கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் மாநகர சபைக்கான வருமானம் பாரியளவில் வீழிச்சியடைந்திருக்கிறது.

இதனால் ஏற்பட்டிருக்கின்ற நிதிப்பற்றாக்குறை ஒருபுறம், எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் கடுமையான விலை அதிகரிப்பு இன்னொரு புறம், இவற்றுக்கு மத்தியிலேயே பெருந்தொகை செலவுகளை மேற்கொண்டு, பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து, திண்மக்கழிவகற்றல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மிகவும் கரிசனை, பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்றோம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, August 24, 2022

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் நூலக திறப்பு விழா..!



-பாறுக் ஷிஹான்-

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் அனுசரணையில் விஸ்தரிக்கப்பட்ட நூலகம் பாடசாலை பிரதி அதிபர் எம்.வை.எம்  யூசுப் இம்றானின் ஒருங்கிணைப்பில் அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை (22) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியான காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் கலந்து கொண்டு புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக காத்தான்குடி நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா சபீன், விஷேட அதிதிகளாக மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வே பலாஹி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் , கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நூலகத் திறப்பு விழாவிற்கு காத்தான்குடி நகர சபையினால் சுமார் 1300 க்கும் மேற்பட்ட புத்தகங்களும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.












மனோ கணேசன் குழுவினர் - அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு..!


தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் இடையிலான அவசர சந்திப்பு நேற்று இடம்பெற்றது. 

கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம்.உதயகுமார் எம்.பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம்பெற்றனர். அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

பயனுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம், தமிழர் தேசிய பிரச்சினைகள், தேசிய அரசாங்கம்,தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்ந்த தமிழர் விவகாரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள் ஆகியவை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டன” என மனோ கணேசன் எம்பியின் டுவீட்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது.

நிந்தவூர் கடலரிப்பை உடன் நிறுத்துங்கள்; இல்லையேல் இராஜினாமா செய்யுங்கள்..!

அம்பாரை மாவட்ட எம்.பிக்கள் மீது மு.கா. பிரதிப் பொருளாளர் யஹியாகான் ஆவேசம்..!

நிந்தவூர் கடலரிப்பை உடன் தடுத்து நிறுத்துங்கள். வெறும் வெற்று அறிக்கைகளை தவிர்த்து - நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அம்பாரை மாவட்ட கரையோரப் பகுதி எங்குமே இந்த கடலரிப்பு பிரச்சினை ஏற்பட்ட வண்ணமே உள்ளது. நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

கடலரிப்பு உச்சம் தொடும்போது மட்டும் அறிக்கைகள் விடுவதும் அவர் இவருடன் பேசினோம் என்று செய்தி வெளியிடுவதும் எமது பாராளுமன்ற உறுப்பினர்க வழக்கமாகிப் போய்விட்டது.

கட்சி பேதங்களைத் துறந்து அம்பாரை மாவட்ட அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு தீர்க்கமான நிரந்தர முடிவை எடுங்கள். ஜனாதிபதியை சந்தித்து, உடன் நடவடிக்கை எடுங்கள். இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வை காணுங்கள்.

உங்களால் முடியா விட்டால் எம்.பி பதவிகளைத் துறந்து வீடு செல்லுங்கள். இந்த கடமையை நாங்கள் பொறுப்பேற்கிறோம்.

அம்பாரை மாவட்ட கரையோரப் பகுதிகளில் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் அரைகுறையாகவே நடந்துள்ளன. எந்தவொரு திட்டமும் பூர்த்தியடைந்ததாக இல்லை. அவ்வாறுதான் இந்த கடலரிப்பு விவகாரமும் நகர்த்தப்படுகிறது- என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, August 23, 2022

பொறியியளாலர் அஸ்லம் சாஜா பொறியியல் பீட "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக நியமனம்..!

-யூ.கே.காலித்தீன்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருமான பொறியியளாலர் கலாநிதி அஸ்லம் சாஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் இவருக்கான நியமனம் 19.08.2022 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ துறையில் விசேட பட்டம் பெற்ற இவர் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளரும், சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் ஸ்தாபக செயற்பாட்டாளரும், சமூக ஆர்வளருமாவார்.

சாய்ந்தமருது  அல் - ஹிலால் வித்தியாலயத்தினதும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினதும் முன்னாள் அதிபர் அல்ஹாஜ். ஐ.எல்.ஏ.மஜீத் தம்பதிகளின் மூத்த புதல்வருமாவார்.

கல்முனை பிராந்தியத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு..!

-பாறுக் ஷிஹான்-

அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பிரதேசங்களில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

மாலை மற்றும் இரவு வேளைகளில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகளினால் குடியிருப்பு பகுதி மற்றும் சிறுபோக நெற்செய்கை நிலங்கள் பெருமளவான பயன்தரும் மரங்களையும் பயிர்களையும் அழித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் யானை வெடிகளை வனஜீவராசி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கி இருந்தது.

எனினும் யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்  யானைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






நிந்தவூரில் கடலரிப்பை தடுக்க தவிசாளர் தாஹிர் தலைமையில் திட்டமிடல் கூட்டம்..!

-பாறுக் ஷிஹான்-

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் திங்கட்கிழமை (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ அப்துல் லத்தீப், கரையோர வளம் பேணல் பாதுகாப்பு தினை களத்தின் பிரதம பொறியியலாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை எல் சுலைமாலெப்பை, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம் எஸ் எம் நிப்றாஸ் மற்றும் அதன் பிரதிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடலரிப்பை தற்காலிகமாக தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து  கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் விளக்கமளித்தார். 

அத்துடன் இக்கடலரிப்பிற்கு உள்ளாகும் பிரதேசங்களையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளையும் மேலும் அழிவடையாத வண்ணம் பாதுகாத்து மீளக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம் ஏ எம் தாகிர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துரைத்தார்

இதன் போது கருத்து தெரிவிக்கையில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர்,.இவ்வாரம் நடைபெற்ற தடுப்பு வேலைகளின் போது தேவையான  எரிபொருளை வழங்கிய பிரதேச சபை தவிசாளர், மற்றும் IOC lanka எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பொறியியளாலர் நன்றிகளை தெரிவித்தார்.

அத்துடன் இந்த கடல் அரிப்பை தடுப்பதற்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எரிபொருள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு தேவையான நிதியை பிரதேச சபை நிதியிலிருந்து வழங்குவதாகவும் இதனைக் கொண்டு வேலைகளை துரிதப்படுத்துமாறும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம் ஏ எம் தாஹிர்  பொறியியலாளரை கேட்டுக் கொண்டார்.

மேலும் நிரந்தர தீர்வினை நோக்கிய கலந்துரையாடலில் அதற்கான முன்னெடுப்புகள் மற்றும் செயற்பாடுகளை பொறியியலாளர் விளக்கிய போது கடலில் நீரோட்டதுக்கு குறுக்காக கிழக்கு மேற்காக கற்கள் இடும் பணியை நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல்.சுலைமாலெப்பை உரிய அமைச்சரோடு தொடர்புகொண்டு முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். 

நாட்டின் நிதி நிலைமை கருதி நிதி பற்றாக்குறைகள் ஏற்படும் போது அனர்த்த முகாமைத்துவ அணியும் ஊர் சார்பான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் சபையில் கலந்துரையாடப் பட்டதுடன் இதற்கான  நடவடிக்கைகளை துரிதமாகவும் அவசரமாகவும் மேற்கொள்ளுமாறும் தவிசாளர் தாஹிர்  பொறியியலாளரைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியும் செயலாளர் எம் எஸ் எம் நிப்றாஸ் நிந்தவூர் அனர்த்த முகாமைத்து அணியினர் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் நிரந்தரமாக இதனை தடுப்பதற்குரிய தீர்வை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.




Monday, August 22, 2022

மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுக்குத் தடை..!


-அஸ்லம் எஸ்.மௌலானா-

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

மருதமுனையிலுள்ள பல சமூக சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்ற மின்னொளி விளையாட்டுப் போட்டிகளால் இரவு நேரங்களில் இப்பிரதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாகவும் ஒழுக்க நெறிமுறை, கட்டுக்கோப்பு சீர்குலைந்து வருவதாகவும் வணக்க வழிபாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது குறைவடைந்து செல்வதாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான காலம் நெருங்கி வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் மின்சார நெருக்கடிக்கு மத்தியில் மின்னொளி விளையாட்டுக்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான காரணங்களை மையப்படுத்தி மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை உடனடியாகத் தடை செய்யுமாறு பொது அமைப்புகள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதையடுத்தே கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழுள்ள மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் ஊர், சமூக நலன் கருதி, மறு அறிவித்தல் வரை மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Sunday, August 21, 2022

தைபா அரபுக் கல்லூரியில் 07 மாணவிகளுக்கு மௌலவியா பட்டம்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை 07 மாணவிகள், மௌலவியா பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இக்கல்லூரியில் ஐந்து வருட கால அல்-ஆலிம் எனும் இஸ்லாமிய மார்க்க கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்து, இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள ஐந்தாவது தொகுதி மாணவிகளான இவர்களுக்குரிய பட்டமளிப்பு விழா விரைவில் இடம்பெறவுள்ளது.

ஏ.டபிள்யூ.எப்.அப்னா ஹனூன் (சாய்ந்தமருது), ஏ.ஜி.எப்.ஸஹ்ரா (சாய்ந்தமருது), ஏ.ஆர்.எப்.சனோபர் ஹஸீன் (சாய்ந்தமருது), ஜே.எப்.றிழா (சவளக்கடை), ஏ.எம்.எப்.சபானா (சாய்ந்தமருது), எம்.யூ.எப்.முப்லிஹா (சாய்ந்தமருது), ஏ.எம்.எப்.றிப்கானா (சவளக்கடை) ஆகியோரே 'தைபிய்யா' எனும் பட்டத்துடன் மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர்.

இதற்கு முன்னர் கடந்த நான்கு தொகுதி மாணவிகளில் 23 பேர் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். தற்போது பட்டம் பெறுகின்ற 07 பேருடன் மொத்தம் 30 பேர் இதுவரை இக்கல்லூரியில் மௌலவியா பட்டம் பெற்றுள்ளனர்.

இவர்களுள் 15 பேர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் குறித்த மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்- என்று அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிக்கீரின் இழப்பு ஊடகத்துறைக்கு பாரிய இழப்பு; முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் அனுதாபம்..!

அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இறக்காமத்தை சேர்ந்த எஸ்.எல்.எம்.பிக்கீர் அவர்களின் இழப்பு ஊடகத்துறைக்கு பாரிய இழப்பாகும்.

உண்மையில் இன்று காலை அவர் காலமான செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன்.

அம்பாறை மாவட்டத்தின் ஜனரஞ்சக ஊடகவியலாளர்களில் சகோதரர் பிக்கீரும் ஒருவர். சிரேஷ்ட ஊடகவியலாளர் பிக்கீரின் மறைவால் துயருற்றிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு எனது ஆறுதலை கூறிக்கொள்கிறேன்.

அதேபோல் ஆசிரியராக, பிரதி அதிபரான பிக்கீரின் மறைவால் கவலையடைந்திருக்கும் கல்விச் சமுகத்துக்கும் எனது ஆறுதலை எத்திவைக்கிறேன். 

பிக்கீர் அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரின் கவலையுடன் தானும் சங்கமித்துக் கொள்கிறேன். 

அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

Thursday, August 18, 2022

சம்மாந்துறை நெற்காணிகளுக்கு ஏன் உரம் வழங்கப்படவில்லை; விசாரணை நடத்துமாறு கோருகிறது விவசாய அமைப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சம்மாந்துறை கமநல சேவை நிலையத்தின் பரிபாலனத்திற்குட்பட்ட நெற்காணிகளுக்கு சிறுபோகத்திற்காக வழங்கப்பட வேண்டிய யூரியா உரம் விநியோகிக்கப்படாமல் புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என சம்மாந்துறை தொய்யன் வட்டை கிழல்கண்ட விவசாய அமைப்பின் உப தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

சம்மாந்துறை கமநல சேவை நிலையத்தின் பரிபாலன எல்லைக்குள் 24 விவசாய கண்டங்களை உள்ளடக்கிய சுமார் 10500 ஏக்கர் நெற்காணிகள் இம்முறை சிறுபோக நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.

இக்காணிகளுக்கு விநியோகம் செய்வதற்கென யூரியா உரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்காக ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ நிறையுடைய உர மூடை ஒன்றுக்கு 10,000 ரூபா வீதம் ஆகக்கூடியது இரண்டு ஹெக்டேயருக்கு 20,000 ரூபா பணம் விவசாய அமைப்புக்கள் ஊடாக சம்மாந்துறை கமநல சேவை நிலையத்திற்கு குறித்த விவசாயிகளால் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை உரம் வழங்கப்படவில்லை.

தற்போது சிறுபோக நெல் அறுவடை இடம்பெற்று முடிவடைந்து விட்டதால் இனி அந்த உரம் தேவைப்படாது என்பதைக் காரணம் காட்டி வேறு பிரதேச நெற்காணிகளுக்கு அது வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்மாந்துறை கமநல சேவை நிலையத்தில் கடந்த பல வருடங்களாக கமநல சேவை பெரும்பாக உத்தியோகத்தர் நிரந்தரமாக இல்லாமை காரணமாக நிந்தவூர் பிரதேச கமநல பெரும்பாக உத்தியோகத்தரே பதில் கடமையாற்றி வருகின்றார். இவ்வதிகாரி அம்பாறை மாவட்ட கமநல சேவை தலைமையக பெரும்பாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகிறார்.

இதன் பின்னணியிலேயே குறித்த நெற்காணிகளுக்கான உரம் வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது.

ஆகையினால் இது குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மை வெளிப்படுத்தப்படுவதுடன் தவறிழைத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் போன்றோரை மகஜர் மூலம் கோரியுள்ளோம்- என்றார்.

Tuesday, August 16, 2022

ஒலுவில் துறைமுகத்தை இழுத்து மூடுவதே கடலரிப்பைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு; ஜனாதிபதிக்கு கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை அவசர மகஜர்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனைப் பிராந்தியத்தில் பாரியளவில் கடலரிப்பு ஏற்படுவதற்கும் கடற்றொழில் பாதிப்படைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்ற ஒலுவில் துறைமுகத்தை, இழுத்து மூடுவதே கடலரிப்பை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே தீர்வாக அமையும் என்று கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

இதனை வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், நாட்டினதும் பிராந்தியத்தினதும் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஒலுவில் துறைமுக நிர்மாணத் திட்டத்தை முன்மொழிந்திருந்தாலும், குறித்த கடற்பரப்பு துறைமுக அமைப்புக்கு பொருத்தமற்றது எனவும் இதனால் மீனவர் சமூகத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் நிபுணத்துவ ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், அவை எதுவும் கருத்தில் கொள்ளப்படாமலேயே  துறைமுக நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக ஒலுவில் கிராமத்தில் நூற்றுக்கணக்கானோரின் குடியிருப்புக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னரே இவற்றுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்ட போதிலும் காணிகளை இழந்தோர் எதிர்பார்த்த பெறுமதி, வழங்கப்படாமல், ஏமாற்றப்பட்டிருந்தனர். இதற்காக அவர்கள் பல வருடங்கள் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

இத்துறைமுக நிர்மாணத்தினால் நாட்டுக்கோ பிராந்தியத்திற்கோ சமூகத்திற்கோ இதுவரை எவ்வித பயனும் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் இழப்புகளையே சந்திக்க நேரிட்டுள்ளது.

இதற்காக கரையோரக் கிராமங்கள் பல காவு கொடுக்கப்பட்டிருக்கிறன. மக்கள் தமது காணிகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதுடன் முழுக் கல்முனைப் பிராந்தியத்தினதும் கரையோரப் பகுதிகள் பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.

காலத்திற்கு காலம் பதவிக்கு வருகின்ற அரசுகளும் துறைமுக அமைச்சர்களும் பிராந்திய அரசியல் தலைமைகளும் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அறிக்கைகள் வெளியிடுவதிலும் , கள விஜயங்கள் மேற்கொள்வதிலும் காலத்தை கடத்தி வருகின்றன.

எனினும் மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைப்பதாக இல்லை. நாளுக்கு நாள் கடலரிப்பு உக்கிரமடைந்து வருகிறது.

இதனை வர்த்தக துறைமுகமாக இயக்க முடியாது எனத் தெரிவித்து, மீன்பிடித் துறைமுகமாக செயற்படுத்துவதற்கு கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டு, கடற்றொழில் அமைச்சின் கீழ் இத்துறைமுகம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இங்கு விஜயம் செய்து, இத்துறைமுகத்திற்கு அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடித் துறைமுகம் என்று பெயர் சூட்டி விட்டுச் சென்றுள்ளார்.

இத்துறைமுகத்திற்கு மறைந்த தலைவரான அஷ்ரபின் பெயரை சூட்டி விட்டால் பிரச்சினைகள் எல்லாம் தாமாக தீர்ந்து விடுமா? இது மக்களை ஆசுவாசப்படுத்தி, திசைதிருப்பும் சூழ்ச்சியாகவே நோக்கப்படுகிறது. இவ்வாறான மாயைகளை விடுத்து, மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கி தூரநோக்குடன், ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயற்பட அரசாங்கமும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் அவசரமாக முன்வர வேண்டும்.

வர்த்தக துறைமுகமாயினும் சரி, மீன்பிடித் துறைமுகமாயினும் சரி, இதன் அமைவிடம் துறைமுகத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால், மக்களை இன்னுமின்னும் ஏமாற்றாமல் இதனை இழுத்து மூடுவது ஒன்றே தீர்வாக அமையும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.

இதன் மூலம் கடலரிப்பில் இருந்து இப்பிரதேசங்களை காப்பாற்றுவதுடன் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கடற்றொழிலை மீளக்கட்டியெழுப்புவதற்குமான சாதக சூழல் ஏற்படும் என்பதை குறித்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்- என்றார். 

கல்முனையில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவர் கைது..!


-பாறுக் ஷிஹான்-

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று நள்ளிரவு கல்முனை காஸீம் வீதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து 3 ரூபா 5000 போலிகள் உட்பட ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 100 மில்லிகிராம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்களான  எச்.ஜி.பி.கே நிசங்க மற்றும் பண்டார உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்  பண்டார பொலிஸ் கன்ஸ்டபிள் பிரபாத் வாகனச்சாரதி ஜயரட்ண இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை  பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.