Monday, February 20, 2023

தமிழர்களுக்கு அருந்தொண்டாற்றிய ஏ.ஆர்.மன்சூரின் பெயரை நூலகத்திற்கு சூட்டுவதை தமிழ் தரப்பு எதிர்ப்பதன் பின்னணி என்ன? மு.கா. தவிசாளர் அப்துல் மஜீட் காட்டம்

-சாய்ந்தமருது நிருபர்-

இன, மத பேதமின்றி தமிழ் மக்களுக்கும் அருந்தொண்டாற்றிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை கல்முனை பொது நூலகத்திற்கு சூட்டுவதை கல்முனை மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்கள் சிலர் இன ரீதியாக சிந்தித்து, எதிர்ப்பதானது மிகவும் கவலையளிக்குரிய விடயமாகும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;

1977ஆம் ஆண்டு முதன்முறையாக கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.ஆர்.மன்சூர் அவர்கள், 1994 ஆம் ஆண்டு வரை சுமார் 17 வருட காலம் அரசியல் அதிகாரத்தின் ஊடாக இனப்பாகுபாடின்றி மூவின மக்களுக்கும் சேவையாற்றியுள்ளார்.

இக்காலப் பகுதியில் மாவட்ட அமைச்சராகவும் பின்னர் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்து கல்முனைத் தொகுதிக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓர் அரசியல் தலைவராக அவர் போற்றப்படுகிறார்.

குறிப்பாக கல்முனைத் தொகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட பெளதீக வள, உட்கட்டமைப்பு அபிவிருத்திகளாயினும் பாடசாலைகளின் அபிவிருத்திகளாயினும் இன, மத, பிரதேச பேதமின்றி மிகவும் நேர்மையுடன் முன்னெடுத்திருந்தார்.

அவ்வாறே அரச தொழில் வாய்ப்புகள் வழங்குவதிலும் இன, மத பேதமின்றியே அவர் செயற்பட்டிருந்தார்.

கல்முனைத் தொகுதி வாழ் முஸ்லிம்களையும் தமிழர்களையும் தனது இரு கண்கள் போன்றே அவர் பரிபாலித்தார். முஸ்லிம்களை விட எந்த வகையிலும் குறைவில்லாத சேவைகளை தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பாக நிறைவேற்றியிருந்தார்.

1977ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் 1979ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது முதல் அம்மாவட்டத்திற்கான அமைச்சராகவும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஏ.ஆர்.மன்சூர், யுத்த மேகம் கருக்கட்டியிருந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் இவ்விரு மாவாட்டங்களிலும் தமிழ் மக்களுக்கு அரும்பணியாற்றியிருக்கிறார் என்பது வரலாறாகும்.

இத்தகைய பின்னணியில்தான் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள்- தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒன்றித்து வாழ்கின்ற கல்முனை நகரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான ஏ.சி.எஸ்.ஹமீதின் அனுசரணையுடன் மிகப் பெறுமதியான பொது நூலகம் ஒன்றை நிறுவி, இரு சமூகங்களினதும் கல்வி மற்றும் அறிவு விருத்திக்கு வித்திட்டிருந்தார்.

அவர் நினைத்திருந்தால், அந்த நூலகத்தை முஸ்லிம்கள் 100 வீதம் செறிந்து வாழ்கின்ற கல்முனைக்குடியில் அமைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான இனக் குரோத சிந்தனை அவரிடம் இருக்கவில்லை. தனது கறைபடியாத அரசியலில் இரு சமூகங்களையும் சரிசமமாகவே மதித்து செயலாற்றியிருந்தார்.

இவ்வாறான ஒரு மகானின் பெயரை அவரால் கொண்டு வரப்பட்ட நூலகத்திற்கு சூட்டுவதை கல்முனை மாநகர சபையின் சில தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்து, அவ்விவகாரத்தை சர்ச்சையாக்கி, இன முரண்பாட்டுக்கு தூபமிட முயற்சிப்பதானது மிகவும் கவலையளிக்கிறது. முஸ்லிம் விரோத அரசியல் சகுனிகளின் இத்தகைய எதிர்ப்பை நல்லுள்ளம் கொண்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஏ.ஆர்.மன்சூர் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்ற போதிலும் அவர் கல்முனைத் தொகுதி வாழ் தமிழ் சமூகத்திற்கும் நேர்மையுடன் தலைமைத்துவம் வழங்கியிருந்தார் என்பதை பெருமையுடன் பறைசாற்றுகின்ற இவ்வுறுப்பினர்கள், அரசியல் நோக்கத்திற்காக நியாயமற்ற முறையில் அவரது பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதானது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத சக்திகள் எவையும் இதன் பின்னணியில் செயற்படுகின்றனவா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் தாயகத்தில் சுயாட்சி போன்ற விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் பயணித்து வருகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை மாநகர சபையில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரே ஏ.ஆர்.மன்சூரின் பெயர் சூட்டல் விவகாரத்தை வரிந்து கட்டிக்கொண்டு சர்ச்சையாக மாற்றியிருப்பதென்பது இரு சமூகங்களினதும் சார்பான கட்சிகளின் புரிந்துணர்வு செயற்பாடுகளை மழுங்கடித்து விடும் என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டிய கால சூழலில் இவ்வாறான பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தமிழ் சமூகத்தில் இருக்கின்றபோது முஸ்லிம்கள் எவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய அரசியலை நம்பி, ஒன்றித்து பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுவது நியாயமானதே- என்று மு.கா. தவிசாளர் அப்துல் மஜீட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, February 16, 2023

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் 44 மாணவர்கள் புலமைப் பரிசிலுக்குத் தகுதி..!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

இம்முறை (2022) இடம்பெற்ற  புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/ கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து 44 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக அதிபர் யூ.எல்.நஸார் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் இருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குக் தோற்றிய 244 மாணவர்களில் 232 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது 95.6 சதவீதமாகும்.

இதனைப் பாராட்டு முகமாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளரும் பாடசாலை எஸ்டிஈசீ இன் செயலாளருமான ஏ.எம்.சாஹிர், சாய்ந்தமருது கோட்டத்தை வலயத்தில் மூன்றாம் இடத்துக்கு உயர்த்துவதற்கு கைகோர்த்து உழைத்த கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.மலீக், முன்னாள் அதிபர் மஜீத் ஆகியோரின் பங்குபற்றலுடன் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீமுக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் மற்றும் பிரதி அதிபர் நுஸ்ரத் பேகம், உதவி அதிபர் ஐனூல் மர்சுனா, பகுதித்தலைவர்களான கே.எல்.ஜஃபர், சியானா நௌசாத், கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் ஆகியோருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Tuesday, February 14, 2023

துருக்கி பூகம்பத்தினால் உயிர்நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம்..!

-சாய்ந்தமருது நிருபர்-

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களுக்காக கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 59ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது இதற்கான பிரேரணையை முதல்வர் சமர்ப்பித்திருந்தார். இதனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம் இராஜன் வழிமொழிந்து ஆமோதித்ததுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்போது முதல்வர் உரையாற்றுகையில்;

அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வினால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அது ஒரு இலட்சம் வரை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகிறது. இப்பேரழிவால் நிர்க்கதியடைந்திருக்கும் மக்களின் துயரங்களில் நாமும் பங்கேற்கிறோம். 

இந்த பேரனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு கல்முனை மாநகர மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும் அந்நாடுகள் மீள் எழுந்து நிற்பதற்குமான சக்தியை எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்- என்றார்.

அத்துடன் இந்த அனுதாபப் பிரேரணையை இரு நாடுகளினதும் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் சபைச் செயலாளரை முதல்வர் கேட்டுக்கொண்டார்.




















Sunday, February 12, 2023

13வது திருத்தம், அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல; முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கு இவை அவசியம் என்கிறார் மு.கா.தவிசாளர் மஜீத்..!


-சாய்ந்தமருது நிருபர்-

13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்பன தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தானது எனவும் அது முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பாக அமைந்து விடும் எனவும் தப்பபிப்பிராயம் பரப்பப்படுகிறது. ஆனால் இத்தகைய அதிகாரப் பகிர்வின் மூலம்தான் முஸ்லிம்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியன்றுதான் சுதந்திரக் குடியரசாக மாறியது. அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட முதலாவது குடியரசு சாசனம் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை முழுவதுமாக புறந்தள்ளி சிங்கள பௌத்த மேலாண்மையை வலியுறுத்தி நின்றது.

குறிப்பாக சோல்பரி அரசியல் யாப்பில் இடம்பெற்றிருந்த செனட் சபை (மூதவை) இல்லாதொழிக்கப்பட்டதுடன் பௌத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை அரச கரும மொழியாகவும் பிரகடனம் செய்திருந்தது .

சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக மாற்றும் அக்குடியரசு சாசனத்தை  தமிழ் மக்கள் எதிர்த்து நின்றதுடன் அப்போது நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் அமிர்தலிங்கம் அவர்கள் பகிரங்கமாக அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்தினார். இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுபோல் கடந்த 8ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அக்கிராசன  உரையை உரையாற்றிக் கொண்டிருக்கையில் பௌத்த பிக்குமார் பாராளுமன்றை நோக்கி ஆர்ப்பாட்டமாக சென்றதுடன் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்தினர். அவர்களை பொலீசார் கைது செய்ய முன்வரவில்லை. பொலீசாரின் அச் செயலானது நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளது போல் என்னத் தோன்றுகிறது.

1957ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான பிற்குமார் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் இருந்தனர். இதனால் வேறு வழியின்றி அவ் ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டது.

1965ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டட்லி- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அன்றைய எதிர்கட்சியான ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர், டட்லியின் தலைக்குள்  "மஸாலா வடே" என்ற கோசத்தை முன்னெடுத்துச் சென்றதுடன் அவ் ஒப்பந்தத்தை தோல்வியடையச் செய்தனர்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வாக 1981ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை தோல்வியைத் தழுவிக் கொண்டது போல் மாகாண சபை முறைமையையும் தோல்வியடையச் செய்வதற்கு பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகள் முயன்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அரசியலமைப்பிற்கான 6வது திருத்தச் சட்டம் 1983ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டமானது நாட்டிற்குள் பிரிவினை கோருவதை தடுத்து நிற்கிறது. அச்சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்ததனால் அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை வரிதாக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட 18 பேர் பதவியிழந்தனர்.

இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பலர் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்க மறுப்பதனால் அவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்து நிற்கின்றது.

13வது திருத்தம் என்பதும் அதிகாரப் பகிர்வு என்பதும் தமிழ் மக்களுக்கே உரித்தான சொந்த விடயம் என முஸ்லிம் சமூகத்தில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அது அவர்களின் அரசியல் அறியாமையை பிரதிபலிக்கின்றது.

அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு கிழக்கிற்கு மாத்திரமன்றி அதற்கு வெளியே உள்ள 07 மாகாண சபைகளும் உள்ளன என்பதனையும் விஷேடமாக சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளையும், பிராந்திய அபிவிருத்தியையும் அவர்களது வாழ்விடங்களையும் உறுதிப்படுத்துவது அதில் தங்கியுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும்- என அப்துல் மஜீத் வலியுறுத்தியுள்ளார்.