Wednesday, May 31, 2023

ஜூம்ஆத் தொழுகையை 12.45 மணியுடன் முடிவுறுத்துமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்.!


-சாய்ந்தமருது செய்தியாளர்-

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகையினை பிற்பகல் 12.45 மணியுடன் நிறைவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மியத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினூடாக இதனை வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்தை சென்றடைவதற்கு ஏதுவாக இவ்வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கி, ஜூம்ஆத் தொழுகையை பிற்பகல் 12.45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறு ஜூம்ஆப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் உலமாக்களை, அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா கேட்டுக் கொண்டுள்ளது.

Saturday, May 27, 2023

கல்முனையில் கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு.!


-சாய்ந்தமருது செய்தியாளர்-

கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் விஷேட கருத் திட்டத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டம், இன்று சனிக்கிழமை (27) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வாடிவீட்டு வீதி கடற்கரைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, மருதமுனை, பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்பு கடற்கரைப் பகுதிகளும் சிரமதானம் செய்யப்பட்டு, கழிவுகள் யாவும் அகற்றப்பட்டு, சுத்தமாக்கப்பட்டுள்ளன.

மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப்பணிகளில் சுகாதார மற்றும் பொறியியல் வேலைப் பிரிவுகளின் மேற்பார்வையாளர்களும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

நகரையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருப்பதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளை கவரும் நகராகவும் டெங்கு அற்ற பிரதேசமாகவும் கல்முனை மாநகரை பேணிப் பாதுகாக்கும் பொருட்டு கடற்கரைப் பகுதிகளிலும் பிரதான வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்தேச்சியாக கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

























Saturday, May 20, 2023

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதி; குவைத் தூதரகம் உறுதி..!


-ஏயெஸ் மெளலானா-

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறைத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய கட்டிடத் தொகுதி ஒன்றை விரைவாக அமைத்துக் கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது.

ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான குவைத் தூதுவரின் பிரதிநிதியாக இன்று சனிக்கிழமை (20) இப்பாடசாலைக்கு விஜயம் செய்த குவைத் தூதரகத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மட் பிர்தெளஸ், இதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் குவைத் தூதரக செயலாளர் வரவேற்கப்பட்டதுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் நீண்ட காலத் தேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் அக்கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதையடுத்து பாடசாலை வளாகத்தை சுற்றிப் பார்வையிட்ட தூதரக செயலாளர்
அங்கு நிலவி வருகின்ற பல்வேறு குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிந்தார்.

இதன்போது கட்டிட வசதி குறைபாடு காரணமாக சில வகுப்பறைகள் தகரக் கொட்டில்களில் இயங்கி வருவதனால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தன்னால் அவதானிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டிய அவர், முன்னுரிமை அடிப்படையில் வகுப்பறைக் கட்டிடமொன்றை அமைத்துத் தருவதற்கு குவைத் தூதுவரின் அனுசரணையுடன் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக தூதரக செயலாளர் முஹம்மட் பிர்தெளஸ் மற்றும் ஏற்பாட்டாளரான முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் அதிபர் அலி அக்பர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.