Wednesday, January 31, 2024

சுதந்திர தினத்தன்று இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Friday, January 19, 2024

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை திறப்பதில் தாமதம்; கல்வி நடவடிக்கைகளை Zoom மூலமாக நடாத்தத் தீர்மானம்.!

-ஏயெஸ் மெளலானா-

வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகிற சூழ்நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்வதால் மாணவர்கள் நலன் கருதி இந்த வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 22.01.2024 ஆம் திகவி திங்கள் தொடக்கம் Zoom (நிகழ்நிலை) மூலமாக நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் அறிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்படுவதுடன் மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Tuesday, January 16, 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை வழமை நிலைக்கு கொண்டுவர உபவேந்தரும் ஊழியர்களும் களத்தில்.!

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு  காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள்  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகுந்த சிரமத்துடன் சுத்தப்படுத்தும் ஊழியர்களுடன் உபவேந்தர் உள்ளிட்ட குழுவினரும் இணைந்து சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

சீரற்ற காலநிலை மற்றும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22.01.2024 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகத்துக்குள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி சகல தரப்பு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வளாகத்தில் முழுமையாக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில் மற்றும் பேராசிரியர்கள், கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன். செயலாளர் எம்.எம்.முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

தற்போது பல்கலைக்கழகத்துக்குள் இருந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் தாழ்வான சில இடங்களில் தற்போதும் நீர் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது.

ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக  பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்  காரணமாக பாரிய சொத்து இழப்புக்களை ஊழியர்களின் மேலான ஒத்துழைப்புடன் குறைக்க கூடியதாக இருந்ததாக உபவேந்தர் குறிப்பிட்டார்.  

மேலும், தங்களது சக்திக்கு மேலதிகமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார். 

அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும்  சுத்திகரிப்பு பணிகளில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். 

-ஊடக பிரிவு













Thursday, January 11, 2024

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை முனைப்பு; ஆணையாளரும் களத்தில்..!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

கடந்த பல தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனத்த மழை காரணமாக, சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டதால் கல்முனை மாநகர பிரதேசங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி அவர்களின் நெறிப்படுத்தலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகர சபையினால் முகத்துவாரங்கள் யாவும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்காக வடிகான்கள் மற்றும் தோனாக்களில் காணப்படும் தடைகள் கனரக வாகனங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன.

தோனா உட்பட பல்வேறு இடங்களிலும் முறிந்து வீழ்ந்துள்ள பாரிய மரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு களப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார்.

அத்துடன் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், வி.சுகுமார், ஏ.எம்.நிசார், அபார் பேகம் உட்பட மேற்பார்வையாளர்களும் களத்தில் நின்று செயலாற்றி வருகின்றனர்.

வெள்ள அனர்த்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு வேலைத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யபட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.