Saturday, August 31, 2024

முஸ்லிம் கட்சிகளை சந்தித்த அஜித் தொவால்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் அமிர் அலி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது தங்களுடைய இரு கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு எடுத்த பின்னணியில் இலங்கையில் விஷேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 90 வீதமான முஸ்லிம் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்ற விடயத்தை எடுத்துரைத்துள்ளனர்.

இதுவரையான பிரச்சாரக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன என்றும் இக்கூட்டங்களில் மக்கள் நிறைந்து காணப்பட்டனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புகள் வகிப்போம் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தின் வெளிவிவாகர கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என்றும் அவர்களினால் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஆகவே இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பொருளாதார விடயங்கள் உட்பட முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமான விடயங்களிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்தியாவும் ஒரு சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


Monday, August 26, 2024

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜப்பான் பயணம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் அவர்கள் விசேட புலமைப்பரிசில் பெற்று இன்று திங்கட்கிழமை (26) ஜப்பான் பயணமாகிறார்.

ஜப்பானில் ஒரு மாத காலம் இடம்பெறவுள்ள உள்ளூர் தொழில்துறை மேம்பாடு குறித்த அறிவுப் பகிர்வு பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.

ஜப்பானிய அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்ற இப்பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றுவதற்கான புலமைப்பரிசில் அனுசரணையை JICA எனும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் நாட்டு அதிகாரிகளுக்கு மேலதிகமாக 06 நாடுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 06 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் அவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மாநகர ஆணையாளரான என்.எம். நௌபீஸ் அவர்கள் இத்தகைய உயர்தரமான உன்னத வாய்ப்பைப் பெற்று ஜப்பான் செல்வதை முன்னிட்டு கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆணையாளரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Thursday, August 8, 2024

கல்முனை மாநகர நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், சம்மந்தம்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை ஆராயும் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (08) மாநகர சபை கூட்ட மண்டபத்தில் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களிடம் கேட்டறிந்து கொண்ட ஆணையாளர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட வேலைத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்நிலையில் நூலகங்களின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், களஞ்சியக் காப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கினார்.

அத்துடன் போதிய வசதிகள், ஆளணிகள் இருந்தும் சில நூலகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக வாசகர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதால் நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் தமது பொறுப்புகளையும் கடமைகளையும் உதாசீனம் செய்யாமல், முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆணையாளர், தவறிழைக்கும் பணியாளர்கள் மீது எவ்வித தயவுமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், விடய உத்தியோகத்தர் ஏ.ஆர். நஸ்ரின் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.