🛑சுப்பர் முஸ்லிம் குழுவினர் அல்குர்ஆன் மற்றும் முகம்மது நபி காட்டிய வழியில் நடப்பதில்லை.!
🛑சுப்பர் முஸ்லிம் குழுவினர் நாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது.!
🛑முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.!
🛑புலிகள் மற்றும் சஹ்ரான் சம்பவங்கள் இனியும் வேண்டாம்.!
👉அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண தெரிவிப்பு.
(மெட்ரோ மிரர் அம்பாறை செய்தியாளர்)
சுப்பர் முஸ்லிம் குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவர்களை முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அக்கரைப்பற்று பொலிஸ் பிராந்தியத்திற்கான புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண தெரிவித்தார்.
காரைதீவுப் பொலீஸ் பிரதேசத்திற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக் குழுவின் கூட்டம் நேற்று காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ். ஜகத் தலைமையில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண மேலும் தெரிவிக்கையில்;
சமுகத்தில் அவ்வப்போது எழும் சட்டவிரோத குற்றச் செயல்களை தடுக்க பொலிசார், பொது மக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.
சூப்பர் முஸ்லிம் குழுவினர் நபிகள் நாயகம் அல்லது குர்ஆன் காட்டிய வழியில் ஒருபோதும் நடப்பதில்லை. டொக்டர் ஒருவர் தலைமையிலான ஒரு குழுவினர் இளைஞர் குழுவை திரட்டி இந்த சமூக விரோத செயற்பாட்டை முன்னெடுப்பதாக எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
புலிகள் மற்றும் சஹ்ரான் சம்பவங்கள் உங்களுக்கு தெரியும். அதற்கெல்லாம் இனி இடம் அளிக்க முடியாது.
நாட்டிலே நாங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும்.
எனவே உங்கள் பிரதேசத்தில் வாழும் இளம் சமுதாயத்தினரை நாங்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் . பிரதேசத்தில் ஏதாவது குற்றச்செயல்கள் அல்லது பிழையான செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக போலீஸ் பொறுப்பு அதிகாரிக்கு அல்லது எனக்கு அல்லது தகவல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
போதைப்பொருள் பாவனை, பெண் துஸ்பிரயோகம் மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை.
அனைத்து சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் முற்றாக தடை செய்ய வேண்டும்- என்றார்.