Monday, March 22, 2021

கல்முனை பிரதேச காணி உபயோக திட்டமிடல் குழு மீளமைப்பு..!

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச காணிகளைக் கையாள்வதற்கான காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழு மீளமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச காணிகள் தொடர்பிலான அனைத்து அதிகாரங்களும் பிரதேச செயலாருக்கே உரித்தானதாகும்.

இக்காணிகளுக்கான நிர்வாக முகாமைத்துவம் தொடர்பில் ஏற்படக்கூடிய பிணக்குகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழுவினர் கூடி, ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.  

பிரதேச செயலாளர் தலைமையிலான இக்குழுவில் கல்முனை மாநகர மேயர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

எதிர்காலங்களில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளை வேறு நிறுவங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையின்போது இக்குழுவின் தீர்மானங்களுக்கமைவாகவே மாவட்ட செயலக காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் குழுவுக்கு முன்னளிப்பு செய்யப்படும் என பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Monday, March 8, 2021

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

ஆர்வமுள்ள மாணவிகள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியும் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய மார்க்கக் கல்வி போதிக்கப்படுவதுடன் சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்..

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனர். அத்துடன் அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தின் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்திருப்பதுடன் இதுவரை 18 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக றிஸ்கான் முகம்மட் நியமனம்..!

-அஸ்லம் ஸ்.மௌலானா-

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, கட்சி தலைமையகத்தில் வைத்து திங்கட்கிழமை (08) மாலை நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றியபோது இப்பகுதி இளைஞர்களுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவராகவும் மெட்ரோ மிரர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினராகவும் மற்றும் பல சிவில் அமைப்புகளின் முக்கிய பிரதிநிதியாகவும் இருந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

www.metromirror.lk

metromirrorweb@gmail.com