Thursday, October 14, 2021

குருவை நிந்திக்கும் அறிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வாபஸ் பெற வேண்டும்; தென்கிழக்கு கல்விப் பேரவை காட்டம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது என குருவை நிந்திக்கும் வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வெளியிட்டுள்ள அறிக்கையை அச்சங்கம் உடனடியாக வாபஸ் பெறுவதுடன் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டுமென தென்கிழக்கு கல்விப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பேரவையின் சார்பில் அதன் தலைவர் ஏ.எல்.முகம்மட் முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கடந்த 24 வருடங்களாக ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிக்கு எதிரான போராட்டங்களை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சாத்வீகமாக முன்னெடுத்து வருகிறன. இந்த நீதியான போராட்டத்திற்கு நாட்டில் உள்ள பெரும்பாலான தொழில் சங்கங்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

ஆனால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது என அரசைக் கோரி அறிக்கை வெளியிட்டிருப்பதானது மிக மோசமான செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு தமது வாழ்நாள் பூராவும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டிய வைத்தியர் சமூகம் ஏறி வந்த ஏணியை உதைத்து விட்டு, ஆசிரியர்களது கோரிக்கையை நையாண்டி பண்ணும் விதத்தில் நடந்து கொள்வதானது குருவை நிந்தித்த குற்றத்திற்கு சமனாகும். இது ஆசிரியர்களது சாபத்திற்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

சுகாதாரத்துறையில் வைத்தியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி அப்பாவி நோயாளிகளை பணயம் வைத்து கடந்த காலங்களில் நடாத்திய போராட்டங்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஆசிரியர்களை இழிவுபடுத்துவது மாத்திரமன்றி தொழிற்சங்கங்கள் மத்தியிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்- என தென்கிழக்கு கல்விப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

metromirrorweb@gmail.com
whatsapp: 0779425329

No comments:

Post a Comment