Tuesday, October 19, 2021

மாடு அறுத்தல் தடைக்கு அமைச்சரவை அங்கீகாரம்; சட்டங்களை திருத்தவும் நடவடிக்கை..!


இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்/கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

* 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம்

* 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

* 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

* 255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம்

* 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

இதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமர், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

@Tamil Mirror

No comments:

Post a Comment