Monday, January 24, 2022

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை பாராட்டி கௌரவிக்கும் விழாவும் நூல் வெளியீடும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) 

அரை நூற்றாண்டு காலமாக கல்விப் பணியாற்றி வருகின்ற அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் மணடபத்தில் இடம்பெறவுள்ளன.

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள், தனது கடந்த ஐம்பது வருட கால கல்விப் பணியின்போது கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் இஸ்லாம் மற்றும் அரபு பாட ஆசிரியராக, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக, தொலைக்கல்வி போதனாசிரியராக, அரபுக் கல்லூரிகள் பலவற்றின் அதிபராக சேவையாற்றி, பன்னூறு உலமாக்கள் மற்றும் கல்விமான்கள் பட்டம் பெற பெரும் தொண்டாற்றியிருக்கிறார்.

இக்காலப் பகுதிகளில் அவரிடம் கல்வி கற்றுத் தேர்ந்த மாணவர் குழாம் ஒன்றே மேற்படி நிகழ்வுகளுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிகழ்வின்போது 'மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) - கல்வி, சமூகப் பணிகளும் பயணங்களும்' எனும் நூல் வெளியீட்டு வைக்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என மேலும் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment