Friday, February 25, 2022

கிழக்கில் 45 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்; அரசியல் தலையீட்டினால் நிரப்பப்படாமல் இழுத்தடிப்பு என்கிறது கிழக்கு கல்வி அதிகாரிகளின் சங்கம்..!

(சாய்ந்தமருது நிருபர்)

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவி வருவதாகவும் அரசியல் தலையீடு காரணமாக இவை நிரப்பப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சங்கத்தின் ஏ.எல்.முகம்மட் முக்தார் நேற்று (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரித்திருப்பதாவது;

கிழக்கு மாகாணத்தில் தரம் இரண்டு பாடசாலைகளில் நிலவி வருகின்ற அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி, உடனடியாக நியமனங்களை வழங்குமாறு எமது சங்கம் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரை கோரியுள்ளது.

அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ள 45 தரம் இரண்டு பாடசாலைகளுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டு, ஒரு வருடமாகியும் இதுவரை நேர்முக பரீட்சை நடாத்தப்படாது காலம் கடத்தப்பட்டு வருகிறது.

இப்பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குரியதாகும். அதன் அடிப்படையிலேயே விண்ணப்பம் கோரப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் திருமலை, மூதூர், திருமலை வடக்கு, கிண்ணியா ஆகிய கல்வி வலயங்களில் 17 பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு, கல்குடா, பட்டிருப்பு, மட்டு மேற்கு, மட்டு மத்தி ஆகிய வலயங்களில் 16 பாடசாலைகளிலும் கல்முனை கல்வி மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் 08 பாடசாலைகளிலும் அம்பாறை வலயத்தில் 04 பாடசாலைகளிலும் அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவுகிறன.

பல தடவைகள் நேர்முகபரீட்சை நடாத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், அரசியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எனவே, அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் பாடசாலைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க மாகாண கல்விப் பணிப்பாளர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment