Monday, March 28, 2022

கல்வியில் திறமையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிப்பு..!


-யூ.கே.காலித்தீன்-

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்றுகூடலும் போரத்தின் ஊடகவியலாளரின் பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சிறப்பு சித்தி பெற்றமைக்காக அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றும் பொத்துவில் வுலு வேயா விடுதி ஒன்றில் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் எம்.ஏ.பகுர்டீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அண்மையில் காலமான ஒன்றியத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் இ.நடராஜன் அவர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

போராத்தின் உறுப்பினர்களான கே.எல்.அமீர் அவர்களின் புதல்வி அமீர் பாத்திமா இனபா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமைக்கும் எம்.எஸ்.மலீக் அவர்களின் புதல்வர் அப்துர் றஹ்மான் மற்றும் மற்றுமொரு உறுப்பினர் எம்.எச்.கலீபாவின் புதல்வி எம்.கே.ஜுமானா ஹசீன் ஆகியோர் 2020 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றமைக்கும் ஞாபக சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, போராத்தின் உறுப்பினர் பீ.முஹாஜிரீன் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பாடலாக்கத்திற்கான சிறப்பு பரிசில் பெற்றமைக்காக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கே.எல்.நக்பர் சிறப்புரையையும், இப்போராத்திற்கு எதிர்காலத்தில் தன்னால் முடியுமான சகல விதமான உதவிகளையும் செய்வதாக தெரிவித்ததுடன், கெளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் உறுப்பினர்களின் நலன் கருதியும் தற்போது நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் இப் பேரவையானது சமூக செயற்பாடுகளிலும் உதவி புரிய வேண்டுமென்றும் முடிவுகளும் எட்டப்பட்டு அதற்காக பூர்வாங்க செயற்பாடுகளும் முன்மொழியப்பட்டது.



No comments:

Post a Comment