Sunday, July 31, 2022

'தமிழ் சமூகத்தை முஸ்லிம் சமூகம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்' -நிந்தவூர் தவிசாளர் தாஹிர்

(ஏ.எல்.எம்.சலீம்)

'தமிழ் மக்கள் பல்வேறு துன்பதுயரங்கள், இன்னல்களை அனுபவித்துவந்த போதிலும், ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களுடன், இணையாவோ, மண்டியிடவோ ஒருபோதும் முனையவில்லை, முஸ்லிம் சமூகம் இதனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்'

இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களுக்கான 4 ஆவது சபையின் 52 ஆவது அமர்வு சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு தலைமைவகித்து தவிசாளர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆட்சி அமைக்கும் அரசுடன் இணைவதன் மூலமே விமோசனங்களைப் பெறலாம், உரிமைகளை வென்றெடுக்கலாமென்ற மாயையிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட வேண்டுமெனக்குறிப்பிட்ட தவிசாளர் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

'இந்த நாட்டில் தமிழ் சமூகம் பல்வேறு இன்னல்களையும் துன்பதுயரங்களையும், புறக்கணிப்புக்களையும் அனுபவித்து வருகின்ற போதிலும், அந்த மக்கள் ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு, அரசுகளுடன் இணைந்து இதற்கான விமோசனங்களைப்பெற்றுத்தருமாறு தமது அரசியல் தலைமைகளை ஒரு போதும் கோரவில்லை.

இழப்புகளை, இன்னல்களுக்கான விடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஒற்றுமையுடன் பிரயோகித்து சாதித்தே வருகின்றனர். இந்த முன்னுதாரணத்தை முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும், பிரதான இரு முஸ்லிம் கட்சிகளும் ஏன் இன்னும் புதிய அரசுடன் சேரவில்லை? அமைச்சு பதவிகளை ஏன் பெறவில்லை எனக் கேட்பவர்களாகவே நம்மவர்கள் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாக பிரஜைகளின் சுய நல, போக்குகளும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனக்குக் கிடைத்தால் போதும் என்ற மனநிலை கொண்டோரே அரசியல் வாதிகளையும் ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எனப் பிரித்தாள முனைகின்றனர்.

எனவே, மக்கள் முதலில் மாறவேண்டும். அரசுடன் இணைந்திருந்தாலே வாழலாமென்ற மன நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இன்று நாட்டில் புதிய அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்டகால அரசியல் அனுபவமிக்க, இராஜதந்திர தொடர்புகளை நுணுக்கமாகவும், துல்லியமாகவும் கையாளக்கூடிய ரணில் விக்கிரம சிங்க அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ளார்.

அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே வேளை, அவர் முன்னைய ஆட்சியினரின் நிழல் ஜனாதிபதியா எனும் கேள்வியும், அச்சமும் மக்களின் பார்வையாகவுமுள்ளது.

இருப்பினும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாகவும், எவரையும் காப்பாற்றும் நோக்கற்றதாகவும், அராஜகமற்ற நிலையிலும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதேவேளை முப்படைகளின் தளபதியாகவிருந்து புரையோடிப் போயிருந்த யுத்தத்தையே வென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் விலகிச் சென்றுள்ளார்.

அவர் நினைத்திருந்தால் படைதரப்பின் ஆதரவுடன் அதிகாரப் பிரயோகம் செய்து, பாதுகாப்பு தேடியிருக்கலாம். ஆனாலும் எவ்வித சேதாரமுமின்றி அவர் ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். மனிதாபிமானம் செத்துவிடவில்லை என்பதையே இது காட்டுகின்றது' இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment