Saturday, August 6, 2022

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறக்கூடிய வாய்ப்பை தட்டிக்கழிக்காதீர்; முஸ்லிம் தலைமைகளிடம் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வேண்டுகோள்..!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமூகம் சார்ந்த கோரிக்கைகளுக்கான உத்தரவாதங்களை பெற்றுக் கொண்டு, அமையப்போகும் சர்வகட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும். சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறக்கூடிய நல்லதொரு வாய்ப்பை தட்டிக்கழித்து, தவற விட வேண்டாம் என கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடயத்தை வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைமைகளுக்கு அவசர கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக முன்னணியின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதை இலக்காகக் கொண்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக சர்வகட்சி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருப்பதுடன் அதற்கான அழைப்பை அனைத்து கட்சிகளுக்கும் விடுத்திருக்கிறார்.

இவ்விடயமாக அரசியல் கட்சிகளுடன் கூட்டாகவும் தனித்தனியாகவும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார். சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுதியளித்திருக்கிறது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்காக போட்டியிட்ட டலஸ் அணியும் இதற்கு உடன்பட்டிருக்கிறது. ரணிலை அங்கீகரிக்காத மைத்திரி, விமல் வீரவன்ச, உதய கம்பன்பில போன்றோரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, விக்னேஸ்வரன் அணி போன்றவை தமது சமூகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றுக்கான உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்டு, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, ஜனாதிபதி ரணிலை சந்தித்து, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அமைச்சுப் பதவி தவிர்ந்த, சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் அவர் ஏதாவது பேசினாரா என்பது பற்றி அறியக்கிடைக்கவில்லை.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தாம் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் என்ற ரீதியில் இதுவரை ஜனாதிபதியை சந்தித்து எதுவும் பேசவில்லை.

இவ்வ்விரு கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக்கட்சிகள் என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுக்கும் தீர்மானத்துடன் இணங்கிப்போதல் என்ற நிலைப்பாட்டுடனேயே தொடர்ந்தும் இருப்பதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு சஜித் பிரேமதாச உடன்பட்டிருக்கின்ற நிலையில் கூட சமூகம் சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பிரத்தியேகமாகப் பேசுவதற்கு இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் ஆர்வம் காட்டாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதானது முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் சமூக மட்டத்தில் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் ஷூரா சபை, உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட தேசிய ரீதியிலான சிவில் அமைப்புகளின் ஆலோசனைகளையாவது பெற்று செயற்படலாம்.

ஆனால் எந்தவொரு தூரநோக்கு சிந்தனையும் இல்லாமல் தமது எதிர்கால பிரதிநிதித்துவ அரசியலை மாத்திரம் மையமாகக் கொண்டே முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளும் இருபதாவது திருத்தத்தை ஆதரித்து விட்டு உதிரிகளாக இயங்குகின்ற அக்கட்சிகளின் எம்.பி.க்களும் செயற்பட்டு வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளுடன் டலஸ் அழகப்பெருமவை ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அதே கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்து, உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்டு சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. 

ஆனால் இப்படியான நல்லதொரு வாய்ப்பை முஸ்லிம் கட்சிகள் தவற விடப் போகின்றனவா என்று சமூகம் அங்கலாய்க்கிறது. தற்போது 24 மணி நேரமும் அகலத் திறந்திருக்கின்ற ஜனாதிபதி மாளிகையின் கதவுகள் மூடப்பட்டால், பின்னொரு சந்தர்ப்பத்தில் எவ்வளவு தட்டினாலும் திறக்கப்படாமல், ஜனாதிபதியை சந்திக்கக்கூடிய வாய்ப்புக்கூட கிடைக்காமல் போகலாம்.

ஆகையினால் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இனியும் தாமதியாமல் கிடைத்திருக்கின்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, ஜனாதிபதியினால் நிறைவேற்றுவதற்கு சாத்தியமான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துப் பேச வேண்டும் என கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது- என்று அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

-அஸ்லம் எஸ்.மௌலானா-

No comments:

Post a Comment