Sunday, October 16, 2022

வாசிப்போம்.! வாசிப்பை நேசிப்போம்.!


2022' ஓக்டோபர் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

வாசிப்பு என்பது தனி மனித ஆளுமையின் அஸ்திவாரங்களின் ஒன்று. வாசிப்பை நேசிக்காத மனிதன் இவ்வுலக வாழ்க்கையின் முழுமையினையும், வாழ்வியலின் யதார்த்தத்தினையும் புரிந்து சக்தி மிக்க ஆழுமையாக திகழ முடியாது.

வாசிப்பு ஒரு மனிதனை முழுமையடையச் செய்யும், வாசிப்பு அவனை வாழவைக்கும், வாசிப்பு மனிதனுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 

வாசிப்பினை மூலதனமாக்கிவர்களே இவ்வுலகில் ஆற்றல்மிக்கவர்களாகவும் ஆட்சியாளர்களாகவும், சாதனை படைத்தவர்களாகவும் ஆளுமைமிக்கவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆதலால் வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்.

இதனை மூல மந்திரமாகக் கொண்டே இலங்கை அரசு 2004 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாக நூலகங்கள் தோறும் பெரு விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக பொது மக்களையும் மாணவ மாணவிகளையும் வாசிப்பின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பில் இலங்கை அரசு நூலக ஆவணங்கள் சபையின் ஊடாக வருடத்துக்கு ஒரு தொனிப்பொருளை மையமாகவைத்து வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக பல் வகையான நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்கு சுற்று நிரூபங்களை வெளிப்படுத்துவதுடன் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைகளுக்காக கல்வி அமைச்சு உள்ளுராட்சி அமைச்சு மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகளையும் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றது. 

"அறிவார்ந்த சமுகத்திற்கான வாசிப்பு" என்பதே 2022ம் ஆண்டின் ஒக்டோபர் வாசிப்பு மாதத்தின் பிரதான கருப்பொருளும், இலக்குமாகும். இது நமது அரசின் மிக உன்னதமான வேலை திட்டமாகும். இதற்கமைவாக இவ்வருடம் கீழ்வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்று நிரூபத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன..

*அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அனுகலை வழங்குவதல் தொடர்பில் இலக்கை அடைய சமூக எழுத்தறிவு மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல். 

*ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தித் திட்டத்தின்  ஐந்தாவது நோக்கத்தின் படி  "பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் " என்ற இலக்கை அடைய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

*ஆராட்சியாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தகவலை தேடும் பிரதேச பொது மக்களின் தேவைகளுக்காக தகவலை அணுகுவதற்கு தேவையான வசதிகள் மற்றும் உதவிகளை வழங்குதல்.

*நூலக சமூகத்தின் முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி நடவடிக்கைகளுக்காக பொருத்தமான திட்டங்களை செயற்படுத்தல்.

*இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர் கல்வி தேவையுள்ள அங்கத்தவர்களின் தகவல் தேவைகளை அடையாளம் காண நடவடிக்கை எடுத்தல்.

* உள்ளூராட்சிப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடும் ஒரு நூலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு வீட்டு நூலகங்களை தொடங்குவதற்கான திட்டங்களைச் செயற்படுத்தல்.

*வீட்டு நுகர்விற்கு பொருத்தமான பயிர்கள் மற்றும் தாவரங்கள் பற்றி விழிப்புணர்வூட்டுவதுடன் அப்பயிர்களை வளர்ப்பதற்கு தேவையான தகவல்களை வழங்குதல்.

* வாசகர் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு வாசகர்களின் வீடுகளிலும் வீட்டுத் தோட்டங்களை செய்வதற்கு ஊக்குவித்தல்.

*பயிர்களின் விற்பனை  பரிமாற்றம் தொடர்பான சந்தைப்படுத்தல் வசதிகளுக்கு நூலக வளாகத்தை வழங்குதல்

*இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நூலக சேகரிப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல்களை விளம்பரப்படுத்தல்.

*உள்ளூர் கைத்தொழில்கள் தொடர்பான பல்வேறுபட்ட சுயதொழில்கள் தொடர்பான அறிவைப் பெறுவதற்கு வழிகாட்டுதல்.

* "பசுமை நூலகம்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றுச் சூழலை பாதுகாத்தல் தொடர்பாக நூலகம் சார்பில் செய்யக்கூடிய செயற்பாடுகளை செய்தல்.

* பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கான சேகரிப்பு மையமாக நூலகம் செயற்படுதல் அல்லது அதனுடன் தொடர்புடைய உள்ளூராட்சி நிறுவனத்தை வழிநடாத்தல்.

உள்ளூர் வாசகர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வடிவமைப்புக்களைக் கொண்ட இதழ்கள் மற்றும் சுவரொட்டிகளை வெளியிடுதல்

*தொனிப்பொருளுடன் தொடர்பான பல்வேறுபட்ட போட்டிகளை நடத்துதல் (கட்டுரை போட்டி, சித்திரப்போட்டி)

*தொனிப்பொருளுடன் தொடர்பான போஸ்டர்களை வடிவமைத்தல்.

*புதிய அங்கத்தவர்களை சேர்த்தல் மற்றும் இலவச அங்கத்துவத்தை வழங்குதல்

*நூலகம் பற்றிய விளம்பரப் பிரச்சாரங்களை நடாத்துதல்

* தொடர்புடைய பிரதேசத்தில் சிறந்த வாசகரைத் தேர்ந்தெடுத்தல்

*நடமாடும் நூலக சேவைகளை நடாத்துதல்.

*சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க கதை கூறும் நேரம் சிறுவர் படங்கள் சிறுவர் நாடகங்கள் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளைச் செயற்படுத்தல்

*சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் பிற ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

*வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஏனைய நூலகங்களுடன் இணைந்து கூட்டுறவுத்திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

* நூலக முகநூல்  பக்கத்துடன் இதுவரை இணையாத வாசகர்களை அடையாளம் கண்டு அவர்களை முகநூல் பக்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் முகநூலில் வாசிப்பு தொடர்பான மேற்கோள் உரைகள் மற்றும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளல்.

*அச்சு மற்றும் இலரத்திரனியல் ஊடகங்களின் மூலம் நூலகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுதல்.

* உள்ளூரில் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் பொது மக்களை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இவ்வாறான திட்டங்களை செயற்படுத்தும் போது ஏற்படுகின்ற அறிவியல் மாற்றங்களின் தாக்கம் வாசிப்பின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்கப்படுகின்றது.

சர்வதேச ஆய்வுகளின்படி 19 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களே அவர்கள் அனைவரும் பாடசாலை செல்லும் மாணவர்கள் இவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகிவருகின்றமை கவலைக்கிடமாகவுள்ளது.

இவர்கள் வாசிப்பின் பெறுமதியினையும், அதன் அவசியத்திணையும் புரியாதவர்களாக பாடசாலை பாட விதானங்களை மட்டும் படித்து பரீட்சைக்கு தோற்றுபவர்களாகவும்  அதில் சித்தியடைந்து பட்டங்களை பெற்று தொழில் பெறுகின்ற குறுகிய நோக்கத்துடனேயே அவர்களது வாழ்வு முடக்கப்படுகின்றது.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அதனை இலக்காகக் கொண்டே மாணவர்களை வழி நடாத்திக் கொண்டிருக்கின்றனர். பாடசாலை கற்றலுக்கு மேலாக தனியார் வகுப்புகள் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அவர்களின் அறிவுத்தேடல் மழுங்கடிக்கப்படுகின்றது.

இந்த நவீன உலகின் சவால்களை முறியடித்து வெற்றி இலக்கு நோக்கி பயணிப்பதற்க்கும், தனிமனித ஆளுமை மிக்கவராகவும்  சமூக அங்கீகார முடையவராகவும், பொது அறிவு மிக்கவராகவும், தனித்துவமுடையவராகவும், சக்தி மிக்கவராகவும் நீங்கள் ஆகவேண்டுமாயின் நீங்கள் சிறந்த வாசிப்பு பழக்கத்தை உடையவராக மாறுங்கள்.

ஒரு தனி மனிதனுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவன் தனித்துவமான சிறந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான சிறந்த பண்புகள் மேலோங்க வேண்டுமாயின் நூல்களை நேசிப்பவராகவும் அவைகளை இரசித்து வாசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

பல நூல்களை வாசிக்கின்றவர் பல பெறுமாணங்களை பெறுகின்றார். அவர் பெறுகின்ற அந்த பல பெறுமாணங்கள்தான் அவரை தனித்துவமானவராக மேலோங்கச் செய்கின்றது. அதன் மூலம் அவர் அச்சமூகத்தின் தனிமனித அங்கீகாரத்தை பெறுகின்றார். 

வாசிப்பு என்பது ஓர் அற்புதமான பழக்கம். இதன் மூலம் கிடைக்கும் அறிவும் அதனால் பெருகும் ஆற்றலும் நம்மை பண்படுத்தி  நம்மை பட்டை தீட்டி வைரமாக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனை நம்மில் பெருந்தொகையானவர்கள் அறியாமல் ஓய்வு காலத்தை வீணடித்து விடுவது ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாகும். தேனீர் கோப்பையோடு முற்றத்தில் இருந்துகொண்டு பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றையும் வாசிப்பதும் அதிலுள்ள சுவாரஸ்யங்களை நம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சொல்லி சிலாகிப்பதும் நம் மத்தியில் அருகிப் போய்விட்டது.

இந்த துர்ப்பாக்கி நிலைமாற்றப்பட்டு எதிரகாலத்தில் சிறியவர்களுடன் சேர்ந்து பெரியவர்களும் வாசிப்பாளர்களாக மாற வேண்டும் அப்போதுதான் நமது பிள்ளைகளான இளையவர்களும் வாசிப்பாளராக மாறுவார்கள்.

இவ்வாறு நல்ல புத்தகங்களை நீங்கள் வாசிக்க வாசிக்க உங்களின் அறிவு பல விடயங்களை இரசித்து அதன் மூலம் வாழ்வில் நல்ல கோட்பாடுகளை உருவாக்க முடியும். அதனூடாக ஒரு சிறந்த வாழ்க்கையினை உருவாக்கி கொள்வதுடன் நமது பிள்ளைகளையும் நமது சமூகத்தினையும் நன்கு சீரமைக்க முடியும்.

பொதுஅறிவு, இரசிப்புத்திறன், ஞாபக சக்தி, பிழையில்லாத எழுத்து, நேர்த்தியான வசனநடை, சிறந்த பேச்சு என்பவற்றை கட்டமைக்க வாசிப்பு இன்றியமையாததாகும். பரீட்சைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, பல்கலைக்கழகம் செல்ல, பட்டம் பெற, பதவிகள் பெற எவ்வகையான தலைபிலும் உரையாற்ற வாசிப்பே அடிப்படையாகும்

இது மட்டுமன்றி ஏனையவர்களிலிருந்து நீங்கள் வேறுபட்ட திறனாளியகவும், தொழில் நிலையத்தில் ஆற்றல் மிக்கவராகவும், வினைத்திறன் மிக்கவராகவும், நீங்கள் அடையாளப்படுத்த படுவீர்கள. மேலும் நம்மை சில நேரங்களில் கவ்விக்கொள்ளும் விரக்தி, கோபம், இயலாமை, அசௌகரியங்கள், இன்னல்கள், துன்பங்கள் என்பவற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் வாசிப்பு இன்றியமையாத துணையாகும். 

அது சகல விடயங்களுக்கும் நமது உற்ற நண்பனாக வழிகாட்டியாக  நம்மை புடம் போட்டுக் கொண்டிருக்கும்.

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தகவல்களையும், அறிவுகளையும் அறிந்து கொண்டு அவற்றை மூலதனமாக்கி நாளைய உலகை வெற்றி சூட வாசிப்பு அத்தியாவசியமானதாகும். 

ஆதலால் கண்டதையும் கற்று பண்டிதன் ஆக வாசிப்போம்.! வாசிப்பை நேசிப்போம்.!

அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி 

வருமான  பரீசோதகர் - கல்முனை மாநகர சபை

No comments:

Post a Comment