Wednesday, September 27, 2023

உள்ளுராட்சி சபை ஊழியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் கோரிக்கை; அமைச்சரவை அங்கீகாரம் பெறுதற்கு பிரதமர் உறுதி.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார். 

இதில் ஒரு அம்சமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பல வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கப்படாத நிலையில் கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும் நிரந்தர நியமனத்திற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர் எனவும், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அவசரமாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார். 

ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், உள்ளுராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tuesday, September 26, 2023

சன்மார்க்க வளர்ச்சிக்கும் சமூக சீர்திருத்தங்களுக்காகவும் கரிசனையுடன் பங்காற்றிய ஹுஸைனுதீன் மெளலவியின் மறைவு பேரிழப்பாகும்; அம்பாறை மாவட்ட உலமா சபை அனுதாபம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

சன்மார்க்க வளர்ச்சிக்கும் சமூக சீர்திருத்தங்களுக்கும் மிகவும் கரிசனையுடன் பங்காற்றி வந்த கிழக்கிலங்கையின் மூத்த உலமா எம்.ஐ. ஹுஸைனுதீன் மெளலவியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட உலமா சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் முன்னாள் பொருளாளரும் மருதமுனை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான மெளலவி எம்.ஐ. ஹுஸைனுதீன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) இரவு காலமானார்.

அன்னாரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அம்பாறை மாவட்ட உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் ஐ.எல்.எம்.ஹாஷிம் மெளலவி, செயலாளர் ஏ.எல்.நாசிர் கனி மெளலவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

இஸ்லாமிய சன்மார்கத்தில் ஆழ்ந்த அறிவும் தெளிவும் கொண்டிருந்த ஹுஸைனுதீன் மெளலவி மிகச்சிறந்த மார்க்கப் பிரச்சாரகராகத் திகழ்ந்தார். தனது ஆளுமையான குரல் வளத்தையும் அறிவையும் கொண்டு, குத்பாப் பிரசங்கங்கள் மற்றும் மார்க்க சொற்பொழிவுகள் மூலம் சமூக சீர்திருத்தங்களையே அதிகம் வலியுறுத்தி வந்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் பொருளாளராக பணியாற்றிய அன்னார் சபையின் செயற்பாடுகளில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் பங்காற்றி வந்துள்ளார். அவ்வாறே மருதமுனை பிரதேசத்திற்கான ஜம்மியதுல் உலமா கிளைக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, அதனை மிகவும் சிறப்பாக வழிநடாத்தியிருக்கிறார்.

அத்துடன் மருதமுனைப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் ஒன்றிணைத்து சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதில் அன்னார் முன்னின்று உழைத்ததுடன் அதன் தலைவராகவும் உன்னத பணியாற்றியிருந்தார். இந்த அமைப்பானது இன்றும் ஊரின் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பெரும் பங்காற்றி வருவதை அறிவோம்.

மருதமுனையில் சகாத் நிதியத்தை ஸ்தாபிப்பதிலும் பெரும்பங்காற்றிய ஹுஸைனுதீன் மெளலவி, அதன் தலைமைத்துவத்தை அமானிதமாக சுமந்து மிகவும் பொறுப்புடன் கடமையாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறுபட்ட பொது நிறுவனங்கள் ஊடாக உரினதும் மக்களினதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அன்னார் தன்னை அர்ப்பணித்து, பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், ஹஜ் கடமைக்காக மக்கா செல்கின்ற யாத்திரிகர்களின் நலன் கருதி நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து, நீண்ட காலமாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்களை  மக்காவுக்கு அழைத்துச் சென்று, ஹஜ் கடமையை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றும் வகையில் சிறந்த வழிகாட்டியாக பணியாற்றியிருந்தார்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து, சன்மார்க்கப் பணிகளையும் பொதுச் சேவைகளையும் பொருந்திக் கொண்டு, மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.

Thursday, September 14, 2023

உன்னதமான ஊடகவியலாளர் ஏ.எல்.எம் சலீம்.!

றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியர் தென்கிழக்கு பல்கலைக்கழகம்

நிந்தவூர் நிருபர் ஏ.எல்.எம் சலீம் என்று அறியப்பட்ட பத்திரிகையாளனுக்கு இன்று வயது 75 ஆகிறது. அதேநேரம் அவரது ஊடகத் தொழிலுக்கு வயது 57. 

இத்துணை அனுபவமுள்ள ஊடகவியலாளன் ஒருவரை பற்றி எழுதுவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அவரது ஊடகப் பணிக்கு 50 வயதான போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஒரு நினைவு மலரினை வெளியிட்டது. அப்போது என்னிடமும் ஒரு கட்டுரை கேட்கப்பட்டது. ஏதோவொரு காரணத்தினால் அப்போது அதனை எழுத முடியாமல் போய்விட்டது.

இப்போது அந்த குறையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. சலீம் எழுதப்பட வேண்டியவர். பதிவு செய்யப்பட வேண்டியவர். பாடப்பட வேண்டியவர். கொண்டாடப்பட வேண்டியவர்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த செய்ய வேண்டிய சக்திகளுள் மிக முக்கியமானது ஊடகத்துறை. சட்டம், நீதி, நிர்வாகத்துறை முதலானவை போல ஊடகத்துறையும் கருதப்பட வேண்டியதொன்று எனக் குறிப்பிடுவர். இவற்றுள் முதன்மையானது ஊடகத்துறை என்று குறிப்பிடுவாரும் உளர். இத்துணை சக்தி வாய்ந்த துறையிலேதான் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சலீம் அவர்கள்.

அந்தக் காலத்தில் இந்தக் காலத்தை போல அதிக ஊடகங்களின் செல்வாக்கு இருக்கவில்லை. ஆனால் ஊடகங்களுடனான மக்களின் ஈடுபாடு வலுவுள்ளதாக இருந்தது. 

பத்திரிகைகள்தான் அந்தக் காலத்து மக்களின் ஒரே ஊடகமாக இருந்தது. அது பிந்திக் கிடைக்கின்ற செய்தியாக இருந்தாலும் நிரந்தரமானதும் வலுவுள்ளதும் பாதுகாப்பானதும் நினைத்த நேரத்தில் அனுபவிக்கக் கூடியதுமாகவும் இருந்தது.

அவ்வாறு பத்திரிகைகளை நாங்கள் அரவணைத்து இருந்த காலத்தில் கல்முனை பகுதியிலிருந்து ரஷீட், பகுர்டீன், சலீம் என்று ஒரு சிலர்தான் பத்திரிகை நிருபர்களாக இருந்தனர். அப்போது சலீமின் பத்திரிகைப் பணி வீரகேசரியில்தான தொடங்கியது.

அது எஸ்.டி. சிவநாயகத்தின் காலம். அவர் ஐக்கிய தீபம், உதயம், தினகரன், சுதந்திரன், வீரகேசரி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். எம்.டி. குனசேனாவின் வெளியீடாக இருந்த தினபதி, சிந்தாமணி, சூடாமணி பத்திரிகைகளிலே அவர் பணியாற்றிய காலம் பொற்காலமாகும்.

அக்காலத்தில் தனக்கென எழுத்தாளர் பரம்பரையையும் ஊடகவியலாளர் பரம்பரையையும் உருவாக்கியவர் அவர். அவர்களை உயரச் செய்தவர். அவர்களில் ஒருவராகவே நிந்தவூர் சலீம் மேற்கிழம்புகிறார்.

ஊடகவியல் பணி சாதாரணமானதல்ல. மிகக் கஷ்டமானதாகும். ஊடகங்களோடு தொடர்புபடுவதென்பது உலகத்தோடு தொடர்புபடுகிற விடயமாகும். ஊடகவியலாளர்கள் மிகப் பொறுப்பும் மரியாதையும் மிக்கவர்கள். அவர்கள் மிகப் பிரசித்தமாக விளங்கினார்கள். 

ரிச்சர்ட் டி.சொய்ஸா, பிரகீத் எக்னெலிகொட, லசந்த, தராக்கி இப்படி பல ஊடகவியலாளர்களை இன்றும் நாம் மறக்க முடியாதுள்ளது. இப்படி பணி செய்பவர்கள் மிகமிகக் குறைவு. இன்று நம்மில் சில ஊடகவியலாளர்கள் இந்த பணியினை அற்பமாகக் கருதுகிறார்கள்.

அடிப்படை தகவல்களோடு மாத்திரம் தமது செய்தியை குறுக்கிக் கொள்கிறார்கள். புகைப்படம் எடுப்பதனை மாத்திரமே தமது பணியாக கருதுகிறார்கள். தாம் எழுதிய செய்தியை பிரசுரிப்பதை விட நிகழ்ச்சியை ஒழுங்கு செய்பவர்கள் எழுதிக் கொடுக்கின்ற செய்தியை வாங்கிப் பிரசுரிப்பவர்களும் உண்டு.

செய்தி சேகரிப்பது என்பது மிக ஆபத்தான பணியும்கூட. எல்லா வேளைகளிலும் சுதந்திரமாகவும் இயல்பாகவும் செய்தியை சேகரித்து விட முடியாது. விபத்து நடந்த இடத்திலும் குண்டு வெடித்த இடத்திலும் தீப்பற்றிய இடத்திலும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள இடங்களிலும் தமது உயிரை பணயம் வைத்தே செய்திகளை சேகரிக்க வேண்டும்.

யுத்த காலத்தில் யுத்த பிரதேசங்களிலும் செய்திகளை சேகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இன்னொரு பக்கம் அரசியல் விடயங்களை செய்திகளாக கொண்டு வருவதும் மிகவும் சுவாரஸ்யமான பணியாகும். அரசியல்வாதிகளின் உள்ளம் அறிந்து செய்திகளை எழுத வேண்டிய நிலைக்கு செய்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களுடைய அட்டகாசங்களுக்குள் நின்று உண்மைகளை எழுதுவது மிகக் கஷ்டமான பணியாகும். அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்பட்ட பல செய்தியாளர்களும் இருக்கிறார்கள்.

ஈழத்தில் 1980கள் ஊடகவியலாளர்களுக்கு மிகச் சோதனைமிக்க காலமாகும். அரச ஊடகங்களும் தனியார் ஊடகங்களும் ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை எழுதின. ஊடகங்கள் இனத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டன. ஊடகவியலாளர்கள் இனத்தின் பெயரால் அவஸ்தைப்பட்டனர். இந்த காலங்களையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஏ.எல்.எம்.சலீம்.

தமிழர் அரசியல் விடுதலையை உரமூட்டுவதிலும் முஸ்லிம் அரசியல் விடுதலைக்காக பாடுபடுவதிலும் அவர் அக்கறையோடு செயற்பட்டார். அவ்விரு கட்சிகளினதும் தலைவர்களோடு சரிசமமாக தனது எழுத்துக்களை பகிர்ந்து கொண்டவர். தன் அரசியல் வெளிப்படாது தானொரு ஊடகவியலாளர் என்பதையே அவர் எப்போது அடையாளப்படுத்தினார்.

தமிழ் முஸ்லிம் தீவிர முரண்பாட்டு நெருக்கடிக்குள் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காகவே தன்னை நிலைப்படுத்தியவர். அவர் ஒரு பிரதேசத்திற்குள் மாத்திரம் தன்னுடைய பணியை வரையறுத்துக் கொண்டவர் அல்ல அவர்.

வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் பேசும் மக்கள் பரந்து வாழும் இடமெல்லாம் அவர்களின் நடப்புக்களை ஆவணப்படுத்தியவர். வடக்குக்கென்று இருக்கின்ற விசேடமான தனியான பத்திரிகை உலகுக்குள் கிழக்கு மக்களின் செய்திகளை அடையாளப்படுத்தியவர்.

முஸ்லிம்களுக்குள் இருந்த தனித்தனி அரசியல் அபிலாசை கட்சி வேறுபாடுகளுக்குள் அவர் ஒருபோதும் அமிழ்ந்து விடவில்லை. அப்போதும்கூட தான் ஊடகத்துறையின் விழுமியங்களை பாதுகாத்து எழுதுகின்றவராகவே இருந்தார். 

அதனால் அவரை எல்லா அரசியல் தலைவர்களும் ஒருங்கே பாராட்டினர். அப்படியான வாய்ப்பு எல்லா ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது சலீமுக்கு வாய்த்திருந்தது. அதற்கு அவரது பொன் விழா மலரே சாட்சியாகும்.

காலம் கடந்தும் ஓர் உன்னதமான ஊடகவியலாளர் என்ற நாமத்தோடு வாழ்பவர் சலீம் அவர்கள். எந்த கட்சிக்கும் சேவகம் செய்யாது ஊடகத்துறைக்கு வாழ்நாளெல்லாம் சேவகம் செய்து வாழ்பவர். அதற்காக தேசியம் முதல் பிரதேசம் வரையும் மேலும் அரசு சார்பாகவும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் சார்பாகவும் ஊடகத்துறை சார்பான பல விருதுகளை வென்றவர்.

அவர் இன்னும் பல்லாண்டு காலம் ஊடகத்துறைக்கு பணியாற்ற வேண்டும் என நாம் ஆசிக்கின்றோம்.

Tuesday, September 12, 2023

பதிவு செய்யப்படாத டியூட்டரிகள் மீது சட்ட நடவடிக்கை; கல்முனை மாநகர சபை அறிவிப்பு.!

-ஏ.எஸ்.மெளலானா-

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற பல தனியார் கல்வி நிலையங்கள் மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இன்னும் பல தனியார் கல்வி நிலையங்கள் தம்மை பதிவு செய்து கொள்ளாமல் இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிறுவனங்கள் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து கொள்ளாமல் இயங்குவதானது சட்டவிரோத செயற்பாடாகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், போதைப்பொருள் பாவனையில் இருந்தும் கலாசார சீர்கேடுகளில் இருந்தும் மாணவர்களை பாதுகாத்து, நெறிப்படுத்தும் பொருட்டு ஜம்மியத்துல் உலமா சபை உள்ளிட்ட பொது அமைப்புகளின் வேண்டுகோளின் பேரில் பொருத்தமற்ற நேரங்களில் டியூசன் வகுப்புகள் நடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்களினால் இந்நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஆகையினால், அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றை கட்டுக்கோப்புடன் முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனவே, இதுவரை பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இத்தால் அறிவுறுத்தப்படுகிறது.

குறித்த காலப்பகுதியினுள் பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது மாநகர சபைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அவற்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தருகின்றேன்.

அத்துடன் வீடுகளில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களினால் நடத்தப்படும் ஆரம்பக் கல்வி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கும் இவ்வறிவுறுத்தல் பொருத்தமானது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களும் தம்மை ஒரு கல்வி நிலையமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இத்தால் அறிவுறுத்தப்படுகின்றனர்- என்று கல்முனை மாநகர ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Tuesday, September 5, 2023

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 08 மாணவிகளுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை 08 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் பரீட்சைக்கு தோற்றிய 20 மாணவிகளுள் 17 பேர் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இவர்களுள் 08 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருப்பதுடன் ஒரு மாணவி மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார். கடந்த காலங்களை விட இம்முறை நிறைய ஏ சித்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இக்கல்லூரியில் கடந்த முறை 10 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றி, 04 மாணவிகள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியிருந்தனர்.

2012ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இதுவரை 27 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர் என்றும் அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்தார்.