Thursday, January 11, 2024

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை முனைப்பு; ஆணையாளரும் களத்தில்..!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

கடந்த பல தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனத்த மழை காரணமாக, சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டதால் கல்முனை மாநகர பிரதேசங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி அவர்களின் நெறிப்படுத்தலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகர சபையினால் முகத்துவாரங்கள் யாவும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்காக வடிகான்கள் மற்றும் தோனாக்களில் காணப்படும் தடைகள் கனரக வாகனங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன.

தோனா உட்பட பல்வேறு இடங்களிலும் முறிந்து வீழ்ந்துள்ள பாரிய மரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு களப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார்.

அத்துடன் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், வி.சுகுமார், ஏ.எம்.நிசார், அபார் பேகம் உட்பட மேற்பார்வையாளர்களும் களத்தில் நின்று செயலாற்றி வருகின்றனர்.

வெள்ள அனர்த்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு வேலைத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யபட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















No comments:

Post a Comment