Monday, April 8, 2024

அம்பாறை மாவட்ட உலமா சபையின் சர்வ சமய நல்லிணக்க இப்தார்.!







-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை ஒழுங்கு செய்திருந்த சர்வ சமயங்கள் ஊடாக சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்கான விசேட இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (08) சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட உலமா சபையின் தலைவர் மெளலவி ஐ.எல்.எம். ஹாஷிம் அவர்கள் தலைமையிலும் செயலாளர் மெளலவி ஏ.எல். நாஸிர் கனி அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரான கலாநிதி எம்.எல். முபாறக் மெளலவி அவர்கள் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.

அத்துடன் பெரிய நீலாவணை மகா விஷ்ணு கோவில் குருக்கள் சிவசிறி மத்மலோஜன் இந்து சமய சொற்பொழிவையும் கல்முனை மெதடிஸ்த திருச்சபை முகாமைக்குரு அருட்திரு ரவி முருகப் பிள்ளை கிறிஸ்தவ சமய சொற்பொழிவையும் நிகழ்த்தினர்.

இவர்களது உரைகளின்போது அனைத்து சமயங்களும் சமூக ஒற்றுமை, சகவாழ்வு, நல்லிணக்கம், மனித நேயம் என்பவற்றையே வலியுறுத்துகின்றன எனவும் இவ்வாறான சமய, கலாசார நிகழ்வுகள் ஊடாக சமூகங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான மெளலவி எப்.எம்.ஏ. அன்சார் மெளலானா நழீமி அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் உலமாக்களுடன் மூவினங்களையும் சேர்ந்த கல்வியியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமயப் பிரமுகர்கள்
என பலரும் பங்கேற்றிருந்தனர்.



















No comments:

Post a Comment