Tuesday, June 4, 2024

பலஸ்தீனம் தொடர்பான ஆய்வு மாநாடு ஒன்றை தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும்; விரிவுரையாளர் அன்ஸார் மௌலானா வேண்டுகோள்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீனம் ஓர் இதயமாகத் திகழ்வதாலும் மூன்றாவது புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா அங்கு அமைந்திருப்பதாலும் இதன் ஆரம்ப வரலாறு, போராட்டங்கள் நடைபெற்ற பின்னணி மற்றும் அதன் புதிய பரிமாணங்கள் தொடர்பில் ஓர் ஆயவு மாநாட்டை நடாத்தி, உரிய தெளிவூட்டல்களை மேற்கொள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று மருதமுனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ அன்ஸார் மௌலானா (நழீமி) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதமுனை ஜும்ஆப் பள்ளிவாசலில் பலஸ்தீன் தேசத்திற்காக ஐவேளைத் தொழுகைகளிலும் ஓத வேண்டிய குனூத் நாஸிலாவை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் .

கடந்த 08 மாதங்களாக தமது சுயநிர்ணயத்திற்காக பலஸ்தீன மக்கள் உறுதியோடும் வீரத்தோடும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது எமது ஈமானிய உணர்வுகளுக்கு உரமூட்டுகிறது. சுமார 40 ஆயிரம் வீரமரணம், 70 ஆயிரம் பேர் காயம், லட்சக் கணக்கானோர் இடம்பெயர்வு என்ற ரீதியில் சங்கிலித் தொடராக தமது வாழ்வுரிமை, நிலவுரிமைக்காகப் போராடும் பலஸ்தீன் மக்கள் காஸாவில் தொடங்கி தற்போது ரபாவின் எல்லையில் முடக்கப்பட்டு வாழ்வாதா? மடிவதா? என்ற ஜீவ மரண போராட்டத்தின் உச்சத்தினை
அடைந்திருக்கின்றார்கள்.

வளைத்திருக்கும் அரபு நாடுகள் கோழைகளாக புதினம் பார்த்துக் கொண்டு மேற்குலகின் செல்லப் பிள்ளைகளாக அரபு நாட்டு மன்னர்கள் காட்சியளிக்கின்றமை புரியாத புதிராக இருக்கின்றது.

இதேவேளை மாணவர் போராட்டங்கள் இப்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில் ஆர்ப்பரித்திருக்கின்ற போது அந்த உணர்வு இலங்கையில் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒலுவில் பல்கலைக்கழகத்தின் கதவை ஏன் தட்டவில்லை? என்று சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

எனவே இதற்கு பதில் அளிக்கும் தார்மீகப் பொறுப்பு பல்கலை அரபு பீட, கலைப்பீட மற்றும் அரசியல் விஞ்ஞான பிரிவுக்கும் பொதுவாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும்
உரித்துடையதாகும்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடத்திய வாக்கெடுப்பில் 183 நாடுகள் ஆதரவாகவும் 25 நாடுகள் எதிராகவும் 55 நாடுகள் நடுநிலையாகவும் பாலஸ்தீன் விடயத்தில் நடந்து கொண்டமை இஸ்லாமியர்களுக்கும் நீதியை விரும்பும் மனித சமூகங்களுக்கும் ஒரு மன ஆறுதலை தந்து கொண்டிருக்கின்றது. இது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

2012 வரை ஐ.நா பொதுச் சபையில் வெறும் பார்வையாளர் அந்தஸ்தில் இருந்த பலஸ்தீனம் 2024 ஆம் ஆண்டு சுதந்திர இறைமையுள்ள தனி நாடாக மாறும் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரத்துச் செய்யும் அதிகாரத்தை அமெரிக்கா கையில் எடுத்தால் அதற்கான மாற்று வழிமுறையை சர்வதேச இஸ்லாமிய சமூகம் முன்னெடுப்பது அவசியமாகும். இதற்கு குறித்த ஆய்வு மாநாட்டின் மூலம்
தெளிவையும் தீர்வையும் பெறலாம் என்று சிவில் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆகையினால் இனியும் தாமதியாமல் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பலஸ்தீனம் தொடர்பிலான ஆய்வு மாநாடு ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். இதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சட்டத்தரணிகள் சங்கம், பள்ளிவாசல்கள் சம்மேளனம் போன்ற சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக குரல் கொடுக்க வேண்டும்- என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment