Saturday, November 2, 2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் பற்றிய அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்.!


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2024.11.14 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழூ அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் வேட்பாளர்களும் வாக்காளர்களும் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயலாற்றுமாறு அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் I.L.M.ஹாஷிம் ஷுரி, மதனி, செயலாளர் அஷ்ஷெய்க் A.L.நாஸிர் கனி‐ஹாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் மகத்தான பணிக்கு வாக்குரிமையின் மூலம் அங்கிகாரம் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே தேர்தல்கள் அமையப் பெற்றுள்ளன.

ஜனநாயக நாடொன்றில் எந்தவொரு வேட்பாளரும் எந்தக் கட்சியிலும்  தேர்தலில் போட்டியிடலாம். அத்தகைய சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இஸ்லாமிய ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா எதிர்பார்க்கின்றது. அவற்றுட் சில வருமாறு,

வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்.!

1. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பதவி என்பது ஓர் அமானிதம் என்பதை புரிந்து கொண்டு தாய் நாட்டை நேசித்தவர்களாக, நல்லாட்சி ஒன்றுக்கான  முன்னுதாரண புருஷர்களாக திகழ வேண்டும்.

2. ஆன்மீக, தார்மீக  பண்புகளை பேணுவதில் அவர்கள் கரிசனை காட்ட வேண்டும்.

3.  எளிமை, தியாகம், அர்ப்பணம் முதலான மெய்ச்சத்தக்க பண்புகளை வேட்பாளர்கள் பிரதிபலிக்க வேண்டும்.

4. அதிகார துஷ்பிரயோகம், வன்முறைகளில் ஈடுபடல், மக்கள் மத்தியில் விரோதத்தையும், குரோதத்தையும் விதைத்தல் போன்ற இழி செயல்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

5. தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏனைய கட்சி வேட்பாளர்களை தரக்குறைவாக பேசுவதையும், நாகரிகமற்று விமர்சிப்பதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். 

6. மனித அடிப்படை உரிமைகள் , இயல்புகள், விழுமியங்கள், மத நம்பிக்கைக் கோட்பாடுகள் முதலானவற்றுக்கு முரணாக எவரும் துணைபோகக் கூடாது.

7. கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப வெற்றியீட்டிய பின்னர், அவற்றை நிறைவேற்ற முழு மூச்சுடன் செயலாற்றுவதுடன், பிரதேச அபிவிருத்தியிலும் கரிசனை காட்ட வேண்டும்.

மேலும், வாக்காளர்கள் தாம் விரும்பும்  வேட்பாளர்களை ஆதரிப்பது அவரவர் உரிமையாகும். இந்த நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளக் கூடாது.

நாட்டினதும் தான் சார்ந்த சமூகத்தினதும் பொதுநலனைக் கருத்திற் கொண்டு சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் குடிமகன் மிகப் பொருத்தமான, தகுதிவாய்ந்த ஒருவருக்கு வாக்களிப்பது அடியார்கள் அலாலாஹ்வுக்குச் செய்யும் கடமையாகும் என்ற தரத்தில் வைத்தே நோக்கப்படும்.

காரணம், அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் இடம்பெற்றுள்ள சாட்சிபகர்தல் என்ற வார்த்தையானது வாக்களித்தல் என்பதற்கு சமமானதாகும். அதாவது வாக்குரிமை என்பது சாட்சியமாகும். இந்தவகையில், தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அட்டை என்பது சாட்சிபகர்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பாகும். சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது என அல்குர்ஆன் பணிக்கிறது.

மேற்குறித்த பொறுப்பைச் சுமந்துள்ள வாக்காளர்கள் பின்வரும் உயர் ஒழுக்கப் பண்பாடுகளை உள்வாங்கி செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அறிவுறுத்துகின்றது.

வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்கள்.!

1. நாட்டை நேசிக்கின்ற; சமூகப்பற்றுள்ள; தேசத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் கொண்டவர்களுக்கு எமது வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.

2. அரசியலை ஓர் உயரிய சமூகப் பணியாக கருதி செயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் இருக்க வேண்டும். 

3. நாட்டுச் சட்டங்களை மீறாத வன்முறைகளில் ஈடுபடாத வேட்பாளர்களை தெரிவு செய்ய ஆர்வம் கொள்ள வேண்டும்.

4. நன்னடத்தையும் நல்லொழுக்கமுமுள்ள; இன, மத பேதங்களைத் தூண்டும் வகையில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்காதோருக்கு நமது வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.

5. மாற்று அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் மதிக்கின்ற, பண்பாடாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்கின்ற வேட்பானர்களுக்கு எமது வாக்குகள் அளிக்கப்பட வேண்டும். 

6. சமயத் தலைவர்களை மதிப்பது போலவே சமூக விவகாரங்களை தலைமேல் சுமந்துள்ள அரசியல் கட்சி தலைவர்களையும் மதித்து நடக்க வேண்டும்.  அவர்களைத் தூற்றி தரக்குறைவாக விமர்சிப்பதையும் பொது வெனியில் இழிவுபடுத்துவதையும் இகழ்ந்துரைப்பதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். 

7. சமூக வலைத்தளங்களில் முறையற்ற விமர்சனங்களையும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களையும் மற்றும் இட்டுக்கட்டி , அபாண்டண்டங்களைச் சுமத்தும் சொல்லாடல்களையும் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

8. இஸ்லாமிய கடமைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் கடைப்பிடிக்கத்தக்க வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

9. பணத்துக்காகவோ சுகபோகங்களுக்காகவோ விலை போகாத , கட்சிகளின் கட்டுக்கோப்பையும் தலைமைத்துவ நியதிகளையும் மீறாத வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

10. நாம் தெரிவு செய்யும் வேடாபாளர்கள் சமூக உரிமைகளுக்காக குரல் கொடுப்போராகவும், நாட்டு நலனுக்கும் சமூக நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல முன்னெடுப்புகளை உரிய விதத்தில் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லா நிலைகளிலும் சமூக நலனை முன்னிறுத்தி ஒற்றுமையுடன் செயற்படவும், ஏக இறைவனை அஞ்சி பயந்து நடந்து கொள்ளவும் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் துணை நிற்பானாக!

No comments:

Post a Comment