-முகம்மட் முக்தார்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கான புதிய உப-வேந்தர் இதுவரை நியமிக்கப்படாதுள்ளதாக இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவையின் தவிசாளர்
எம்.எம்.எல் அகமட் ஜனாதிபதி அனுரகுமாரவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றியவரின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த போதிலும் அக்காலப்பகுதி ஜனாதிபதி தேர்தல் காலமாக இருந்தமை காரணமாக உபவேந்தர் நியமனம் இடம்பெறவில்லை.
இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பதில் உப வேந்தராக அப்பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என யாவும் நடைபெற்று முடிந்து விட்டமையால் நிரந்தர உப- வேந்தரை இப்பல்கலைக் கழகத்திற்கு நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடமுள்ளது.
பல்கலைக்கழக கவுன்சினால் பல்கலைக்கழக உப-வேந்தராக நியமிக்கப்பட வேண்டிய மூவரது பெயர்களை பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு கடந்த வருடம் ஜுன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இவர்களில் தகுதியுள்ள ஒருவரது பெயர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு என்பவற்றால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்நியமனம் தொடர்பாக அக்கறை காட்டவில்லை.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நிரந்தர உப-வேந்தர் நியமனம்
இடம்பெற வேண்டியது அத்தியாவசியமானது என தென்கிழக்கு கல்விப் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment