Sunday, February 23, 2025

நிசாம் காரியப்பர் எம்.பியினால் அபிவிருத்தி முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

கல்முனைத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தன்னால் முன்மொழியப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட சில அவசர வேலைத் திட்டங்களுக்கான நகல் வரைபுகளை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக அபேவிக்ரமவிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இவற்றுள் வாகன நெரிசல் மிக்க சாய்ந்தமருது நகரில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக அங்கு வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கும்

கல்முனை மாநகரில் வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பை அமைப்பதற்குமான முன்மொழிவுத் திட்டங்களையும் நிசாம் காரியப்பர் எம்.பி சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர மற்றும் மாளிகைக்காடு கடல் பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக காணப்படுகின்ற கற்கள் மற்றும் கழிவுகளை அகற்றல்,

கல்முனை மேல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்டத்தரணிகளுக்கான நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்தல்,

கல்முனை மாநகரில் உள்ளூர் மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக தற்காலிக விற்பனை கூடங்களை அமைத்தல் போன்ற முன்மொழிவுகளையும்  அம்பாறை மாவட்ட செயலாளரிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

Sunday, February 2, 2025

ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!




-அஸ்லம் எஸ்.மெளலானா-

காலம்சென்ற சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஏ.ஆர்.எம். அட்வர்டைசிங் அனுசரணையில் ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் யூ.எல். யாக்கூப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கெளரவ அத்தியாகவும் கலந்து கொண்டனர்.

அத்துடன் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், பிறை எப்.எம். பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், அதிபர் யூ.எல். நஸார், சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான சட்டத்தரணி ஏ.எம். தாஜ், ஏ.சி. றாஹில், என்.றபீக் மற்றும் கவிஞர் எம்.எம்.எம். பாஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஊடக, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வகிபாகம், அர்ப்பணிப்புடனான உன்னத சேவைகள் பற்றியும் அவரது ஆளுமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும் அதிதிகள் நினைவுகூர்ந்தனர்.

நிகழ்வின் ஓர் அங்கமாக மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் சகோதரரான சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களை பணிப்பாளராகக் கொண்ட றிஸாலத் இணைய தொலைக்காட்சியின் விஸ்தரிப்பை மையப்படுத்தி அதன் ஆலோசனை சபையினருக்கான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் மற்றும் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் உறவினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.