Saturday, August 31, 2024

முஸ்லிம் கட்சிகளை சந்தித்த அஜித் தொவால்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் அமிர் அலி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது தங்களுடைய இரு கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு எடுத்த பின்னணியில் இலங்கையில் விஷேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 90 வீதமான முஸ்லிம் மக்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்ற விடயத்தை எடுத்துரைத்துள்ளனர்.

இதுவரையான பிரச்சாரக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன என்றும் இக்கூட்டங்களில் மக்கள் நிறைந்து காணப்பட்டனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புகள் வகிப்போம் என்றும் ஆகவே புதிய அரசாங்கத்தின் வெளிவிவாகர கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என்றும் அவர்களினால் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஆகவே இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பொருளாதார விடயங்கள் உட்பட முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமான விடயங்களிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்தியாவும் ஒரு சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


Monday, August 26, 2024

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜப்பான் பயணம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் அவர்கள் விசேட புலமைப்பரிசில் பெற்று இன்று திங்கட்கிழமை (26) ஜப்பான் பயணமாகிறார்.

ஜப்பானில் ஒரு மாத காலம் இடம்பெறவுள்ள உள்ளூர் தொழில்துறை மேம்பாடு குறித்த அறிவுப் பகிர்வு பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.

ஜப்பானிய அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்ற இப்பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றுவதற்கான புலமைப்பரிசில் அனுசரணையை JICA எனும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் நாட்டு அதிகாரிகளுக்கு மேலதிகமாக 06 நாடுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 06 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் அவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மாநகர ஆணையாளரான என்.எம். நௌபீஸ் அவர்கள் இத்தகைய உயர்தரமான உன்னத வாய்ப்பைப் பெற்று ஜப்பான் செல்வதை முன்னிட்டு கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆணையாளரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Thursday, August 8, 2024

கல்முனை மாநகர நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், சம்மந்தம்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை ஆராயும் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (08) மாநகர சபை கூட்ட மண்டபத்தில் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களிடம் கேட்டறிந்து கொண்ட ஆணையாளர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட வேலைத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்நிலையில் நூலகங்களின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், களஞ்சியக் காப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கினார்.

அத்துடன் போதிய வசதிகள், ஆளணிகள் இருந்தும் சில நூலகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக வாசகர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதால் நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் தமது பொறுப்புகளையும் கடமைகளையும் உதாசீனம் செய்யாமல், முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆணையாளர், தவறிழைக்கும் பணியாளர்கள் மீது எவ்வித தயவுமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், விடய உத்தியோகத்தர் ஏ.ஆர். நஸ்ரின் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

















Wednesday, July 31, 2024

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.!

ஜெமீல் முயற்சியினால் நிறைவேறுகிறது மீனவர்களின் நீண்ட காலத்தேவை.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை மாவட்ட மீனவர்களின்
நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற படகுத் தரிப்புத் துறையை (Boatyard) அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான இணை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான எழுத்து மூல கோரிக்கை மற்றும் திட்ட வரைபை கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இயந்திரப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு இப்பகுதியில் Boat yard ஒன்று இல்லாதிருப்பதால் அப்படகுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை படகுத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இதனாலf அவற்றின் உரிமையாளர்களும் மீனவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத் துறையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும் ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் சாய்ந்தமருதில் படகுத்துறை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.

ஆனால் ஒலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட துறைமுகம்  பயன்பாட்டுக்கு உகந்ததாக அமையாத காரணத்தால் அங்கும் படகுகளை தரித்து வைக்க முடியவில்லை.

இந்நிலையில் பல தசாப்த காலமாக ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஐ.தே.க. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான இணை அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல், இவ்விடயத்தை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறையை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, படகுத்துறை அமைப்பதற்கு ஏற்றவாறு சாய்ந்தமருது முகத்துவாரம் அமைந்துள்ள பாலத்தை போதியளவு உயர்த்தி நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அவ்வாறே முகத்துவார தோணாப் பகுதியை தேவையானளவு தோண்டி ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கரையோரம் பேணல் திணைக்களத்திற்கு ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 4, 2024

ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்றால் ஒழுக்காற்று நடவடிக்கை; மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் எச்சரிக்கை.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படவுள்ள இணைப்பாளர் பதவிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர்  அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு அவர் விடுத்துள்ள விசேட வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

ஏனெனில் இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர், அவர்களின் வேட்பு மனுக்கள் இன்னும் செல்லுபடியாக உள்ளது.

மறுபுறம், இது மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் ஆதரவைப் பெறுவதற்கான இலஞ்சமாக நாங்கள் கருதுகின்றோம்.   இது மிகவும் தீவிரமான விஷயமாகும். இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இந்த இணைப்பாளர் பதவிகளை நமது கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் பொறுப்பேற்கக் கூடாது என கட்சித் தலைமையால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது கட்சியின் உறுப்பினர்களை இவ்வாறான பதவிகளை கொடுத்து தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ளப்பார்க்கின்றனர்.

இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் துனைபோகாது.

ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவுகளை அனுப்பி இந்த சட்டவிரோத நியமனங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

கட்சியின் தீர்மானத்தை மீறி அங்கத்தவர்கள் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

www.metromirror-lk

metromirrorweb@gmail.com 

WhatsApp 0779599929



Wednesday, July 3, 2024

மாளிகைக்காடு சபீனா வித்தியாலய அதிபர் காரியாலயம், நடைபாதை திறப்பு.!

பைசல் காசிம் எம்.பிக்கு விசேட கெளரவம்..!


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் புனரமைக்கப்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் காரியாலயம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்களுக்கிடையிலான நடைபாதை ஆகியவற்றை திறந்து வைக்கும் "கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" நேற்று முன்தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பாடசலையின் அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம், விஷேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், சிறப்பு அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் மற்றும் சாய்ந்தமருது, காரைதீவு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச். நாஸர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு சிறப்பு நுழைவாயில் "Gateway" அமைப்பதற்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நீண்ட காலமாக பல்வேறு பௌதீக உட்கட்டமைப்பு பணிகளுக்கு தனது நிதிப் பங்களிப்பினை வழங்கி சபீனாவின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பக்க துணையாக நிற்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு நன்றி பாராட்டி "மக்கள் ஒளி" எனும் நாமம் சூட்டி பாடசாலைச் சமூகம் அவரைக் கெளரவித்தது.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலை மாணவர்கள் பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

-செயிட் ஆஷிப்
















www.metromirror-lk

metromirrorweb@gmail.com 

WhatsApp 0779599929




Thursday, June 27, 2024

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் வாசிகசாலை அமைக்க ஏற்பாடு; புத்தகங்களை அன்பளிப்புச் செய்யுமாறும் வேண்டுகோள்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் விரைவில் வாசிகசாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தெரிவித்தார். 

இதற்காக புத்தகங்களை அன்பளிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த வாசிகசாலையை கலாசார மத்திய நிலைய மாணவர்களுடன் பாடசாலை மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என சகல தரப்பினரும் பயன்படுத்த முடியும்.

இலங்கை தேசிய  நூலகம் 2024 ஆம் ஆண்டுக்கான ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்ற கருத்திட்டத்திற்கு அமைவாக கலாசார மத்திய நிலையங்களின் வாசிகசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைவாகவே சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்திலும் வாசிகசாலை ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்காக புத்தக சேகரிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் எப்பாகத்திலும் உள்ள எழுத்தாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் இந்த வாசிகசாலைக்கு புத்தகங்களை அன்பளிப்புச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

புத்தகங்களை அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் 077 758 0663 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன் நிலையைப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், பொலிவேரியன் கிராமம், சாய்ந்தமருது - 16 எனும் முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும்.

அதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.



Tuesday, June 25, 2024

சாய்ந்தமருது ஹிஜ்ரா பள்ளிவாசல் மத்ரஸாவில் ஹிப்ளு பிரிவு ஆரம்பம்.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இயங்கி வருகின்ற அல்குர்ஆன் மதரஸாவில் குர்ஆனை மனனமிடும் ஹிப்ளு மற்றும் ஷரீஆ பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்த மத்ரஸாவில் இணைந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் மற்றும் நிருவாக சபை உறுப்பபினர்களும் நலன் விரும்பிகளும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு அல்குர்ஆனை பார்த்து ஓதுதலுக்கு மேலதிகமாக அல்குர்ஆனை மனனமிடுதல் மற்றும் ஷரீஆ வகுப்புக்களும் இடம்பெறவுள்ளதாக ஹிஜ்ரா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்துள்ளார்.

நாளை புதன்கிழமை முதல் இவ்வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜ்ரா பள்ளிவாசலானது கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் காவு கொள்ளப்பட்டு உயிர் நீத்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட  சுகதாக்களின் நினைவாக உருவாக்கப்பட்ட சுனாமி மீள்குடியேற்ற கிராமமான பொலிவேரியன் கிராமத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







நைட்டாவின் தீயணைப்பு துறைசார் கற்கையை பூர்த்தி செய்தார் கே.எம். றூமி.!

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் கே.எம். றூமி அவர்கள் நைட்டா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட தீயணைப்பு துறைசார் NVQ Level-4 கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அதற்கான சான்றிதழை பெற்றுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள நைட்டா நிறுவனத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் நிறுவனத் தலைவரினால் இவருக்கான சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவர் இதற்கு முன்னரும் தீயணைப்பு துறைசார் தொடர்பில் பல்வேறு நிறுவனங்களின் கற்கைகளையும் பயிற்சிகளையும் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.