Thursday, December 30, 2021

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றுக..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களை அவர்களது சொந்த மாவட்டத்திலுள்ள காரியாலயங்களுக்கு இடமாற்றம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது நிருவாக அமைச்சர் உள்ளிட்டோருக்கு மேற்படி பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் அவசர மகஜர்களை அனுப்பி வித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காரணமாக அரசாங்க ஊழியர்கள் தாங்க முடியாத துயரங்களுக் குள்ளாகியுள்ளனர். மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடுகின்றனர். இதனால் கௌரவ கடன்களை பெற்று வாழ வேண்டிய நிலை தற்போது அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விசேடமாக மாகாணம் மற்றும் மாவட்டம் கடந்து வெவ்வேறு மாகாணம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அரச அலுவலகங்களில் கடமை புரியும் சிறிய, நடுத்தர அரசாங்க ஊழியர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கூற முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் போக்குவரத்து கட்டண உயர்வு, உணவுப் பொருள் விலையேற்றம், தங்குமிட கட்டண உயர்வு, சுகாதார சூழ்நிலை என்பன காரணமாக பல்வேறு மன உழைச்சலுக்கும் அழுத்தலுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்ச்சிகளும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வெளியிடங்களில் இருந்து கொண்டு தமது மேலதிக செலவீனம் காரணமாக மாதாந்தம் பெறும் சம்பளத்தைக் கூட முழுமையாக குடும்ப தேவைக்கு செலவிட முடியாத நிலையினால் அவர்களது குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுகிறது.

எனவே, வெளி மாகாணங்களிலும் வெளி மாவட்டங்களிலும் கடமைபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தீரும் வரையாவது தற்காலிகமாக அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யும் பொறிமுறையொன்றை வகுக்க வேண்டும். அல்லது வெளி மாகாணங்களில், வெளி மாவட்டங்களில் கடமை புரிவோருக்கு விசேட கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரைப் பள்ளி கொடியேற்று விழாவுக்கு மாநகர சபையில் செயலாற்றுக் குழு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரச அங்கீகாரத்துடன் தேசிய கலாசார விழாவாக கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்று விழாவுக்காக கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை கையாள்வதற்காக விசேட செயலாற்றுக் குழுவொன்று மாநகர முதலவரினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது கொடியேற்று விழா ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இக்குழுவினரை நியமனம் செய்தார்.

மாநகர சபையின் அதிகாரிகள் தரப்பில் ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சபை சார்பில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்காளான் எம்.எஸ்.எம்.நிசார், ரொஷான் அக்தர், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எம்.பைரூஸ், ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம்.ஹாரிஸ் ஆகியோருடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா மற்றும் 

12ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.எம்.பளீல் ஆகியோரும் இக்குழுவுக்கு அங்கத்தவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொடியேற்று விழாவுக்காக மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து விடயங்களையும் கையாள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இச்செயலாற்றுக் குழுவினருக்கு மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 14 (4) யின் கீழ் அனைத்து அதிகாரங்களும் தன்னால் வழங்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது அறிவிப்புச் செய்தார்.

இச்செயலாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் முறையாகவும் துரிதமாகவும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாசார விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது வருடாந்த கொடியேற்று விழா எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Wednesday, December 29, 2021

சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று புதன்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோதே இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த 04 பொலிஸாரில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் எமது பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்த அழகரெத்தினம் நவீனன் எனும் இளைஞன் மிகவும் துடிப்புள்ள, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவர் எனவும் இவரது இழப்பு என்பது எவராலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் எனும் பொலிஸ் உத்தியோகத்தரும் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றிருந்த ஒருவர் எனவும் மேலும் இரண்டு சிங்கள பொலிஸார் உட்பட இந்நால்வரின் குடும்பத்தினரும் இவர்களின் இழப்பினால் துன்புற்று அவஸ்தைப்பட்டதை நேரடியாகக் கண்டு மிகவும் கவலையடைந்துள்ளேன் எனவும் உறுப்பினர் இராஜன் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த அனுதாபப் பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் வழிமொழிந்து ஆதரித்தார்.

இதையடுத்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்த மாநகர முதலவர் ஏ.எம்.றகீப், இந்த அனுதாபத் தீர்மானத்தை குறித்த சம்பவத்தில் உயிர்நீத்த நான்கு பொலிஸாரினதும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.

Click for Video: https://www.facebook.com/metromirrorsl/videos/869412907079044/









கல்முனையில் 03 வீதிகளுக்கு புதிய பெயர்களை சூட்ட மாநகர சபை தீர்மானம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 03 உள்ளூர் வீதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதற்கான பிரேரணைகள் மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று புதன்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை முதலாம் பிரிவிலுள்ள ஆஸ்பத்திரி 04ஆம் குறுக்கு வீதியின் பெயரை கிராம அபிவிருத்தி சங்க வீதி எனவும் அதே பிரிவிலுள்ள எல்லை வீதி 06ஆம் குறுக்கு வீதியின் பெயரை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வீதி எனவும் மாற்றுவதற்கான பிரேரணைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்து, அதற்கான காரணங்களை எடுத்துக் கூறினார்.

இப்பிரேரணைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் ஆகியோர் வழிமொழிந்து ஆமோதித்தனர். இதையடுத்து சபையில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இப்பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக முதலவர் அறிவித்தார்.

அதேவேளை, சாய்ந்தமருது முதலாம் பிரிவிலுள்ள பத்தாஹ் பள்ளிவாசல் அமைந்துள்ள பாதைக்கு பத்தாஹ் பள்ளி வீதி என பெயர் சூட்டப்பட்ட வேண்டும் என சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் என்.எம்.ரிஸ்மீர் முன்மொழிய, அதே சுயேட்சைக்குழு உறுப்பினரான எம்.எஸ்.ஏ.றபீக் வழிமொழிந்து ஆமோதித்தார். இதற்கு முதல்வர் அனுமதி வழங்கியதுடன் சபை அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

குறித்த மூன்று வீதிகளுக்கும் புதிய பெயர்களை சூட்டுவதற்காக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்களின் பேரில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு சபைச் செயலாளருக்கு முதலவர் பணிப்புரை விடுத்தார்.





Tuesday, December 28, 2021

ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை, சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு கோப்ரா LED மின்விளக்குகள் வழங்கிவைப்பு..!

ரஹ்மத் சமூக சேவை அமைப்பானது அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களுக்கு தமது துரிதமான சேவைகளை செவ்வனே செய்து வருகின்றது.

அந்த அடிப்படையில் கல்முனை அல்பஹ்றியா தேசிய பாடசாலை, கல்முனை அல்மிஸ்பாஹ் பாடசாலை மற்றும் சாய்ந்தமருது அல்ஜலால் ஆகிய பாடசாலைகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த காரணத்தினால் அப்பாடசாலைகளுக்கு மின்விளக்குகள் போட வேண்டிய தேவை காணப்பட்டது. 

எனவே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பிடம் இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து தருமாறு தமது கோரிக்கயினை முன்வைத்திருந்தனர்.

அக்கோரிக்கையினை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்றுக் கொண்டு கோப்ரா எல். ஈ. டீ. மின் விளக்குகளை சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களிடம் கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களுடன் கல்முனை அல்பஹ்றியா தேசிய பாடசாலை அதிபர் பைசால் மற்றும் ஆசிரியர் றியால், கல்முனை அல்மிஸ்பாஹ் பாடசாலை அதிபர் ரஸாக் மற்றும் பிரதி அதிபர் ஜின்னா அவர்களும், சாய்ந்தமருது அல் ஜலால் பாடசாலை பிரதி அதிபர் டீ. கே.சிறாஜ் மற்றும் ஆசிரியர்களான அமானுல்லாஹ், அஸ்லம் சுஜா, ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




RM Media Unit

Thursday, December 23, 2021

பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும்..! 10 வீதம் விலை அதிகரிப்பு அவசியம்..!

பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்திருந்தது.

அந்தக் காலப்பகுதியில் இருந்ததை விட தற்போது 10% அதிகமாக இருப்பதாகவும் அதற்கேற்ப மீண்டும் விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும்.

பால் மாவை கொள்வனவு செய்வதற்கான டொலர் தட்டுப்பாடு, கடன் கடிதம் (LOC) பெற முடியாமல் போனமை, ஏற்றுமதியில் தாமதம் மற்றும் வரிகள் என்பன இலங்கையில் பால் மா தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 17 பேருக்கு ஒமிக்ரோன்..! ஒருவர் தலைமறைவு..!

கொரோனாவின் வீரியம் கூடிய ஒமிக்ரோன் வைரஸ் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 17 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட ஒருவர் தலைமறைவு.

https://www.facebook.com/metromirrorsl/posts/361013362497076

Whatsapp: 0779425329

Monday, December 13, 2021

கல்முனையில் CCTV Camera பற்றிய இலவச பயிற்சிநெறி..!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தைச்
சேர்ந்த இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தி நடாத்தும் மாபெரும் இலவச
𝗖𝗖𝗧𝗩 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 ஒருநாள் இலவச பயிற்சி நெறி எதிர்வரும் புதன்கிழமை (15) கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மடின்  ஏற்பாட்டில் காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 வரை ஒருநாள் நிகழ்வாக இடம்பெறும் இந்தப் பயிற்சி நெறி முடிவில், நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பவர்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் முன்கூட்டியே உங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை 0758688888 அல்லது 0703750044 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கல்முனையில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த மாநகர சபை துரித நடவடிக்கை; முகத்துவாரங்கள் திறப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்த மாநகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

நேற்று ஞாயிறு (12) பிற்பகல் தொடக்கம் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் அவசர அறிவுறுத்தலின் பேரில் இன்று சாய்ந்தமருது பிரதான முகத்துவாரம் உட்பட கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் அடைபட்டுள்ள வடிகான்கள் மாநகர சபையினால் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருகின்றன.

வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு மற்றும் பொது வசதிகள் பிரிவு என்பவற்றின் ஊழியர்கள் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Sunday, December 12, 2021

ரஹ்மத் பவுண்டேஷனால் நிந்தவூருக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் அன்பளிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனால் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிருவாகிகள் விடுத்த வேண்டுகோளையேற்று பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் குறுகிய காலத்திற்குள் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார். இதன்போது ஜனாஸா நல்லடக்கத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தேவைகள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது ரஹ்மத் மன்சூரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பு என்பவற்றின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஏலவே கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாசல்களுக்கு ரஹ்மத் பவுண்டேஷனினால் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 8, 2021

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு இன்று புதன்கிழமை (08) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாநகர முதல்வர் குறித்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் பட்ஜெட் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர். இதையடுத்து இந்த பட்ஜெட் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  

கல்முனை மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 02 ஆசனங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், 32 உறுப்பினர்கள் இந்த அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர். இவர்களில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 06 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தனர். 07 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 உறுப்பினர்கள், சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்கள், ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓர் உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் நடுநிலை வகித்திருந்தனர்.

சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 05 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் ஓர் உறுப்பினரும் சபைக்கு சமூகமளித்திருக்க வில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.

இந்த வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள், கட்சி மற்றும் குழு என்ற ரீதியில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காமல் எதிரும் புதிருமாக செயற்பட்டு, முரண்பாடான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் பட்ஜெட் நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.