Wednesday, October 27, 2021

முஸ்லிம் தனியார் சட்டத்தை குழிதோண்டிப் புதைக்க முனைகிறதா அரசாங்கம்?

கல்முனை மாநகர சபை உறுப்பினர் பி.எம்.ஷிபான் கேள்வி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை வாழ் முஸ்லிங்கள் இரு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருகின்ற முஸ்லிம் தனியார் சட்ட உரிமையை திருத்தம் எனும் போர்வையில் குழிதோண்டிப் புதைத்து விடுகின்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான பி.எம்.ஷிபான் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ரொஷான் அக்தரினால் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கூறும் அரசங்கம், எவ்வாறான திருத்தம் கொண்டு வரப்போகின்றது என்பதனையோ அல்லது ஒட்டு மொத்தமாக இருபது லட்சம் முஸ்லிங்கள் இந்த நாட்டிலே இரு நூற்றாண்டுகள் கடந்து அனுபவித்து வருகின்ற உரிமையினை குழிதோண்டிப் புதைத்துவிடுகின்ற நடவடிக்கைகளிலே இறங்கியிருக்கின்றதா என்பதனையோ இன்னுமும் வெளிப்படுத்தாமல் மூடு மந்திரம் போட்டு வைத்திருக்கிறது.

சமூக மாற்றம் மற்றும் சட்டத்துறையின் வளர்ச்சி என்பவற்றின் மூலம் நூற்றாண்டு கடந்து அனுபவிக்கும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திலே குறைகள் இருப்பின் அதனை கடந்த காலங்களிலே திருத்தங்கள் செய்து நடைமுறையில் உள்ளதனைப் போல் நடைமுறைப்படுத்த முஸ்லிம்கள் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை. ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்ற சில திருத்தங்களை இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

காதிகள் நியமனத்தின்போது தகுதி வாய்ந்த காதிகள் உள்வாங்கப்பட வேண்டும். மாத்திரமல்லாது அவர் ஒரு ஆலிமாக, சட்டத்தரணியாக, பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதாகும்.

காதிகளுக்கு எதிராக தற்போது முன்வைக்ப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணம் காதிகளின் நியமனம் அரசியல் சார்ந்ததாக இருப்பதனால் ஆகும். ஆகவே காதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடு முற்று முழுதாக இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

காதிகளின் நீதிமன்றங்கள் அவர்களுடைய வீடுகளிலே அமைந்திருப்பது முற்றாக தடை செய்யப்படுவதோடு அவை பிரத்தியேக அரச கட்டிடங்களில் தொழிற்படும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும்.

காதிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக காதிகளுக்கான ஒழுக்காற்றுக் குழு அல்லது மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழுவிலே ஓய்வுபெற்ற  முஸ்லிம் நீதிபதிகள், தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட வேண்டும். காதிகள் மற்றும் ஜூரிகளுக்கு முறையான முறையில் பயிற்சி வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஜுரிகளாக பெண்களும் உள்வாங்கப்படுவதில் ஆட்சேபனைகள் இருக்கப் போவதில்லை. ஆனால் காதிகளாக பெண்கள் உள்வாங்கப்படுவதனை முஸ்லிம் சமூகம் பெரு மனம் கொண்டு வரவேற்கப் போவதில்லை.

மாத்திரமல்லாது முஸ்லிம் தனியார் சட்டத்திலே இந்த நாட்டிலே அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தலைமை வகித்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உடைய பரிந்துரைகளும் மாற்றங்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடைமுறைகள் சாத்தியப்படுமாயின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் மீது இன்று குற்றம் சுமத்தும் சில முஸ்லிம் தரப்பினர் இச்சட்டத்தில் வேண்டி நிற்கின்ற மாற்றங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறும்- என்றார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணை கல்முனை மாநகர சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.




முஸ்லிம் தனியார் சட்டம் இல்லாதொழிக்கப்படுவதைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல்

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ரொஷான் அக்தரினால் இக்கண்டனப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இதனை கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான பி.எம்.ஷிபான் வழிமொழிந்து உரையாற்றினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன், சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோரும் பிரேரணையை ஆதரித்து கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் பன்னெடுங்காலமாக அனுபவித்து வருகின்ற முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் மற்றும் அதன் கீழ் வருகின்ற காதி நீதிமன்றம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு பேரின கடும்போக்குவாதத்தை கடைப்பிடித்து வருகின்ற இந்த அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் மிகவும் கவலைக்கும் கண்டனத்துக்குமுரிய விடயமாகும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆகையினால் இச்சட்டத்தில் முஸ்லிம் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, இச்சட்டமும் அதன் கீழான காதி நீதிமன்றமும் தொடர்ந்து அமுலில் இருப்பதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணை தமிழ் உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் இத்தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அறிவிக்குமாறு மாநகர முதலவர், சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.


கல்முனை பழைய தபாலக வீதிக்கு ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டத் தீர்மானம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை பழைய தபாலக வீதிக்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த வீதியின் பெயரை ஏ.ஆர்.மன்சூர் வீதி என பெயர் மாற்றம் செய்வதற்கான பிரேரணை மாநகர முதல்வரினால் முன்மொழியப்பட்டது.

1977ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் சுமார் 06 வருடங்கள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சராகவும் பதவி வகித்து, இப்பிராந்தியத்திற்கும் நாட்டுக்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி உன்னத சேவையாற்றி, எம்மை விட்டு மறைந்த மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை இவ்வீதிக்கு சூட்டுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது குறிப்பிட்டார்.

இப்பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் வழிமொழிந்ததுடன் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதிக்கு ஆற்றியிருக்கின்ற சேவைகளை நினைவுகூர்ந்து, அன்னாரின் பெயரை பொருத்தமான வீதியொன்றுக்கு சூட்டுவது அவசியம் எனவும் அதற்காக எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். அவர் தமது அரசியல் பொது வாழ்வில் கறைபடியாத கரங்களைக் கொண்ட ஓர் அரசியல் தலைமை என்று எல்லோராலும் போற்றப்படுகிறார் என்றும் உறுப்பினர் ஹென்றி சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இப்பெயர் சூட்டலுக்கு கல்முனை மாநகர சபை தீர்மானிப்பதாகவும் இதற்காக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மாநகர முதலவர், சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.






Friday, October 22, 2021

மாணவர் போராட்டங்களினால் உருவான தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ளி விழாக் காண்கிறது..!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா மற்றும் ஸ்தாபகர் தினம் என்பன நாளை (23) கொண்டாடப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

-பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல்-

Dr AM.Jameel with Founder MHM.Ashraff

இன்று இந்த பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மிளிர்வதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.எம். ஜெமீல் (கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்) என்ற மாணவர் தலைமையேற்று நடத்திய கிழக்குப் பல்கலைக்கழக பாதிக்கப்பட்ட மாணவர் பேரவை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் போராட்டங்களுமே காரணமாகின.

இந்த மாணவர் போராட்டங்களை வெற்றிகரமாக முன்னோக்கி நகர்ந்துவதற்கு அன்றைய இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் பணிப்பாளராகவிருந்த பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக் அவர்களின் (தற்போது லண்டனில் வாழ்கிறார்) வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மட்டுமல்லாது அவர் வழங்கிய ஆவணங்கள் ரீதியான உதவிகளும் பேருதவியாகவும் உந்து சக்தியாகவும் அமைந்தன.

மேலும், பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக் அவர்களே தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்ற எண்ணக்கருவை விதைத்தவர் என்று கூறினால் அது மிகையாகாது. இவரே இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான அமைச்சரவை பத்திரத்தையும் தயார் செய்து கொடுத்து முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃபின் பல்கலைக்கழகம் தொடர்பான நகர்வுகளுக்கும் பக்கபலமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prof MYM.Sideek in UK

ஜெமீலின் தலைமையில் அவரது தோழர்களும் அன்றைய மாணவர்களுமான கலாநிதி எம்.எச் தௌபீக், ஏ. எல் அப்துல் மஜீத் மற்றும் அப்போதைய பேராதெனிய பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்ஸிஸ் சார்பாக எம்.ஐ.எம் சதாத், கலாநிதி ஏ.எல். ஐயூப்கான் உள்ளிட்ட துடிப்புள்ள இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டக் குரல் தேசத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை திருப்பியது.

அன்றைய கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய முஸ்லிம் விரிவுரையாளர்களான பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்டீன், பேராசிரியர் கே.இஸ்ஹாக், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.ஆலீப், எம்.எம்.எம்.றபீக் மௌலவி, மற்றும் மர்ஹும் கலாநிதி ரசாக் மௌலவி உள்ளிட்டவர்கள் ஜெமீல் அணியினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தனர்.

மேலும், கலாநிதி தௌபீக், அக்கரைப்பற்றை சேர்ந்த ஆஹிர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த யாசின், ஒலுவிலைச் சேர்ந்த ஹூசைன், நிந்தவூரைச் சேர்ந்த தஸ்லீம், பாயிஸ், சம்மாந்துறை சல்பியா, கல்முனைக்குடியைச் சேர்ந்த தாஹிர், மருதமுனை சியாத், காத்தான்குடி பேராசிரியர் முஸ்தபா, ஓட்டமாவடியைச் சேர்ந்த சித்தீக் ஆகியோரின் பங்களிப்பும் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அக்கரைப்பற்று எம்.ஐ.எம்.உதுமாலெவ்வை அவர்களும் முக்கியமான ஒருவர். மேலும் அட்டாளைச்சேனையில் பல்கலைக்கழகத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பில் கல்வியல் கல்லூரிக்கு தலைவராகவிருந்த மருதமுனை அஸீஸும் முக்கியமானவர்.

மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்கும் செயலணியில் கல்முனை கே.ஜவாத், எம்.ரி.ஹஸன் அலி, மன்சூர் ஏ.காதர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் முக்கிய பதவிகளை வகித்த எம்.எச்.எம்.ஹலீம், சீ.எம்.ஏ.முனாஸ் ஆகியோரின் பங்களிப்பும் மறக்க முடியாதவை.

இவர்களின் பங்களிப்பின் காரணமாகவே முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தை கௌரவப்படுத்துவதற்காக அஷ்ரஃபினால் இவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களாக முதன் முதலாக நியமிக்கப்பட்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றார். அவர் இங்கிருந்து மக்காவுக்கு செல்லும் முன்னர் ஜெமீலுடன் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொப்பி முஹிதீனையும் முழுமையாக இந்த விடயத்தில் ஈடுபடுமாறு தெரிவித்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பல்கலைக்கழக மானியஙகள் ஆணைக்குழு தலைவரை சந்திப்பதற்கு ஜெமீலை அழைச் சென்றிருந்ததனையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அவசியம் தொடர்பில் வெளியான நூலை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஜெமீலிடமே அஷ்ரப் ஒப்படைத்திருந்தார். அதற்கான உதவி, ஒத்ததாசைகளை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், குறித்த நூலை நாடாளுமன்றத்தில் காட்டிய முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தேவை தொடர்பில் மிகக் காத்திரமாக சபையில் உரையாற்றினார்.

இவ்வாறான பின்னணிகளிலேயே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24 ஆம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக 1995 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் அது 1995 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.

அதன் ஸ்தாபக உபவேந்தராக பேராசிரியராக எம்.எல்.ஏ. காதர் அவர்களும் ஸ்தாபக பதிவாளராக ஏ.எல்.ஜவ்பர் சாதிக் அவர்களும் ஸ்தாபக நிதியாளராக குலாம் ரஷீத் அவர்களும் நியமனம் பெற்றனர்.

இன்று இலங்கையின் முக்கிய அறிவுப் பொக்கிஷமாக இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அதாவது அம்பாறை ஒலுவிலில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இதன் பிரயோக விஞ்ஞான பீடமானது சம்மாந்துறை பிரததேசத்தில் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த பல்கலைக்கழகத்தின் பீடங்கள் தென்கிழக்கின் பல பிரதேசங்களின் கல்விக்கான அடையாளங்களாக அமையவிருக்கின்றன. ஒலுவில் வளாகமானது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வருடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஏ.எம்.ஜெமீல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே தனது கல்வியை ஆரம்பம் முதல் தொடர வேண்டுமென்பதற்காக இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதலாம் வருட மாணவராக இணைந்து தனது கல்வியை முன்னெடுத்தார்.

மேலும், தென்கிழக்குப் பல்கலையின் முதல் உபவேந்தராக எம்.எல்.ஏ காதரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஜெமீல் ஏற்றுக் கொண்டதனையடுத்து எம்.எல்.ஏ.காதர் உபவேந்தராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் இந்த பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியில் பிரபல்யபடுத்தும் வகையில் கொழும்பில் பல செயலமர்வுகளையும் பல்கலைக்கழகத்துக்கான விசேட கற்கை நெறிகளையும் ஜெமீல் ஏற்பாடு செய்திருந்தார். இதன் காரணமாக இந்த பல்பலைக்கழகம் தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற வித்திடப்பட்டது.

இவைகள் அனைத்துக்கும் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர், ஸ்தாபக பதிவாளர் மற்றும் அமைச்சர் அஷ்ரப் ஆகியோருக்கு ஜெமீல் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் - தென்கிழக்கு பல்கலைக்கழகம்

Thursday, October 21, 2021

1300 பயனாளிகளுக்கு குழாய்க் கிணறு வழங்கி ரஹ்மத் பவுண்டேஷன் உன்னத சேவை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் வீட்டுக்கு வீடு குழாய் நீர் கிணறு எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி குழாய்க் கிணறுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பல இடங்களிலும் அமைக்கப்பட்ட குழாய்க் கிணறுகள் உரிய பயனாளிகளிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் குறித்த திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை அடையாளம் காணப்பட்ட சுமார் 1300 இற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது குடியிருப்புகளில் இவ்வாறு குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளன. இதனை இன்னும் விஸ்தரிப்பு செய்து, தேவையுடைய மக்களுக்கு இச்சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த நிலைபேறான சேவையை எமது அமைப்பு வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்துக்கு உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இத்திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும் துரிதமாகவும் உரிய இடங்களுக்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்துவதில் அர்ப்பணிப்பு, தியாக மனப்பாங்குடன் முன்னின்று செயலாற்றுகின்ற தனது பிரத்தியேக செயலாளரும் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளருமான முஹம்மட் சப்ராஸ் உள்ளிட்ட குழுவினருக்கும் பிரதி முதலவர் ரஹ்மத் மன்சூர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கை கொள்ளை வியாபாரிகளுக்கே சாதகம்..!

புலனாய்வு உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மாவட்ட செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வர்த்தக, வாணிப அமைச்சர், பாவனையாளர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் போன்றோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளரும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த 2018 ஆம் ஆண்டு, அமைச்சரவை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பவற்றின் அனுமதியுடன் பிரதேச செயலக மட்டத்தில் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்குடன் நாடு பூராவும் சுமார் 200க்கு மேற்பட்ட புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்கள், வர்த்தக அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் நியமன நிபந்தனைகளுக்கு முரணாக திடீரென மாவட்ட செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டு, அங்கிருந்து கடமை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது புலனாய்வு பணிகளை சுதந்திரமாக செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய கொவிட் பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலையில் வர்த்தகர்கள் தாம் நினைத்தவாறு பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்கும் கறுப்பு சந்தை, பதுக்கல் வியாபாரம் என்பவற்றில் ஈடுபடுவதற்கும் பிரதான காரணம் யாதெனில் பிரதேச செயலக மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் இல்லாமல் போனமையேயாகும்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் நேரடி கண்காணிப்பு பிரதேச மட்டத்தில் இருந்தால்தான் வணிகக் கொள்ளைகளைத் தடுக்க முடியும். அதிகாரம் பரவலாக்கப்படுகின்ற இக்காலத்தில்  பாவனையாளர் அதிகார சபையின் நிருவாகம் மாத்திரம் அதிகார குவிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பாவனையாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

இவர்களது நியமனம் எந்த நோக்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டதோ அந்நோக்கம் சிதறடிக்கப்பட்டு, இவர்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை மறுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் இவ்வுத்தியோகத்தர்கள் நேரடியாக தலையீடு செய்ய முடியாதவாறு, மாவட்ட செயலகங்களில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக காணப்படுகின்றன. இதன் மூலம் பகற்கொள்ளை வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

இதேவேளை, இவ்வுத்தியோகத்தர்கள் பலர் இதுவரை சேவையில் நிரந்தரமாக்கப்படாமல் இருந்து வருவதுடன் அடிக்கடி இடமாற்றத்திற்கும் உட்பட்டு வருவதன் காரணமாக அதிகமான பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது பதவிகளை விட்டுச் சென்றுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

ஆகையினால், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அனைத்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதுடன் அவர்களது சேவையை பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த கடிதங்களில் வலியுறுத்தியுள்ளோம்- என்றார்.

Tuesday, October 19, 2021

கோட்டா அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் கோரிக்கை தொடர்ந்தும் இழுத்தடிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இந்த அரசாங்கம் மேற்கொண்ட பிழையான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும் தமது கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்கத்தின் உப தலைவரும் கல்வி நிர்வாக சேவையின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 2016ஆம் ஆண்டு சகல அரசாங்க ஊழியர்களின் சம்பளம்  நூற்றி ஏழு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 2016 முதல் 2019 வரை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டுடன் பூரணப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான அரச நிருவாக சுற்று நிருபத்தில், 2016 முதல் 2019 வரையான காலப் பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கமைய வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் நாடு பூராகவும் சுமார் 120,000 (ஒரு இலட்சத்து 20 ஆயிரம்) ஓய்வூதியர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தீர்மானத்தை வாபஸ் பெற்றுவிட்டு, அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குமாறு முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாக இல்லை. தமது கோரிக்கையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே நாளில் தபாலகங்களில் திரண்டு டெலிகிராம் போராட்டத்தில் குதித்திருந்தோம்.

அத்துடன் விகார மகாதேவி பூங்காவில் கூடி பேரணி ஒன்றை நடத்துவதற்கும் முயற்சித்தோம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இதனை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று எமது ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோர் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

தமது இந்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்காத நிலையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் போராட்டங்களில் குதித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்- என்றார்.

மாடு அறுத்தல் தடைக்கு அமைச்சரவை அங்கீகாரம்; சட்டங்களை திருத்தவும் நடவடிக்கை..!


இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்/கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

* 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம்

* 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

* 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

* 255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம்

* 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

இதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமர், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

@Tamil Mirror

Sunday, October 17, 2021

கொவிட்-19 தடுப்பூசி; சந்தேகங்களும் விளக்கங்களும்


சுகாதார அறிக்கையிடல் தொடர்பில் விடியல் இணையத்தளம் ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய இணையவழி செயலமர்வொன்று அண்மையில் நடைபெற்றது. கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்படும் ஹிங்குராகொட ஆதார வைத்தியசாலையின் பதில் பொது வைத்திய நிபுணராகப் பணியாற்றும் அஹ்லம் எம்.முஸ்தபா இந்த செயலமர்வில் வளவாளராகக் கலந்துகொண்டு கொவிட்-19 தொடர்பாக முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு.

தொகுப்பு:  எம்.எஸ்.எம்.ஸாகிர், சாய்ந்தமருது

கேள்வி:
 கொரோனா வைரஸுக்கு மருந்து இல்லை என்று கூறப்படுகின்ற நிலையில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
 
பதில்: இந்த வைரஸுக்கு எதிராகச் செயற்படக்கூடிய சரியான ஒரு மருந்து என்று கூறும் அளவுக்கு எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதற்கான பிரதான காரணம் இந்த வைரஸ் மாறுபடும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாகும். எமது நாட்டில் முதலில் அல்பா, பீட்டா என்று ஆரம்பித்து, தற்போது  டெல்டாவாக இது உருமாறியுள்ளது. இந்த டெல்டா பரம்பல் இந்தியாவினுடைய பரம்பலாகும்.
 
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட 80 சதவீதமானவர்களுக்கு சில நோய் அறிகுறிகளும் அல்லது எந்தவித நோய் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கும். அவ்வாறான தொற்றாளர்களுக்கு தற்போது வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காய்ச்சல் வந்தால் சாதாரண பரசிடமோல் மாத்திரை கொடுப்போம். அதேபோல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய விட்டமின் சீ, ஈ போன்ற மாத்திரைகளையும் வழங்குவோம். சரியான முறையில் நீராகாரம் எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்குவோம்.
 
இந்நோயின் ஆரம்பம் முதல்; 5 அல்லது 6 நாட்கள் வரை எந்தவொரு பிரச்சினையும் காட்டாது. உடல் வலியோடு, சாதாரண காய்ச்சல் அல்லது உடல் சோர்வு நிலையில் காணப்படும். இது சுவாசத்தினுடைய மேற்பகுதி மூக்குத்துவாரம், வாய், தொண்டை போன்ற பகுதிகளில் வைரஸ் தன்னுடைய எண்ணிக்கைகளைக் கூட்டிக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளப்படும் காலமாகும்.

இதன்போது, தடுமல், தலைவலி, உடல் வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பதனால் அவருக்கு பெரிதாக எந்தவொரு மருந்தும் தேவைப்படாது. எனினும் 6 அல்லது 7ஆவது நாளிலே இந்த வைரஸினுடைய தாக்கம் நுரையீரலை அடையும் போது அங்கே சில இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, அவருக்கு ஒட்சிசன் குறையும் நிலை ஏற்படும்.
 
இந்தக் கட்டத்தில் இருப்பவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு நீர்ச்சக்தி குறைவதுடன், இரத்தம் உறையக் கூடிய நிலையும்  ஏற்படும். அத்துடன் சிறுநீரகம் மற்றும் ஈரல் போன்றவற்றிலும் பிரச்சினைகள் ஏற்படும். அதற்கான மருந்துகள் கொடுப்போம். அதேபோன்று அவருக்கு ஒரு வைரஸ் தாக்கம் ஏற்பட்டதன் பிற்பாடு பற்றீரியாவின் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகம். அதற்கான பிறபொருளெதிரிகள் வழங்கப்படும்.
 
மூச்சுப் பிரச்சினைகள் வரும் போது இரசாயனங்கள் கலந்து ஆவி பிடிக்க கொடுப்போம். இதற்கு மேலதிகமாக சுவாசத்தில் வரக்கூடிய கஷ்டங்களைக் குறைப்பதற்காக ஒட்சிசன் போதியளவு நுரையீரலுக்கு கொடுக்கும் போதும் அவருடைய சுவாசப்பிரச்சினை படிப்படியாகக் குறைந்து வைரஸினுடைய தாக்கமும் குறையும். இதனால் 10 ஆவது நாளின் போது அவருக்கு பூரணமாக சுகம் கிடைத்து வைத்தியசாலையை விட்டு வெளியேறக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: கொரோனா வைரஸின் வீரியம் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

பதில்: ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 48 மணித்தியாலயங்களுக்கு அவர் மூலமாக இன்னொருவருக்குப் பரவாது. எனினும் 3 ஆவது, 4 ஆவது, 5ஆவது நாளில்தான் காய்ச்சல், தடுமல், உடல் வலி, உடல் சோர்வு ஏற்படும். அதனைத் தொடர்ந்தே வைரஸை மிகவும் பரப்பக் கூடியவராக அவர் மாறுவார். பின்னர் தொற்றுப் பரவல் குறையும். எவ்வாறாயினும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டால் எங்களில் இருந்து இன்னொருவருக்கு பரவாது.

கேள்வி: கொவிட் நோயாளருக்கு கருஞ்சீரகம், கொத்தமல்லி, தேன், பேரீச்சம்பழம் போன்றவற்றின் மூலம் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. இது எந்தளவு தூரம் உண்மையானது?  
பதில்: எங்களுடைய வீடுகளில் எங்களுக்கு ஏற்படுகின்ற எல்லா வகையான நோய்களின்போதும் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நோய்யெதிர்ப்புச் சக்தியைச் கூட்டிக் கொள்ளக் கூடிய கை மருந்துகளாக இவை காணப்படுகின்றன.

அந்த அடிப்படையில் மேற்கூறப்பட்ட மூலிகைகள் அனைத்தும் சாதாரண காய்ச்சல், தடுமல், இருமல் வரும்போது பொதுவாக பாவிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனினும், கொரோனா நோய்க்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை மேற்குறிப்பட்டவற்றின் ஊடாக அதிகரிக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறானதொரு விடயம் பதியப்படவில்லை.
 
இவ்வாறான நிலையில், மேற்குறிப்பிடப்பட்ட கை மருந்துகளின் ஊடாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம் என்று பரப்பப்படுவதனால் எங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் அதனை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
 
உதாரணமாக நான் பணியாற்றும் வைத்தியசாலையிலுள்ள ஒரு நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் வழங்கப்பட்டும் அது குறையவில்லை. அதற்கான காரணத்தினை தேடிய போது, குறித்த நோயாளிக்கு அவருடைய உறவினர்கள் தேன் பானியினை அளவுக்கு அதிகமாக வழங்கியதுதான் காரணம் என்று தெரிய வந்தது. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் என்றாலும் நஞ்சு என்று சொல்வார்கள் அதுவே இங்கு நடந்துள்ளது.
 
அது போன்று கொத்தமல்லி குடிக்கின்றவர்களும் ஒரு லீற்றர் தண்ணீரில் எத்தனை மில்லிகிராம் கொத்தமல்லி போட்டு அவிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஒரு லீற்றர் தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் ஒரு லீற்றர் தண்ணீர் கிடைக்காது. அந்த தண்ணீர் ஆவியாகி  அதன் செறிவு  வித்தியாசப்படுகிறது. அது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு செறிவாக்கப்பட்ட தண்ணீரை எத்தனை தடவை எத்தனை நாளைக்கு குடிக்க வேண்டும் என்ற பொதுவான விடயங்கள் நோயாளிக்குத் தெரியாததன் காரணமாக சில நோயாளிகளுக்கு இதன் பக்கவிளைவாக அல்சர் எனப்படும் ஈரல் பிரச்சினை ஏற்படுகிறது.
 
இது போன்ற இன்னோரன்ன மருந்துகளை அளவுக்கதிமாக உட்கொள்வதனாலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இது பற்றிய போதிய அறிவுள்ளவரிடம் கேட்டு பொதுவாக நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டிக் கொள்ளலாம். ஆனால், கொரோனாவுக்குரிய மருந்து இதுதான் என்று எடுத்துக் கொண்டு போலியான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.

கேள்வி: தடுப்பூசி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
 
பதில்: 
தடுப்பூசியில் கொரோனாவினுடைய ஒரு பரம்பரை அல்லது அதன் புரோட்டீன் அல்லது அதனுடைய செயலிழக்கப்பட்ட ஒரு வைரஸ்தான்; அந்தத் தடுப்பூசியில் காணப்படுகின்றது. அதில் வேறு எந்த பொதுவான மருந்துகளும் சேர்க்கப்படுவதில்லை.
 
கொரோனா வைரஸினுடைய தாக்கத்தை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை எங்கள் உடலுக்குள் செலுத்தும் போது எங்கள் உடலானது அந்த வைரஸுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கும். இதன் மூலம் இன்னுமொரு தடவை அந்த வைரஸ் உடலில் உயிராக வரும்போது அதை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில படைகளையும் அதேபோன்று இந்த வைரஸை அடையாளம் காணக்கூடிய, ஞாபகங்களை வைத்திருக்கக்கூடிய கலங்களையும் உருவாக்கும். இந்த தடுப்பூசிகளை உடலுக்குள் செலுத்தும்போது வைரஸுக்கு எதிரான தாக்கம் பாதுகாப்பாக உருவாகி இன்னுமொரு தடவை அந்த வைரஸ் உடலில் தொற்றும்போது அதற்கு எதிராகச் செயற்படும்.
 
இவ்வாறு முழுமையான செயற்பாடு இடம்பெறுவதற்கு இரண்டு தடுப்பூசி போட்டதன் பிற்பாடு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸ் எங்கள் உடலுக்குள் ஊடுருவும்போது அதனைத் தடுக்கக் கூடிய சக்தி அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கக்கூடிய சக்தி உருவாகும். எங்கள் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை உற்பத்தியாக்கவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்னொருமுறை கொரோனா வைரஸ் உள்ளே வரும் போதுதான் அந்தப் பாதுகாப்பு அரண் வெளிக்காட்டப்பட்டு, அந்த வைரஸ் அழிக்கப்படுமே தவிர, தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பூசி கொடுக்கப்படவில்லை.
 
ஆகவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவருக்கு தொற்று ஏற்படுமா என்று கேட்டால், தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஆகவே, எந்தத் தடுப்பூசி முதலாவதாக கிடைக்கிறதோ அந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது சிறந்தது.
 
அடுத்து வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சில தடுப்பூசிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. வெளிநாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல முடியும். வெளிநாடு செல்ல இரண்டு வார காலத்திற்கு முன் பூஸ்டர் டோஸாக வேறு ஏதாவதொரு தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பை குறித்த நபர்கள் பெறுவார்கள். இப்போதைக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையினையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
 
எனவே, வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்பூசியைப் எடுத்துக் கொள்ளாது உயிருக்கு உலை வைக்காமல் எந்தத் தடுப்பூசி கிடைக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளும் போதுதான் தங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் முகக்கவசங்கள்; அணிந்து கொள்ளுதல், கை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற விடயங்களைப் பின்பற்றுவதால் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த கல்முனை கடற்கரையோரத்திற்கு சுகாதார பிரிவினர் கள விஜயம்..!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கொரானா தொற்று நிலைக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது இடைக்கிடையே மழை பெய்து வருவதால் டெங்கு நோய் பரவும் சாத்தியமுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முகாமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய கல்முனை பிரதேசத்தில் சுற்று  சூழலில் இருந்து டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முகாமாக  தீவிர சுகாதார நேரடி கண்காணிப்பு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இந்த வகையில் கல்முனை கடற்கரையோர பகுதிகளில் நேரடி கள விஜயம்  நேற்று (16) இடம்பெற்றது .

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவின்  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  ஏ.எம். பாறுக் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர திண்ம கழிவகற்றல் பிரிவு மற்றும் கல்முனை ப்ரிலியண்ட் விளையாட்டுகழகத்தினரின் ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம். நியாஸ், எம். ஜுனைதீன் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் , பல நோக்கு செயலணியினர் ஆகியோர்  இணைந்து குறித்த செயற்பாட்டை மேற்கொண்டனர்.

இதன்போது கடற்கரையோரத்தில் கவனிப்பாடற்று பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி தோணியோன்றின் உள்ளே  மழை நீர் தேங்கி உள்ளதை அவதானிக்கப்ட்ட  நிலையில்  நீரினை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன் மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோணிகளில் மழை நீர்  தேங்கியுள்ளதா என அவதானிக்கப்பட்டது  அத்துடன்  மீன்பிடி தோணி உரிமையாளர்களுக்கு சுகாதார பிரிவினரால் டெங்கு நோய் பரவல் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டனர்.




metromirrorweb@gmail.com
whatsapp: 0779425329

கிழக்கில் ஆசிரியர் போராட்டத்தை மழுங்கடிக்க சில அரசியல்வாதிகள் முனைப்பு; தென்கிழக்கு கல்விப் பேரவை குற்றச்சாட்டு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தை கிழக்கு மாகாணத்தில் மழுங்கடிப்பதற்கு சில அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டுவதாகவும் அதற்கு சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் துணை போகின்றனர் எனவும் தென்கிழக்கு கல்விப் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பேரவையின் தலைவர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் ஆலோசனை கூட்டம் என்ற போர்வையில் சில கல்வி வலயங்களில் பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர் பிரதிநிதிகள் போன்றோர் அழைக்கப்பட்டு, பாடசாலைகளை திறக்க வற்புறுத்தி வருவதுடன் மிரட்டல்களும் விடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு கல்வி வலயங்களில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுசரணையுடன் அவர்களது இணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் எடுபிடிகள் பலர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

அத்துடன் சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கூட ஆசிரியர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளுக்கு துணை போவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனை எமது பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆகையினால், கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிபர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என எமது பேரவை கேட்டுக் கொள்வதுடன் தமது எஜமானர்களை திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் இருந்து அரசியல்வாதிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் விலகியிருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

ஆசிரியர்களது போராட்டத்தை ஆதரிக்கா விட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள். ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைகளுக்கு வரவழைத்தாலும் அவர்கள் மனம்வைத்தால் மட்டுமே கற்பித்தல் செயற்பாடுகள் முறையாக நடைபெறும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்- எனவும் தென்கிழக்கு கல்விப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

metromirrorweb@gmail.com
whatsapp: 0779425329

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஜெமீல், ஜயரத்ன ஆகியோருக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை..!



(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை பொலிஸ் மாவட்டத்துக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி பதுளை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பி.எம்.ஜயரத்ன மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்தில்

பிரதம பொலிஸ் பரசோதகராக கடமையாற்றி வந்த நிலையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக

பதவி உயர்வு பெற்று, மன்னார் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றலாகிச் செல்லும் கலாநிதி

ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோருக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு நேற்று சனிக்கிழமை (16) மாலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரினதும் சிறப்பான சேவைகள் மற்றும் நிர்வாகத் திறமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது உதவிப் பொலிஸ் அத்தயட்சகர்கள் இருவரும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் சார்பில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனையில் கடமையாற்றிய தமது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பொலிஸாருக்கும் பிரியாவிடை நிகழ்வை ஒழுங்கு செய்த சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நிர்வாகத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இவர்கள் இருவரும் தமதுரையில் குறிப்பிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் இப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்று, உதவிப் பொலிஸ் அத்தயட்சகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

அரச ஊழியர்க சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும்; இம்ரான் எம்.பி.வேண்டுகோள்..!

தற்போது தாங்க முடியாத அளவு அதிகரித்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். 

விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் படும் கஷ;டங்களை அவதானிக்கும் போது அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் வாழ்க்கைச் செலவுச் சுமையை ஓரளவுக்கேணும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். சமுகத்தில் கௌரவத்தோடு வாழும் அவர்கள் தங்களது அந்தஸ்தை இழக்கும் நிலையை உருவாக்கி விடாதிருக்க அரசு இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்திலும் கனிசமான அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும். சமுர்த்தி உள்ளிட்ட சகல அரச கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் கடன் இன்றி உண்ணும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மக்களுக்காகத் தான் அரசு இருக்கின்றது. எனவே, மக்களின் நலன் பேணும் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசைக் கொண்டு நடத்த நிதி இல்லை என்பதற்காக சகல பொருட்களினதும் விலைவாசியை கண்ணை மூடிக் கொண்டு உயர்த்தி மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. 

இதிலிருந்து மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. கேஸ் உள்ளிட்ட சில பொருட்களின் விலை 100 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத ஒரு மோசமான விலை அதிகரிப்பு இதுவாகும். 

இந்த நிலையில் நாடு தான் முக்கியம் மக்கள் முக்கியமல்ல என்ற போர்வையில் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

69 இலட்சம் மக்கள் ஆணை கொடுத்து தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று இந்த மக்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களது நலன் பேணும் நடவடிக்கைகளே இப்போது முன்னெடுக்கப்படுகின்றன. 

இப்போது அரசு அபிவிருத்தியைப் பற்றிப் பேசுகின்றது. மக்களைப் பட்டினி போட்டு விட்டு செய்யப்படும் அபிவிருத்தி தேவையா அல்லது மக்களின் வாழ்க்கைச் செலவை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து விட்டு செய்யப்படும் அபிவிருத்தி தேவையா என்பது குறித்து கேட்க விரும்புகின்றேன்.

metromirrorweb@gmail.com
whatsapp: 0779425329

Saturday, October 16, 2021

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள மாணவிகள் விண்ணப்பப் படிவங்களை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Friday, October 15, 2021

பொது அறிவு வினா விடைப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்றக் இரண்டாமிடம்..!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பொது அறிவு வினா விடைப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடித் கொடுத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் அ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடத்திவரும் தமிழ் திறன் காண் போட்டிகள் 2021 நிகழ்நிலை ஊடாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற பொது அறிவு வினா விடைப் போட்டியில் கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளுடன் ஏ. பைஹான் அஹமத் - 12 விஞ்ஞானப்பிரவு, ஆர்.ஏ. உமைர் - 12 விஞ்ஞானப்பிரிவு, எம்.எம்.எம். ஆகில் - சாதாரண தரம், ஐ. பிலால் - சாதாரண தரம் ஆகியோரே பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியுள்ளனர்.

இவர்களை வழிப்படுத்தி உதவிய பழைய மாணவரும் பாடசாலையின் முன்னாள் தமிழ் இலக்கிய மன்ற தலைவருமாகிய ஏ. முஸ்பிர் அஹமத் மற்றும் பொறுப்பாசிரியர் வை.எம். அஷ்ரப் ஆகியோருக்கு பாடசாலை முகாமைத்துவ குழு, ஆசிரியர் குழாம், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கல்லூரியின் அதிபர் அ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.

Thursday, October 14, 2021

குருவை நிந்திக்கும் அறிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வாபஸ் பெற வேண்டும்; தென்கிழக்கு கல்விப் பேரவை காட்டம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது என குருவை நிந்திக்கும் வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வெளியிட்டுள்ள அறிக்கையை அச்சங்கம் உடனடியாக வாபஸ் பெறுவதுடன் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டுமென தென்கிழக்கு கல்விப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பேரவையின் சார்பில் அதன் தலைவர் ஏ.எல்.முகம்மட் முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கடந்த 24 வருடங்களாக ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிக்கு எதிரான போராட்டங்களை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சாத்வீகமாக முன்னெடுத்து வருகிறன. இந்த நீதியான போராட்டத்திற்கு நாட்டில் உள்ள பெரும்பாலான தொழில் சங்கங்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

ஆனால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது என அரசைக் கோரி அறிக்கை வெளியிட்டிருப்பதானது மிக மோசமான செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு தமது வாழ்நாள் பூராவும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டிய வைத்தியர் சமூகம் ஏறி வந்த ஏணியை உதைத்து விட்டு, ஆசிரியர்களது கோரிக்கையை நையாண்டி பண்ணும் விதத்தில் நடந்து கொள்வதானது குருவை நிந்தித்த குற்றத்திற்கு சமனாகும். இது ஆசிரியர்களது சாபத்திற்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

சுகாதாரத்துறையில் வைத்தியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி அப்பாவி நோயாளிகளை பணயம் வைத்து கடந்த காலங்களில் நடாத்திய போராட்டங்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஆசிரியர்களை இழிவுபடுத்துவது மாத்திரமன்றி தொழிற்சங்கங்கள் மத்தியிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்- என தென்கிழக்கு கல்விப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

metromirrorweb@gmail.com
whatsapp: 0779425329

Wednesday, October 13, 2021

கிண்ணியாவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு; சமூக சேவையாளர் முஹைடீன் பைஷலினால் 5000 ரூபா பணப்பரிசு..!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கிண்ணியா வலயத்திற்குட்பட்ட,  9ஏ சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கலீலா உம்மா பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எ.அனஸ், நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எ. நஸுஹர்கான், கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஷ்வி, நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எப்.ஏ.மரைக்கார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், சித்தி எய்திய மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு இளம் சமூக சேவையாளர் முஹமட் முஹைடீன் பைஷல் தலைமை தாங்கியதோடு, 9ஏ சித்தி பெற்ற 20 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் சன்மானமும் வழங்கி வைத்தார்.





Thursday, October 7, 2021

போத்தலில் சிறுநீர் கழிக்கும் ரிஷாட் பதியூதீன்..!

ACMC தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், மாலை 5 மணிக்குப் பின்னர் போத்தலில் சிறுநீர் கழிக்கவேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ரிஷாட் பதியூதீன் எம்.பி, மாலை 5 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அவர் ​போத்தலிலே சிறுநீர் கழிக்கின்றார். ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்க வழிவகைகளைச் செய்யுமாறு சபாநாயகரிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரியுள்ளார்.

இதனிடையே குறுக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கடந்தகாலங்களில் தாங்களும் சிறையில் அடைக்கப்பட்டோம். அப்​​போது நாங்களும் மாலை 5 மணிக்குப் பின்னர், போத்தல்களிலே சிறுநீர் கழித்தோம் என்றார். @D/M 

Monday, October 4, 2021

உலகில் அதியுச்ச ஊழல் தலைவர்கள் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ..!

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இதில் இலங்கையின் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினருமான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா ராஜபக்ஷ பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், செக் குடியரசு பிரதமர் எண்ட்ரேஸ் பாபிஸ், கென்ய ஜனாதிபதி உஹுரு, சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, பாகிஸ்தான் அமைச்சர்கள் சிலர் உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் பல மில்லியன் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக ‘பென்டோரா பேப்பர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊழல் தலைவர்கள் வரிசையிலேயே நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. D/M