Wednesday, October 27, 2021

முஸ்லிம் தனியார் சட்டத்தை குழிதோண்டிப் புதைக்க முனைகிறதா அரசாங்கம்?

கல்முனை மாநகர சபை உறுப்பினர் பி.எம்.ஷிபான் கேள்வி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை வாழ் முஸ்லிங்கள் இரு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருகின்ற முஸ்லிம் தனியார் சட்ட உரிமையை திருத்தம் எனும் போர்வையில் குழிதோண்டிப் புதைத்து விடுகின்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான பி.எம்.ஷிபான் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ரொஷான் அக்தரினால் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கூறும் அரசங்கம், எவ்வாறான திருத்தம் கொண்டு வரப்போகின்றது என்பதனையோ அல்லது ஒட்டு மொத்தமாக இருபது லட்சம் முஸ்லிங்கள் இந்த நாட்டிலே இரு நூற்றாண்டுகள் கடந்து அனுபவித்து வருகின்ற உரிமையினை குழிதோண்டிப் புதைத்துவிடுகின்ற நடவடிக்கைகளிலே இறங்கியிருக்கின்றதா என்பதனையோ இன்னுமும் வெளிப்படுத்தாமல் மூடு மந்திரம் போட்டு வைத்திருக்கிறது.

சமூக மாற்றம் மற்றும் சட்டத்துறையின் வளர்ச்சி என்பவற்றின் மூலம் நூற்றாண்டு கடந்து அனுபவிக்கும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திலே குறைகள் இருப்பின் அதனை கடந்த காலங்களிலே திருத்தங்கள் செய்து நடைமுறையில் உள்ளதனைப் போல் நடைமுறைப்படுத்த முஸ்லிம்கள் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை. ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்ற சில திருத்தங்களை இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

காதிகள் நியமனத்தின்போது தகுதி வாய்ந்த காதிகள் உள்வாங்கப்பட வேண்டும். மாத்திரமல்லாது அவர் ஒரு ஆலிமாக, சட்டத்தரணியாக, பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதாகும்.

காதிகளுக்கு எதிராக தற்போது முன்வைக்ப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணம் காதிகளின் நியமனம் அரசியல் சார்ந்ததாக இருப்பதனால் ஆகும். ஆகவே காதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடு முற்று முழுதாக இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

காதிகளின் நீதிமன்றங்கள் அவர்களுடைய வீடுகளிலே அமைந்திருப்பது முற்றாக தடை செய்யப்படுவதோடு அவை பிரத்தியேக அரச கட்டிடங்களில் தொழிற்படும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும்.

காதிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக காதிகளுக்கான ஒழுக்காற்றுக் குழு அல்லது மேற்பார்வை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழுவிலே ஓய்வுபெற்ற  முஸ்லிம் நீதிபதிகள், தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட வேண்டும். காதிகள் மற்றும் ஜூரிகளுக்கு முறையான முறையில் பயிற்சி வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஜுரிகளாக பெண்களும் உள்வாங்கப்படுவதில் ஆட்சேபனைகள் இருக்கப் போவதில்லை. ஆனால் காதிகளாக பெண்கள் உள்வாங்கப்படுவதனை முஸ்லிம் சமூகம் பெரு மனம் கொண்டு வரவேற்கப் போவதில்லை.

மாத்திரமல்லாது முஸ்லிம் தனியார் சட்டத்திலே இந்த நாட்டிலே அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தலைமை வகித்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உடைய பரிந்துரைகளும் மாற்றங்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடைமுறைகள் சாத்தியப்படுமாயின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் மீது இன்று குற்றம் சுமத்தும் சில முஸ்லிம் தரப்பினர் இச்சட்டத்தில் வேண்டி நிற்கின்ற மாற்றங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறும்- என்றார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணை கல்முனை மாநகர சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.




No comments:

Post a Comment