Tuesday, October 19, 2021

கோட்டா அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் கோரிக்கை தொடர்ந்தும் இழுத்தடிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இந்த அரசாங்கம் மேற்கொண்ட பிழையான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும் தமது கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்கத்தின் உப தலைவரும் கல்வி நிர்வாக சேவையின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 2016ஆம் ஆண்டு சகல அரசாங்க ஊழியர்களின் சம்பளம்  நூற்றி ஏழு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 2016 முதல் 2019 வரை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டுடன் பூரணப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான அரச நிருவாக சுற்று நிருபத்தில், 2016 முதல் 2019 வரையான காலப் பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கமைய வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் நாடு பூராகவும் சுமார் 120,000 (ஒரு இலட்சத்து 20 ஆயிரம்) ஓய்வூதியர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தீர்மானத்தை வாபஸ் பெற்றுவிட்டு, அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குமாறு முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாக இல்லை. தமது கோரிக்கையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே நாளில் தபாலகங்களில் திரண்டு டெலிகிராம் போராட்டத்தில் குதித்திருந்தோம்.

அத்துடன் விகார மகாதேவி பூங்காவில் கூடி பேரணி ஒன்றை நடத்துவதற்கும் முயற்சித்தோம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இதனை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று எமது ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோர் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

தமது இந்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்காத நிலையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் போராட்டங்களில் குதித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்- என்றார்.

No comments:

Post a Comment