Monday, November 15, 2021

சிறந்த மார்க்க அறிஞரான அஷ்ஷெய்க் இமாம் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்துக்காக அர்ப்பணித்திருந்தார்..!

 -அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்-


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிறந்த மார்க்க அறிஞராகவும் ஆன்மீக வழிகாட்டியாகவும் சமூக சேவையாளராகவும் திகழ்ந்த அஷ்ஷெய்க் ஏ.ல்.இமாம் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்துக்காக அர்ப்பணித்திருந்தார் என அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமா என்பவற்றின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் ஏ.ல்.இமாம் (பலாஹி) அவர்கள் நேற்று முன்தினம் காலமானதையிட்டு மேற்படி ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் நாஸிர் கனி (ஹாமி) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

அஷ்ஷெய்க் ஏ.ல். இமாம் (பலாஹி) அவர்கள் 14-11-2021 அன்று தனது 59ஆவது வயதில் வபாத்தானதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது.

1962-06-02 ஆம் திகதி அகமது லெவ்வை, ஹயாதும்மா ஆகிய தம்பதிகளுக்கு புதல்வராக பிறந்த அஷ்ஷெய்க் ஏ.ல்.இமாம் அவர்கள், ஐனுல் பாயிஸா என்பவரைத் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்று வெளியேறி, நிந்தவூர் தஃவா இஸ்லாமியா கலாபீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

ஊரின் நன்மதிப்பைப் பெற்ற இவர், நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவராகவும், நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும் பதவி வகித்ததோடு நிந்தவூர் பிரதேசத்துக்கான காதி நீதிபதியாகவும் கடமையாற்றி ஊருக்குப் பல சேவைகளைச் செய்தார். இவர் சிறந்த மார்க்க அறிஞராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் சமூகசேவையாளராகவும் திகழ்ந்து வாழ் நாள் முழுவதையும் சமூகத்துக்காக அர்ப்பணித்தார்.

தன்னிகரில்லா சிறப்பம்சங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்த ஏ.ல்.இமாம் மௌலவியிடம் இறையச்சம், பேணுதல், அடக்கம், பணிவு, அன்பு, ஆதரிப்பு, பொறுமை, குடும்ப உறவுகளைப் பேணல் முதலான பண்புகள் மேலோங்கி காணப்பட்டன. அன்னார் 59ஆவது வயதில் காலமானதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது. 

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ஊரவர் அனைவருக்கும் அல்லாஹ் மன ஆறுதலை அளிக்குமாறும் அன்னாரது சமய, சமூக, கல்வி, கலாசார விவகாரங்களில் அவர் காட்டிய தியாகம், அர்ப்பணிப்புக்களை அங்கீகரித்து ஜன்னதுல் பிர்தௌஸை கொடுத்தருளவும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா பிரார்த்திக்கின்றது- என்று அந்த அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment