Monday, December 26, 2022

அரச சுவதம் விருது பெற்றார் இப்றாஹிம் ஜாபிர்..!

சாய்ந்தமருது நிருபர்

சாய்ந்தமருதை சேர்ந்த அறிவிப்பாளரும் நாடக நடிகருமான இப்றாஹிம் ஜாபிர், அரச சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைசேனை மத்திய கல்லூரி மண்டபத்தில், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம்.றின்சான் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விருது விழாவின்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.சபீக்கா ஆகியோரின் முன்னிலையில் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸ்வரன் அவர்களிடமிருந்து இவர் இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உயர்பீட உறுப்பினரான இப்றாஹிம் ஜாபிர், கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 20, 2022

கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் நூர்ஜஹான் பீவி..!


சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடந்த எட்டு வருடங்களாக ஆரம்பக் கல்வி ஆசிரியராகக் கடமையாற்றி வந்த திருமதி நூர்ஜஹான் பீவி அலி அக்பர் அவர்கள் தனது 56ஆவது வயதில் 2022.12.15ஆம் திகதி முதல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

1992ஆம் ஆண்டு ஆசிரிய நியமனம் பெற்று சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் தனது கல்விப் பணியினை ஆரம்பித்த இவர் 30 வருட காலம் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியப் பணியாற்றியுள்ளார்.

இவர் கரவாகு தெற்கு கிராம சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஐ.அலியார் தம்பதியரின் கடைசிப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு..!

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இக்கலாசார மத்திய நிலைய கட்டிடத் தொகுதி விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் முன்னிலையில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் மேற்படி மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான யூ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இம்முகாமைத்துவ சபையின் அங்குரார்ப்பண நிகழ்வின்போதே அவர் இப்பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்ற அஸ்வான் மௌலானா, நாடகக் கலை பட்டறைக்கான வளவாளராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நாடக எழுத்தாக்கம், தயாரிப்பு மற்றும் மேடை நாடகம் என்பவற்றில் விற்பன்னராகத் திகழும் இவர் பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதுடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

கலை, கலாசார மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளில் முன்னின்று பங்காற்றி வருகின்ற இவர் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 15, 2022

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் வெற்றி..!


(சாய்ந்தமருது நிருபர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (15) பிற்பகல் 03.00 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமானது.

இந்த அமர்வுக்கு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 35 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

பட்ஜெட்டை சமர்ப்பித்து மாநகர முதல்வர் உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துகளையடுத்து பட்ஜெட் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 26 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 09 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 06 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர், தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினர், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 04 உறுப்பினர்கள், , ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழுவின் ஒரு உறுப்பினருமாக 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 02 உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





Sunday, December 11, 2022

ACMC சர்வதேச விவகார பணிப்பாளராக மாஹிர் நியமனம்...!


-செயிட் ஆஷிப்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் - சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த மாஹிர் - சர்வதேச விவகாரங்களில் நீண்ட அனுபவமிக்கவர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் பிரிவின் கீழ் மனித உரிமை ஆராய்ச்சியாளராக பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

இந்த பதவிக்காக நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட பரிட்சையில் ஐந்து பேர் சித்தியடைந்திருந்தனர். இந்த ஐவரில் மாஹிரும் ஒருவர்.

இதன் பின்னர் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

இவர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அனுபவத்தை கொண்ட மாஹிருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை, இந்த பொறுப்பை வழங்கியுள்ளமை பொருத்தமானதே என்று கட்சியின் அபிமானிகள் வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.

Monday, December 5, 2022

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை அனுமதிக்க விண்ணப்பம் கோரல்..!

(எம்.எம்.அஸ்லம்)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள தகுதியான மாணவிகள், சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அனுமதி வழங்குவதற்குரிய மாணவிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.   

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி (எம்.ஏ.) அவர்களை முதல்வராகக் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். 

இதுவரை 30 மாணவிகள் இக்கல்லூரியில் இருந்து மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இவர்களுள் பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர் கல்வி கற்று வருவதுடன் கற்கைகளை பூர்த்தி செய்த சிலர் பல்கலை பட்டம் பெற்று வெளியேறியுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 18, 2022

முஸ்லிம்களின் தேசிய அபிலாஷைகளை உள்வாங்காமல், வடக்கு-கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்? மனோ கணேசன் கேள்வி


♦️இலங்கையில் தமிழர்கள் கண்டு விட்ட இழப்புகளுக்கு முதற்காரணம் தமிழ் அரசியல் மேதைகள்..!

♦️கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்..!

சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய தலைவர்களையும் காரணமாக காட்டுவதையும் நிறுத்துங்கள்!! என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.      

தமிழக இலங்கை அரசியல் பிரமுகர் மறைந்த மணவை தம்பியின் மைந்தர் மணவை அசோகனின் பவள விழா நிகழ்வு மட்டக்குளியில் நடைபெற்ற போது, அதில் அதிதியாக கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது உரையில் மேலும் கூறியதாவது, 

சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய தலைவர்களையும் காரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.

இலங்கையில் தமிழர்கள் கண்டு விட்ட இழப்புகளுக்கு முதற்காரணம், இலங்கை தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம், கொலைகார பேரினவாத அரசுகள். 

1940களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர முன் வந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்?

65:35 என்ற ஜனபரம்பலுக்கு, நியாயமேயற்ற 50:50 என்ற யதார்த்தமற்ற கோரிக்கையை முன் வைத்து, பிரிட்டீஷ் அரசாங்கமே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்?  

1987ல் வடக்கு கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை துவக்கி வைத்த, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாண சபைகளையும் எட்டி உதைத்தது யார்? 

இன்று, "பிச்சை வேண்டாம், நாயை பிடி!" என்ற மாதிரி, 13ம் திருத்தத்தையாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்?

இந்திய நாட்டு பிரதமராக இருந்த, மீண்டும் பதவிக்கு வரவிருந்த, ராஜீவின் மரணத்துக்கு காரணத்தை மறந்து விட்டு, இப்போது இந்திய அரசு தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்?

இன்றும் கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாஷைகளை உள்வாங்காமல், வடக்கு-கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்? 

கருணாநிதியும், இந்திய தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை. கருணாநிதியை கருணை நிதி எனவும் நான் கூறவில்லை.

ராஜிவ் காந்தியை மகாத்மா காந்தி எனவும் நான் கூற வரவில்லை. ராஜிவ் அனுப்பி வைத்த இந்திய அமைதி படை இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை எனவும் நான் கூற வரவில்லை. “ஆர்மி” என்ற இராணுவம் எல்லா நாட்டிலும் ஒன்றுதான். கட்டவிழ்த்து விட்டால் இந்திய, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க இராணுவம் எல்லாம் ஒன்றுதான்.  

இந்தியா ஒரு நாடு. இலங்கை இன்னொரு நாடு. தமது "தேச நலன்கள்" அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும், நமது தமிழ் அரசியல் மேதைகளுக்கு விளங்கி இருந்திருக்க வேண்டும். அது சிங்கள அரசியல் மேதைகளுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால்தான் அவர்கள் கெட்டிக்காரத்தனமாக காய் நகர்த்தி தமது இலக்கை அடைந்தார்கள்.  

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, எம்ஜியாரோ, இன்று ஸ்டாலினோகூட,  தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள்.

இந்திரா காந்தியோ, ராஜீவ் காந்தியோ, இன்று நரேந்திர மோடியோ கூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் நூற்றிமுப்பது கோடி இந்திய மக்களுக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள். தங்கள் பார்வையில் தங்கள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தீமை எனை அவர்கள் கருதும் எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். 

இதிலும் கூட கருணாநிதி  இலங்கை தமிழருக்காக, தமிழ் நாட்டில் இரண்டு முறை தனது திராவிட முன்னேற்ற கழக மாநில ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை தமிழ் மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது?

ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை குறி வைத்து கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். முதலில் சுய விமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள். வரலாறு முழுக்க செய்து விட்ட சுய தவறுகளை தேடுங்கள். விடை கிடைக்கும்.

நான் சும்மா ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. அனுபவத்தை பகிர்கிறேன். எனக்கு பின்னடைவு ஏற்பட்டால், காரணத்தை எனக்குள்ளேதான் நான் தேடுகிறேன். 

ஆகவே விடையும் கிடைக்கிறது. இந்த யுக்தியை எனக்கு வரலாறு கற்று கொடுத்திருக்கின்றது.

TPA Media Division




Tuesday, November 15, 2022

"ஓர் ஆண்டுக்குள் தீர்வு" என்ற ஜனாதிபதியின் செய்தி நடைமுறைச் சாத்தியமற்றது; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்.


தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் அவர் வழங்கிய பதில்களின் தொகுப்பு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

கேள்வி :- அரசியல் அமைப்பு திருத்தம் சம்பந்தமான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற போது, வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இப்படித்தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்ற தீர்மானங்கள் ஏதேனும் எட்டப்பட்டனவா? அதேவேளை, வாக்களிப்பு நடைபெறுகின்ற போது, அநேகமானவர்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாத ஒருநிலை இருந்தது. கலந்து கொள்ளாதவர்கள் ஏதேனும் ஒரு அழுத்தத்தின் காரணமாக கலந்து கொள்ளாதிருந்தார்கள் என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

பதில் :- அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அளவிற்கு விமர்சனத்திற்குள்ளான காரணத்தினால், 20 ஆவது சட்ட திருத்தத்தை மாற்றியமைக்கின்ற எந்தத் தீர்மானமாக இருந்தாலும், அதிலுள்ள அனுகூலன்களை அனுசரித்து கட்சி வாக்களிக்கவேண்டும் என்பது மிகத் தெளிவானதொரு அடிப்படையாக இருந்தது. 

எனவே, அதற்கென்று ஒரு தனியான கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ஏற்கனவே அது தீர்மானிக்கப்பட்ட விடயம். அந்த அடிப்படையிலே கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 9 ஆம் திகதி வரையும் நாட்டில் இருந்த குழப்ப நிலையும், புரட்சிகரமான மாற்றங்களும் பாராளுமன்றத்தில் கட்சிகளை மீறி செயற்பட்ட எல்லோரையும் கட்சி ஓரளவிற்கு  கட்டுப்பாட்டுகளுக்குள் கொண்டு வரவில்லை என்றாலும், இரு விதமாக அதன் விளைவுகள் இருந்தன. அதாவது எதிர் கட்சிகளிலிருந்து எங்களை மீறிச் சென்றவர்கள் எதிர்க் கட்சிக்கு மீண்டும் வந்து கட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு எத்தனிப்பதும், ஆளும் கட்சியில் இருப்பவர்கள் கட்சியை மீறி எதிர்க் கட்சித் தரப்புக்கு தாவுவதுமாக, இரண்டு விதமாக இந்த செயற்பாடுகள் இருந்தன.  அந்தத் தாக்கத்தின் விளைவாக யாருக்கும் வலுக்கட்டாயமாக இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்சி சொல்லவேண்டிய தேவை எதிர்க் கட்சியைப் பொறுத்தமட்டில் இருக்கவில்லை.  எல்லோரும் தாங்களாகவே நிலவரத்தை உணர்ந்து கொண்டு, "இதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்" என்ற நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்தக் கிளர்ச்சியைச் செய்த இளம் போராட்டக்காரர்கள் எல்லோரும் எங்களைப் பொறுத்தவரை, ஒரு யுக புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள். 

ஆனால், சட்ட திருத்தத்தைப் பொறுத்தவரை, எதிர்பார்த்த அளவிலானதொரு முன்னேற்றம் இல்லை. என்றாலும் கூட, நிச்சயமாக, 20 ஆவது சட்ட திருத்தத்திலிருக்கின்ற மோசமான ஏற்பாடுகளில் சிறிய அளவிலாவது மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன  என்பதனால்,  அதற்காக ஆதரிக்க வேண்டிய ஒரு கடப்பாடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, அரசாங்கம் முன்வைத்த சட்டவரைவு நீதிமன்றத்திற்குச் சென்ற போது, உச்ச நீதிமன்றம் சில விடயங்களில் கொடுத்த தீர்ப்பு காரணமாக நாங்கள் எதிர்பார்த்த இலக்குகளை எட்டமுடியவில்லை.  அதாவது, அரசியலமைப்பின் சட்டப்பிரமானங்கள் பற்றி பாராளுமன்றத்தில் 2/3 வாக்கெடுப்பது மாத்திரம் போதாது; அதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்ற நியதியை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எடுத்த எத்தனங்கள் பெரியளவில் பழிக்கவில்லை. எனவே, கடந்த 19 ஆம் சட்டத்திருத்தத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அளவிலாவது இப்போதைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. எனவே, இரண்டு விடயங்களிலும் இவர்தான் நன்மையடைந்திருக்கிறார்.

19ஆவது சட்ட திருத்தத்தின் போதும் அவர் பிரதமராக இருந்து பிரதமரின் அனுமதியோடுதான் அமைச்சரவை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திருத்தங்கள் வந்தன. அதனை உயர் நீதிமன்றம் அங்கீகரித்து, சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்று அறிவித்தது.

ஆனால், இப்போதைய உயர்நீதி மன்றம் இல்லை அப்படிச் செய்வது ஜனாதிபதியுடைய நிறைவேற்று அதிகாரத்தில் தலையிடுகிற விவகாரம் என்றும் எனவே அதற்கு நீங்கள் கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றாகவேண்டும் என்று ஒரு நியதியை இட்டு விட்டார்கள். இப்படி  ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகத்தான் அந்த எதிர்பார்த்த இலக்கை எங்களால் அடையமுடியவில்லை.  இருந்தாலும் ஓரளவுக்காவது 20ஆவது சட்ட திருத்தத்தின் சில பிரதிகூலங்கள் அகற்றப்பட்டிருப்பதன் 
காரணமாக, குறிப்பாக அந்தப் பாராளுமன்ற குழுவின் மூலமாக உயர் பதவிகளுக்கான நியமனம் என்ற விடயம் வெறும் ஒரு சோடனையே ஒழிய, அதனால் எந்தப் பலனுமில்லை.

ஏனென்றால், ஜனாதிபதிக்கு விரும்பியவாறு செயற்படலாம் என்றுதான் இருந்தது. அந்தப் பாராளுமன்ற சபை உண்மையில் ஜனாதிபதி விரும்பினால் அவர்களை கலந்தாலோசிக்கலாம், அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றாலும் அதை நிராகரித்து அவருக்கு விரும்பியோர்களை நியமிக்கலாம் என்ற அடிப்படையில்தான் இருந்தது. ஆனால், அதை விடவும் ஒரு படி மேலே போய் ஆரம்பத்திலிருந்த அரசியல் அமைப்பு சபை மீண்டும்  உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதில் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் வருவார்கள் என்பது ஒரு வித்தியாசமான விடயம். அதுவும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் கூட அது ஐந்துக்கு ஐந்து என்று இருந்ததைத்தான் ஏழுக்கு ஐந்தாக்கி விட்டார்கள். முதலில் ஏழுக்கு மூன்று என்று இருந்தது. சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஏழு பேரும், பாராளுமன்றப் பிரதிநிதிகள் மூன்று பேரும் என்று இருந்ததை தலைகீழாக மாற்றி அதை பாராளுமன்ற பிரதிநிதிகள் ஏழு பேரும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூன்று பேருமாகச் செய்ததும் இந்த மொட்டுக் கட்சிக்கார்கள்தான்.  

இன்று பாராளுமன்றத்தில் இருக்கிற பெரும்பான்மையை அன்று வைத்துக் கொண்டிருந்து அவர்கள் இருந்த ஜனாதிபதியோடு தேர்தலில் தோற்ற பிறகு போய்ச் சேர்ந்து கொஞ்சப் பேர் காட்டிய சித்து விளையாட்டின் விளைவுதான் 19ஆவது திருத்த சட்டத்தில் ஏற்பட்ட  பின்னடைவுகள்.

அதேபோன்று இப்போது 20 ஆவது சட்ட திருத்தத்திலும் இன்றிருக்கின்ற இந்த மக்கள் மத்தியில் மக்கள் ஆணை வரிதாக்கப்பட்டிருக்கிற இந்தக் கூட்டம், என்னைப் பொறுத்தவரை இன்று பாராளுமன்றத்திலிருக்கிற நாங்கள் இருவர் (மனோ கணேசன்)உட்பட எல்லோருக்கும் மக்கள் ஆணை வரிதாகிவிட்டது.  மீளப்பெறப்பட்டுவிட்டது என்றுதான் நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் ஒரு புதிய தேர்தலை நடத்துங்கள் என்று கேட்கிறோம். 

இந்தப் பெரும்பான்மையோடு  இந்த ஆட்சியை கொண்டு போவதிலிருக்கிற விடயம் என்னவென்றால், மக்கள் மத்தியில் இந்த பெரும்பான்மைக்கான செல்வாக்கு என்பது இல்லை. மக்கள் ஆணை மீளப்பெறப்பட்டுவிட்டது என்பதுதான் இருக்கிற யதார்த்தம். எனவே, இதனூடாக செய்யப்படுகிற எந்த திருத்தத்திலும் எங்களுக்கு நம்பிக்கை கூடுதலாக இருக்க முடியாது.

கேள்வி :- அரசியலமைப்பு திருத்தம் வருகின்ற  போது முஸ்லிம் காங்கிரஸினுடைய  எதிர்பார்ப்பாக இந்தெந்த விடயங்களும் கூட  நாட்டில் இருக்கக்கூடிய தமிழ் பேசும் சமூகமாக இருந்தாலும் சரி, நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களாக இருந்திருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களாக எவை, எவை இருந்தன?, இதனைத் தாண்டி ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கக்கூடிய அந்த வருடங்களில் ஒரு குறைப்பு செய்து அது இப்பொழுது வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இப்போது ஜனாதிபதிக்கு ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது என ஒரு சிலர் சொல்கிறார்கள், இந்தப் பிடிமானம் கிடைத்ததன் மூலமாக ஒட்டுமொத்தமாக பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அந்த பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடைய தாளத்திற்கு ஜனாதிபதி ஆட்டம் போடுவது என்பது மாறி இப்பொழுது ஜனாதிபதியினுடைய கையில் பிடிமானம் கிடைத்திருப்பதன் மூலமாக ஏதேனும் தமிழ் பேசும் சமூகத்திற்கு நன்மை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?

பதில்: இந்த அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்திற்கான முயற்சிகள் சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுடைய 1994 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் தொடர்ந்தேச்சியாக அரசியல் அமைப்புக்கான மொத்த திருத்தம் என்று நாங்கள் பேசினாலும் உண்மையான நோக்கம் என்பது ஒன்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யவேண்டும் அல்லது ஜனாதிபதியுடைய நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கவேண்டும், பாராளுமன்றத்தினுடைய அதிகாரங்களைக் கூட்டவேண்டும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் கூட்டுகின்ற விவகாரத்தில் இரண்டு தடவைகள் மாத்திரம் 17 ஆவது சட்ட திருத்தமும்,19ஆவது சட்ட திருத்தமும்.  இந்த இரண்டிலும் ஒரு கணிசமான முன்னேற்றங்களைக் எங்களால் காணக்கூடியதாக இருந்தன. ஆனால், இந்த 18 ஆம், 20 ஆம் சட்ட திருத்தம் அதை முழுமையாக மாற்றியமைத்து மீண்டும் இருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்னும் கூட்டுகிற நிலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான் இதற்கெதிராக எழுந்த விமர்சனங்களுக்கான அடிப்படைக் காரணம்.  இந்த அடிப்படையைப் பார்க்கிற போது கடைசியாக நடந்த திருத்தம் எதிர்பார்த்த இலக்குகளை அடையமுடியவில்லை.  என்பதற்கு நான் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால்,  நீதிமன்றத்தின் முடிவின் காரணமாக அந்த அமைச்சரவை அங்கீகரித்த அல்லது அமைச்சரவை மூலம் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்திலும் நீதி மன்றம் "சில விடயங்கள் திருத்தப்பட வேண்டுமாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குப் போகவேண்டும் என்ற நியதியைப் போட்ட  காரணத்தினால் அது சாத்தியமாகவில்லை.

எனவே, அந்த விடயத்திலும் நான் சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை, இதற்கு நான் என்ன செய்வது என தற்போதைய ஜனாதிபதி தப்பித்துக் கொள்கிறார். ஆனால், இதிலுள்ள முழு நன்மையும் ஜனாதிபதிக்குதான். ஏனென்றால், அவருடைய அதிகாரங்கள் எதுவும் பறிபோகவில்லை.

19ஐ விடவும் அந்த (டீமிங் ப்ரோவிசன்) போட்டோமே, அதாவது இந்த அரசியல் அமைப்பு  குழு நியமனம் ஒன்றைச் செய்கிற போது ஜனாதிபதி நியமிக்காமல் இருக்கிற விடயத்தில் பெரிய  குளறுபடி கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. அதை தவிர்ப்பதற்காக ஒரு (டீமிங் ப்ரோவிசனை ) நாங்கள் போட்டோம். ஏனென்றால். நியமிக்கவில்லை என்றால் அது இரண்டு வாரத்திற்குப் பிற்பாடு நியமிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும் என்ற ஒரு விடயம் 19இல் இருந்தது. ஆனால், இந்த முறை உயர் நீதிமன்றம் அதை அப்படிச் செய்ய முடியாது, செய்தால் அது சர்வஜன வாக்கெடுப்புக்குப் போகவேண்டும்  என்ற தீர்மானம் வந்துவிட்டது. அதனால் இந்த ஜனாதிபதியுடைய கரங்கள் மீண்டும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் என்னுடைய வாதம்.

அதேபோல் 2 1/2 வருடங்களில் பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற விடயம், 19 ஆவது சட்டத்திற்கு முரணான விடயம். ஆனால், இப்போது இருக்கின்ற விசித்தரமான  பாராளுமன்ற சமன்பாட்டில், அதாவது விசித்திரமான சமன்பாடு என்றால், அது விபரீதமான சமன்பாடு. ஏன் விபரீதம் என்றால், ஏற்கனவே மக்கள் நிராகரித்த ஒரு பெரும்பான்மையுடைய பணயக் கைதியாக இந்த ஜனாதிபதி இருக்கிறார் என்பதுதான் எங்கள் எல்லோருடைய நிலைப்பாடும் என்பதோடு, மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஜனாதிபதியை மக்கள் விரட்டியடிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கிற அளவிற்கு வந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இந்த ஜனாதிபதியை பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியாக ஆக்கிவிட்டு, அவருடைய தயவில் தங்கி இருக்கிறோம் என்பது ஒரு புறம், ஆனால், அவர் இவர்களுடைய தயவில் தங்கியிருப்பது போன்றுதான் விடயங்கள் நடக்கின்றன என்ற வாரியான விமர்சனங்கள் இருக்கின்றன. இதற்காகத்தான் நாங்கள் ஒரு தேர்தல் நடத்தப்படவேண்டும் எனக் கேட்கிறோம். 

எனவே அந்தத் தேர்தலை பிற்போடுவதற்கான சில கபடத்தனமான உபாயங்களை இந்த அரசாங்கம், ஜனாதிபதி உட்பட செய்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்தத் தெரிவுக் குழு நியமனம் என்ற கதை. 

இப்போது நீதியமைச்சர் சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்  மீண்டும் ஒரு தேர்தல் முறையை  மறுசீரமைப்பதற்கான  தெரிவுக் குழு. இந்த தெரிவுக் குழு என்பது சங்கீதக் கதிரை மாதிரி,  உட்கார்வதும், எழும்புவதும், பிறகு போய் உட்கார்வதுமாக இது தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு தெரிவுக் குழு அமைக்கப்பட்டு, அதில்  இடைக்கால அறிக்கை கொடுக்கப்பட்டு, அதில் சில சிபாரிசுகள் செய்யப்பட்டு இந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான சில விடயங்கள் செய்யப்படலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் செய்தால் நாள், நேரம் எடுக்கும். குறிப்பாக இந்த எல்லை மீள் நிர்ணயம் என்ற விடயம் எடுத்தெடுப்பில் செய்ய முடியாது. இது அவர்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதைச் செய்யப்போகிறோம் என்று கூறிவிட்டு காலத்தை இழுத்தடித்து, தேர்தலொன்றை நடத்தாமல் இருப்பதுதான் அதனுடைய நோக்கம். 

அதுமாத்திரமல்லாமல் இருக்கின்ற உறுப்பினர் தொகையை அரை வாசியாகக் குறைக்கவேண்டும் ஏனென்றால், இதற்காக செலவீனங்கள் கூட  என்றும் ஜனாதிபதி சொல்கிறார்.  இது என்னைப் பொறுத்தவரை ஏற்புடைய விவாதமாக இருக்கமுடியாது. அப்படியென்றால், பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கின்ற சம்பளத்தைக் குறையுங்கள். குறைத்துவிட்டு உறுப்பினர்களை வையுங்கள். ஏனென்றால், உறுப்பினர்களைக் குறைத்தால் சிறுபான்மையினர்கள்தான் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். 

எனவே, இவர்களுடைய நோக்கம் என்னவென்றால் இந்தக் கதையெல்லாம் கொண்டுவந்து பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதுதான்.
அது நியாயமாக, நேர்மையாக நடக்கவேண்டுமாக இருந்தால், மற்றொரு மாற்று வழி பழைய விகிதாசார தேர்தல் முறைக்கு முழுமையாக,  வட்டாரத் தேர்தல் முறையும், கலவன் தேர்தல் முறையும் இல்லாமல் நேரடியாக முழுமையாக விகிதாசாரத் தேர்தல் முறை என்று போய்விட்டால் அதாவது வட்டார முறை இல்லாமல் எங்களுக்கு உறுப்பினர் தொகையை குறைப்பதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதில் எந்த குழப்படியும் இல்லாமல் இருந்ததே! ஏனென்றால், மூன்று விருப்ப வாக்குகளையும் ஒருவருக்கு போடலாம் என்று இருந்த விடயம் காரணமாக சிறுபான்மையுடைய வாய்ப்புக்கள் கூடுதலாக இருந்தன. 

எனவே இப்படியாகச் செய்யப்பட்ட சில திருத்தங்கள் பிரேமதாஸா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செய்யப்பட்டவை. அதாவது சர்வ கட்சி மாநாடொன்றில் ஏ.சீ.எஸ். ஹமீட் அதன் தலைவராக இருந்து கொண்டுவந்த திருத்தம்தான் அந்த மூன்று விருப்பு வாக்குகளையும் ஒரே ஆளுக்கு போடலாம் என்று உள்ளூராட்சி சபையில் கொண்டுவந்த திருத்தம். அது அந்த யூத் கொமிசன் அறிக்கையில் வந்த விடயம். அதன் அடிப்படையில்தான் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது. 
அப்படியான திருத்தங்கள் மூலம் சிறுபான்மையினர்களுக்கான நியாயமான பங்குகள் கிடைத்தன.  யாரும் எங்களின் பங்கை மீறி எங்கேயும் நாங்கள் எடுக்கவில்லை. எனவே, இப்படியான நிலவரங்கள் ஏற்பட்டன. ஆனால், இந்தப் பெரிய கட்சிகள் இரண்டு பேருக்கும் இது அவ்வளவு ஏற்புடைய விடயமல்ல. ஏனென்றால், அவர்களுக்கு ஸ்திரத்தன்மைதான் தேவை, எப்போதும் ஆட்சி அமைப்பதற்கு வேறு பங்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. நாங்கள் வேறு: யார் தயவிலும் தங்கியிராமல் தனியாட்சி அமைக்கக்கூடியதாக எங்களுக்கு தேர்தல் முடிவுகள் வரவேண்டும் என்பதில் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இருக்கின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமான விடயம். ஜனநாயகம் என்பது  எல்லாக் கட்சிகளுக்கும் தங்களுக்கு கிடைக்கிற வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப அவர்களுக்கான அதிகாரமும், பலமும் இருக்கவேண்டும்.  அதைப் பறிக்கவேண்டும் என்றும் இவர்களை உதாசீனம் செய்துவிட்டு  நாங்கள் ஆட்சி நடத்தவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த திருத்தங்கள் எல்லாம் செய்யப்படுகிறது.

கேள்வி : தகவல் அறிகின்ற சட்டமூலத்தின் பிரகாரம் இனி வரக்கூடிய தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமை என்ற அடிப்படையில் இரட்டை பிரஜாவுரிமை இருக்கிறவர்களை முதலில் கட்சி சார்ந்து வடிகட்டுவதற்கான ஏதேனும் கட்டமைப்பைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?  

பதில்: எல்லாக் கட்சிகளும் வழமையாக ஒரு சத்தியக்கடதாசியை எடுப்பது சாமான்யமாக நடந்து வருகிற விடயம். அதாவது தேர்தல் நியமனப்பத்திரத்தில் அவர்கள் கைச்சாத்திடுவதற்கு முன்பு,  அவர்களிடம் இந்த விவகாரம் சம்பந்தமான ஒரு சத்தியக்கடதாசி பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதை நம்பித்தான் நாங்கள் அவர்களுக்கு நியமனப்பத்திரத்தில் கைச்சாத்திட அனுமதிக்கிறோம். ஆனால், உண்மையில் ஒரு சிலர் அந்த விடயத்தை மறைக்கலாம். ஏனென்றால், இந்த விவகாரம் அந்த குறிப்பிட்ட நாட்டுக்குதான் தெரியுமே ஒழியே, இந்த நாட்டில் யாருக்கும் தெரியும் என்பதல்ல. அவர்கள் இங்கு வந்து விமான நிலையத்தில் இறங்கின்ற போது,  அவர்கள் இலங்கை கடவுட்சீட்டை பாவித்துவிட்டு,  இங்கிருந்து வேறெங்கும் போகும் போது தங்களுடைய இரண்டாவது கடவுச்சீட்டை பாவித்துவிட்டுப் போகலாம். இப்படி கபடத்தனமாக செய்கிற ஒரு சிலர் இருக்கலாம் என்ற காரணத்தினால், இப்படியான விவகாரங்கள் நடக்கலாம். ஆனால், இது ஏதோயொரு வகையிலே எப்படியாவது உண்மைகள் வெளிவந்தாகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விடயங்கள் சம்பந்தமாக  கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இது எல்லோருக்கும் தெரிந்த விவகாரம்.  முன்னைய ஆளும் குடும்பத்தில் ஒருவர் கலிபோர்னியாவில் இருப்பவர், அவரை இலக்கு வைத்து செய்யப்பட்டதுதான் இந்த 40 பேர், அது 40 பேர் அல்ல எத்தனை பேர் உண்மையாக அவர் சார்பாக பாராளுமன்றத்தில் வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டார்களோ எனக்குத் தெரியாது. ஆனால், குறைந்தது 20 பேர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, அந்த 20 பேருடைய விவகாரமும் ஒரு தனி நபரை இலக்கு வைத்து செய்யப்பட்ட விடயம், இது உண்மையில் இரட்டைக் குடியுமையுள்ளவர்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்ற தோரணையில் இல்லாமல், தனி நபரை இலக்கு வைத்தது என்ற காரணத்திற்காக, நாங்கள் இதற்கு ஆதரவளிக்கமாட்டோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுடைய நியாயங்களைப் பேசி வருகிறார்கள்.

ஒரு புறத்தில் பார்க்கப்போனால் இன்று இந்த நாடு இரட்டைக் குடியுரிமை இருக்கின்ற இலங்கையர்களை வரவேற்பதற்கு தயாராகவிருக்கிறது. நிறைய நல்ல புத்திஜீவிகள் பலரை நாங்கள் இழந்திருக்கிறோம். அந்த புத்திஜீவிகள் தங்களுடைய இரட்டைக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்த நாட்டுக்கு முதலிட வரமாட்டார்கள். இந்த நாட்டுக்கு சேவை செய்வதற்கு அவர்களை நாங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகவிருக்கிறோம். 

அந்த வகையில் பார்க்கும் போது, பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை இரண்டு நாடுகளுக்கு, அதாவது ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக இருப்பது எவ்வளவு நியாயம் என்ற அடிப்படையில் ஒரு தேசாபிமான அடிப்படையில் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. இதுதான் அதிலுள்ள பிரச்சினை. எனவே என்னைப் பொறுத்தமட்டில் நல்ல புத்திஜீவிகள் ஏன் பாராளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் வரக்கூடாது. 

 வெளியில் இருக்கிற நாட்டுப்பற்றுள்ளவர்களைப் பார்த்தால், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற இலங்கையர்கள் எல்லோரும் அங்கு அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்யவில்லை, அவர்கள் எல்லோரும் இலங்கையினுடைய கிரிகெட் அணியைத்தான் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள். அவுஸ்திரேலிய மக்கள் அதற்காக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால், தான் பிறந்த நாட்டுக்கிருக்கின்ற அந்தப் பிணைப்பு,  அந்த உறவு யாருக்கும் இலகுவில் அற்றுப்போவதில்லை. ஏனென்றால், எவ்வளவுதான் நீங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பிறந்த நாட்டில் இருக்கிற பற்று என்பது,  இன்றைக்கு இந்தியா கூட NRI (Non Residence Indians) என்ற அவர்களுக்கு ஒரு பெரிய அந்தஸ்தைக் கொடுக்கிறார்கள். அதற்கான அட்டையைக் கொடுக்கிறார்கள். 


மற்றொரு வகையினர் எல்லாவற்றிற்கும் அமெரிக்காவை எதிர்த்து, எல்லாவற்றிலும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பான போக்கைக் காட்டுவார்கள். ஆனால் அமெரிக்கா குடியுரிமையை வைத்திருப்பார்கள். 
இப்போது என்னவென்றால், நாங்கள் அமெரிக்கா அரசாங்கம் கொண்டுவந்த மிலேனியம் சலேஞ் (MCC) ஒப்பந்தத்தை எதிர்த்து இவர்கள் செய்த ஆர்பாட்டமும், பெரிய மக்கள் பிரசாரமும் ஏதோ நாடு அடகு வைக்கப்படப் போகிறது என்றவாறு பேசினார்கள். பேசிவிட்டு  இவரே போய் அங்கிருந்தவனைக் கொண்டுவந்து, எங்கட இங்க இருக்கிற அந்த லக்தனவி பிளான்ட் அதிலுள்ள 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான ஏற்பாட்டை அவர்தான் இரவோடு இரவாகச் செய்தார் என்று இப்படியொரு போலித்தனமான தேசாபிமானம்.

கேள்வி : இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றவர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுக்கவோ அல்லது பதவியில் இருக்கின்றவர்களை நீக்குவதற்கான அதிகாரம் என்வசமில்லை என்றும், இது சம்பந்தமான விடயங்களுக்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா சொல்லியிருக்கிறார். 
அதேவேளை, இன்னும் ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள், சமூகவலைத்தளங்களில் கூட வந்திருக்கிறது என்னவென்றால், பிரித்தானியாவுக்கு ரிஷி சுனக் வாய்த்தார். ஆகவே, அவர் வாய்த்ததுக்கு இந்த இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தது என்பது கூட ஒரு விதத்தில் அனுகூலம்தானே! ஏன் எங்களுடைய நாட்டில் இருக்கிறவர்களைப் பற்றி புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது பற்றி?

பதில் : ரிஷி சுனக் அவர் இரண்டாவது பரம்பரையினராக அங்கே இருப்பவர். இலங்கையை பொறுத்தளவில் பிரஜாவுரிமை கொடுப்பதில் நீண்டகாலமாக மலையக தமிழ் மக்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது ஒரு பெரிய நீண்ட வரலாறு, அதற்கான போராட்டம் நீண்ட, நெடிய போராட்டம்.  சுதந்திரம் கிடைத்தவுடன் முதலாவது செய்த மிகப் பெரிய அநியாயம்.  இப்படிச் செய்து அதில் முஸ்லிம்களும் நிறையபேர் விரட்டியடிக்கப்பட்டார்கள். அதில் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள். இந்திய, பாகிஸ்தானியர் நிறையப்பேர், எனவே இந்தப் பிரச்சினையை  ரிஷி சுனாக்கோடு இதைப் பார்ப்பது, இங்கிலாந்தைப் பொறுத்தவரை அங்கு பிரஜாவுரிமை பெற்றவர்கள் மத்தியில் எந்த மாறுபாடும், வேறுபாடும் காட்டப்படுவதில்லை. ஆனால், இங்கு இன்னும் நடக்கிறது. அதான் இங்குள்ள பிரச்சினை.  இன்றைக்கு இந்திய வம்சாவளி பிரஜைகள் பிரஜாவுரிமை பெற்ற பிறகும் அவர்களுக்கு வேற்றுமை காட்டப்படுகிறது, அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளில் வேற்றுமை காட்டப்படுகிறது, அவர்களுக்கு கல்வி வாய்ப்புகளில் வேற்றுமை காட்டப்படுகிறது, காணி உரிமை மறுக்கப்படுகிறது. இது முஸ்லிம்களுக்கும் நடக்கிறது. இந்த நாட்டில் பிறந்த பிரஜைகளாக இருந்தாலும், ஆரம்பத்தில் கேட்டார்கள்; உங்கள் பாட்டன், பாட்டனின் பாட்டனுடைய பிறப்புச் சான்றுதழ் சமர்ப்பிக்கவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட, அவமானத்திற்குள்ளாகிய நாட்டவர்களாக இதைச் சரியாக நிரூபிக்கமுடியாமல்.  இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள். இப்படி விடயங்கள் ஏற்பட்டு, அதை அமரர் தொண்டமான், பிரமதாச காலத்தில் முழுமையாகத் தீர்த்துவைத்தார். 

உண்மையில் அந்த விடயம் அமரர் தொண்டமான் குறிப்பாக ஜனாதிபதி பிரமதாசாவுக்கு செல்லவேண்டும்.  அந்த விடயத்திலிருந்த இந்த சின்ன சின்ன இடர்பாடுகளை முழுமையாக நீக்கி, வாக்குரிமையை முழுமையாக கொடுத்ததுதான் ஒரு பெரிய விடயம். அதுமட்டுமல்லாமல், இந்த வாக்குரிமை இல்லாமலிருந்த நபர்களின் ஆசனங்களையும் சிங்கள பெரும்பான்மையினர் அனுபவித்தனர்.  ஏனென்றால், தேர்தல் எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டபோது கிட்டத்தட்ட 10 இலட்சம் தமிழ் மக்களுடைய வாக்குகள் கணக்கிலெடுக்கப்படவில்லை,  அதிலில்லாமல்தான் தொகுதிகளை நிர்ணயம் செய்தார்கள், அதனாலுள்ள நன்மைகள் அத்தனையும் சிங்களப் பெரும்பான்மைக்குதான் போய்ச் சேர்ந்தன.  

கேள்வி :- எத்தனையோ எதிர்பார்ப்புக்களெல்லாம் இருக்கின்ற போது, அவை பல சந்தர்ப்பங்களில் தவிடுபொடியாகி இருக்கின்றன,எதிர் பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகி இருக்கின்றன. ஆகவே, "ஓர் ஆண்டுக்குள் தீர்வு" என்ற ஜனாதிபதி சொல்லும் அந்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமையாகிய தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இது சாத்தியமாகுமா?

பதில்: என்னைப் பொறத்தமட்டில் நிச்சயமாக அது சாத்தியமில்லை; ஏனென்றால், இன்று இருக்கிற பாராளுமன்ற பெரும்பான்மை அதற்கு அனுமதிக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாம் கடுப் போக்காளர்கள், கடும் போக்கு பேரின சிந்தனையில் இருக்கிற ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்துக் கொண்டு இந்த நாட்டின் அதிகாரப் பகிர்வை அதிகரிப்பதற்கோ, 13ஆவது சட்ட திருத்தத்தை இன்னும் வலுப்படுத்துவதற்கோ அல்லது சிறுபான்மையினரின் ஜனநாயக அதிகாரங்களைக் கூட்டுவதற்கோ எந்த முயற்சி எடுத்தாலும் இவர்கள் அதற்குத் தடையாக இருப்பார்கள். எனவே, இந்தப் பாராளுமன்றத்தில் அதிவும் 2/3 பெரும்பான்மை எடுத்தாகவேண்டும் என்று இருக்கிற சூழலில், புதிய மக்கள் ஆணையைக் கோரி, அதனூடாக தேர்தலில் ஒரு விஞ்ஞாபனத்தை சமர்பித்து, இதே ஜனாதிபதி முன்னேற்றகரமாக, அவரோடு நாங்கள் 2004 ஆம் ஆண்டு அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு இப்படி ஒவ்வொரு தேர்தல்களிலும் அவருடைய விஞ்ஞாபனங்களிலேயே நிறைய விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே, அவற்றை தனி ஒருவராக இவர்களுடைய தயவில் தங்கியிருக்கிற இந்த ஜனாதிபதி சாதிப்பார் என்று

எதிர்பார்த்தால், அது எந்தவிதத்திலும் சாத்தியமாகாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

கல்முனை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நூலக தகவல் தேடுகை பொறிமுறை செயலமர்வு..!

கல்முனை செய்தியாளர்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 'அறிவார்ந்த சமூகத்திற்கான வகுப்பு' எனும் தொனிப்பொருளில் கல்முனை பொது நூலகம் ஒழுங்கு செய்திருந்த 'நூலக தகவல் தேடுகை பொறிமுறை' எனும் தலைப்பிலான விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று நேற்று திங்கட்கிழமை (14) மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது.

கல்முணை மநகர முதல்வர், ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.சி.அன்வர் சதாத் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் பீ.பிரசாந்தன் வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இதில் கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை ஆகிய 04 பொது நூலகங்களின் நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 40 ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

Friday, November 4, 2022

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்..!


செயிட் ஆஷிப்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) கீழ் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் (EFC) ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வழங்குவதற்கான வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களது வழிகாட்டலில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்படி சம்மேளனத்தின் விசேட பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வள நிலைய முகாமையாளர் தேசபந்து மெனிக் குணரட்ன அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.   

இதில் மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.அப்துர் ரஹீம், உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌசாத் ஆகியோரும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அவர்களது கருத்துக்கள் கேட்டறியப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விபரிக்கப்பட்டன.

அத்துடன் கல்முனை மாநகர சபையுடன் தொடர்புடைய சேவைகளை மாற்றுத்திறனாளிகள் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன. குறிப்பாக வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இலகு வழியில் வாய்ப்பளித்தல், நூலக சேவை, வீதி புனரமைப்பு, தெரு விளக்கு பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையளித்தல் என பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது வழிகாட்டல் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

எதிர்காலங்களில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.










Sunday, October 30, 2022

அரச அதிபர் பங்குபற்றிய நிந்தவூர் கூட்டத்தில் கல்முனை விவகாரம் ஆராயப்பட்டதா? தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்


சாய்ந்தமருது நிருபர்

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டமானது கல்முனை விவகாரம் சம்மந்தப்பட்டதல்ல. அது பெரிய நீலாவணையிலுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவு தொடர்பிலான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலே என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி விடயம் பற்றி முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை உப செயலக பிணக்கு தொடர்பில் நாங்கள் மௌனம் காத்து வருவதாக சிலர் குற்றச்சாட்டி வருகின்றனர். இது 30 வருட காலமாக புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையாகும். இதனை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரே இரவில் தீர்த்து விட முடியாது. முஸ்லிம், தமிழ் சமூகங்கள் சம்மந்தப்பட்ட இந்த நீண்ட கால பிணக்கு தொடர்பில் இரு சகோதர சமூகத்தினரும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடாத்தி, இணக்கமான தீர்வொன்றைக்காண வேண்டியிருக்கிறது.

நாங்களும் இதற்கான நகர்வுகளை மிகவும் சாணக்கியமாக உயர் மட்டங்களில் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எமது தரப்பு நியாயங்களை உரிய இடங்களில் முன்வைத்து வருகின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் ஊடக செய்திகளுக்காக பிரஸ்தாபிப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லி விடவும் முடியாது. இது விடயமாக ஊடகங்களில் எமது தரப்பு செய்திகளை காணக்கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகி விடாது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தனது தலையாய கடமையாக இதனைச் சுமந்து கொண்டு, மிகுந்த அர்ப்பணிப்புடன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

சகோதர தமிழ் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹரீஸ் என்றொரு எம்.பி. இல்லாதிருந்தால் நாங்கள் நினைத்தது போன்று எப்போதோ சாதித்திருப்போம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆக, எவரும் நினைத்தது போன்று செய்து விடாமல், இரு தரப்பினரதும் இணக்கத்துடனேயே இப்பிணக்கு தீர்க்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த விடயத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் மிகப் பொறுப்புணர்வுடன் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பான நகர்வுகளின்போது அவர் எமது எம்.பி. ஹரீஸ் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து செயலாற்றி வருகின்றார்.  

அதேவேளை, கல்முனை பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்காக நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றதாக ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. இது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று அப்பட்டமான பொய்யாகும். உண்மையில் அங்கு நடந்தது என்ன ?

எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பிலான பிரச்சினை இருந்து வருகின்றது. அதில் ஒன்று- பெரிய நீலாவணை-02 தமிழ், முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு சம்மந்தப்பட்ட விடயமாகும்.

கல்முனையிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பிலான 2001ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெரிய நீலாவணை பகுதியில் பெரிய நீலாவணை-01, பெரிய நீலாவணை-01A, பெரிய நீலாவணை-01B, பெரிய நீலாவணை-02 ஆகிய நான்கு பிரிவுகளும் கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றன.

அதேபோல் இவ்வர்த்தமானியின் பிரகாரம் பெரிய நீலாவணை-01 முஸ்லிம் பிரிவு, பெரிய நீலாவணை-02 முஸ்லிம் பிரிவு ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.

இவற்றை விட அந்த வர்த்தமானியில் பெரிய நீலாவணை- முஸ்லிம் பிரிவு 71/A ஆம் இலக்க கிராம சேவகர் என்றொரு பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கிராம சேவகர் பிரிவைக் காணவில்லை. அது எஙகே? இதுகால வரையும் அந்த கிராம சேவகர் பிரிவு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நாங்கள் ஆராய்ந்தபோது பெரிய நீலாவணை- 02 தமிழ் பிரிவினுள் மேற்படி 71/A எனும் கிராம சேவகர் பிரிவும் உள்வாங்கப்பட்டு, அது பெரிய நீலாவணை- 02 தமிழ், முஸ்லிம் பிரிவு என மாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

இக்கிராம சேவகர் பிரிவில் 841 முஸ்லிம் குடும்பங்களும் 241 தமிழ் குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை இணைக்கப்பட்டே பெரிய நீலாவணை- 02 தமிழ், முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்டு, மிகவும் சூட்சுமமாக கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதனால் குறித்த முஸ்லிம் குடும்பங்கள் தமது கிராம சேவை நிர்வாக விடயங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் குடுமபங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான எனது முயற்சியின் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, தெளிவுபடுத்தியிருந்தேன். எனது வேண்டுகோளை நேரடியாக விசாரித்து, பரிசீலிப்பதற்காகவே நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அவர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.

அதில் அரசாங்க அதிபருடன் மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளரும் நானும் பங்கேற்றிருந்தோம். அங்கு குறித்த கிராம சேவகர் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்யப்பட்டது. இதன்போது என்னால் முன்வைக்கப்பட்ட நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு கிராம சேவகர் பிரிவை உருவாக்குவதற்கான சாதக நிலைமை எட்டப்பட்டிருக்கிறது. 

இது தவிர இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் காணியொன்று பற்றிய முறைப்பாடு தொடர்பிலும் அரசாங்க அதிபர் கள விஜயம் மேற்கொண்டு, நிலைமையை ஆராய்ந்து, உரிய தீர்வினை வழங்கியிருந்தார்.

இவற்றுடன் கல்முனை உப செயலக சர்ச்சையை தொடர்புபடுத்தி, தகவல்களை திரிபுபடுத்தி முகநூல்களில் சிலர் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். தயவுசெய்து இவ்வாறு வதந்திகளைப் பரப்பி, மக்களை குழப்ப வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

மேற்படி நிந்தவூர் கூட்டத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பிலோ எல்லைகள் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாவட்ட அரசாங்க அதிபரின் நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் இருக்கவில்லை. ஹரீஸ் எம்.பி. பங்குபற்றாத எந்தவொரு கூட்டத்திலும் கல்முனை விவகாரம் உத்தியோகபூர்வமாக பேசப்படவோ தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவோ மாட்டாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்முனை விவகாரத்தை சிறப்பாக கையாள்வதற்கான தகுதியும் அறிவும் ஆற்றலும் அனுபவமும் எம்மிடம் இருக்கிறது. இது விடயத்தில் நாங்கள் ஒருபோதும் சோடை போக மாட்டோம் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எம்.நிஸார், ஏ.எம்.சித்தி நஸ்ரின், முன்னாள் உறுப்பினர் ஷரீப் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை 12ஆம் வட்டார மு.கா. வேட்பாளர் எம்.பளீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை விவகாரத்தில் விட்டுப்புக்கு முன்வராத தரப்பினருடன் இனப்பிரச்சினை தீர்வில் எவ்வாறு ஒன்றித்து பயணிக்க முடியும்? -கேள்வி எழுப்புகிறார் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.

சாய்ந்தமருது நிருபர்

கல்முனை விவகாரத்தில் சற்றேனும் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வராதிருக்கின்றபோது இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அவர்களுடன் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியும் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் விடயங்கள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் மத்திய அரசுடன் முழுமையாக இருந்து நிர்வாகம் செய்ய முடியாது என்பதற்காகவே 1948ஆம் ஆண்டு தொடக்கம் சமஷ்டி தீர்வின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒரு தனியான நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் சமூகம் கோரி வருகின்றது. அதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதில் நியாயமும் இருந்தது.

அதனால்தான் எமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா போன்றோர் தமிழ் தலைமைகளுடன் இணைந்து அப்போராட்டங்களில் முக்கிய பங்காற்றியிருந்தனர். எங்களுடைய இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட தமிழ் சமூகத்தின் அதிகாரப் பகிர்வுக்காக பாடுபடுகின்ற ஒருவராகவே இருக்கின்றார்.

இவ்வாறு தனி மாகாண நிர்வாக அதிகாரத்தை கோருகின்ற தமிழ் தரப்பினர், அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 67 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இங்கு மொழி ரீதியாக ஒரு கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றபோது, அதற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு, அவ்வாறான ஒரு மாவட்டம் உருவாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை விவகாரத்திலும் கூட தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் இணைந்து நிர்வாகம் செய்ய முடியாது எனக்கூறுகின்ற தமிழ் தரப்பினர், ஒட்டு மொத்தமாக வடக்கு, கிழக்கு என்று வருகின்றபோது பெரும்பான்மையின ஆட்சியையும் சிங்கள மொழியையும் நிராகரித்து, முஸ்லிம்களையும் இணைத்து தமிழ் பேசும் தனி மாநிலம் வேண்டும் என கோருகின்றனர்.

இத்தகைய இரட்டை நிலைப்பாட்டைத்தான் தமிழ் கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனக் கோருகின்றேன். தலைவர் சம்மந்தன் ஐயா, சுமந்திரன் எம்.பி. மற்றும் தமிழ் எம்.பி.க்களிடம் இதனை மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.

இவ்விடயம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை சிந்திக்க வைக்கின்றது. இதுவொரு நியாயமற்ற போக்கு, மனச்சாட்சிக்கு விரோதமானது. தமிழருக்கான அதிகாரப்பகிர்வுத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருப்பதானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலை நீடிக்குமாயின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமிழ் சமூகத்துடன் முஸ்லிம் சமூகம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம். குறிப்பாக கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடனான தீர்வுக்கு முன்வராமல் தமிழ் தரப்பு மறுக்கின்றபோது நிச்சயமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் வேறு திசைக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற செய்தியை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதேவேளை கல்முனை செயலக விடயத்தில் நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனம் காத்து வருவதாக எமது முஸ்லிம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், நான் மற்றும் மேயர் உட்பட எல்லோரும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்லா மட்டங்களிலும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அது தொடர்பிலான எல்லா விடயங்களையும் ஊடகங்களில் பறைசாற்றிக் கொண்டிருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் நாங்கள் பாரிய அழுத்தங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்த விடயத்தில் மிகவும் கரிசனையும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். ஏனைய முஸ்லிம் எம்.பி.க்களுடனும் பேசியிருக்கின்றோம். அவர்களும் உரிய இடங்களில் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்- என்று ஹரீஸ் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எம். நிஸார், ஏ.எம்.சித்தி நஸ்ரின், முன்னாள் உறுப்பினர் ஷரீப் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை 12ஆம் வட்டார மு.கா. வேட்பாளர் எம்.பளீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

Saturday, October 22, 2022

ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்..!

-பாறூக் ஷிஹான்-

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 'ஸஹிரியன் பழைய நண்பர்கள் அமைப்பு' (ZOFA) ஏற்பாட்டில் இடம்பெறும் மெற்றோ பொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் (ZPL) சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியது.

இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 29 அணிகள் பங்குகொள்ளும் 07 ஓவர்கள் கொண்ட குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.மலிக், விசேட அதிதியாக முன்னாள் அதிபர் முஹம்மத் உட்பட ஏற்பாட்டுக் குழுவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை 24ம் திகதி  நிறைவடையவுள்ளது.

மெற்ரோபொலிடன் ஸஹ்ரியன் பிரிமியர் லீக் சீசன்-02 போட்டியில் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப் பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பு..!

-பாறுக் ஷிஹான்-

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில்   சஞ்சரிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பெரிய நீலாவணை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் 

இம்மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. வலசை வந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. 23க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இதில் நாரை இனங்கள், அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Friday, October 21, 2022

கல்முனை சந்தான்கேணி மைதானத்தை செப்பனிடும் பணி மாநகர சபையினால் முன்னெடுப்பு..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை சந்தான்கேணி பொது மைதானத்தை செப்பனிடும் வேலைத் திட்டத்தை கல்முனை மாநகர சபை இன்று ஆரம்பித்துள்ளது.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் அவர்கள் விடுத்துள்ள அவசர பணிப்புரைக்கமைவாக மைதானத்தை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ், இம்மைதானத்தின் காடுமண்டியிருந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கொண்டு, அகற்றப்பட்டு, செப்பனிடப்பட்டு வருகின்றன.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான பெஸ்டர் றியாஸ் அவர்கள், முதல்வரை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை முன்வைத்து, மைதானத்தை அவசரமாக செப்பனிப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

தமது வேண்டுகோளையேற்று துரித நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மாநகர முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் சமீம் அப்துல் ஜப்பார் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.