Saturday, February 5, 2022

அரை நூற்றாண்டு காலம் கல்வி, ஆன்மிகம், சமூக மறுமலர்ச்சிக்காக தொண்டாற்றிய எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவிக்கு மகுடம் சூட்டும் பெரு விழா..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

அரை நூற்றாண்டு காலமாக கல்விப் பணியாற்றி வருகின்ற அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்களை பாராட்டி கௌரவிக்கும் பெரு விழாவும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) சாய்ந்தமருது லீ மெரிடியன் மணடபத்தின் மேல் தளத்தில் இடம்பெறவுள்ளன.

அவரது பழைய மாணவர் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள், தனது ஐம்பது வருட கால கல்விப் பணியின்போது கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மற்றும் பொலநறுவை உள்ளிட்ட சில பாடசாலைகளில் இஸ்லாம் மற்றும் அரபு பாட ஆசிரியராக, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக, தொலைக்கல்வி போதனாசிரியராக, அரபுக் கல்லூரிகள் பலவற்றின் அதிபராக சேவையாற்றி, பன்னூறு உலமாக்கள் மற்றும் கல்விமான்கள் பட்டம் பெற பெரும் தொண்டாற்றியிருக்கிறார்.

இவற்றை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட 'மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) - கல்வி, சமூகப் பணிகளும் பயணங்களும்' எனும் சுயசரிதை நூல் ஒன்றும் இதன்போது வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள், பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து 1963ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் இணைந்து, அல்ஆலிம் பாட நெறியை சிறப்பாக பூர்த்தி செய்து, 1969 மௌலவி பட்டத்தை பெற்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு ஷர்கிய்யா அறபுக் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்று தனது சேவையை தொடங்கியிருக்கிறார். பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் வாழைச்சேனை தீனிய்யா அறபுக் கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்று சுமார் ஒரு வருட காலம் அங்கு கடமையாற்றியுள்ளார்.

17.01.1972 ஆம் திகதி பொலநறுவ திருக்கோணமடு அரசினர் முஸ்லிம் பாடசாலையில் மௌலவி ஆசிரியராக நியமனம் பெற்று, அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டரை வருடங்கள் பொலநறுவ மாணிக்கம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றியதுடன் 01.01.1975 ஆம் திகதி கல்முனை சாஹிறாக் கல்லூரிக்கு இடமாற்றலாகி அங்கு சில வருடங்கள் சேவையாற்றியுள்ளார். இதன்போது 1976/1977 இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை பூர்த்தி செய்துள்ளார்.

இவர் 1977 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரிக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1980 ஆம் ஆண்டு தேசிய ஹிஜ்றா கவுன்ஸில் நடத்திய ஹதீஸ் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களிடமிருந்து ஹிஜ்றாப் பதக்கத்தை பெற்றிருந்தார்.

அதேவேளை 1981ஆம் ஆண்டு மதீனாப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அங்கு கல்வியைத் தொடர்ந்தார். 1986ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழக அறபு மொழிப் பீடத்தில் பட்டம் பெற்று வெளியேறினார்.

நாடு திரும்பிய பின்னர் 1987 ஆம் ஆண்டு தான் கற்ற கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று சேவையாற்றினார். அதேவேளை 1982ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக பீ.ஏ. (சிறப்பு) பட்டத்திற்கான பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.

உயர் கல்விக்காக மதீனாப் பல்கலைக்கழகத்துக்கு அரசாங்க லீவு பெற்றுச் சென்ற ஆதம்பாவா மௌலவி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மீண்டும் கல்முனை சாஹிறாக் கல்லூரியில் ஆசிரியர் பணியை தொடர்ந்தார்.

1992ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்  நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி அதிபராக நியமனம் பெற்று சேவையாற்றியுள்ளார்.

1993ஆம் ஆண்டு இவரது மதீனாவின் மாண்புகள் நூலுக்கு வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்கப் பெற்றது. 1993 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய வரலாறு தொடர் பேச்சு இவரால் நிகழ்த்தப்பட்டு வந்தது.

1998ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், இதுகால வரை அப்பொறுப்பை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.

1999 ஆம் ஆண்டு கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று சுமார் 12 வருடங்கள் அங்கு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

2012ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் தைபா அறபுக் கல்லூரியை ஸ்தாபித்து, ஒரு தசாப்தமாக அக்கல்லூரிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி பெண்களின் ஆன்மீகக் கல்விக்கும் உயர் கல்விக்கும் ஒளி விளக்காக அதனை பரிணமிக்கச் செய்திருக்கிறார்.

2012ஆம் ஆண்டு அரச விருது விழாவின்போது இவரது எழுத்து, இலக்கிய ஆற்றல் மற்றும் சேவைகளுக்காக கலாபூசண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்கள் தனது கல்வி, ஆன்மீகப் பணிகளுக்கு மேலதிகமாக சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் இன ஒற்றுமை, தேசிய நல்லிணக்க விடயங்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

No comments:

Post a Comment