Saturday, February 5, 2022

என் மனத்திரையில் எஸ்.எச்.ஆதம்பாவா ஓர் ஆதர்ஷ புருஷர்..!

அரை நூற்றாண்டு காலமாக கல்விப் பணியாற்றி வருகின்ற அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல்வருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும் அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவும் நாளை 2022.02.06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் பிறந்து, நாடு முழுவதும் கல்வி, சமூக, ஆன்மீகப் பணியாற்றி வருகின்ற மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை, ஓர் ஆதர்ஷ புருஷர் என்று வர்ணித்தால் அது மிகையாகாது.

1980களில் நான் பேருவலை ஜாமியா நழீமியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஜீ.ஏ.கியூ. பட்டப்படிப்புக்காக அறபு மொழி இலக்கியத்தை ஒரு பாடமாக கற்க வேண்டியிருந்தது. அதற்குரிய உசாத்துணை நூல்களை அங்குள்ள நூலகத்தில் தேடியபோது 'இஸ்லாமும் கவிதையும்' என்ற சிறிய நூல் ஒன்று கிடைத்தது. அது மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) எம்.ஏ. எழுதிய நூலாக முன் அட்டையில் தென்பட்டபோது மகிழ்ச்சியடைந்து, நூலகத்தில் இருந்தவாறே முழு நேரம் அதனை வாசித்து, முடித்து பரீட்சைக்குரிய குறிப்புகளையும் எழுதிக்கொண்டேன்.

அன்றில் இருந்து அவர் பற்றி அறிந்து, அறிமுகமான அன்னாரை ஒரு நல்லாசானாக, பன்னூலாசிரியராக, ஜம்மியத்துல் உலமாவின் தலைவராக, பல்கலை விரிவுரையாளராக, அறபுக் கல்லூரிகளின் முதல்வராக, சிவில் சமூக மற்றும் இன, மத நல்லிணக்க செயற்பாட்டாளராக, சமூக அரசியல் ஆலோசகராக என்று பல வடிவங்களில் காண்கிறேன்.

எனது அன்புத் தந்தை மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களுக்கும் ஆதம்பாவா மௌலவி அவர்களுக்கும் கல்விச் சேவை தொடர்பாக நெருங்கிய உறவாடல்கள் இருந்து வந்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட 'பழீல் மௌலானாவின் வாழ்வும் பணியும்' என்ற நூலில் 'பொலநறுவை கண்ட மௌலானா' என்ற தலைப்பில் நினைவுக் கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளமை எனது மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது.

ஆதம்பாவா மௌலவியின் தலைமைத்துவத்தில் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் செயலாளராக  சுமார் 04 வருடங்கள் எனக்கு பணியாற்றக் கிடைத்தது. அவரது அனுபவம், ஆற்றல் ஆளுமை, பிரச்சினை தீர்க்கும் திறன், வழிகாட்டல், ஆலோசனை என்பன மிகவும் மெச்சத்தக்கவையாகும். அவரது இவ்வாறான சிறப்பியல்புகள் எங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடன் இணைந்து அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் முன்னின்று மேற்கொண்ட மஸ்ஜித் பணியாளர்களுக்கான கருத்தரங்குகள், ஜும்ஆ குத்பா மேம்பாட்டு செயற்றிட்டங்கள், அறபுக் கல்லூரி பாடவிதான மேம்பாட்டு செயற்றிட்டங்கள் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவர் உந்து சக்தியாக திகழ்ந்திருக்கிறார்.

அதேவேளை, சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கான இலங்கைப் பேரவையின் முஸ்லிம் சமுகப் பிரதிநிதியாக அவர் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, சர்வதேச சமூகத்தின் ஓர் அடையாளமாகத் திகழ்கின்றார். இவ்வாறான அனுபங்களை நூலுருவாக்கம் செய்ய வேண்டும் என்பது எமது அவாவாகும்.

50 வருடங்களுக்கு மேலாக கல்விப் பணியாற்றி, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான உலமாக்களையும் கல்வியியலாளர்களையும் உருவாக்கியிருக்கின்ற மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) அவர்கள் இன்று பொன் விழாப் பூண்டு சமூகத்தின் ஒளி விளக்காகத் திகழ்கின்றார். அவரது கல்வி, சமூக, ஆன்மீகப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா
(நழீமி) எம்.ஏ.
சிரேஷ்ட விரிவுரையாளர்
முன்னாள் செயலாளர்,
அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா
 

No comments:

Post a Comment