Saturday, February 5, 2022

அபாயா விவகாரம்; ஹக்கீம் பெயரிலான சோடிக்கப்பட்ட செய்தி புல்லுருவிகளின் அரசியல் சித்து விளையாட்டே; கல்முனை முதல்வர் றகீப் கண்டனம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியதாக முகநூல்களில் உலாவும் போலிச் செய்தியானது வங்குரோத்து அரசியல் நோக்கம் கொண்ட புல்லுருவிகள் சிலரின் சித்து விளையாட்டு என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் எழுந்துள்ள அபாயா சர்ச்சையானது முஸ்லிம்களின் உரிமையுடன் சம்மந்தப்பட்டதொரு விடயமாகும். ஆனால் இது விடயத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூறியதாக முகநூல்களில் பரப்பப்பட்டுள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

இவ்வாறானதொரு கருத்தை அவர் வெளியிடாத நிலையில், எமது கட்சிக்கும் தலைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம்கள் மத்தியில் தலைமைக்கு இருக்கின்ற நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் பின்னணி கொண்ட சிலரே முகநூல்களில் இவ்வாறு திட்டமிட்டு போலிச் செய்திகளை வடிவமைத்து, பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

எரியும் வீட்டில் பிடுங்குவது இலாபம் என்பது போல், முஸ்லிம்களின் உரிமை சம்மந்தப்பட்ட  விடயமொன்றை தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பயன்படுத்த எத்தணிக்கும் ஈனப்பிறவிகளின் இந்த இழி செயலை நான் வன்மையாக கண்டிப்பதுடன் மக்கள் இவ்வாறான போலிச் செய்திகளை கவனத்தில் எடுக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எப்போதும் மிகக் கரிசனையோடு செயற்பட்டு வருகின்ற ஓர் அரசியல் தலைமை என்பதற்கு அவரது கடந்த கால, நிகழ்கால செயற்பாடுகள் சான்று பகர்கின்றன. அவ்வாறே இனிவரும் காலங்களிலும் இவ்வாறான விடயங்களில் அவர் உறுதிப்பாட்டுடன் செயலாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களை அடக்கி, ஒடுக்கும் செயற்பாடுகளை பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற சூழ்நிலையில், இவ்விரு இனங்களும் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையை வெளிப்படுத்துவதன் மூலமே தமது மத சுதந்திரத்தையும் ஏனைய உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றபோது, இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாக்கும்.

சிறுபான்மை சமூகத்திற்குள்ளேயே ஒரு மதத்தின் அடையாளத்தை சகித்துக்கொள்ள இன்னொரு மதத்தினர் தயாரில்லை என்றால் எவ்வாறு வடக்கு, கிழக்கில் இரு இனங்களும் ஒற்றுமைப்பட்டு, தீர்வுகளை அடைந்து கொள்ள முடியும் என்கிற கேள்வியை எங்களுக்குள் தோற்றுவிக்கிறது.

எனவே, பேரின சமூகத்திடம் இருந்து மத, கலாசார, சமூக ரீதியான உரிமைகளை எதிர்பார்க்கின்ற ஓர் இனம் தனக்கு அடுத்துள்ள மற்ற சமூகத்தினரின் அதே உரிமைகளை மதித்து, விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட ஒருபோதும் பின்னிற்கக் கூடாது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட தமிழினம் தயாராகாதவரை, புரையோடிப்போயுள்ள வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்லிவைக்க விரும்புகின்றேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment