Tuesday, June 27, 2023

மட்டு.மாவட்ட சர்வ மத செயற்குழுக் கூட்டமும் சமாதான பேரவையின் திட்ட முகாமையாளரை கௌரவிப்பு நிகழ்வும்..!

-எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுக்கூட்டமும் சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழு இணைப்பாளர் திரு.மனோகரன் தலைமையில் நேற்று 26.06.2023ம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு சத்ருகொண்டானில் அமைந்துள்ள சர்வோதய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

சர்வமதப் பிரார்த்தனையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன அவர்கள் தேசிய சமாதான பேரவையில் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்லும் அவரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன அவர்கள் 18 வருடங்களாக தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நூற்றுக்கு மேற்பட்ட சிவில் அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 வருடங்களாக சமாதானப் பேரவையின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். அன்னாரின் சேவை நலன்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கௌரவப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது சமய தலைவர்களால், அரச அலுவலர்கள் மற்றும் மாவட்ட சர்வ மத உறுப்பினர்களால் பொண்ணாடைகள் போற்றி நினைவு சின்னங்கள், அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து சமன் செனவிரத்ன அவர்களினால் சிறப்பு உரையும் நன்றி நவிலழுடன் கௌரவிப்பு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த சர்வ மத மதகுருக்கள், சர்வ மத அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அரச உத்தியோகத்தர்கள், சமூகமட்டக்குழுக்கள், பெண்கள் குழுக்கள், இளைஞர்கள் ஆகியவர்களுக்கிடையிலான கருத்துக்களை உள்வாங்கி எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் செயல் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்கள் சமாதான பேரவையின் இணைப்பாளர் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய அகில இலங்கை சமாதான பேரவை நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நடைமுறைப்படுத்தி வரும் இனங்களுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பரம், புரிந்துணர்வு என்பவற்றை கட்டியெழுப்ப நாட்டில் 17 மாவட்டங்களில் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை.!



-ஏயெஸ் மெளலானா-

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையில் செயற்படும் ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின்  7ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த 44 மாணவரகள் மேற்படி சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றியிருந்தனர். இவர்களுள் நால்வர் தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவர்களாவர்.

இவர்களில் ஜௌபர் பாத்திமா ரோஷினி, முஹம்மட் அனீஸ் பாத்திமா ஷிபாரா, காலிதீன் பாத்திமா லனா ஆகிய மூவரும் முதலிடம் பெற்று நாட்டிற்கும் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும் தமது கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று தாறுல் இல்மு கல்வி நிலைய நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இம்மாணவர்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரி கணித பாட ஆசிரியை ஏ.ஆர்.றிஸானா பயிற்றுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- Championar As-Siraj Vidyalaya

Saa













Saturday, June 24, 2023

ஷரீஆவுக்காக சிறை சென்றவர் ஆதம்லெப்பை ஹஸ்ரத்; மருதமுனை ஜம்இயத்துல் உலமா அனுதாபம்.!

-ஏயெஸ் மெளலானா-

தஃவா பணிக்காக பல தியாகங்களை மேற்கொண்டு சிறைவாசம் கூட அனுபவித்த காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும் மத்ரஸத்து ஷபிலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் பி.எம்.ஹனிபா (ஆதம்லெப்பை) ஹஸ்ரத் அவர்களின் மரணச் செய்தி கவலையளிக்கின்றது என்று மருதமுனை ஜம்இயத்துல் உலமா தெரிவித்துள்ளது.

ஜம்இய்யாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மெளலானா, செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.முஜீப் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

மத்ரஸத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் தன்னுடைய ஆயுட் காலத்தில் இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை இலங்கையின் கல்விச் சேவை ஊடாக வழங்கியுள்ளார்கள். 

காத்தான்குடியில் ஷரீஆவை  நிலைநாட்ட சிறைவாசம் சென்றது மட்டுமல்லாமல் பல்வேறு தியாகங்களையும் செய்ததோடு அல்லாஹ்வின் பாதையில் தஃவா பணிக்காக பல தியாகங்களோடு பணியாற்றிய பின், ஜாமியு ஷபிலுர் ரஷாத் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து அதன் வழர்ச்சிக்காக அயராது உழைத்தவருமாவார்.

இஸ்லாமிய சமூகம் மார்க்க நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும், மார்க்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், தன்னால் முடியுமான பங்களிப்புக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  ஆற்றிய ஹஸ்ரத் அவர்கள், இன நல்லிணக்கத்திற்காகவும் தன்னை அதிகம் அர்ப்பணித்த ஒருவராகவும் விளங்குகின்றார்கள்.

அன்னாரின் மரணம் காத்தான்குடிக்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் அரிப்பணிப்புகளையும் சேவைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களின் கபுறுடைய வாழ்வை ஒளிமயமாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

மேலும், அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும், ஆறுதலையும் வழங்குவானாக.

இவ்வாறு மருதமுனை ஜம்இயத்துல் உலமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Friday, June 23, 2023

சன்மார்க்க வளர்ச்சிக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பெரும்பங்காற்றிய ஆதம்லெப்பை ஹஸ்ரத் மறைவு பேரிழப்பாகும்; அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா அனுதாபம்

-ஏயெஸ் மெளலானா-

சன்மார்க்க வளர்ச்சிக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் தியாக மனப்பாங்குடன் பெரும்பங்காற்றிய காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும் மத்ரஸத்து ஷபிலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் அதிபருமான பி.எம்.ஹனிபா (ஆதம்லெப்பை) ஹஸ்ரத் அவர்களின் மறைவு, சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இன்று வபாத்தான ஆதம்லெப்பை ஹஸ்ரத் அவர்களின் மறைவு குறித்து மாவட்ட ஜம்இயத்துல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கிழக்கு மாகாணத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான ஆதம்லெப்பை ஹஸ்ரத் அவர்கள் எப்போதும் தஃவாப் பணிக்கே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளார்கள்.

அன்னாருடைய பயான்கள், மக்களின் உள்ளங்களை ஆழ ஊடுருவும் வகையில் உயிரோட்டமிக்கவையாக அமையப் பெற்றிருந்தன.

காத்தான்குடியிலுள்ள பலாஹ் அறபுக் கல்லூரி மற்றும் மர்கஸ் ஸபீலுர்ரஷாத் அறபுக் கல்லூரி என்பவற்றின் வளர்ச்சியிலும் அங்கிருந்து நூற்றுக்கணக்கான உலமாக்களை பிரசவிப்பதிலும் அன்னார் முன்னின்று உழைத்துள்ளார்.

மார்க்கக் கல்விக்காகவும் தஃவாப் பணிக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த சன்மார்க்க அறிஞராகத் திகழ்ந்த அன்னார் சமூக ஒற்றுமை, இன ஐக்கியம் மற்றும் சகவாழ்வைப் பலப்படுத்துகின்ற விடயங்களிலும் கரிசனையுடன் பங்காற்றி வந்திருக்கிறார்.

அன்னாரது இழப்பு சமூகத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லோரும் இவ்வுலகுக்கு விடை கொடுத்து, நிலையான மறுமை வாழ்வுக்கு சென்றாக வேண்டும் என்கிற இறைநியதியின் பிரகாரம் அன்னார் வபாத்தாகியிருப்பதை ஏற்றுக்கொண்டு அவர்களது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட ஜம்இயத்துல் உலமா வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, June 21, 2023

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

தனியார் துறையினரின் பங்களிப்புடன் கல்முனை மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (21) பிற்பகல் கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையிலான பிரதான வீதியை அழகுபடுத்தி, பசுமைமிக்க நகரங்களாக மாற்றியமைப்பதற்கான உத்தேச திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடபட்டது.

கல்முனை வாசல் உட்பட மாநகரில் உள்ள முக்கிய சந்திகளை அபிவிருத்தி செய்து, பேணிப் பாதுகாப்பது தொடர்பிலும் பிரதான வீதியில் இருந்து தொடங்கும் உள்ளூர் வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளை அமைப்பது, பூக்கண்டுகள் மற்றும் நிழல்தரும் மரங்களை நடுதல், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட செயற்றிட்டங்கள் குறித்து மாநகர ஆணையாளரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது மாநகர சபையின் உத்தேச திட்டங்களுக்கு வரவேற்புத் தெரிவித்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மிக ஆர்வத்துடன் தமது யோசனைகளை முன்வைத்ததுடன் இவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
















சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்ற சாய்ந்தமருது மாணவர்கள் 04 பேர் இந்தியா பயணம்.!

-ஏயெஸ் மெளலானா-

சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையில் இருந்து 44 மாணவரகள் இன்று புதன்கிழமை (21) இந்தியாவுக்குப் பயணமானார்கள்.

இந்தியவின் சென்னையில் எதிர்வரும் 25.06.2023 ஆம் திகதி இந்த சர்வதேச அபாகஸ் போட்டி இடம்பெறவுள்ளது.

ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 07 ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த மாணவர்களில் 44 பேரே இவ்வாறு இலங்கையில் இருந்து சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இவர்கள் இன்று வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுள் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் 4 பேர் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.






Thursday, June 15, 2023

கல்முனை மாநகர சபையில் கோலாகலமாக இடம்பெற்ற விருது விழா..!


(சாய்ந்தமருது செய்தியாளர்)

கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது விழா இன்று புதன்கிழமை (14) மாலை, கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது மாநகர சபையின் 13 துறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிசிறந்த ஊழியர்கள் 13 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ மேற்பார்வையாளரான எம்.எம். றிஸ்வான், கல்முனை மாநகர சபையின் கடந்த ஆண்டுக்கான அதிசிறந்த ஊழியராக தெரிவு செய்யப்பட்டு, விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையில் நிர்வாக உத்தியோகத்தர்களாக கடமையாற்றி, ஓய்வு பெற்றுள்ள எம்.ஏ.ரஹீம், ஆனந்தகெளரி கந்தசாமி உள்ளிட்ட 06 உத்தியோகத்தர்களினதும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள 08 உத்தியோகத்தர்களினதும் சேவைகளைப் பாராட்டி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும், மாநகர சபையின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற திண்மக்கழிவகற்றல் சேவையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற 05 மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 98 ஊழியர்கள் இதன்போது பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்முனை மாநகர சபையை பொறுபேற்று குறுகிய காலத்தினுள் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மாநகர சபையை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைத்தமைக்காக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள், 'ஆளுமைக்கான அடையாளம்' என்று மகுடம் சூட்டப்பட்டு, ஊழியர் சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட பாடல்கள், நடனங்கள், கவிதைகள் உள்ளிட்ட கலை, கலாசார நிகழ்ச்சிகள் விழாவை களைகட்டச் செய்திருந்தன.

தேசிய கீதத்துடன் ஆரம்பமான இவ்விருது விழாவில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் வரவேற்புரையையும் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டப்பொல ஆகியோர் வாழ்த்துரைகளையும் விழாக் குழுச் செயலாளரான வருமான பரிசோதார் சமீம் அப்துல் ஜப்பார் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.

விழா நிகழ்வுகளை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் ஜாபிர் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ், ஆயுர்வேத வைத்திய அதிகாரி நந்தினி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிதி உதவியாளர் சசிகலா, உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நெளசாட் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வருமான பரிசோதகர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனைத்துப் பிரிவுகளினதும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான இவ்விருது விழா இராப்போசனத்துடன் இனிதே நிறைவடைந்தது.

கல்முனை மாநகர சபையின் வரலாற்றில் இதுவே பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் முதன்முறையாக இடம்பெற்ற விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.

KMC Awards Ceremony - 2022

🛑The Best CMSO - N.P.Warman

🛑The Best T.O. - M.Ameer

🛑The Best R.I. - A.J.Sameem

🛑The Best MSO. - MHM.Hizbullah

🛑The Best D.O - Nasrin Haja

🛑The Best Librarian - Hareesa Sameem

🛑The Best Office Asst. M.Najeem

🛑The Best Supervisor - MM.Rizwan

🛑The Best Fireman - S Muralitharan

🛑The Best Driver - P.Yoharaja

🛑The Best Watcher - S.Rajan

🛑The Best Works Caretaker - R.Inparaja

🛑The Best Health Caretaker - M.Linganatha

🛑The Best Employee of the year -M.M.Rizwan