Monday, June 5, 2023

கல்முனை மாநகர சபையின் டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் ஆரம்பம்.!


-அம்பாறை செய்தியாளர்-

நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின்  அறிவுறுத்தலுக்கமைவாக கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டு, கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று திங்கட்கிழமை (05) காலை, மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் கல்முனை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இருந்து இவ்வேலைத் திட்டம் ஆரம்பமானது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் அனைத்து திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் ஆளணியினரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வலயத்தில் பிரதேச ரீதியாக மொத்தமாக களமிறக்கப்பட்டு, குப்பைகள் யாவும் சேகரித்து, அகற்றப்படும் என்று நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாநகர ஆணையாளர் அஸ்மி தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தங்களது வீடு, வளவுகளை துப்பரவு செய்து, உக்கும் கழிவுகளை வேறாகவும் உக்காத கழிவுகளை வேறாகவும் தரம்பிரித்து மாநகர சபையின் வாகனங்களில் ஒப்படைக்குமாறும் குறிப்பாக டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு ஏதுவாக அமைகின்ற கொள்கலன்களையும் கழிவுப் பொருட்களையும் தவறாது சேகரித்து ஒப்படைக்குமாறும் இதன்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறான அறிவுறுத்தல்கள் வீதிகள் தோறும் செல்கின்ற மாநகர சபையின் வாகன ஒருபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.எம்.பாறுக், எம்.ஜுனைதீன், மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.அஹத், திண்மக்கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர் எம்.அத்ஹம் மற்றும் வலய மேற்பார்வையாளர்களும் பங்கேற்று, சுத்திகரிப்பு பணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.







No comments:

Post a Comment