Saturday, January 29, 2022

ஒமிக்ரோன் பிறழ்வினால் கிழக்கில் கொவிட் தாக்கம் அதிகரிப்பு; கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் றிபாஸ் தெரிவிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஒமிக்ரோன் பிறழ்வாக திரிபடைந்துள்ள கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள சூழ்நிலையில் மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் அசமந்தப்போக்குடன் செயற்படுவதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று வீதமும் மரண வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்து நாடு முடக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இதனை ஆற்றுப்படுத்துவதற்கு சில நாடுகளில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டபோது எமக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்காதா என்று அங்கலாய்த்துக் கொண்டோம். பின்னர் தடுப்பூசி கிடைக்கப்பெற்று, அதனை மக்களுக்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டபோது முதலாம், இரண்டாம் டோஸ் செலுத்தும் விடயத்தில் உலகத் தரத்தில் இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்று, போற்றத்தக்க பூமியாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது மூன்றாவது தடுப்பூசியைப் பெறுகின்ற விடயத்தில் மக்கள் ஆர்வம் காட்டாமல், பின்னடிக்கின்ற நிலைமையைப் பார்க்க முடிகிறது. இது ஒமிக்ரோன் பரவளின் பாரதூரத்தை புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக எமது பிராந்தியத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பெரும் அலட்சியம் காட்டப்படுகிறது.

28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தரவுகளை நோக்குகின்றபோது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று வீதமும் மரண வீதமும் சடுதியாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அன்றைய தினம் நாட்டில் 934 பேருக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில் அவர்களுள் 300 பேர் கிழக்கு மாகாணத்தவர்களாவர். அவ்வாறே 27 மரணங்களில் 04 பேர் கிழக்கு மாகாணத்தவர் என்கிற தகவல் எமக்கு எச்சரிக்கையான செய்தியைச் சொல்கிறது.

தற்போது எமது பிராந்தியத்திலும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக பரவி வருகின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து, செயற்பட மக்கள் முன்வர வேண்டும். மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

கொரோனா ஒழிந்து விட்டது என்று எவரும் நினைக்க வேண்டாம். முதலாம், இரண்டாம் அலையின்போது இருந்த அச்சம் இப்போது முற்றாக நீங்கி, எல்லாவற்றையும் மறந்து செயற்படுகிறோம். அடிப்படை சுகாதார நடைமுறைகளைக் கூட கடைப்பிடிக்க தவறி நிற்கின்றோம். இது பேராபத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் தடுப்பூசிக்காக இதுவரை 27 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பதன் மூலமே கொரோனாவை எமது நாட்டில் இருந்து ஒழிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகத்துறையினர் கடந்த காலங்களைப் போன்று மக்களை இன்னும் விழிப்பூட்டி, வழிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்- என்றார்.

No comments:

Post a Comment