Friday, March 4, 2022

எரிபொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாடசாலை வகுப்புக்களை பிரிக்காமல் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சகல வகுப்புக்களும் இடையூறின்றி ஒரே தடவையில் நடாத்தப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சங்கத்தின் செயலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார், கல்வி அமைச்சருக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஓரளவு சீர் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாடசாலைகளில் வகுப்புக்களை பிரித்து நடாத்துமாறு கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டிருக்கிறது.

இதனால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

கொரோனா காலத்தின் பாதிப்புக்களால் இழந்த கல்வியை மாணவர்கள் இன்னமும் ஈடுசெய்ய முடியாமலும் வகுப்பேற்றம் நடைபெறாமலும் மாணவர்கள் பல்வேறு மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை கல்வி அமைச்சு அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லையென்பது கவலைக்குரியதாகும்.

தற்போது கல்வி அமைச்சு சகல பாடசாலைகளும் நடாத்தப்பட வேண்டிய முறை பற்றி சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக ஒரு வகுப்பில் 20 க்கு குறைவாக மாணவர்கள் இருப்பின் தினசரி அவ்வகுப்புக்கள் இடம்பெற வேண்டும் எனவும் ஒரு வகுப்பில் 21 முதல் 40 வரையான மாணவர்கள் இருப்பின் அவர்களை இரு குழுக்களாக பிரித்து வாரத்திற்கு ஒரு குழு வீதமும் 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு வகுப்பில் இருப்பின் அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து பொருத்தமான ஏற்பாட்டுடன் வகுப்புக்களை நடாத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். கபில.சி.பெரேராவின் ஒப்பத்துடன் வெளியிடப்பட்ட கல்விச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது மாணவர்களின் கல்வியை இன்னுமின்னும் பாதிப்படையவே செய்யும் என கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்- என்றார்.

No comments:

Post a Comment