Thursday, September 29, 2022

கண் பார்வையை இழந்தும் சவால்களை சாதனையாக்கி சிகரம் தொட புறப்பட்ட மாணவி..!

-சர்ஜுன் லாபீர்-

கல்முனையைச் சேர்ந்த மாணவி சைசூன் தரம் 9இல் கல்வி கற்றுக் கொண்டு இருக்கும்போது தனது கண் பார்வையினை முழுமையாக இழந்த  நிலையில் அதனை ஒரு சவாலாக கொண்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கலை வர்த்தக பிரிவில் கல்வி கற்று பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரபீடத்தின் ஆங்கில மொழித்துறையில் முதற்தரத்தில் சித்தியடைந்த மாணவி அப்துல் சலீம் சைசூன், தற்போது பொதுநலவாய நாடுகளுக்கான உதவித் தொகை பெற்று பிரித்தானியாவிலுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்வதற்காகச் சொல்லவுள்ளார்.

இம்மாணவி தான் கல்வி கற்ற காலத்தில் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

சைசூன் சவால்களை முறியடிப்பதிலும் தன்னுடைய தூர நோக்கில் பயணிப்பத்திலும் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் பல தடைகளை தாண்டி தன்னுடைய சக்திக்கு அப்பாலும் சில விடயங்களை செய்து சாதிகக முடியும் என்பதனை நிரூபித்து காட்டியவர்.

குறித்த மாணவியின் அபரிநிதமான முன்னேற்றத்தை கௌரவித்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடதக்கது.

Sunday, September 25, 2022

அம்பாறை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தியவர் டாக்டர் ஜெமீல்; சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறைக் கிளை அனுதாபம்.!


-காரைதீவு சகா-

இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கும் அம்பாறை மாவட்ட இன நல்லிணக்கத்திற்கும் பல வருடங்களாக சீரிய பணியாற்றி வந்த எமது அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீலின் மறைவு பாரிய வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது. அன்னார் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வாறு சமாதானத்திற்கான சமயயங்களின் இலங்கைப் பேரவையின் (SLCRP) அம்பாறை மாவட்டக் கிளையும் அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனமும் (IRFAD) இணைந்து அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளன.

அமைப்புகளின் சார்பில் அதன் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா (ADE) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது.

டாக்டர் ஜமீல் அவர்கள் பல்லின சமூகம் வாழும் எமது பிராந்தியத்தில் ஒரு சமாதான விரும்பியாக செயற்பட்டவர். அதனால் தான் அவர் சமாதானத்திற்கான சமயயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளையினதும் அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தினதும் தலைவராக இருந்து செயற்பட்டவர்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவராக இருந்து பல்வேறு மதம்சார் முன்னேற்றமான  செயற்பாடுகளை மேற்கொண்டவர். அதைவேளை ஏனைய மதங்களை மதித்தவர். சாய்ந்தமருது வரலாற்று நூலை வெளியிடுவதில் முன்னின்று செயற்பட்டவர்.

அத்தோடு சுனாமிக்குப் பின்னரான மீள் கட்டுமான பணிகளை திட்டமிடுவதில் முன்னின்று செயற்பட்டவர். 

தனது வைத்தியத் துறையில் மக்கள் மத்தியில் சிறப்பான வைத்திய சேவையை மேற்கொண்டவர்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் ஆரம்பம் முதல் தனது இறுதிக்காலம் வரை அக்கறையுடன் செயற்பட்டவர்.

சாய்நதமருது பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்து செயல்பட்டதோடு ஓய்வு நிலை ஊழியர்களின் முதுமை சம்பந்தமாக அக்கறையுடன் செயற்பட்டவர்.

சமாதானத்திற்காக நீண்டகாலம் பணியாற்றிய அவர் பழகுவதற்கு இனிமையானவர் .நல்லகுணம் படைத்த கல்விமான். அடக்கமானவர். மும்மொழி தேர்ச்சி பெற்றவர்.

எமது சங்க நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். சங்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தவர். சர்வதேச நாடுகளுடன் தொடர்புள்ளவர். குறிப்பாக நாம் சிறுபான்மையினர் தேசிய அமர்வுக்கு செல்லும்போது அம்பாறை மாவட்டக் கிளையை அனைவரும் எப்போதும் புகழ்ந்து பேச வைத்த பெருமை டாக்டர் ஜெமீலையே சாரும்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ,திருகோணமலை, பேருவளை, தர்காநகர் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு சென்று சமயத் தலைவர்களை சந்திப்பதற்கு எமது குழுவின் மீகாமனாக இருந்து தலைமைத்துவம் வழங்கியவர்.

இறுதியாக கதிர்காமத்தில் நடந்த எமதுவருடாந்தபொதுக் கூட்டத்தில் தனது வேலைப்பழு, உடல் நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்தபோது எவரும் அதில் உடன்படவில்லை. அந்தளவிற்கு பலரது மனங்களிலும் அவர் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார்.

அப்படிப்பட்ட பண்புள்ள ஒரு தலைவரை இனி நாம் காண்போமா என்பது சந்தேகமே.

இறுதியாக அவரது சுயசரிதையை தானே எழுதி ஊரின் வரலாற்றையும் இணைத்து காத்திரமான கனதியான தடங்களின் நினைவுகள் என்ற நூலை தனது இல்லத்தில் வெளியிட்டார்.

பெரியார்களை மதிக்காத சமூகத்தில் பெரியார்கள் உருவாக மாட்டார்கள் என்று தொடங்கிய ஆழமான அணிந்துரையை அந்நூலில் அவர் பதிவிட்டு இருந்தார்.

அந்த நூலை அவர் எளிமையாக அவரது வீட்டிலேயே வெளியிட்டார். எனது மதிப்புரையும் அங்கே இடம்பெற்றமையை பாக்கியமாக கருதுகின்றேன்.

என்றும் என்னை ஆழமாக நேசித்த ஒரு தூய கனவானை இழந்தது எனக்கும் பேரிழப்புதான்.

அன்னாரின் மறைவு இப்பிரதேச அனைத்து மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

இத்தருணத்தில் அம்பாறை மாவட்ட மூவின மக்கள் சார்பாகவும் எமது அமைப்புக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

டொக்டர் ஜெமீல் அவர்களுடைய இழப்பு இன நல்லிணக்கத்தை விரும்புகின்ற மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் அனுதாபம்..!

-அஸ்லம் எஸ்.மெளலானா--

வைத்தியத்துறையில் நீண்ட சேவையை ஆற்றி பல்லின சமூகத்தினாலும் மதிக்கப்படுகின்ற டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களினுடைய இழப்பு இன நல்லிணக்கத்தை விரும்புகின்ற மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் (EASE) தெரிவித்துள்ளது.

அமைப்பின் சார்பில் அதன் செயலாளரும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபருமான ஏ.ஜி.எம்.றிசாத் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்ணியின் நீண்ட கால  ஒரு செயற்பாட்டாளராகவிருந்து அவர் ஆற்றிய  சேவைகள்  சமூகத்தால் மதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுடைய உரிமைகளை மீட்டுக் கொடுப்பதிலும் குடும்ப வன்முறைகளிலே ஈடுபடுகின்றவர்களைக் கண்டுபிடித்து அதற்கு நிவாரணம் வழங்குவதிலும் அன்னவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

மேலும், எமது முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் தேசபந்து ஜெஸிமா இஸ்மாயிலோடு இணைந்து சுனாமிக்கும் பின்னதான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பல்லின மக்களுக்கான மீள் கட்டுமானப் பணிகளில் அவர் ஆற்றிய சேவைகளை இன்றும் மறக்க முடியாதவைகளாகவே உள்ளன.

அதேபோன்று அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்திற்கூடாக பல்லின மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மிகுந்த சேவைகளை ஆற்றியிருந்தார்.

எங்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அங்கு விரைந்து சென்று உரியவர்களை தொடர்பு கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றிய அமைப்பின் (EASE) போசகராக இருந்து எம்மோடு இணைந்து பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றியிருந்தார்.

குறிப்பாக கொவிட் 19 காலப்பகுதியிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய ஆலோசனை வழங்குவதிலும், அதிலும் குறிப்பாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக பாடசாலைச் சமூகத்திற்கு அவர் வழங்கிய மருத்துவ ஆலோசனைகள் மிக முக்கியமானவையாகும்.

அத்தோடு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவராக இருந்து கொண்டு  சாய்ந்தமருது கிராமத்தின் அபிவிருத்திக்கு அவர் வழங்கிய சேவை மறக்க முடியாததாக இருக்கிறது.

மேலும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப வைத்தியராக இருந்து தொடர்ந்தும் சேவையாற்றியதுடன் அதன் அபிவிருத்திச் சங்க உறுப்பினராக  இருந்து மரணிக்கும் வரை அவர் ஆற்றிய சேவை என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியவைகளாகவுள்ளன.

தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய நினைவுகளை ஒரு சுயசரிதையாக தடங்களின் நினைவுகள் என்ற நூலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோன்று தன்னுடைய குடும்ப வரலாற்றையும் ஒரு நூலாக வெளியிட்டது மட்டுமல்லாமல் சாய்ந்தமருது கிராமத்தின் வரலாற்றை எழுதுவதிலும் அவர் ஆற்றிய சேவைகள் என்றுமே மறக்க முடியாதவை.

அது மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் தான் ஒரு வைத்தியராக இருந்தபோதும் மக்களோடு இரண்டறக் கலந்து எந்த வேற்றுமைகளும் இல்லாது சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதில் அரும்பாடு பட்டார்.

அதுபோன்று சிரேஸ்ட பிரஜைகளுக்கான அமைப்பை நிறுவி அவ் அமைப்பி்னூடாக சமூகத்திற்கு பல சேவைகளை ஆற்றியதுடன் அவர்களின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துவதில் மர்ஹும் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் பின்நிற்கவில்லை என்றால் அது மிகையாகாது.

அந்த உத்தமனுடைய ஜனாஸா நல்லடக்கத்தின் போது பல்லின மக்களும் ஒன்றுகூடி அவருடைய  இறுதி ஊர்வலத்திலே கலந்து கொண்ட காட்சியானது அவர் எந்த அளவுக்கு இனங்களுக்கு மத்தியில் நல்லுறவைப் பேணி வந்துள்ளார் என்பதை பறைசாற்றும் விடயமாகவள்ளது.

மர்ஹும் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களா எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

மேலும் அவருடைய இளப்பினால் துயருறும் அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதல்களையும் வழங்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு EASE வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஊர், சமூக விடயங்களில் மிகக் கரிசனையோடு செயற்பட்டவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்; முன்னாள் கிழக்கு மாகாண சபை குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் அனுதாபம்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

எமது சாய்ந்தமருது பிரதேசம் மிகப்பெரும் சொத்து ஒன்றை இழந்திருக்கிறது. வைத்தியத்துறையில் அரைநூற்றாண்டு காலத்திற்கு மேல் சேவையாற்றியது மாத்திரமல்லாமல் தனது இறுதி மூச்சு வரை ஊர் சமூக விடயங்களிலும் மிகக் கரிசனையோடு செயலாற்றி வந்த டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

வயது முதிர்ச்சி என்றபோதிலும் மிக அண்மைக்காலம் வரை மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த டொக்டர் ஜெமீல் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டொக்டர் ஜெமீல் அவர்கள் எமது ஊரின் ஒரு முதுசமாகவே திகழ்ந்தார். ஊர் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரு பாத்திரத்தை அவர் வகித்து வந்தார். அவரது இந்த வகிபாகத்தை வேறு எவராலும் எளிதில் நிரப்பி விட முடியாது. ஊரு நலன் சார் விடயங்களிலும் அவரது வகிபாகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்தது. 

எமது சாய்ந்தமருது பிரதேசத்தில் சாதாரண ஒரு மருந்தகமாக இயங்கி வந்த கிளினிக் நிலையத்தை தனது அயராத முயற்சி காரணமாக பல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தி, அதன் அபிவிருத்தியில் மிகப்பெரும் கரிசனையுடன் ஈடுபட்டு, அதனை கட்டியெழுப்பிய பெருமை அவரையே சாரும். 

அங்கு தனது சேவைக்காலம் நிறைவுற்ற பின்னரும் அரச வைத்திய சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கூட இவ்வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்தார்.

எமது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நமபிக்கையாளர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் முக்கிய பல பணிகளை அவர் நிறைவேற்றியிருந்தார். குறிப்பாக பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்தை பூர்த்தி செய்து, திறப்பு விழா நடத்தியமை, சாய்ந்தமருது பிரதேசத்தின் அனைத்து துறைகளினதும் வரலாறுகளை தொகுத்து, ஆவணப்படுத்தி, நூலாக வெளியிட்டமை, ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பைத்துஸ் ஸக்காத் எனும் நிதியத்தை ஸ்தாபித்து, ஒரு தசாப்த காலத்திற்கு மேல் தலைமைத்துவம் வழங்கி, வெற்றிகரமாக முன்கொண்டு சென்றமை மிகப்பெறுமதியான வரலாற்றுச் சேவைகளாகும்.

இவை தவிர சுனாமி அனர்த்தத்தினால் உயிர், உடமை, வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதிலும் அவர்களுக்காக கரைவாகு பகுதியில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் பள்ளிவாசல் தலைவர் என்ற ரீதியில் மிகவும் பொறுப்புடன் காரியமாற்றியிருந்தார்.

இக்காலப்பகுதியில், நான் கல்முனை மாநகர சபை உறுப்பினராகவும் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவன் என்ற ரீதியில் கரைவாகு சுனாமி வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்காக அரசில் அங்கம் வகித்திருந்த எமது கட்சியினதும் தலைமைத்துவத்தினதும் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்காக டொக்டர் ஜெமீல் அவர்கள் என்னுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.

அன்று தொட்டு என்னுடன் மானசீகமான உறவைப் பேணி வந்த அன்னார் பொதுவாக ஊர் சம்மந்தப்பட்ட எந்தவொரு விடயமாயினும் என்னுடன் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு வந்ததுடன் எனது அரசியல் முன்னேற்றத்தில் பின்புலமாகவும் செயற்பட்டு வந்தார். அவரது ஆலோசனைகள் எவையும் தட்டிக்கழிக்க முடியாதளவுக்கு மிகவும் பெறுமதியாக இருக்கும். எந்தவொரு விடயம் தொடர்பிலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மிகவும் தெளிவாக எடுத்துரைப்பார்.

எல்லோருடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழக்கக்கூடிய வசீகரமான குணம் அவரிடம் இயல்பாகவே காணப்பட்டிருந்தது. பள்ளிவாசல் தலைமை என்ற ரீதியில் அவர் மிகவும் நிதானமாகவும் பக்க சார்பின்றியும் மனச்சாட்சிக்கு விரோதமின்றியும் நடுநிலை தவறாமல் சிறப்பாக பணியாற்றியிருந்தார்.

பொதுவாக வைத்தியத்துறையினருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் பொது அமைப்பினருக்கும் ஊர்ப்பிரமுகர்களுக்கும் அவர் ஒரு உதாரணபுருஷராகத் திகழ்ந்து, எம்மை விட்டும் பிரிந்துள்ளார். அவரது சேவைகளும் முன்மாதிரியான செயற்பாடுகளும் என்றும் நினைவுகூரத்தக்கவை.

வல்ல இறைவன் அன்னாரது அனைத்து சேவைகளையும் ஆத்மீக பணிகளையும் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக- என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவத்துறையில் மட்டுமல்லாமல் சமூக சேவை, இன ஐக்கிய செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்தவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்; கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்..!


-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனைப் பிராந்தியத்தில் மருத்துவம், சமூக சேவை, சமூக ஒற்றுமை மற்றும் இன ஐக்கிய செயற்பாடுகளில் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது ஷூரா சபையின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவருமான டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் இன்று சனிக்கிழமை (24) தனது 79ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முதல்வர் றகீப் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

டொக்டர் ஜெமீல் எனும் சிவில் சமூக ஆளுமை முழுக்கிழக்கு மாகாணத்திலும் மட்டுமல்ல தேசிய ரீதியிலும் அறியப்பட்டதொரு நடமாடும் அறிவுப் பெட்டகமாக திகழ்ந்தார். அன்னாரது இழப்பு சமூகப்பரப்பில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் தான் ஒரு வைத்தியராக இருந்தபோதிலும் தானும் தன் தொழிலும் என்று அத்துறையுடன் மாத்திரம் நின்று விடாமல் சமூக, கலாசார, கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளிலும் இனங்களிடையே ஐக்கியம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளிலும் இதர சமூகப் பெரியார்களுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

யுத்த காலங்களிலும் இன முரண்பாடு, கலவர சூழ்நிலைகளிலும் இப்பிராந்தியத்தில் மக்களிடையே சமாதானம், சகவாழ்வை நிலை நிறுத்துவதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாக இருந்திருக்கிறது.

அத்துடன் தனது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார். பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை வெறுமனே பள்ளிவாசல் பரிபாலனத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஊரின் அனைத்து விடயங்களையும் கவனிப்பதற்காக பயன்படுத்தியிருந்தார். பள்ளிவாசல் ஊடாக ஊரின் வரலாற்றை தொகுத்து, அதனை நூலுருவாக்கம் செய்து, அடுத்த சந்ததியினருக்கு கையளித்துச் சென்றுள்ளார்.

தொழில் ரீதியாக நாட்டின் பல வைத்தியசாலைகளில் அவர் கடமையாற்றியிருக்கின்ற போதிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட தனது பிராந்திய மக்களுக்கான சாய்ந்தமருது வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டிருந்தார். ஒரு காலத்தில் அந்த வைத்தியசாலைதான் சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களுக்குப் பொதுவாக மருத்துவ சேவை வழங்கிய ஒரே வைத்தியசாலையாக இருந்திருக்கிறது.

அத்துடன் அன்று கல்முனைக்குடியில் ஒரு வைத்தியசாலையின் தேவை உணரப்பட்டபோது அதன் உருவாக்கத்திலும் டொக்டர் ஜெமீல் பாரிய பங்களிப்பை செய்திருந்தார்.

இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் வைத்திய சேவையுடன் சமூக சேவைகளிலும் அவர் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார். அதனால் அனைத்து இன, சமூக, பிரதேச மக்களாலும் டொக்டர் ஜெமீல் பெரிதும் மதிக்கப்பட்டார். ஆக, அன்னாரது நாமம் என்றும் போற்றத்தக்கதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை- என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 24, 2022

சாய்ந்தமருதின் முதுசொம் டாக்டர் ஜெமீல் அவர்களின் மறைவு சமூகப் பரப்பில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது; சாய்ந்தமருது ஷூரா சபை அனுதாபம்..!

-சாய்ந்தமருது நிருபர்-

கடந்த அரை நூற்றாண்டு காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி, கலாசார, சமூக முன்னேற்றப் பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்து வந்த சாய்ந்தமருதின் முதுசொம் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவானது சமூகப் பரப்பில் எவராலும் ஈடுசெய்ய முடியாத பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சாய்ந்தமருது ஷூரா சபை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது ஷூரா சபையின் சார்பில் அதன் உப தலைவர் எம்.ஐ.எம்.ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியரான எம்.ஐ.எம்.ஜெமீல், இப்பிரதேசத்திற்கு மட்டும் சொந்தமான ஒருவராக பார்க்கப்படவில்லை. பொதுவாக கிழக்கு மாகாணத்திற்கும் முழு நாட்டுக்கும் தேவையான ஒரு பொக்கிஷமாகவே அவர் கருதப்படுகிறார். அவரது சமூக, இன நல்லுறவுப் பணிகள் அந்தளவுக்கு பறந்து விரிந்து காணப்பட்டிருந்தன.

இவற்றுக்கப்பால் தான் பிறந்த மண்ணை அவர் மிகவும் நேசித்தார். ஊரின் சமூக, கலாசார, பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதிலும் அவற்றின் முன்னேற்றத்திலும் அவர் அதீத கரிசனை கொண்டிருந்தார். தனது பிரதேச மக்களின் வாழ்வொழுங்கு சீர்செய்யப்பட வேண்டுமென்பதில் பெரும் ஆதங்கம் கொண்டிருந்தார்.

இப்பிரதேசத்தின் கல்வி, கலாசார, பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். பிரதேசத்தின் பௌதீக வள மேம்பாட்டிலும் தேவைகள் மற்றும் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதிலும் அவர் கூடிய கவனம் செலுத்தி வந்தார்.

தனது உழைப்பால் கட்டி வளர்க்கப்பட்ட வைத்தியசாலையை தனது கண்ணோடு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி விட வேண்டுமென்ற வேட்கையுடன் ஷூரா சபை ஊடாகவும் இதர தரப்பினருடனும் இணைந்து அவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான நகர சபையை உரிய அணுகுமுறையுடன் வெற்றிகொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அவரிடம் காணப்பட்டது. நகர சபைக் கோஷத்தைக் காரணம் காட்டி ஏனைய அபிவிருத்திகளை புறமொதுக்கி, ஊரை இன்னும் பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

இவ்வாறான பின்னணியுடன் ஊர் சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, ஒரே குடையின் கீழ் முன்கொண்டு செல்ல வேண்டுமென்ற தூரநோக்கு சிந்தனையுடன் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது ஷூரா சபையின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு, இந்த அமைப்பை சிறப்பாக வழிநடாத்தியிருந்தார்.

சிவில் அமைப்புகளும் சமூக சேவைகளும் அவரோடு பின்னிப்பிணைந்த விடயங்களாக இருந்தமையினால் மிக முக்கியமான காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஷூரா சபையை பொறுப்பேற்பதையோ அதன் ஊடாக ஊர் நலன் சார் விடயங்களுக்காக முன்னிற்பதையோ பெரும் சவாலான விடயமாக அவர் கருதவில்லை.

சாய்ந்தமருது ஷூரா சபை உத்வேகத்துடன் செயற்பட்ட மிகக் குறுகிய காலத்தினுள் பல விடயங்களை சாதிப்பதற்கு டொக்டர் ஜெமீல் ஆணிவேராக தொழிற்பட்டிருந்தார்.

இன்று கம்பீரமாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற சாய்ந்தமருது வைத்தியசாலை சில வருடங்களுக்கு முன்னர் மந்த கதியில் இயங்கியதைக் காரணம் காட்டி, இது மூடு விழாக்காணவிருப்பதாகத் தெரிவித்து, இன்னொரு வைத்தியசாலையுடன் இதனை இணைத்து, இல்லாமல் செய்வதற்கு சுகாதார அமைச்சு மட்டத்தில் திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோது, ஷூரா சபை உரிய தருணத்தில் தலையிட்டு, அதனை முறியடிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக இயங்கி வெற்றி கண்டதன் பிரதிபலனாகவே இவ்வைத்தியசாலை பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறே கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் முரண்பாடுகள் தோன்றி, கல்லூரியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டு, கல்வி நடவடிக்கைகள் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டபோது, இவ்விடயத்தில் ஷூரா சபை தலையிட்டு, நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுத்திருந்தது.

இவ்வாறு இன்னும் பல முக்கிய விடயங்களை எமது ஷூரா சபை முன்னின்று கையாள்வதற்கு டாக்டர் ஜெமீல் அவர்களின் தலைமைத்துவம் எமக்கு பெரும் சக்தியாக அமைந்திருந்தது.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் 2005ஆம் ஆண்டு முற்பகுதியில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சுனாமியினால் உயிர், உடமை, வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதிலும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார்.  

அத்துடன் பெரிய பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்தை பூர்த்தி செய்தமையும் இப்பிரதேசத்தின் வரலாறுகளை தொகுத்து, ஆவணப்படுத்தி, நூலாக வெளியிட்டமையும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பைத்துஸ் ஸக்காத் எனும் நிதியத்தை ஸ்தாபித்து, அதனை வெற்றிகரமாக முன்கொண்டு சென்றமையும் அன்னாரது மிகப்பெறுமதியான வரலாற்றுச் சேவைகளாக நோக்கப்படுகிறது.

தனது நீண்ட கால மருத்துவ சேவை, பிரதேச நலன்சார் பணிகள், பிராந்திய முன்னேற்றத்திற்கான பங்களிப்பு என்பவற்றுக்கு மேலாக பல்வேறு சிவில் அமைப்புகள் ஊடாக சமூக ஒற்றுமை, இன நல்லுறவு, சகவாழ்வு, சமாதான செயற்பாடுகளிலும் பிற மதப் பெரியார்களுடன் கைகோர்த்து முக்கிய பங்காற்றியிருந்தமை என்றும் போற்றத்தக்க பணியாக அமைந்திருக்கிறது.

வைத்திய சேவையாயினும் பள்ளிவாசல் நிர்வாகமாயினும் சிவில் சமூக செயற்பாடாயினும் இன, மதம் சார் கலாசார செயற்பாடுகளாயினும் அனைத்து விடயங்களையும் உரிய இலக்குகளை வெற்றி கொள்ளும் வகையில் நேர்மையுடன் திட்டமிட்டு, நேர்த்தியாக நடைமுறைப்படுத்துவதில் டாக்டர் ஜெமீல் ஓர் உதாரணபுருஷராகத் திகழ்ந்தார்.

பிரதேசத்தின் அறிவுசார் தலைமையாக, தகவல் மற்றும் வரலாற்று பொக்கிஷமாக, சிறந்த பண்பாளராக, எதிலும் உண்மை- நேர்மையையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்த ஒரு கனவானாக, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் சிறந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து, வழிகாட்டிய தலைவராக அவர் திகழ்ந்தார்.

கல்விமான்கள், பெரியார்கள், முதியோர்கள் மதிக்கப்பட வேண்டுமென்ற இலட்சியத்துடன் எப்போதுமே முன்மாதிரியாக செயற்பட்டவர்.

அவரது கதை, பேச்சு, உடை, நடை, பாவனை என்று எல்லாமே பிற மனிதர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருந்தது. மனிதன் என்ற ரீதியில் ஒருவர் மற்றவருடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதற்கு மிகவும் முன்மாதிரிமிக்க உயர்ந்த மனிதராக சமூகத்தில் அவர் வலம் வந்தார். அதனால் எல்லோரிடத்திலும் அவருக்கென தனி மதிப்பு, மரியாதை இருந்தது.

எதிரியாக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் கதை, பேச்சில் இங்கிதம், நேர்மை, நாகரீகம் தவறி விடக்கூடாது என்பதிலும் வாழ்வொழுங்கு என்பது ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் வேரூன்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தார். இது விடயமாக நிறைய எழுதியும் பேசியும் வந்தார்.

உண்மையில் அன்னாரது இழப்பு என்பது எமது ஷூரா சபைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பொதுவாக அன்னாரது மறைவு எமது பிராந்திய, சமூகப் பரப்பில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் இன நல்லுறவை வேண்டி நிற்கின்ற உலகிற்கும் இழப்பாக அமைந்துள்ளது.   

அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்க சாய்ந்தமருது ஷூரா சபை பிரார்த்திக்கிறது- என்று அந்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, September 21, 2022

கல்முனையில் தராசுகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு..!

-பாறுக் ஷிஹான்-

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (20) முதல் வியாழக்கிழமையும் (22) வெள்ளிக்கிழமை (23) கல்முனை உப பிரதேச செயலகத்திலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலத்திரனியல் தராசுகள் பாரம்பரிய தராசுகள் நிறுக்கும் உபகரணங்கள்  உள்ளிட்ட பல்வேறு அளவீட்டுடன் கூடிய தராசுகள் சரி பார்க்கப்பட்டு சீல் செய்யப்பட்டு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

தராசுகளின் வகைகளுக்கேற்ப  தராசுகள் இனங்காணப்பட்டு இச்செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதுடன் வர்த்தகர்கள் மீனவர்கள்  உள்ளிட்டோர் ஆர்வத்துடன் தத்தமது அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

மேலும் தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் இன்றி பல வியாபாரிகள் மோசடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது தொடர்பிலும் மக்களினால் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

எனவே அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை  பெற்றுக்கொள்ளுமாறு அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tuesday, September 20, 2022

மகாராணி எலிசபெத்திற்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது.

சபை அமர்வின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், எலிசபெத் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றியும் எடுத்துக் கூறினார். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதுபோல் கல்முனை மாநகர சபையின் மறைந்த உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களுக்கும் இதன்போது 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.





மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் இதனை வழிமொழிந்து உரையாற்றினார். குறித்த சுனாமி வீட்டுத்திட்டங்களில் வாழ்கின்ற மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மையவாடியை அவர்களது நலன்களை கருத்தில் கொண்டு அப்பகுதியிலேயே ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகுமென இதன்போது வலியுறுத்தபட்டது.

அத்துடன் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் விலங்கறுமனைகளை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காணிகளை கல்முனை மாநகர சபைக்கு விடுவித்து தருமாறு பிரதேச செயலாளரைக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த சபை அமர்வின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கல்முனை மாநகர சபையின் மறைந்த உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்திக்கும் இதன்போது 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவை தவிர மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்த விவாதங்களும் இடம்பெற்றன. அத்துடன் உறுப்பினர்களின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கும் முதல்வரினால் பதில்கள் வழங்கப்பட்டன.













Monday, September 19, 2022

பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தை விரைவில் மீள ஆரம்பிக்க திட்டம்; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு..!

-முனீரா அபூபக்கர்-

நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இம்முறை வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதற்கு தேவையான நிறுவனங்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கம்பஹா மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நீர் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் மக்களின் நீர்த் தேவையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனவே பஸ்னாகொட நீர் திட்டத்தை உடனடியாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட ஏனைய அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட கூட்டு நீர் திட்டத்தின் கீழ் பஸ்னாகொட நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நீர்ப்பாசன திணைக்களம் நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து வருகிறது.

நீர்த்தேக்கத்தின் பிரதான அணையானது அத்தனகலு ஓயாவின் கிளை நதியான பஸ்னகொட ஓயாவின் குறுக்கே கரஸ்னாகொட கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் பிரதான அணை 130 மீட்டர் நீளம் கொண்டது. உயரம் 20 மீட்டர். பஸ்னாகொட நீர்த்தேக்கம் சுமார் க்50 மீற்றர் உயரம் கொண்ட இரண்டு வாயில்களைக் கொண்ட ஒரு வான் கதவையும் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைப்பு செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, கம்பஹா மாவட்ட ஆளுநர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் மின்சார மோசடியில் ஈடுபட்ட பள்ளிவாசல் நிர்வாகி உள்ளிட்ட மூவர் கைது; கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வுக் குழு அதிரடி..!

(பாறுக் ஷிஹான்)

கல்முனைப் பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள மின்மானிகளில் மாற்றம் செய்து மின்சார மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட இம்மூவரும் தமது வீடுகளிலுள்ள மின்சார இணைப்புக்கான மின்மானியில் நுட்பமாக மாற்றம் செய்து, நீண்ட காலமாக சட்டவிரோத மின்சாரத்தை பெற்று வந்தமை தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து வந்த மின்சார சபை விசேட புலனாய்வு உத்தியோகத்தர்களின் திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்போதே இவர்களது சட்டவிரோத செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் அனுசரணையுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கல்முனைப் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 18, 2022

ஒலுவில் துறைமுகத்தில் தனியார் தொழிற்சாலைக்கு இடமளிக்க வேண்டாம்; மு.கா. தலைவர் ஹக்கீம் கோரிக்கை..!


(ஏ.எம்.ஆஷிப்)

மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகத்தில் தனியாருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்துள்ளோம். இம்முடிவை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

02 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் பொது நூலக கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.அமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது;

அம்பாறை மாவட்டத்தில் மூன்று சமூகங்களும் ஒற்றுமையாக வாழந்து வருகின்றனர். ஆனால் சில இனவாதிகள் இன முறுகல்களை ஏற்படுத்துவதற்கு எத்தனித்து வருகின்றார்கள். இதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறியடித்து, சுமூகமான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேவேளை ஒலுவில் துறைமுகத்தை துறைமுக அதிகார சபையினர் மீன்பிடித் துறைமுகமாக மாற்றி, மீன்பிடித் துறைமுக திணைக்களத்துக்கு ஒப்படைத்துள்ளனர். இதில் தனியாருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளாய்வு செய்ய வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்- என்றும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் இந்திய முற்போக்கு கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கண்டனர்.





உறுப்பினர் புவனேஸ்வரிக்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி..!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி அஞ்சலியுடன் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட இரங்கல் செய்தி, கட்சியின் பிரதிநிதியினால் இங்கு வாசிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வுக்காக பாண்டிருப்பு பிரதேசத்திலுள்ள அமரர் புவனேஸ்வரி அவர்களின் வீட்டில் இருந்து அவருடைய பூதவுடல் தாங்கிய ஊர்தி, கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மாநகர சபை வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ஏ.ஆர்.அமீர், கதிரமலை செல்வராசா, சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர், ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் ஆகியோர் இரங்கல் உரைகளை நிகழ்த்தினர்.

அத்துடன் மாநகர சபை உறுப்பினர் சுபையில் அஸீஸ் இரங்கற்பா வாசித்தார்.

இதன்போது அமரத்துவமடைந்த புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் சிறந்த குணாதிசயங்கள், நற்பண்புகள், அவரால் முன்னெடுக்கப்பட்ட சமூக நலன்சார் சேவைகள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் சகோதரர்கள் ஏற்புரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அதிகாரிகளும் ஐ.தே.க. முக்கியஸ்தர்களான எம்.ஆதம்லெப்பை, அப்துல் யாசின் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

இவர்களுடன் அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் புதல்வர் உட்பட குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் உறுப்பினராக பதவி வகித்து வந்த புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்கள், திடீர் சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (15) இரவு தனது 53ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.