Thursday, September 15, 2022

அஷ்ரஃப் எனும் அரசியல் முதுசொம்; இன்னும் நிரப்பப்படாமல் நீண்டு செல்லும் வெற்றிடம்..!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 22வது சிரார்த்த தினம், நாளை (2022.09.16)  அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி - கல்முனை


அஷ்ரஃப் எனும் முதுசொம்

தியாகிகளின் பொன்னேடு

உன் பெயர் பெறிக்க

தவம் கிடக்கின்றது.

மறு உலகிலும்

நீ விரும்பப்படுவாய்..

என்ற சட்டத்தரணி கவிஞர் மு.ஹ.சேகு இஸ்ஸத்தீன் (வேதாந்தி) அவர்களின் இந்த கவிதையடிகள் சித்தரிக்கும் பாக்கியவான் யார்?

அவர்தான் ஒரு முதுசொமாக, ஒரு அரசியல் ஞானியாக, மானிட நேயமிக்க மனிதப் புனிதராக, சட்ட வல்லுனராக, இலக்கியத் தாரகையாக, நிதர்சனமான பேச்சாளராக, முஸ்லிம் சமூகத்தின் விடுதலை வேங்கையாக, ஆன்மிகவாதியாக, ஆளுமைமிக்க தலைவராக வாழ்ந்து மறைந்த மாமனிதர் கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரஃப்.

மறைந்த, புதையுண்ட நாகரிகங்களையும், சாம்ராஜ்யங்களையும் மீண்டும் அகழ்ந்தெடுப்பதை விடவும் கஸ்டமான பணியான புதைக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் முகவரியை தோண்டி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை உணர்வுகளையெல்லாம் ஒன்று குவித்து முஸ்லிம்களின் இலட்சியங்களையெல்லாம் கட்சி அரசியலின் வாயிலாக வென்றெடுப்பதற்காக வெகுண்டெழுந்து ஒன்றன்பின் ஒன்றாக வெற்றியுடன் வீறு நடை போட்ட வரலாற்று நாயகன் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அகால மரணமடைந்து இன்றோடு இருபத்தி இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

1948.10.23ம் திகதி முகம்மது ஹுசைன், மதினா உம்மா தம்பதிகளுக்கு செல்வப் புதல்வனாக பிறந்த அஸ்ரஃப் தமது ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திலும், கல்முனை பாத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலை ஆகியவற்றிலும் கற்றுத் தேர்ந்தார்.

பாடசாலை பருவத்திலேயே அவரிடம் தலைமைத்துவ பண்புகள் வியாபித்துக் கிடந்திருக்கின்றன. சாரணீய இயக்கத் தலைவராக, குருளை இயக்கத் தலைவராக, ஆங்கில இலக்கிய மன்றத் தலைவராக, முதலுதவிப்படைத் தலைவராக, தமிழ்மன்றத் தலைவராக, கலை இலக்கிய மன்றத் தலைவராக, நாடக மன்றத் தலைவராக, விஞ்ஞான மன்றத் தலைவராக, கீயுரி இல்லத் தலைவராக, சிரேஷ்ட மாணவத் தலைவராக, பாடசாலைப் பாராளுமன்றத் தலைவராக துடிப்புடன் பணி செய்து தனது தலைமைத்துவ ஆளுமையை அவர் சிறப்புடன் கட்டி வளர்த்திருக்கின்றார்.

1970ல் சட்டக்கல்லூரிக்குள் காலடி வைத்த அஸ்ரஃப் அங்கிருந்து ஒரு சிறந்த சட்ட வல்லுனராக வெளியேறி இலங்கையின் புகழ் பூத்த சட்டத்தரணிகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர் இலங்கையின் 1972 இன் குடியரசு யாப்பை மையமாகக் கொண்டு "அரசியல் யாப்புச் சட்டம்" எனும் நூலை முதல் முதலாகத் தமிழ் மொழியில் எழுதி, அரசியல் சார்ந்த சட்டத்துறையில் அவருக்கிருந்த அதித ஆற்றலை வெளிப்படுத்தினார்.

1976ல் முஸ்லிம்கள் ஒன்பது பேர் புத்தளம் பள்ளிவாசலுக்குள் பரிதாபகரமாக ஆயுத தாரிகளினால்  சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது இது பற்றி எதுவும் பேச திராணி அற்று செல்லக்கிளிகளாக முஸ்லிம் எம்பிக்கள் இருந்தபோது, இப்படுகொலை சம்பந்தமாக அமரர் தந்தை செல்வநாயகம் மாத்திரம் முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதை அறிந்து அஸ்ரஃப் வெட்கித்துப்போய் சிந்திக்கத் தொடங்கினார்.

முஸ்லிம்களுக்கென்று தனியாதோர் அரசியல் இயக்கம் அவசியம் என்று உணர்ந்தார். பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் 1981 ஆண்டில் செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் இரவில் காத்தான்குடியில் வைத்து அவரது உள்ளக்கிடக்கையில் குமுறிக் கிடந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு இயக்கத்தை பிரசவித்தார். அதனை 1988 பெப்பவரி 11ல் ஒரு அரசியல் கட்சியாக பதிந்தெடுத்தார்.

1988 நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் மொத்தமாக வடக்கு கிழக்கில் 17 ஆசனங்களையும் தென்னிலங்கையில் 12 ஆசனங்களையும் சேர்த்து மொத்தமாக 29 மாகாணசபை உறுப்பினர்களையும் இக்கட்சி பெற்றது.

அதைத் தொடர்ந்து 1989ல் ஒன்பதாவது பொதுத்தேர்தலில் தலைவர் அஸ்ரஃப் அவர்களின் சிறந்த அரசியல் வியூகத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது. தொடர்ந்து வந்த 10ம், 11ம் பொத்தேர்தல்களில் அவரது கூட்டுச்சேரல் வியூகத்தினால் இக்கட்சி முறையே 07, 11 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியது.

அவர் விட்டுச்சென்ற அந்த சிறந்த வியூகமே 12வது பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களை பெற்று வரலாறு படைத்தது. 1994ல் பத்தாவது பாராளுமன்றத்தில் கப்பல்துறை துறைமுகங்கள் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக பதவி வகித்த அஸ்ரஃப் அவரது சீரிய சிந்தனையுடன் பல அபிவிருத்தி திட்டங்களை தீட்டி செயற்பட்டு அதில் பூரண வெற்றி கண்டார்.

இவ்வாறான மிகுந்த வேலைப்பழுக்கு மத்தியிலும் சட்டத்துறை முதுமாணிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்ததுடன் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் நியமிக்கப்பட்டார்.

மானிட நேயமிக்க ஒரு அரசியல் ஞானியாக இருந்த அஸ்ரஃப் தனக்கு கிடைத்த அமைச்சர் பதவி மூலம் மதபேதங்களைக் கடந்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினார். துரித பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டார். ஏழைகளுக்காக எழுச்சிக் கிராமங்களை உருவாக்கினார். பயங்கரவாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடுகளை வழங்கினார். முஸ்லிம் சமூகத்துக்கென்று தென்கிழக்கில் ஒரு  பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.

இவ்வாறு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட அவர் ஏழைகளின் மிக நெருங்கிய தோழனாக விளங்கியதுடன் மாற்றுக் கட்சிக்கார்களையும், இதர தமிழ், சிங்கள சமூகத்தினரையும் அரவணைத்துக் கொண்டே தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

இவைகளுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு, சுதந்திரம், கலை, கலாசாரம் விழுமியங்கள் என்பவற்றை  உறுதிப்படுத்துவதற்காக தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் தனதும் தனது கட்சி பாராளுமன்ற பிரதிநிகளின் பலத்தின் ஊடாகவும் மேற்கொண்டு வந்தார்.

இதன் வாயிலாக தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வசே ரீதியாகவும் அவர் பெயர் பிரபல்யம் அடைந்தது. இந்த நாட்டின் அரசை தீர்மானிக்கும் சக்தியாக அவர் விளங்கினார். அவரது கட்சியினது பேரம் பேசும் சக்தியினால் பல ஆச்சரியமூட்டும் காரியங்களை அஸ்ரஃப் கச்சிதமாக செய்து முடித்தார்.

அரசியலில் மட்டுமல்ல சட்டத்துறையில் மாத்திரமல்ல  தமிழ் இலக்கியப்பரப்பிலும் அவர் ஒரு குட்டி ராஜாவாக மிளிர்ந்தார். பன்னிரண்டு வயதில் அவர் எழுதிய "தாய்" எனும் கவிதை 1962.09.16ல் தேசிய முரசில் பிரசுரமாயிமருந்தது. அன்று தொட்டு மரணம் வரை பல்வேறுபட்ட மார்க்க கட்டுரைகளையும், சிறு கதைகளையும், கவிதைகளையும் எழுதி வந்தார். அவரது படைப்புக்களை பிரசுரிப்பதற்காக தேசிய நாளிதழ்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன.

இவரின் இலக்கியத்தையும், படைப்பாற்றலையும் கண்டு புகழ் பூத்த தென் இந்திய கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் 1997.06.19ல் அஸ்ரஃப்  அவர்களுக்கு கவிஞர் திலகம் என பட்டம் சூட்டி பரவசப்படுத்தினார். கவியாற்றல் மிக்க அவர் இக் காலப்பகுதியில் தான் எழுதிய அனைத்து கவிதைகளையும் ஒன்று சேர்த்து "நான் எனும் நீ "என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு செம்மொழியாம் தமிழ் மொழி மீது அவருக்கிருந்த அளவுகடந்த காதலை வெளிக்காட்டினார்.

தான் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஈட்டி வீறு நடை போட்ட அஸ்ரஃப் இன, மத பேதமின்றி சுதந்திர தேசத்தை கட்டி எழுப்பவேண்டிய அத்தியாவசியத்தை உணரந்து இலங்கையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வை கொண்டு வர முயற்சித்தார். அதற்காக உழைத்தார்.

இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு செயலாற்ற சமாதானத்தின் சின்னமான புறாவை இலச்சினையாக கொண்டு தேசிய ஐக்கிய முன்னணி என்ற ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்தார். அதன் மூலம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை வழக்க பாடுபட்டார். அதற்கான வியூகத்தையும் அமைத்து செயற்பட்டார். ஆனால் இனியும் அவரை இவ்வுலகில் வாழ விடக்கூடாது என்பதற்காக 2000.09.16ல் ஹெலி விபத்தின் ஊடாக இறைவன் அவரது உயிரை பறித்துக் கொண்டான்.

எப்போதும் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் எதையும் சேமித்து வைக்காத அஸ்ரஃப் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது பத்து மாதம் தாயின் வயிற்றிலிருந்து சுகப்பிரசவத்தின் பின் பிரசவமான அழகிய குழந்தையைப் போன்று தான் உருவாக்கி நேசித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும், தேசிய ஐக்கிய முன்னணியையும், அதன் போராளிகளையும் தன் உயிர் என நேசித்தார்.

ஆனால் தனது அரசியல் இயக்கங்களுக்காகவும் தான் சார்ந்த சமூகத்திற்காகவும் சதா இறைவனைப் பிராத்தித்த அஸ்ரஃப் தனது நீடித்த ஆயூளுக்காகவும் தான் ஒருபோதும் இறைவனை பிராத்திக்கவில்லை போலும். அதனால் அஸ்ரஃப் என்ற ஒரு உயர்ந்த உள்ளத்தை இறைவன் 53 வயதிலேயே... இவ்வுலகை விட்டு பறித்துக் கொண்டான்.

இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன்..

இலங்கை முஸ்லிம்களின் மிக நீண்ட வரலாற்றில் அவரது இடைவெளி இன்னும் நிரப்பப்படாத வெற்றிடமாகவே நீண்டு செல்கின்றது.

No comments:

Post a Comment