Wednesday, September 7, 2022

கிழக்கின் சாதனைக்கு கல்விப் புலத்தினரின் ஒன்றிணைந்த செயற்பாடே காரணம்; இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மகிழ்ச்சி..!


-அஸ்லம் எஸ்.மௌலானா-

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வில் கிழக்கு மாகாணம் முதலிடம் பெற்றமைக்கு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களின் சிறப்பான முன்னெடுப்புக்களுமே காரணம் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்வியமைச்சு உயர்தரப் பரீட்சையினை மேற்கோளாக வைத்து மேற்கொண்ட பகுப்பாய்வில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலிருந்து முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது மிகவும் சந்தோசமான செய்தியாகும்.

கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைகளால் மாணவர்களின் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும் கிழக்கு மாகாண ஆளுநர், கல்வியமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர் ஆகியோரின் முறையான செயற்பாடுகளினால் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொடரான மாணவர் கல்விச் செயற்பாட்டில் இவர்கள் குறியாக இருந்து செயற்பட்டனர். 

கல்விப் பணிப்பாளர்களுக்கான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களின் முறையான கண்காணிப்பு அறிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலங்களிலும் மாற்றீட்டுச் செயற்பாடுகள் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டன.

அகில இலங்கையில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தமிழ் வண்ணன் துவாரகேஷின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது. அவரது வரலாற்றுச் சாதனை மாகாணத்தின் கல்விப்புலத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அகமகிழ வைக்கிறது. பாடசாலைக் கல்வியினை முழுமையாக பின் தொடர்ந்தமையே தமது இலக்குக்கான வெற்றியென அம்மாணவன் தெரிவித்த கருத்துக்களும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் காட்டக் கூடியதாகும்.

கிழக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 25 பேர் பரீட்சைக்குத் தோற்றியவர்களில்  11 ஆயிரத்து 237 பேர் பல்கலைக்கழக நுழைவினைப் பெற்றுள்ளதுடன் 472 பேர் 3 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கு உந்து சக்தியாக அமைந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் அடங்கலான அனைத்து அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மேலதிக வகுப்புக்களில் பங்கேற்ற வளவாளார்கள், பெற்றோர்கள் மற்றும் இச்சாதனைக்கு மூலமாக அமைந்த மாணவர்களுக்கும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment