Wednesday, September 1, 2021

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் மறைந்த மணவைத் தம்பி ஓர் உறவுப் பாலம்..!

நினைவு தினச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் சுமுகமான நல்லுறவைப் பேணுவதில் உயரிய பங்களிப்பை செய்த மறைந்த ஏ.எஸ். மணவைத் தம்பியின் பதினான்காவது நினைவு தினத்தை சிறப்பிப்பது பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.   

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,  

இந்திய துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள தமிழ் நாட்டிற்கும், அதிலிருந்து பாக்கு நீரிணையினால் பிரிக்கப்பட்டுள்ள அழகிய இலங்கைத் தீவுக்கும் இடையில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட அரசியல் தட்ப வெட்ப சூழ்நிலைகளையும்,தளம்பல்களையும் உரியவர்களைத் தொடர்புகொண்டு சமநிலைப்படுத்துவதில் மறைந்த மணவைத் தம்பி பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றார்.

தமிழ் நாட்டில் மணப்பாடு மீனவக் கிராமத்தில் பிறந்த மணவைத் தம்பி தமது இளம் வயதிலேயே உறவினர்கள் சிலருடன் இலங்கையை வந்தடைந்தார். இங்கு வசித்து வந்த நிலையில், தொழில் புரிந்து கொண்டே தமிழ் அறிவையும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி அறிவையும் வளர்த்துக்கொண்ட அவர், கட்சி ,மொழி,மத பேதமின்றி இங்கிருந்த அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

அதேவேளேயில், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் அரசியல் ஆளுமையினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர், திமுகவின் சீர்திருத்தக் கருத்துக்களை இலங்கையில் போதிய அளவு அறிமுகப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியிருக்கின்றார். 

இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தவருக்கும், நாட்டின் வடக்கிழக்கிலும், மலையகத்திலும் ,ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதிலும் அன்னார் அதிக கரிசனைகாட்டி வந்துள்ளதாகவும் அறிகின்றேன்.

இலங்கையில் மறைந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஐயா, சௌமிய மூர்த்தி தொண்டமான், செனட்டர் மஷூர் மௌலானா, இராஜதுரை, எமது கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற இன்னும் பலருடனும் அன்னாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

1972 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் அவர் மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும், அங்கிருந்து கொண்டே கடல் கடந்து வாழும் இரு நாடுகளினதும் சமூகங்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதற்கு மணவைத் தம்பி முயற்சித்து வந்துள்ளார். 

தமிழகத்தில் தி.மு.க அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாரை  அங்கு சென்ற போது சந்தித்து உரையாடியுள்ளேன்.

தமது தந்தை மறைந்த ஏ.எஸ். மணவைத் தம்பி விட்டுச் சென்ற பணியை அவரது தனையன் மணவை அசோகன் தொட்டுத் தொடர்கின்றார். அவர்கள் இருவரதும் அயராத முயற்சியைப் பெரிதும் பாராட்டுகின்றேன். புதல்வர் மணவை அசோகன் தமிழக முதல்வர் எமது நண்பர் தளபதி மு.கா.ஸ்டாலினுடனும் நல்லுறவைப் பேணி வருகின்றார்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரஸ்தாப நினைவு தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

-ஊடகப் பிரிவு- 

No comments:

Post a Comment