Friday, September 3, 2021

சாய்ந்தமருது MPCS மூலம் 1500 கிலோ சீனி விநியோகம்; கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகளுக்கு, தலைவர் உதுமாலெப்பை நன்றி தெரிவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் (MPCS) ஊடாக இப்பிரதேச மக்களுக்கு நிர்ணய விலையில் சீனியை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் கல்முனைப் பிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.உதயராஜா ஆகியோருக்கு சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கத் தலைவர் ஏ.உதுமாலெப்பை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேற்படி அதிகாரிகளின் ஒத்துழைப்பு காரணமாக சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று முதல் சீனியை அரசாங்கத்தின் நிர்ணய விலையான 125 ரூபாவுக்கு வழங்கி வருகின்றோம்.

இவர்களது முயற்சியினால் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 15,000 கிலோ சீனி அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் எமது சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 1500 கிலோ சீனி கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக குறித்த அதிகாரிகள் உட்பட சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் எமது கூட்டுறவுச் சங்கத்தில் பருப்பு, கோதுமை, பிஸ்கட், எண்ணெய், தேயிலை உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொது மக்கள் ஆர்வத்துடன் இவற்றைக் கொள்வனவு செய்து வருகின்றனர். அதேவேளை, தற்போது பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்ற பால்மா வகைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சீனி மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்து வருகின்ற போதிலும் இங்கு கொவிட்-19 தடுப்பு சுகாதார வழிமுறைகளுடன் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன- என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


metromirrorweb@gmail.com


No comments:

Post a Comment