Sunday, October 30, 2022

அரச அதிபர் பங்குபற்றிய நிந்தவூர் கூட்டத்தில் கல்முனை விவகாரம் ஆராயப்பட்டதா? தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்


சாய்ந்தமருது நிருபர்

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டமானது கல்முனை விவகாரம் சம்மந்தப்பட்டதல்ல. அது பெரிய நீலாவணையிலுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவு தொடர்பிலான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலே என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி விடயம் பற்றி முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை உப செயலக பிணக்கு தொடர்பில் நாங்கள் மௌனம் காத்து வருவதாக சிலர் குற்றச்சாட்டி வருகின்றனர். இது 30 வருட காலமாக புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையாகும். இதனை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரே இரவில் தீர்த்து விட முடியாது. முஸ்லிம், தமிழ் சமூகங்கள் சம்மந்தப்பட்ட இந்த நீண்ட கால பிணக்கு தொடர்பில் இரு சகோதர சமூகத்தினரும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடாத்தி, இணக்கமான தீர்வொன்றைக்காண வேண்டியிருக்கிறது.

நாங்களும் இதற்கான நகர்வுகளை மிகவும் சாணக்கியமாக உயர் மட்டங்களில் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எமது தரப்பு நியாயங்களை உரிய இடங்களில் முன்வைத்து வருகின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் ஊடக செய்திகளுக்காக பிரஸ்தாபிப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லி விடவும் முடியாது. இது விடயமாக ஊடகங்களில் எமது தரப்பு செய்திகளை காணக்கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகி விடாது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தனது தலையாய கடமையாக இதனைச் சுமந்து கொண்டு, மிகுந்த அர்ப்பணிப்புடன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

சகோதர தமிழ் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹரீஸ் என்றொரு எம்.பி. இல்லாதிருந்தால் நாங்கள் நினைத்தது போன்று எப்போதோ சாதித்திருப்போம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆக, எவரும் நினைத்தது போன்று செய்து விடாமல், இரு தரப்பினரதும் இணக்கத்துடனேயே இப்பிணக்கு தீர்க்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த விடயத்தில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் மிகப் பொறுப்புணர்வுடன் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பான நகர்வுகளின்போது அவர் எமது எம்.பி. ஹரீஸ் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து செயலாற்றி வருகின்றார்.  

அதேவேளை, கல்முனை பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்காக நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றதாக ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. இது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று அப்பட்டமான பொய்யாகும். உண்மையில் அங்கு நடந்தது என்ன ?

எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பிலான பிரச்சினை இருந்து வருகின்றது. அதில் ஒன்று- பெரிய நீலாவணை-02 தமிழ், முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு சம்மந்தப்பட்ட விடயமாகும்.

கல்முனையிலுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பிலான 2001ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெரிய நீலாவணை பகுதியில் பெரிய நீலாவணை-01, பெரிய நீலாவணை-01A, பெரிய நீலாவணை-01B, பெரிய நீலாவணை-02 ஆகிய நான்கு பிரிவுகளும் கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றன.

அதேபோல் இவ்வர்த்தமானியின் பிரகாரம் பெரிய நீலாவணை-01 முஸ்லிம் பிரிவு, பெரிய நீலாவணை-02 முஸ்லிம் பிரிவு ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.

இவற்றை விட அந்த வர்த்தமானியில் பெரிய நீலாவணை- முஸ்லிம் பிரிவு 71/A ஆம் இலக்க கிராம சேவகர் என்றொரு பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கிராம சேவகர் பிரிவைக் காணவில்லை. அது எஙகே? இதுகால வரையும் அந்த கிராம சேவகர் பிரிவு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நாங்கள் ஆராய்ந்தபோது பெரிய நீலாவணை- 02 தமிழ் பிரிவினுள் மேற்படி 71/A எனும் கிராம சேவகர் பிரிவும் உள்வாங்கப்பட்டு, அது பெரிய நீலாவணை- 02 தமிழ், முஸ்லிம் பிரிவு என மாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

இக்கிராம சேவகர் பிரிவில் 841 முஸ்லிம் குடும்பங்களும் 241 தமிழ் குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை இணைக்கப்பட்டே பெரிய நீலாவணை- 02 தமிழ், முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்டு, மிகவும் சூட்சுமமாக கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதனால் குறித்த முஸ்லிம் குடும்பங்கள் தமது கிராம சேவை நிர்வாக விடயங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் குடுமபங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான எனது முயற்சியின் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, தெளிவுபடுத்தியிருந்தேன். எனது வேண்டுகோளை நேரடியாக விசாரித்து, பரிசீலிப்பதற்காகவே நிந்தவூர் பிரதேச செயலகத்தில் அவர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.

அதில் அரசாங்க அதிபருடன் மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளரும் நானும் பங்கேற்றிருந்தோம். அங்கு குறித்த கிராம சேவகர் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்யப்பட்டது. இதன்போது என்னால் முன்வைக்கப்பட்ட நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒரு கிராம சேவகர் பிரிவை உருவாக்குவதற்கான சாதக நிலைமை எட்டப்பட்டிருக்கிறது. 

இது தவிர இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் காணியொன்று பற்றிய முறைப்பாடு தொடர்பிலும் அரசாங்க அதிபர் கள விஜயம் மேற்கொண்டு, நிலைமையை ஆராய்ந்து, உரிய தீர்வினை வழங்கியிருந்தார்.

இவற்றுடன் கல்முனை உப செயலக சர்ச்சையை தொடர்புபடுத்தி, தகவல்களை திரிபுபடுத்தி முகநூல்களில் சிலர் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். தயவுசெய்து இவ்வாறு வதந்திகளைப் பரப்பி, மக்களை குழப்ப வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

மேற்படி நிந்தவூர் கூட்டத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பிலோ எல்லைகள் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாவட்ட அரசாங்க அதிபரின் நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் இருக்கவில்லை. ஹரீஸ் எம்.பி. பங்குபற்றாத எந்தவொரு கூட்டத்திலும் கல்முனை விவகாரம் உத்தியோகபூர்வமாக பேசப்படவோ தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவோ மாட்டாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்முனை விவகாரத்தை சிறப்பாக கையாள்வதற்கான தகுதியும் அறிவும் ஆற்றலும் அனுபவமும் எம்மிடம் இருக்கிறது. இது விடயத்தில் நாங்கள் ஒருபோதும் சோடை போக மாட்டோம் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எம்.நிஸார், ஏ.எம்.சித்தி நஸ்ரின், முன்னாள் உறுப்பினர் ஷரீப் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை 12ஆம் வட்டார மு.கா. வேட்பாளர் எம்.பளீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை விவகாரத்தில் விட்டுப்புக்கு முன்வராத தரப்பினருடன் இனப்பிரச்சினை தீர்வில் எவ்வாறு ஒன்றித்து பயணிக்க முடியும்? -கேள்வி எழுப்புகிறார் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.

சாய்ந்தமருது நிருபர்

கல்முனை விவகாரத்தில் சற்றேனும் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வராதிருக்கின்றபோது இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அவர்களுடன் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியும் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் விடயங்கள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் மத்திய அரசுடன் முழுமையாக இருந்து நிர்வாகம் செய்ய முடியாது என்பதற்காகவே 1948ஆம் ஆண்டு தொடக்கம் சமஷ்டி தீர்வின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒரு தனியான நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் சமூகம் கோரி வருகின்றது. அதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதில் நியாயமும் இருந்தது.

அதனால்தான் எமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா போன்றோர் தமிழ் தலைமைகளுடன் இணைந்து அப்போராட்டங்களில் முக்கிய பங்காற்றியிருந்தனர். எங்களுடைய இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட தமிழ் சமூகத்தின் அதிகாரப் பகிர்வுக்காக பாடுபடுகின்ற ஒருவராகவே இருக்கின்றார்.

இவ்வாறு தனி மாகாண நிர்வாக அதிகாரத்தை கோருகின்ற தமிழ் தரப்பினர், அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 67 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இங்கு மொழி ரீதியாக ஒரு கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றபோது, அதற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு, அவ்வாறான ஒரு மாவட்டம் உருவாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை விவகாரத்திலும் கூட தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் இணைந்து நிர்வாகம் செய்ய முடியாது எனக்கூறுகின்ற தமிழ் தரப்பினர், ஒட்டு மொத்தமாக வடக்கு, கிழக்கு என்று வருகின்றபோது பெரும்பான்மையின ஆட்சியையும் சிங்கள மொழியையும் நிராகரித்து, முஸ்லிம்களையும் இணைத்து தமிழ் பேசும் தனி மாநிலம் வேண்டும் என கோருகின்றனர்.

இத்தகைய இரட்டை நிலைப்பாட்டைத்தான் தமிழ் கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனக் கோருகின்றேன். தலைவர் சம்மந்தன் ஐயா, சுமந்திரன் எம்.பி. மற்றும் தமிழ் எம்.பி.க்களிடம் இதனை மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.

இவ்விடயம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை சிந்திக்க வைக்கின்றது. இதுவொரு நியாயமற்ற போக்கு, மனச்சாட்சிக்கு விரோதமானது. தமிழருக்கான அதிகாரப்பகிர்வுத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருப்பதானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலை நீடிக்குமாயின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமிழ் சமூகத்துடன் முஸ்லிம் சமூகம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம். குறிப்பாக கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடனான தீர்வுக்கு முன்வராமல் தமிழ் தரப்பு மறுக்கின்றபோது நிச்சயமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் வேறு திசைக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற செய்தியை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதேவேளை கல்முனை செயலக விடயத்தில் நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனம் காத்து வருவதாக எமது முஸ்லிம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், நான் மற்றும் மேயர் உட்பட எல்லோரும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்லா மட்டங்களிலும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அது தொடர்பிலான எல்லா விடயங்களையும் ஊடகங்களில் பறைசாற்றிக் கொண்டிருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் நாங்கள் பாரிய அழுத்தங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்த விடயத்தில் மிகவும் கரிசனையும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். ஏனைய முஸ்லிம் எம்.பி.க்களுடனும் பேசியிருக்கின்றோம். அவர்களும் உரிய இடங்களில் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்- என்று ஹரீஸ் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எம். நிஸார், ஏ.எம்.சித்தி நஸ்ரின், முன்னாள் உறுப்பினர் ஷரீப் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை 12ஆம் வட்டார மு.கா. வேட்பாளர் எம்.பளீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

Saturday, October 22, 2022

ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்..!

-பாறூக் ஷிஹான்-

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 'ஸஹிரியன் பழைய நண்பர்கள் அமைப்பு' (ZOFA) ஏற்பாட்டில் இடம்பெறும் மெற்றோ பொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் (ZPL) சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியது.

இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 29 அணிகள் பங்குகொள்ளும் 07 ஓவர்கள் கொண்ட குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.மலிக், விசேட அதிதியாக முன்னாள் அதிபர் முஹம்மத் உட்பட ஏற்பாட்டுக் குழுவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை 24ம் திகதி  நிறைவடையவுள்ளது.

மெற்ரோபொலிடன் ஸஹ்ரியன் பிரிமியர் லீக் சீசன்-02 போட்டியில் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப் பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பு..!

-பாறுக் ஷிஹான்-

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில்   சஞ்சரிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பெரிய நீலாவணை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் 

இம்மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. வலசை வந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. 23க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இதில் நாரை இனங்கள், அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Friday, October 21, 2022

கல்முனை சந்தான்கேணி மைதானத்தை செப்பனிடும் பணி மாநகர சபையினால் முன்னெடுப்பு..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை சந்தான்கேணி பொது மைதானத்தை செப்பனிடும் வேலைத் திட்டத்தை கல்முனை மாநகர சபை இன்று ஆரம்பித்துள்ளது.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் அவர்கள் விடுத்துள்ள அவசர பணிப்புரைக்கமைவாக மைதானத்தை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ், இம்மைதானத்தின் காடுமண்டியிருந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கொண்டு, அகற்றப்பட்டு, செப்பனிடப்பட்டு வருகின்றன.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான பெஸ்டர் றியாஸ் அவர்கள், முதல்வரை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை முன்வைத்து, மைதானத்தை அவசரமாக செப்பனிப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

தமது வேண்டுகோளையேற்று துரித நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மாநகர முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் சமீம் அப்துல் ஜப்பார் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 19, 2022

மருதமுனையின் முதலாவது பட்டையக் கணக்காளர்..!

மருதமுனை மண்ணின் முதலாவது பட்டையக் கணக்காளர் - Chartered Accountant (CA) என்ற பெருமையை அல்ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் பெற்றுக் கொண்டார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)இலங்கை பட்டையக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

இவர் அஷ்-ஷெய்ஹ் அபூ உபைதா மதனி - மர்ஹூமா ஹாஜியானி I.L.ஹமீதா ஆகியோரின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 18, 2022

அநீதியிழைக்கப்பட்ட ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு 2023 பட்ஜெட்டில் தீர்வு வழங்குக; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏ.எல்.எம்.முக்தார் மகஜர்

-கல்முனை செய்தியாளர்-

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2016- 2019 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய அதிகரிப்புக்கு முழுமையான தீர்வு காணப்பட வேண்டுமென ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார், மகஜர் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

அரசாங்க சேவை ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி ஓய்வுபெற்ற அரச ஊழியர்களில், 2016ஆம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம், தனது முதலாவது அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் பாரிய அநீதியிழைத்தது.

இவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை தற்காலிகமெனும் போர்வையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்பிரச்சினை இன்றுவரை தீர்வின்றி தொடர்கிறது. இது பாரிய அடிப்படை உரிமை மீறலாகும். இதன் மூலம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு, திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்ட 35/2019 ஆம் இலக்க சுற்று நிருபத்தையே கோட்டா காலத்து அமைச்சரவை இடைநிறுத்தியிருந்தது. இதற்கு நீதி வழங்குமாறு கோரி கடந்த மூன்று வருடங்களாக எமது அமைப்பு போராடி வருகிறது.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளோம். இவ்வழக்கிற்கான பதில் மனுவை சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த 03 வருடகாலமாக நீதிமன்றத்திற்கு வழங்க முடியாத நிலையில் கால இழுத்தடிப்பை செய்து வருகிறது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்ற பின்னர் அவரது ஆலோசகர்கள், நிதியமைச்சு செயலாளர் மற்றும் திறைசேரி அதிகாரிகளுடன் எமது சங்கம் பல சுற்றுப் பேச்சுவார்த்தையை நடாத்தியுள்ளது. இதன்போது ஓய்வூதிய அதிகரிப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இறுதியாக நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவையை 04 கட்டங்களாக பெறுவதற்கும் 2023 ஜனவரி முதல் அதிகரிப்பை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதற்கான சம்மதக் கடிதமும் எம்மால் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

எனவே, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவு திட்டத்தில் இதற்கான நிதி ஏற்பாடுகளைச் செய்து, எமது நீண்ட கால பிரச்சினைகக்கு தீர்வினை வழங்க உதவுமாறு அம்மகஜரில் ஜனாதிபதியிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளோம்- என்றார்.

Monday, October 17, 2022

விக்டோறியஸ் கழகத்தினால் பாறுக் ஷிஹான் கௌரவிப்பு; ஊடக செயலாளராகவும் தெரிவு..!


-செயிட் அஸ்லம்-

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் பிரபல முன்னணி ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் பெஸ்டர் றியாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் அவர்களின் சிறப்பான ஊடக சேவைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு..!

-பாறுக் ஷிஹான்-

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஏ.எம்.றியாஸ் தலைமை தாங்கியதுடன் ஏ.ஜே.சமீம் நெறிப்படுத்தலில் புதிய நிர்வாக தெரிவு  தொடர்பில் உத்தியோக பூர்வமாக சபையில் அறிவித்தனர்.

இதற்கமைய தவிசாளர் -ஏ.எம். றியாஸ், துணை தவிசாளர் -பி.எம் கலில் றகுமான்,  தலைவர் -ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன்,  பிரதி தலைவர் -ஏ.மன்சூர் , உப தலைவர்- என்.சங்கீத், உப தலைவர்- ரி.எம்.றிபாய் ,பொதுச் செயலாளர்- ஏ.ஜே.சமீம், உப செயலாளர்- எஸ்.என்.ராஜ்குமார், பொருளாளர்- நதீர் பாறுக், உப பொருளாளர்- ஏ.எஸ்.றம்ஸீர், கணக்கு பரிசோதகர் -சுந்தரலிங்கம், இணை முகாமையாளர்கள் -ஏ.எல்.எம் சலீம், சபீர் ,ஊடக செயலாளர்- பாறுக் ஷிஹான், பிரதம பயிற்றுவிப்பாளர்- யு.எல் ஹிலால், பயிற்றுவிப்பாளர்- (பந்து வீச்சு) பி.மதன், பயிற்றுவிப்பாளர்- (துடுப்பாட்டம்) எம்.எஸ்.அஸ்பர், பயிற்றுவிப்பாளர் - (களத்தடுப்பு) எம்.செந்தூரன், இணைப்பாளர்- ஏ.எம் நாஸர், பிரதான இணைப்பாளர்- பி.எச்.எம்.முபீன் ,இணைப்பாளர் -ரி.எம் ஜஹான், இணைப்பாளர் -ஏ.லவக்குமார், இணைப்பாளர் -றகுமான், போசகர்கள் -ஹிபத்துல் கரீம், எம்.பி.அக்மல், எம்.ஏ.நஜீமுத்தீன், ஏ.எல் றபீக், வி.வரதன், ஆலோசகர்கள் வைத்தியர்களான ஜெ.எம்.றிலான், ஜி.எம்.கமால், எஸ்.தர்மலிங்கம் ஆகியோர் புதிய நிர்வாக தெரிவில் உள்வாங்கப்பட்டனர்.

இதன்போது இப்பிராந்தியத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

சுமார் 35 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்ற இக்கழகத்தில் பல்லின மக்கள் உள்வாங்கப்பட்டு இயங்குவதுடன் பிரதேச வாதமற்ற ஒரு சிறப்பான கழகமாக இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிராந்தியத்தில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா அனர்த்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.







Sunday, October 16, 2022

வாசிப்போம்.! வாசிப்பை நேசிப்போம்.!


2022' ஓக்டோபர் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

வாசிப்பு என்பது தனி மனித ஆளுமையின் அஸ்திவாரங்களின் ஒன்று. வாசிப்பை நேசிக்காத மனிதன் இவ்வுலக வாழ்க்கையின் முழுமையினையும், வாழ்வியலின் யதார்த்தத்தினையும் புரிந்து சக்தி மிக்க ஆழுமையாக திகழ முடியாது.

வாசிப்பு ஒரு மனிதனை முழுமையடையச் செய்யும், வாசிப்பு அவனை வாழவைக்கும், வாசிப்பு மனிதனுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 

வாசிப்பினை மூலதனமாக்கிவர்களே இவ்வுலகில் ஆற்றல்மிக்கவர்களாகவும் ஆட்சியாளர்களாகவும், சாதனை படைத்தவர்களாகவும் ஆளுமைமிக்கவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆதலால் வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்.

இதனை மூல மந்திரமாகக் கொண்டே இலங்கை அரசு 2004 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாக நூலகங்கள் தோறும் பெரு விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக பொது மக்களையும் மாணவ மாணவிகளையும் வாசிப்பின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பில் இலங்கை அரசு நூலக ஆவணங்கள் சபையின் ஊடாக வருடத்துக்கு ஒரு தொனிப்பொருளை மையமாகவைத்து வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக பல் வகையான நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்கு சுற்று நிரூபங்களை வெளிப்படுத்துவதுடன் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைகளுக்காக கல்வி அமைச்சு உள்ளுராட்சி அமைச்சு மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகளையும் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றது. 

"அறிவார்ந்த சமுகத்திற்கான வாசிப்பு" என்பதே 2022ம் ஆண்டின் ஒக்டோபர் வாசிப்பு மாதத்தின் பிரதான கருப்பொருளும், இலக்குமாகும். இது நமது அரசின் மிக உன்னதமான வேலை திட்டமாகும். இதற்கமைவாக இவ்வருடம் கீழ்வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்று நிரூபத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன..

*அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அனுகலை வழங்குவதல் தொடர்பில் இலக்கை அடைய சமூக எழுத்தறிவு மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல். 

*ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தித் திட்டத்தின்  ஐந்தாவது நோக்கத்தின் படி  "பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் " என்ற இலக்கை அடைய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

*ஆராட்சியாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தகவலை தேடும் பிரதேச பொது மக்களின் தேவைகளுக்காக தகவலை அணுகுவதற்கு தேவையான வசதிகள் மற்றும் உதவிகளை வழங்குதல்.

*நூலக சமூகத்தின் முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி நடவடிக்கைகளுக்காக பொருத்தமான திட்டங்களை செயற்படுத்தல்.

*இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர் கல்வி தேவையுள்ள அங்கத்தவர்களின் தகவல் தேவைகளை அடையாளம் காண நடவடிக்கை எடுத்தல்.

* உள்ளூராட்சிப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடும் ஒரு நூலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு வீட்டு நூலகங்களை தொடங்குவதற்கான திட்டங்களைச் செயற்படுத்தல்.

*வீட்டு நுகர்விற்கு பொருத்தமான பயிர்கள் மற்றும் தாவரங்கள் பற்றி விழிப்புணர்வூட்டுவதுடன் அப்பயிர்களை வளர்ப்பதற்கு தேவையான தகவல்களை வழங்குதல்.

* வாசகர் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு வாசகர்களின் வீடுகளிலும் வீட்டுத் தோட்டங்களை செய்வதற்கு ஊக்குவித்தல்.

*பயிர்களின் விற்பனை  பரிமாற்றம் தொடர்பான சந்தைப்படுத்தல் வசதிகளுக்கு நூலக வளாகத்தை வழங்குதல்

*இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நூலக சேகரிப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல்களை விளம்பரப்படுத்தல்.

*உள்ளூர் கைத்தொழில்கள் தொடர்பான பல்வேறுபட்ட சுயதொழில்கள் தொடர்பான அறிவைப் பெறுவதற்கு வழிகாட்டுதல்.

* "பசுமை நூலகம்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றுச் சூழலை பாதுகாத்தல் தொடர்பாக நூலகம் சார்பில் செய்யக்கூடிய செயற்பாடுகளை செய்தல்.

* பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கான சேகரிப்பு மையமாக நூலகம் செயற்படுதல் அல்லது அதனுடன் தொடர்புடைய உள்ளூராட்சி நிறுவனத்தை வழிநடாத்தல்.

உள்ளூர் வாசகர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வடிவமைப்புக்களைக் கொண்ட இதழ்கள் மற்றும் சுவரொட்டிகளை வெளியிடுதல்

*தொனிப்பொருளுடன் தொடர்பான பல்வேறுபட்ட போட்டிகளை நடத்துதல் (கட்டுரை போட்டி, சித்திரப்போட்டி)

*தொனிப்பொருளுடன் தொடர்பான போஸ்டர்களை வடிவமைத்தல்.

*புதிய அங்கத்தவர்களை சேர்த்தல் மற்றும் இலவச அங்கத்துவத்தை வழங்குதல்

*நூலகம் பற்றிய விளம்பரப் பிரச்சாரங்களை நடாத்துதல்

* தொடர்புடைய பிரதேசத்தில் சிறந்த வாசகரைத் தேர்ந்தெடுத்தல்

*நடமாடும் நூலக சேவைகளை நடாத்துதல்.

*சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க கதை கூறும் நேரம் சிறுவர் படங்கள் சிறுவர் நாடகங்கள் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளைச் செயற்படுத்தல்

*சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் பிற ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

*வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஏனைய நூலகங்களுடன் இணைந்து கூட்டுறவுத்திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

* நூலக முகநூல்  பக்கத்துடன் இதுவரை இணையாத வாசகர்களை அடையாளம் கண்டு அவர்களை முகநூல் பக்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் முகநூலில் வாசிப்பு தொடர்பான மேற்கோள் உரைகள் மற்றும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளல்.

*அச்சு மற்றும் இலரத்திரனியல் ஊடகங்களின் மூலம் நூலகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுதல்.

* உள்ளூரில் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் பொது மக்களை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இவ்வாறான திட்டங்களை செயற்படுத்தும் போது ஏற்படுகின்ற அறிவியல் மாற்றங்களின் தாக்கம் வாசிப்பின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்கப்படுகின்றது.

சர்வதேச ஆய்வுகளின்படி 19 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களே அவர்கள் அனைவரும் பாடசாலை செல்லும் மாணவர்கள் இவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகிவருகின்றமை கவலைக்கிடமாகவுள்ளது.

இவர்கள் வாசிப்பின் பெறுமதியினையும், அதன் அவசியத்திணையும் புரியாதவர்களாக பாடசாலை பாட விதானங்களை மட்டும் படித்து பரீட்சைக்கு தோற்றுபவர்களாகவும்  அதில் சித்தியடைந்து பட்டங்களை பெற்று தொழில் பெறுகின்ற குறுகிய நோக்கத்துடனேயே அவர்களது வாழ்வு முடக்கப்படுகின்றது.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அதனை இலக்காகக் கொண்டே மாணவர்களை வழி நடாத்திக் கொண்டிருக்கின்றனர். பாடசாலை கற்றலுக்கு மேலாக தனியார் வகுப்புகள் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அவர்களின் அறிவுத்தேடல் மழுங்கடிக்கப்படுகின்றது.

இந்த நவீன உலகின் சவால்களை முறியடித்து வெற்றி இலக்கு நோக்கி பயணிப்பதற்க்கும், தனிமனித ஆளுமை மிக்கவராகவும்  சமூக அங்கீகார முடையவராகவும், பொது அறிவு மிக்கவராகவும், தனித்துவமுடையவராகவும், சக்தி மிக்கவராகவும் நீங்கள் ஆகவேண்டுமாயின் நீங்கள் சிறந்த வாசிப்பு பழக்கத்தை உடையவராக மாறுங்கள்.

ஒரு தனி மனிதனுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவன் தனித்துவமான சிறந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான சிறந்த பண்புகள் மேலோங்க வேண்டுமாயின் நூல்களை நேசிப்பவராகவும் அவைகளை இரசித்து வாசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

பல நூல்களை வாசிக்கின்றவர் பல பெறுமாணங்களை பெறுகின்றார். அவர் பெறுகின்ற அந்த பல பெறுமாணங்கள்தான் அவரை தனித்துவமானவராக மேலோங்கச் செய்கின்றது. அதன் மூலம் அவர் அச்சமூகத்தின் தனிமனித அங்கீகாரத்தை பெறுகின்றார். 

வாசிப்பு என்பது ஓர் அற்புதமான பழக்கம். இதன் மூலம் கிடைக்கும் அறிவும் அதனால் பெருகும் ஆற்றலும் நம்மை பண்படுத்தி  நம்மை பட்டை தீட்டி வைரமாக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனை நம்மில் பெருந்தொகையானவர்கள் அறியாமல் ஓய்வு காலத்தை வீணடித்து விடுவது ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாகும். தேனீர் கோப்பையோடு முற்றத்தில் இருந்துகொண்டு பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றையும் வாசிப்பதும் அதிலுள்ள சுவாரஸ்யங்களை நம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சொல்லி சிலாகிப்பதும் நம் மத்தியில் அருகிப் போய்விட்டது.

இந்த துர்ப்பாக்கி நிலைமாற்றப்பட்டு எதிரகாலத்தில் சிறியவர்களுடன் சேர்ந்து பெரியவர்களும் வாசிப்பாளர்களாக மாற வேண்டும் அப்போதுதான் நமது பிள்ளைகளான இளையவர்களும் வாசிப்பாளராக மாறுவார்கள்.

இவ்வாறு நல்ல புத்தகங்களை நீங்கள் வாசிக்க வாசிக்க உங்களின் அறிவு பல விடயங்களை இரசித்து அதன் மூலம் வாழ்வில் நல்ல கோட்பாடுகளை உருவாக்க முடியும். அதனூடாக ஒரு சிறந்த வாழ்க்கையினை உருவாக்கி கொள்வதுடன் நமது பிள்ளைகளையும் நமது சமூகத்தினையும் நன்கு சீரமைக்க முடியும்.

பொதுஅறிவு, இரசிப்புத்திறன், ஞாபக சக்தி, பிழையில்லாத எழுத்து, நேர்த்தியான வசனநடை, சிறந்த பேச்சு என்பவற்றை கட்டமைக்க வாசிப்பு இன்றியமையாததாகும். பரீட்சைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, பல்கலைக்கழகம் செல்ல, பட்டம் பெற, பதவிகள் பெற எவ்வகையான தலைபிலும் உரையாற்ற வாசிப்பே அடிப்படையாகும்

இது மட்டுமன்றி ஏனையவர்களிலிருந்து நீங்கள் வேறுபட்ட திறனாளியகவும், தொழில் நிலையத்தில் ஆற்றல் மிக்கவராகவும், வினைத்திறன் மிக்கவராகவும், நீங்கள் அடையாளப்படுத்த படுவீர்கள. மேலும் நம்மை சில நேரங்களில் கவ்விக்கொள்ளும் விரக்தி, கோபம், இயலாமை, அசௌகரியங்கள், இன்னல்கள், துன்பங்கள் என்பவற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் வாசிப்பு இன்றியமையாத துணையாகும். 

அது சகல விடயங்களுக்கும் நமது உற்ற நண்பனாக வழிகாட்டியாக  நம்மை புடம் போட்டுக் கொண்டிருக்கும்.

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தகவல்களையும், அறிவுகளையும் அறிந்து கொண்டு அவற்றை மூலதனமாக்கி நாளைய உலகை வெற்றி சூட வாசிப்பு அத்தியாவசியமானதாகும். 

ஆதலால் கண்டதையும் கற்று பண்டிதன் ஆக வாசிப்போம்.! வாசிப்பை நேசிப்போம்.!

அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி 

வருமான  பரீசோதகர் - கல்முனை மாநகர சபை

அல்ஹிலால் வித்தியாலய அதிபர் நஸார் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு..!

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்துக்கு அண்மையில் திடீர் விஜயம் மேற்கொண்ட மு.கா பதில் பொருளாளர் ஏ.சி.யஹியாகான், பாடசாலையின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பாடசாலையின் முன்னேற்றம், அதிபரின் சேவை என்பனவற்றில் திருப்தியடைந்து மகிழ்ச்சி அடைந்த யஹியாகான், அதிபர் யூ.எல்.நஸார் அவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் யஹியாகான் பௌண்டேஷன் முக்கியஸ்தரும் பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.இல்யாசும் கலந்து கொண்டார்.

Tuesday, October 11, 2022

கல்முனை அல்-மிஸ்பா சாதனை வீரன், யஹ்யாகானினால் கௌரவிப்பு..!

கல்முனை அல்-மிஸ்பா வித்தியாலய வரலாற்று நாயகனையும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய ஏனைய மாணவர்களையும் வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது சாதனை வீரன் மற்றும் பயிற்றுவித்த ஆசியர்கள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், மு.கா.பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகானினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவனுக்கு பணப்பரிசும் வழங்கி கௌரவித்தார்.



Monday, October 10, 2022

அவசர நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் ஆலோசனைப் பட்டறை..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.- LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பதற்கான ஆலோசனைப் பட்டறையொன்று கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (10) கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் மற்றும் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இப்பட்டறையில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.பி.மௌலானா, என்.எம்.சாஹிர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இப்பட்டறையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ஏ.ஆர்.செலஸ்டினா, சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், சுபைல் அஸீஸ், ஏ.எம்.சித்தி நஸ்ரின் மற்றும் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்களுடன் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகங்கள், இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியக் காரியாலயம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சில முக்கிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் பொதுவான விரிவுரைகள் மற்றும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் குழுக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெறவுள்ள நிதியைக் கொண்டு, முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்களை, பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை மையப்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்துவதை நோக்காகக் கொண்டு, முழுநாள் செயலமர்வாக இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

இந்த ஆலோசனைப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளராக கல்முனை மாநகர சபையின் உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌஷாத் பணியாற்றியிருந்தார்.