Tuesday, August 31, 2021

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் மதியபோஷனம்..!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிண்ணியா பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு மதிய உணவு விநியோகிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான பெண்கள் அணித் தலைவி ஜரீனாவுடன் கட்சியின்  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



metromirrorweb@gmail.com

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய அதிபராக எம்.ஐ.சம்சுதீன் கடமையேற்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய அதிபராக எம்.ஐ.சம்சுதீன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினராலும் உதவி அதிபர் எம்.எம்.நிஸார் மற்றும் ஆசிரியர்களினாலும் நலன் விரும்பிகளினாலும் அவர் வரவேற்கப்பட்டதுடன் இங்கு அதிபராகக்  கடமையாற்றி, கல்முனை அல்பஹ்ரியா தேசிய பாடசாலைக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற எம்.எஸ்.எம்.பைசால் அவர்களிடமிருந்து பொறுப்புகளைக் கையேற்றார்.

இலங்கை அதிபர் சேவை தரம்-2 ஐ சேர்ந்த எம்.ஐ.சம்சுதீன் அவர்கள் இதற்கு முன்னர் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் அதிபராக பல வருடங்கள் கடமையாற்றி, இப்பாடசாலையின் பௌதீக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பெரும் பங்காற்றியிருந்தார்.

அதற்கு முன்னர் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதியில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்களை சித்தி பெறச்செய்து, அப்பாடசாலையை பிரபல்யமிக்க பாடசாலையாக முன்னிலைக்குக் கொண்டு வருவதில் எம்.ஐ.சம்சுதீன் அவர்கள் முக்கிய பாத்திரமாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Monday, August 30, 2021

இலங்கையை உலகுக்கு காட்டியவர் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர்..!

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நான்காவது வருட தினத்தை  முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக, இலங்கையை உலகத்துக்குச் சொன்னவர்களுள் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எச்.அஸ்வர். அவரது 4ஆவது வருட நினைவு தினம் (30) இன்றாகும். 

அவர் மறைந்தாலும் அவரது காலத்தில் வாழ்ந்த நாங்கள் அவருக்காகச் செய்கின்ற கைம்மாறு, அவரது பணிகளை ஞாபகப்படுத்துவதும், அவருடைய சேவைகளை எடுத்துச் சொல்வதும், எதிர்கால சந்ததியினருக்கு அதனைச் சரியாகச் சொல்வதும்தான் மிகப் பொருத்தமானது என நினைக்கின்றேன்.

மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர், சுமார் 8 தசாப்தங்கள் அதாவது 80 வருடங்களுக்கு மேலாக உலகில் வாழ்ந்தவர். கொழும்பு சாஹிராக் கல்லூரியிலே மர்ஹும் ரீ.பி.ஜாயா, மர்ஹும் ஏ.எம்.ஏ.

அஸீஸ் போன்ற பெருந்தலைவர்கள் மத்தியில் கல்வி கற்று, உயர்ந்து வந்தவர். அந்த சாஹிராவில் கற்ற காலத்தில், தன்னுடைய குருவாக இருந்தவர்களுள் ஒருவர் என்று மர்ஹும் அறிஞர் எஸ்.எம்.கமால்தீன், மர்ஹும் டாக்டர் அல்லாமா எம்.எம்.உவைஸ் அதேபோல மர்ஹும் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் போன்றவர்களைச் அடிக்கடி சொல்வார். எதிர்காலத்தில் அதே பாக்கீர் மாக்காருடைய அந்தரங்கச் செயலாளராக அஸ்வர் வந்து சேர்கிறார்.

1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் மர்ஹும்களான டாக்டர் எம்.ஸி.எம்.கலீல், ரீ.பி.ஜாயா, சேர். ராசிக் பரீட்,  பதியுதீன் மஃமூத், அதேபோல பழீல் ஏ.கபூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களுடைய காலத்தில் வாழ்ந்து பெற்ற படிப்பினைகள்தான். அடிக்கடி மர்ஹும் டாக்டர் எம்.ஸி.எம் கலீலை தன்னுடைய அரசியல் குரு என்றும் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் மர்ஹும் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் என்றும் சொல்லுவார். மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததனால் வாழ்க்கையில் நான் நிறைய உதாரணங்களைக் கண்டேன். என்னோடு, மூத்த ஊடகவியலாளர் என்.எம் அமீனும் சேர்ந்து வலதும் இடதுமாக முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம்.ஏ. பாகீர் மாகாருக்கும் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வருக்கும் இருந்து, அவர்களது அரசியல், ஒழுக்க, சமய வாழ்க்கையில் இருந்து நிறைய விடயங்களைப் படித்துக் கொண்டோம்.

அடிக்கடி இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வருகின்ற போதெல்லாம் மர்ஹும் எம்.ஏ. பாகீர் மாக்கார் சபாநாயகராக இருந்து தலைமை வகித்த, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளினை எடுத்துச் சென்றார். அதே வாலிப முன்னணிகள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட போது அந்த முன்னணிகளின் தூதுவர்களாக நாங்கள் இருந்தோம்: செயற்பட்டோம். இலங்கை முஸ்லிம்களை குறிப்பாக, உலகத்துக்குச் சொன்னவர் மர்ஹும் அஸ்வர் என்று ஆரம்பத்தில் நான் சொன்னேனே அதற்கு காரணம் இருக்கிறது.

1967ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டாடப்பட்டது. அப்போது முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் என்று ஒன்று இருக்கவில்லை. இலங்கை இஸ்லாமியர்களுடைய மத்திய நிலையமாக இல்லாமிய நிலையம் என்று முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச். முஹம்மத் தலைமையில் ஓர் அமைப்பு இருந்தது.

ஹிஜ்ரி நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று மர்ஹும் அஸ்வர் கங்கணம் கட்டி, அந்த விழாவினைக் கொண்டாடினார். அவர் நடாத்திய அந்த மாபெரும் மாநாடு கொழும்பு சுகததாச விளையாட்டு உள்ளக மற்றும் வெளி அரங்குகளில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் இருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டுக்கான ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

மர்ஹும்களான டாக்டர் எம்.ஸி.எம். கலீல், எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கீர் மாகார், ஏ.ஸீ.எஸ். ஹமீத், பதியுதீன் மஃமூத் என்ற பெரும் தலைவர்கள் இணைந்து இந்தப் பெரும் விழாவை எடுத்தனர். எனக்கு இப்போதும் ஞாபகம். அப்போது எனக்கு 11, 12 வயதிருக்கும். அந்த வயதிலும்; ஓடோடி வந்து அந்த நிகழ்ச்சியில் பாடசாலை மட்டத்தில் இருந்து கலந்து கொண்டேன். அன்றிலிருந்து அரசியல் ஆர்வத்தில் தூண்டப்பட்ட நான், அவரோடு இணைந்து பிற்காலத்தில் சமூக, சமய, கல்விப்பணிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெற்றேன்.

அந்த முத்திரை வெளியீட்டு விழாவின் மூலமாக முஸ்லிம் சமூகத்தை வெளிப்புறச் செய்தவர்களுள் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரும் ஒருவர். முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச். முஹம்மதுக்கு  மர்ஹும் அஸ்வர் பக்கபலமாக இருந்தார். ராபிததுல் ஆலமுல் இஸ்லாம் என்ற உலக முஸ்லிம் லீக்கை இலங்கைக்கு எடுத்து வந்தவர்கள் அதன் ஸ்தாபகச் செயலாளர் டாக்டர் பஸ்லுல் ரஹ்மான் அன்ஸாரி அதேபோல டாக்டர் உமர் நஸீர் போன்றவர்கள். உலக முஸ்லிம் லீக் ராபிதாவுடைய தலைவர் போன்றவர்கள் இலங்கை வருவதற்கு காரணமாக இருந்தவர் மர்ஹும் அஸ்வர். அவர்களோடு சேர்ந்து உலக நாடுகளுக்கு, உலக மாநாடுகளுக்கு சென்ற பெரும் பாக்கியம் பெற்றவரும் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்.

மர்ஹும் எம்.எச். முஹம்மத் அடிக்கடி சொல்வார். எனக்கு இரண்டு பேர் இருந்தனர். ஒன்று மர்ஹும் எம்.பி.எம். மாஹிர் அடுத்தவர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர். இந்த இரண்டு பேரும் என்னுடைய சமூக மற்றும் சமயப் பணிகளை எடுத்துச் சென்றவர்கள். இந்த இருவரின் மூலமாக என்னுடைய இயக்கத்தையும் சமுதாயத்தையும் பாதுகாத்து வளர்த்தவனாக இருக்கின்றேன். அந்த வகையிலே முஸ்லிம் லீக்கை உலகளாவிய மட்டத்திலே உலக முஸ்லிம் லீக்கில் இணைத்துப் பதிந்து இந்த நாட்டுக்குச் சேவை செய்வதற்கு வாய்ப்பாக இருந்தவர்களுள் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் மிக முக்கியமானவர் என்று மர்ஹும் எம்.எச். முஹம்மத் அடிக்கடி சுட்டிக்காட்டுவார்.  

எம்.எச். முஹம்மத் மரணமானதின் பின்னர்தான் ஏ.எச்.எச். அஸ்வர் மரணமாகின்றார். ஆனால், அவர்கள் காலத்தில் செய்த பணிகளை அடிக்கடி இருவரும் பேசிக் கொள்வர். நான் சின்ன வயதில் இருந்து அவர்களிடமிருந்து அரசியலைப் படித்தேன். ஆத்மீகம், கல்வி, சமூக, அரசியல், பொருளாதாரப் பணிகள் பற்றிப் படித்தேன். கல்வித்துறையிலே முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்த காலத்தில் மர்ஹும் கலாநிதி  பதியுதீன் மஃமூத் வந்து சேர்கிறார். அவருடனும் இணைந்து அரசியல் பணி செய்தவர்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தனிக்கட்சி அமைத்துச் சென்றதினால், தனியாக சமுதாயத்தில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர் கிழக்கிலங்கைக்கு தலைமை வகித்தார். முழு நாட்டுக்கும் தலைமை வகித்த, மர்ஹும்களான சேர். ராசிக் பரீட், பதியுதீன் மஃமூத் என்ற பெரும் தலைவர்கள் நாட்டிலே இருந்து செய்த பணிகளை எப்போதும் அடிக்கடி ஞாபகப்படுத்தக் கூடிய ஒருவராகத்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் இருந்தார்.

மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர் ஓர் அரசியல் கலைஞர்: இல்லை அறிவுக் கலைஞர். அதேபோல் வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைஞர். அவரோடு நான் நிறைய வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அவர் கடைசி காலங்களில் மஹிந்த அரசை ஆதரிக்கக் காரணம், அரசியலில் அவர் சார்ந்த கட்சி அவரைக் கைவிட்டது. அவர் சார்ந்த கட்சியினர் சுயநலவாதிகளாக மாறினர். அவர் பொறுமையாக எவ்வளவு காலம் இருப்பது என எண்ணிக் கொண்டு தன்னுடைய பணி அரசியல் பணிதானே என்று மஹிந்த ராஜபக்ஷவுடைய பொதுஜன பெரமுனவில் இணைந்து அதனை வளர்ப்பதில் பாடுபட்டார். அந்தப் பகுதியிலும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அதற்குக் காரணம்.

வானொலியில் நான் கடமையாற்றிய சுமார் நாற்பதாண்டு காலத்துக்குள் எனக்கு 25 ஆண்டுகள் பக்கபலமாக இருந்தார். நிறைய ஆலோசனைகள், அறிவுரைகளைத் தந்தார். முஸ்லிம் தலைவர்களைத் தேடித்தேடி அவளுடைய வாழ்க்கையை சுவடிக்கூடமாக வானொலி நிலையத்திலே பாதுகாத்து வைத்து அதனை ஒலிபரப்புங்கள். எதிர்வரும் சந்ததியினருக்கு அது பாடமாக இருக்கட்டும் என்று அருமையாக ஆலோசனை சொல்லி என்னை வழி நடாத்தி கொண்டு வந்தவர்தான் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர்.

அவருடைய பணிகளில் இன்னொரு முக்கியமானதொரு நிகழ்வு என்னவென்றால், 2010ஆம் ஆண்டில் யுத்தம் வென்றதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்குச் செல்கின்றார். அப்போது அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரையும் அழைத்துச் செல்கின்றார்.

அந்த உலக மாநாட்டிலே மஹிந்த ராஜபக்ஷ பேசுவதற்கு நேரம், நாள் என்பன குறிக்கப்பட்டிருந்தன. அப்போது பேசுவதற்கு செவ்வாய்க்கிழமை என்று சொன்னால், திங்கட்கிழமை அந்திநேரத்திலே மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் அந்த மண்டபத்துக்குச் சென்று, இரவோடு இரவாக செயலாளரை அணுகி, அங்கே மஹிந்த ராஜபக்ஷ பேசப்போகின்ற அந்தப் பேச்சை ஆங்கிலத்திலும் அரபியிலும் என உலக பாஷைகள் பல மொழிகளிலே முக்கியமாகத் தொகுத்தெடுத்து அவர் ஒவ்வொரு ஆசனத்திலும் போட்டிருக்கிறார்.

மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றபோது செய்த விடயம் பற்றி, மஹிந்த ராஜபக்ஷ இதன் பின்னர் கேள்விப்பட்டதும் புல்லரித்துப் போனதாக நான் கேள்விப்பட்டேன். அப்படி மிகவும் விஸ்வாசமாக நடந்த ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர்தான் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்.

மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர், ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அவர் சேர்த்த பொருட்கள் எதுவும் இல்லை. வாழ்ந்த வீடு கடைசி காலங்களில்தான் அவர் கொஞ்சம் விசாலமாகக் கட்டிக் கொண்டார். தன் பிள்ளைகளைக் கூட அரசியல் வாரிசாக அமர்த்திக் கொள்ளவில்லை. என்றாலும், சமூகம், சமயம், சன்மார்க்கம், கல்வி, அரசியல், பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் அவர் தலையிட்டு வாழ்ந்தாலும் எதிலும் நிரந்தரமாக இருக்கவில்லை. மக்களுக்குச் சேவை செய்வது, கொழும்பு சாஹிராவில் மக்களுக்குத் தாராளமாக இடம் பெற்றுக் கொடுப்பது, கல்வியை உயர்த்துவது, அகில இலங்கை முஸ்லிம் லீக் மர்ஹும் டாக்டர் எம்.ஸி.எம். கலீல், மர்ஹும் எம்.ஏ.பாகீர் மார்க்கார் இவர்களது சிந்தனையில் வளர்த்தெடுப்பது, குறிப்பாக, அகில உலகத்தோடு இலங்கை முஸ்லிம்களை இணைத்து வைப்பது, ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்காக வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது, அதிலும் விசேஷமாக மக்காவில் இருந்த  'சிலோன் ஹவுஸ்' இலங்கை இல்லத்தை எப்படியாவது எடுத்து கொடுக்க வேண்டும் என்று மர்ஹும் அஸ்வர் போராடினார்- பேசினார்- குரல் கொடுத்தார். ஆனால், பிற்காலத்தில் அதற்கு என்ன நடந்ததென்று கூட தெரியவில்லை. இதனால் மர்ஹும் அஸ்வர் கவலையோடு காட்சி அளித்தார்.

இவை எல்லாவற்றுக்கு மேலாக முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சராக இருந்த காலத்திலே அவர் சாதித்தவைகள் நிறைய இருக்கின்றன. 1991 ஆம் ஆண்டு முதன்முதலாக அவர் எண்ணம் வைத்து நடாத்திய 'வாழ்வோரை வாழ்த்துவோம்' கலைஞர் தெரிவில், சுமார் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு, அந்த 25 பேருக்கும் 1991 ஆம் ஆண்டில் பிரேமதாச அரசாங்கத்தில் அவர் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் என்ற வகையிலே ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபா பணம் கொடுத்து, பொன்னாடை போர்த்தி, பொற்கிழி கொடுத்து, விசேஷமாக அரபு மொழியிலே பட்டமளித்து, பாராட்டி, கௌரவித்தார்.

பெரும் விழாவாக அதனை எடுத்தார். அரசு உயர்மட்டத் தலைவர்கள், அமைச்சர்கள் இந்நிகழ்வுக்காக வரவழைக்கப்பட்டு, அவர்கள் கைகளால் வழங்கப்பட்டன. இது ஒரு பெரிய சாதனை. இவ்விழா 4 தடவைகள் மர்ஹும் அஸ்வர் தலைமையில் நடைபெற்று, மொத்தமாக  135 பேர் கௌரவிக்கப்பட்டனர். இதுபோன்ற விழா இவருக்கு முன்னரும் பின்னரும் இடம்பெறவில்லை.

அதுமட்டுமல்ல,  ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் முதலாம் திகதி மஸ்ஜித் மதரஸா அபிவிருத்தி நிதியம் ஒன்றை ஆரம்பித்தார். பைத்துல்மால் ஐ  பள்ளிவாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் தோறும் திறந்து வைக்க வேண்டும், ஆரம்பிக்க வேண்டும்  என்று ஆலோசனை கூறி அதனை அமுல்படுத்த எத்தனித்தார். அது மாத்திரமல்ல, முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்கள், வகுப் வோட், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிகளை பரவலாக்க வேண்டும் என்ற எண்ணம் வைத்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முதல் பொறுப்பு அதிகாரியான மர்ஹும் எம்.எம். உவைஸ் தன் குருநாதர் என்றும் அவருக்காக வேண்டி அல்லாமா என்ற அருமையான உயர்ந்த ஒரு சன்மார்க்க பட்டத்தை சிறப்பாக வழங்கி கௌரவித்தார். அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடைய அலரி மாளிகையில் இந்த விழாவை நடாத்தினார். அதில் எனக்கும் கலந்து கொள்ள கிடைத்தது. பேராசிரியர் சாய்பு மரிக்கார், தமிழ் நாட்டிலிருந்து அவ்விழாவுக்காக இங்கு வந்து வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இப்படி சிறப்பான பணிகள் நிறைய செய்திருக்கிறார்.

இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக, தங்களுடைய வரலாற்றை, வாழ்வியலை பதிந்து வைக்க வேண்டும் என்று  ஆசை வைத்தார். ஆண்டு தோறும் நடாத்துகின்ற மீலாத் விழாக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடாத்தப்பட்டு, அந்த மாவட்டத்தின் வரலாற்றை புத்தகமாகப்  பதிவு செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இவ்வாறு புத்தளம்,  அம்பாறை,  கம்பஹா, கொழும்பு, கேகாலை,  இரத்தினபுரி, மாத்தறை என்றெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்து வரலாறுகளை வெளியிட்டு இருக்கிறார். இதற்காகவேண்டி அவரது செயலாளராக இருந்த கல்விமான்  மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜமீலும் மிகவும் பாடுபட்டார்.

முஸ்லிம் கலை இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பணப்பரிசில்கள் கொடுத்தார். அவர்களைப் பாராட்டினார். அவர்கள் நடாத்துகின்ற வெளியீட்டு விழாக்களில் முக்கியத்துவம் கொடுத்து கலந்து கொண்டார். உற்சாகப்படுத்தினார். அவர்களது புத்தகங்களை வாங்கினார். அறபு, இஸ்லாமிய எழுத்தணி கண்காட்சிகளை நடாத்தினார்.

ஆண்டுதோறும் முஸ்லிம்களின் பெருநாள் தினங்களான நோன்பு, ஹஜ் பெருநாட்களிலே  முஸ்லிம்களுக்கு  எதுவும் பிரச்சினைகள் வராது அரசாங்க மட்டத்திலிருந்து பேசி, அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று, அரசியல்வாதிகளதும் மற்றவர்களதும்  உதவியைப்பெற்று, மிகச் சிறப்பாகப் பணியாற்றி பாதுகாத்து வந்தார். ஆனால், சமூகம், சமூகம் என்று பாடுபட்டு, உழைத்த மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வருடைய வாழ்வையும் பணியையும்  மக்கள் புரிந்து  கொண்டால் அவர் மனிதாபிமான  அரசியல்வாதி என்று நிச்சயம் அங்கீகாரம் கொடுப்பர்.  

 இன்று அவர் நம் மத்தியில் இல்லையே என்று கவலைப்படுகிறோம்: ஆதங்கப்படுகிறோம். அவருடைய பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மூன்றாண்டுகள் அவரது நினைவு விழாக்களை தொடர்ந்து நடாத்தி வந்தோம். கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தாபர்களில் ஒருவரான ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் அதன் தலைவர் எம்.ஏ. பாகீர் மாகார் ஆகிய இருவரையும் ஞாபகப்படுத்தி, கொழும்பு எல்விடிகல மாவத்தை மண்டபத்தில் 50 பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாக நடாத்தினோம்.

அந்நிகழ்வில், ஏழை மாணவர்களுக்கு கல்விப் புலமைப் பரிசில்களும் கொடுத்தோம். இப்படி இருந்து செய்த பணிகளை இந்த ஆண்டும் நினைவுபடுத்தி விழா நடாத்த எண்ணினோம். கொரோனா காரணமாக நடாத்த முடியவில்லை.

 ஆனால், முக்கியமான கோரிக்கை ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கிறோம். அதாவது மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் ஞாபகார்த்தமாக அவரது முத்திரைத்தலை வெளியிட்டு அவரைக் கௌரவிக்க வேண்டும் என்றும் இது நான்காவது வருடம் ஐந்தாவது வருடத்துக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

அகில இலங்கை முஸ்லிம் லீக்கினுடைய முன்னாள் தலைவர் என்.எம். அமீனோடு சேர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாகார் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைப்போம் என கோரிக்கை விடுத்திருக்கிறேன். அந்தப் பணி மிகச் சிறப்பாக நடக்க இறைவன் துணை புரிய வேண்டும் என்றும் வல்ல இறைவன் அவரது பணிகளுக்கேற்ற கூலிகளை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் மேலான சுவர்க்கமான ஜென்னத்துல் பிர்தௌஸையும் கொடுக்க துஆ செய்கிறேன்.

எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்

Monday, August 23, 2021

மரண அச்சுறுத்தல்; கைதியை ஆஜர்படுத்த உத்தரவு..!


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தபோது வைத்தியருடன் இருந்த கைதியை எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று (23) உத்தரவிட்டார்.

கைதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை பதிவு செய்யுமாறு பொரளை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலையைச் சுற்ற வைக்கும் தலிபான்களின் சர்வதேச உறவு?


-சுஐப் எம்.காசிம்-

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச் சொறிந்து கொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது.

இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள், மீண்டும் அரியணையில் அமர்ந்து இலட்சியப் பாதையில் சாதனை படைத்துள்ளமை ஆச்சர்யமானதில்லையா? அதுவும், அமெரிக்காவின் உதவியில் நிறுவப்பட்ட  15 வருட ஆட்சியை வெறும் மதவாதமல்லவா  வீழ்த்தியிருக்கிறது? எவ்வளவு பெரிய படைப்பலமும், பொருளாதாரப்பலமும், இராணுவ யுக்திகளும் இந்த மதவாதத்துக்கு முன்னால் நிலைப்படவில்லை. இதுதானே ஆச்சரியம்.

இதற்காகத்தான், இது பலப்படக் கூடாதென அமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்புகிறதோ? இப்போது விரும்பியென்ன பலன்? பெரும் கனவுடன் வளர்க்கப்பட்ட அமெரிக்க சார்பிலான ஆப்கான் அரசு இப்படிப் புரட்டிப் போட்டப்பட்டு விட்டதே! இதுதான், வல்லரசுகளுக்கு வந்துள்ள வருத்தம்.

இத்தனை சக்தியா இந்த மதத்துக்கு? அல்லது தலிபான்கள் விரும்பும் ஆட்சிக்கு? 2006 ஆம் ஆண்டு "பார்மியான் பௌத்த சிலைகளை" உடைத்ததால் வீழ்த்தப்பட்ட தலிபான் அரசு, மீண்டும் அரியணை ஏறுமென யாராவது நினைத்ததா? மீண்டும்  வந்துள்ளவர்கள் அதே ஆட்சியையா அமுல்படுத்துவர்?. இதுதான், எழுந்து வரும் கேள்விகளாகின்றன.

எனினும், ஆட்சியை அகற்றிய கையோடு தலிபான்கள் நடந்து கொண்ட விடயங்கள் சற்று முன்னேற்றத்தையே காட்டுகின்றன. இதுவரைக்கும் அங்கு தங்கியிருந்த வெளிநாடுகளின் தூதுவர்களை கௌரவமாக வெளியேற்றியமை, வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த பணங்களை மீளப்பெற்றுக் கொள்ள பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கியமை, அயல் நாடுகளின் குறிப்பாக பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் இந்தியாவின் உறவுகளைத் தொடர விரும்புகின்றமை எல்லாம், நவீன உலகுடன் இணங்கிச்செல்லும் நல்லெண்ணத் தூதாகத்தான் கருதப்படுகிறது.

தனித்துப் பயணித்ததால், தூக்கி வீசப்பட்ட அனுபவங்களில், தலிபான்கள் சில விடயங்களைக் கற்றுத்தானுள்ளனர். போதை வியாபாரம், சிறுவர் படையணி, தனியான மதக் கல்வி, மட்டுப்படுத்தப்பட்டளவிலான பெண்களின் உரிமைகள், சர்வதேச உறவுகளைப் புறக்கணித்தல்,  ஆட்கடத்தல் இவைகளெல்லாம் அங்கீரிக்கப்பட்ட ஆட்சிக்கு அடையாளமில்லை.

இப்போது, கிடைத்துள்ள ஆட்சியதிகாரத்தை தக்க வைக்க, சர்வதேச அங்கீகாரம் கட்டாயம் அவசியப்படும். இதற்கான முதல் முன்னோடியைத்தான் தலிபான்கள் செய்துள்ளனர்.

கல்விப் புரட்சியில் ஆங்கிலம், விஞ்ஞானத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ள தலிபான்கள், மேலைத்தேய கல்வியை முற்றாகத் தடுத்து, இஸ்லாத்துடன் முரண்படும் எந்த சிந்தனைகளையும் அனுமதிக்கவில்லை.

இத்தனைக்கும், பெண்களுக்கு என்ன சொல்லப்போகிறது இந்தப் புதிய அரசு? வழமையான இறுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கில் பெண்கள் வெளியேறி அயல் நாடுகளுக்குள் தஞ்சம்புகவும் காத்திருப்பதாக அங்கிருந்து வந்த கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே, ஈரானுக்குள் நுழைந்த பல பெண்கள், துருக்கிக்குள் தஞ்சம்புகக் காத்திருப்பதாகவும் தகவல். ஏற்கனவே, பல நாடுகளின் அகதிகளைக் கையாள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள சர்வதேசத்துக்கு இதுவும் ஒரு தலையிடிதான். உண்மையில், தலிபான்களைப் புறக்கணிக்க முடியாத நெருக்கடிக்குள் சில அயல்நாடுகள் சிக்கத்தான் போகின்றன. வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமான பாதைகள், தலிபான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த அரசை இந்த அயல்நாடுகள் அங்கீகரித்தே ஆக வேண்டும்.

சுமார் 15 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நேட்டோ படையினர், அந்நாட்டு மக்களுடன் நெருக்கமாகப் பழகவில்லை. ஆக்கிரமிப்பு மனோநிலையில் செயற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர், சொந்தக் குடிமக்களுக்கு நெருக்கமாகச் செயற்பட்டதில்லை. அங்குள்ள இயற்கை வளங்களை அள்ளிச் செல்லும் இராணுவமாகவும், இஸ்லாத்தை நிந்திக்கும் அல்லது பொருட்படுத்தாத இராணுவத்தினராகவும் தானிருந்தனர். இதனால்தான், எண்ணிச் சில நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானை வீழ்த்த முடிந்தது தலிபான்களுக்கு.

இப்போதுள்ள பிரச்சினை இதுதான். பாகிஸ்தானிலும் இந்த மதவாதம் பற்றிக்கொண்டால், தலிபான்களின் பிடி, பிராந்தியத்தில் பலப்பட்டுவிடும். எனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைப் போன்று, பாகிஸ்தான் விடயத்தில் அமெரிக்கா அலட்சியமாக இருக்காது. இதுவும் இன்னுமொரு நெருக்கடியை சர்வதேசத்தில் ஏற்படுத்தாதிருந்தால் சரிதான்.

metromirrorweb@gmail.com

மலையகத்தில் ஊரடங்கு மத்தியிலும் மது விற்பனை; ஒருவர் கைது..!

(க.கிஷாந்தன்)

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என்றும் கூறினர்.

நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  தனிமைப்படுத்தல்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு..!



(க.கிஷாந்தன்)

வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது போல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் 23.08.2021 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று வட, கிழக்கு மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு விடயங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது வரவேற்க கூடிய விடயமாகும்.

அதேபோல மலையகத்திலும் இன்று எங்களுடைய மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக சம்பள உயர்வு பிரச்சினை, தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகள் கிடைக்காத சூழ்நிலை தடுப்பூசி தொடர்பாக சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமை என பல்வேறு பிரச்சினைகளை எமது மக்கள் சந்தித்து வருகின்றார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் மாத்திரமே அரசாங்கத்திற்கான ஒரு பாரிய அழுத்ததினை கொடுக்க முடியும். மலையக கட்சிகள் தனித்து நின்று செயல்படுவதால் எதனையும் சாதிக்க முடியாது.

அணைவருடனும் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான முன்னெடுப்புகளை உரியவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இன்று கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற இந்த சூழ்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் பல மைல்களுக்கு அப்பால் அமைக்கப்பட்டு இருப்பதால் எங்களுடைய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே ஏனைய மாவட்டங்களை போல மலையக பகுதிகளில் இருக்கின்ற பாடசாலைகள், ஆலய மண்டபங்கள், சனசமூக நிலையங்கள் இவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக செயற்படுத்த முடியுமாக இருந்தால் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அரசாங்கம் 2000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இந்த சூழ்நிலையில், அந்த தொகையானது மலையகத்திலே கடந்த காலங்களில் கட்சி ரீதியாக வழங்கப்பட்டதை போல் அல்லாமல் உரியவர்களுக்கு சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் சரியானவர்களை இணங்கண்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று அரசாங்கம் தன்னுடைய இயலாமையை மறைத்து கொள்வதற்காக அரசாங்கத்திற்குள் சிக்கல்கள் இருப்பது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி மக்களின் உண்மையான பிரச்சினைகளை மழுங்கடிக்க செய்வதற்கு முயற்சி செய்கின்றது.

எனவே அந்த செயல்பாடை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இலங்கை நாட்டிற்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றதோ, அனர்த்தங்கள் ஏற்படுகின்றதோ, அந்த ஒவ்வோரு சந்தர்ப்பத்திலும் இந்திய அரசாங்கம் தன்னுடைய உதவி கரத்தை நீட்டி இருக்கின்றது.

இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் எங்களுக்கு தேவையான ஒரு தொகை தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வைத்ததோடு, இன்னும் பல்வேறு உதவிகளை செய்தது.

இன்று ஓட்சிஜன் தடுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் கப்பல் மூவமாக 100 டன் ஓட்சிஜன் அனுப்பி வைத்துள்ளதோடு, எங்களுடைய கப்பல் மூலமாக கொண்டு வருவதற்கு 40 டன் ஓட்சிஜனையும் வழங்கியுள்ளது.

காலத்தின் தேவையறிந்து இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. எனவே இன்னும் பல உதவிகளை இந்திய ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் எங்களுடைய வெளியுறவு கொள்கையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

அதனை உணர்ந்து புதிய வெளியுறவு அமைச்சர் செயல்படுவார் என எதிர்ப்பார்க்கின்றோம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் லாபிர் கரிசனை காட்டினார்; அனுதாபச் செய்தியில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், யாழ்ப்பாண மாவட்ட மத்திய குழு உறுப்பினர் சகோதரர் கலாபூஷணம் மீரா லெப்பை லாபிர் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும், அன்னார் வடபுலத்தில்  முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அதிக கரிசனை காட்டி வந்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சகோதரர் மர்ஹூம் எம்.எல்.லாபிர் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டதிலிருந்து,  கேகாலை மாவட்டம், மாவனெல்லை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையிலும், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததோடு, ஊடகத் துறையிலும் உயரிய பங்களிப்புக்களைச் செய்து வந்திருக்கின்றார்.

நிலைமை ஓரளவு சீரான பின்னர், மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி தனது பணியைத் தொடர்ந்தார். இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுவதில் அவர் நெடுகிலும் அக்கறை கொண்டிருந்தார்.சகோதரர் லாபிர் எப்பொழுதுமே ஆழ்ந்த சன்மார்க்கப் பற்றுடையவராகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் விளங்கினார்.

எமது கட்சியைப் பொறுத்தவரையில்,    "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில்  நடைபெற்ற முக்கியமான பல கூட்டங்களில்  இயன்றவரை கலந்துகொண்டிருக்கின்றார்.

கண்டி, பொல்கொல்லையில் இறுதியாக நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அவர் வருகை தந்து முழு நாள் நிகழ்வுகளிலும்,மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸூல் அஃலா என்ற சுவன வாழ்வை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு , அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும்,உறவினர்களுக்கும் கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Media Unit

பிடியாணை பிறப்பிக்க வேண்டாம்; அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தல்..!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் விதித்த பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டாம் என்று, நீதிச் சேவைகள் ஆணைக்குழு, நாட்டிலுள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அத்தியாவசிய வழக்குகளுக்காக மட்டுமே நீதிமன்றத்தைத் திறக்க வேண்டும் என்றும், புதிதாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான சந்தேக நபர்களை மட்டும் நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளில் சந்தேக நபர்களையும் பிரதிவாதிகளையும் அழைப்பதற்கு அவர்களின் சட்டத்தரணிகளின் பிரதிநிதித்துவம் மட்டுமே போதுமானது என்று சுற்றறிக்கை மூலம் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், வழக்கறிஞரின் பிரதிநிதித்துவத்துடன் மட்டுமே அழைப்பாணை அனுப்பவும் மற்றும் மீதமுள்ள நடவடிக்கைகளை ஒத்திவைக்கவும் மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

25 சதவீத நீதிமன்ற ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஹிஷாலினி வழக்கில் 5ஆவது சந்தேக நபர் ரிஷாட்..!


முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றுமொரு வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் பணிப் பெண்ணாக வேலைச்செய்த, தலவாக்கலை-டயகமவைச் சேர்ந்த 16வயதான ஹிஷாலினின் என்ற சிறுமி, எரிகாயங்களுக்க உள்ளான நிலையில் மரணமடைந்தார்.

அந்த வழக்கிலேயே ரிஷாட் பதியுதீன் எம்.பி. 5ஆவது சந்தேக நபராக பெயர்குறிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் ஏனைய சந்தேக நபர்களான ரிஷாட் பதியுதீனின் மனைவி, ரிஷாட்டின் மாமனார் மற்றும் தரகர் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். @T/M

கல்முனை பிராந்தியத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா; மரண எண்ணிக்கை 131 ஆக உயர்வு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை மூவர் உயிரிழந்திருப்பதுடன் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்திருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

இன்று திங்கட்கிழமை (23) முற்பகல் 10.00 மணி வரையான 24 மணித்தியாலயத்தில் 105 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுள் ஆகக்கூடிய தொற்றாளர்கள் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 17 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அத்துடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 16 பேரும் சம்மாந்துறை பிரதேசத்தில் 15 பேரும் சாய்ந்தமருது பிரதேசத்தில் 13 பேரும் இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதன்படி கல்முனை பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5819 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் தற்போது 1142 பேர் வைத்தியசாலைகளிலும் கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 4014 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-

அத்துடன் மேற்படி காலப்பகுதியில் கொரோனா தொற்று காரணமாக மூவர் உயிரிழந்திருக்கின்றனர்.

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 52 வயது மற்றும் 74 வயதுதுடைய ஆண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது- என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை  34525 ஆக அதிகரித்துள்ளதுடன் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

metromirrorweb@gmail.com

யாழ் முஸ்லிம்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்தவர் பத்திரிகையாளர் லாபிர்..! -முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சிரேஷ்ட பத்திரிகையாளர் கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள், ஊடகங்கள் மற்றும் பொது அமைப்புகள் மூலம் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சோனகத்தெருவை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) காலமானார்.

இவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே என்.எம்.அமீன் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள் 1972ஆம் ஆண்டு ஒளி என்ற சஞ்சிகையை வெளியிட்டதில் இருந்து மரணிக்கும் வரை எழுத்து, கலை, இலக்கியம், பத்திரிகைத்துறை மற்றும் சமூக சேவைகளில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் தமிழ் தேசிய பத்திரிகைகள் பலவற்றின் பிராந்திய செய்தியாளராகவும் எமது முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு கலாசார, பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் கலாபூஷணம் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் சாமஶ்ரீ, தேசகீர்த்தி, ஊடகச்சுடர், நிழல்படத் தாரகை போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

யாழ் மானிப்பாய் வீதி, பெரிய முஹிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் யாழ்- கிளிநொச்சி சம்மேளனத்தின் பிரதிச் செயலாளராகவும் கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர், பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்டேஷன் எனும் அமைப்பின் மூலமும் அகில இலங்கை முஸ்லிம் லீக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தியும் பல சமூகப் பணிகளையாற்றி வந்துள்ளார்.

யாழ். முஸ்லிம் கலாசார மஜ்லிஸ் மூலம் செஞ்சிலுவைச் சங்கம், பாமிஸ் நிறுவனம் போன்றவற்றின் அனுசரணையுடன் அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன் நிறைய சமூகத் தொண்டாற்றியுள்ளார்.

அத்துடன் ஜனாஸா நலன்புரிச் சங்கம் ஒன்றை உருவாக்கி, ஜனாஸா நல்லடக்கப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்து வந்துள்ளார்.

1990ஆம் ஆண்டு யாழ்ப்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது தானும் குடும்பத்தினருடன் அகதியாக வெளியேறி, மாவனல்லையில் குடியேறிய போதிலும், தொண்டு நிறுவனங்களின் உதவிகளை இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்துள்ளார்.

யாழ் மண்ணில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முஸ்லிம் ஊடகவியலாளர்களே இருந்து வருகின்ற நிலையில், யாழ் முஸ்லிம்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த பத்திரிகையாளர் எம்.எல்.லாபிர் அவர்களின் சமூகப் பங்களிப்பு என்பது மிக அளப்பரியதாகும்.

யாழ் முஸ்லிம்களினதும் ஏனைய பிராந்திய முஸ்லிம்களினதும் இணைப்புப் பாலமாகவும் தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்துக்கான உறவுப் பாலமாகவும் திகழ்ந்த இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.

வல்ல இறைவன், அன்னாரது சகல பாவங்களையும் மன்னித்து, அவரது நற்செயல்களை பொருந்திக் கொண்டு பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறோம்- என்று என்.எம்.அமீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

metromirrorweb@gmail.com

கல்முனை பொலிஸ் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட 08 கொரோனா தொற்றாளர்கள்..! சுற்றிவளைப்பில் அகப்பட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதி..!


(அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் உட்பட அங்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வருகை தந்திருந்த பொது மக்கள் உட்பட 100 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரண்டு பொலிஸார் மற்றும் 06 பொதுமக்கள் உட்பட 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

அதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கல்முனை, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் தேவையின்றி வீதிகளில் நடமாடுவோர் சுற்றிவளைக்கப்பட்டு, அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 03 நாட்களாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி, அத்தியாவசிய தேவை எதுவுமின்றி எவரும் தமது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என கண்டிப்பாகக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.



metromirrorweb@gmail.com

தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும்; கல்முனை மாநகர சபை அறிவிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)


கல்முனை மாநகர சபை எல்லையினுள் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் என மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் சுகாதாரப் பிரிவினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் மதஸ்தலங்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகள் யாவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியிலேயே கொட்டப்பட்டு வருகின்ற நிலையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக தற்போது தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரமே அங்கு கொட்டுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையினால், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை ஒரு பையிலும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் உக்க முடியாத பொருட்களை வேறொரு பையிலுமாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது.

2021-08-22ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இப்புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தொடர்ந்தும் வினைத்திறனுடன் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

அத்துடன், மாநகர சபையின் குப்பை சேகரிப்பு வாகனங்கள் அனைத்து வீதிகளுக்கும் கிரமமாக வருகின்ற போதிலும் சிலர் பொறுப்பற்ற முறையில், சமூக உணர்வின்றி, வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். இவ்வாறான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்- என அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

metromirrorweb@gmail.com

Saturday, August 21, 2021

ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து உறங்கிப் போன கல்முனை நகரம்..!


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நோற்று 20.08.2021 இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரைக்கும் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதான நகரம் இன்றைய தினம் இவ்வாறு உறங்கிப்போய் கிடந்தன.

இதேவேளை கல்முனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் வர்தக நிலையங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய் கிடந்தது.

பொலிசார் பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்தியவசிய தேவைகளுக்கான அனுமதி பத்திரத்தோடு பயணித்தவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.




Friday, August 20, 2021

ஒரு வாரத்திற்கு நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராகுவதில்லை என கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்..!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

நாளை 21 தொடக்கம் எதிர்வரும் ஒருவார காலத்திற்கு நீதிமன்றத்தின் எந்த ஒரு வழக்கிலும் ஆஜராக போவதில்லை என கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.றமீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல், கல்முனை பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வருகின்ற சந்தேகநபர்கள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.கொரோனா தொற்று நோயின் தீவிரத் தன்மையை கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த விடயம் குறித்து நீதிமன்ற கௌரவ நீதவான்களுக்கும் பொலிஸாருக்கும் எழுத்து மூலமான தகவல் ஒன்றையும் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, August 17, 2021

அப்பாவி ஆப்கன் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது..!

புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை" என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது, இலங்கையில் ஒரு "ஒருநாள் செய்தி". அவ்வளவுதான். இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்த வில்லை. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும். இதுவே ஆப்கன் மக்களின் உடனடி தேவையான நிம்மதியை பெற்றுத்தரக்கூடிய, உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்தும்.

இடைக்காலத்தில் வந்து போன தலிபான்களின் ஆட்சியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை. ஆகவே தமது மக்களை நேசிக்கும் பொறுப்புள்ள ஆட்சியாளராக தம்மை மாற்றிக்கொள்வதும், காட்டுவதும்தான், ஆப்கனை ஆக்கிரமித்திருந்த வல்லரசுகளுக்கு தலிபான்கள் தரக்கூடிய தக்க பதில் ஆகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மனோ எம்பி இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஆப்கன் மக்களுக்கு உரிமை இருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக முதலில் அன்றைய சோவியத், பின்னர் இன்றைய அமெரிக்கா என்ற இரண்டு வல்லரசுகளின் விளையாட்டு திடலாக ஆப்கன் ஆகியது.

தலிபான், முஹாஹிஜிதீன்களின் நிர்மாணத்திற்கே அமெரிக்கர் தான் பிள்ளையார்-சுழி போட்டனர்.

ஆனால், இடைக்காலத்தில் வந்து போன தலிபான்களின் ஆட்சியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை. அனைத்துலகம் ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமை பட்டயத்தை மிகவும் ஆவேசமாக தலிபான்கள் மீறினார்கள். அனைத்துமே மேற்கத்திய ஊடக அவப்பிரசாரம் என்று அவர்கள் இன்று பூசி மெழுக முடியாது.

எனினும் இன்று காலம் அவர்களுக்கு பாடம் படிப்பித்து இருக்கும் என நம்புவோம். வல்லாதிக்க நோக்கங்களுக்கு வெளியே தம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க அப்பாவி ஆப்கன் மக்களுக்கு இருக்கின்ற உரிமையை, முதலில் ஆப்கன் ஆட்சியாளர்கள்தான், அவர்கள் எவராக இருந்தாலும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும்.

சமூக நீதி, சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செய்வதற்குமான ஆப்கன் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஆப்கன் மக்களுக்கு, இது "நம்ம ஆட்சி" என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும்.

நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று, கடந்த 20 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கன் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்த கூடாது. இல்லா விட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது.

ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம். அப்பாவி ஆப்கன் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது.

"புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை" என்று தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது, இலங்கையில் ஒரு "ஒருநாள் செய்தி". இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்த வில்லை. கடந்த இடைக்கால தலிபான் ஆட்சியில், "பாமியன்" உலக பெளத்த மரபுரிமை சின்னங்கள் குண்டால் தகர்க்கப்பட்டமை உண்மைதானே.

இது போன்ற ஆவேச முட்டாள்தனங்களை செய்யாமல் ஆப்கன் மக்களின் உடனடி தேவையான நிம்மதியை பெற்றுத்தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்த தலிபான்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். தமது மக்களை நேசிக்கும் பொறுப்புள்ள ஆட்சியாளராக தம்மை மாற்றிக்கொள்வதும், காட்டுவதும்தான், ஆப்கனை ஆக்கிரமித்திருந்த வல்லரசுகளுக்கு தலிபான்கள் தரக்கூடிய பதில் ஆகும்.

நாட்டில் மேலும் 171 பேர் கொரோனாவுக்கு பலி..!


நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,434 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக அதிகரித்துள்ளது.

பேரழிவுக்கு முன்னர் நாட்டை முடக்குங்கள்; மருத்துவ நிபுணர்கள் சங்கம் மன்றாட்டம்..!


இலங்கையில் கொரோனாவின் பரவல் பேரழிவு நிலையை அண்மித்துவிட்டது.  செயலற்று இருப்பதை விட தாமதமாகவேனும் செயற்படுவது நன்று. எனவே, பேரழிவு நிலைக்குச் செல்லும் முன்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு மீண்டும் ஒரு முறை நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும் அரசிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் எழுதியுள்ள ஒரு திறந்த மடலிலேயே மருத்துவ நிபுணர்களின் சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மருத்துவ நிபுணர்களின் சங்கத்தினராகிய நாங்கள் கொரோனா வைரஸின் டெல்டா திரிபானது வேகமாகப் பரவுவதால் ஏற்படக்கூடிய அழிவு பற்றி உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை மருத்துவ சங்கம், சுகாதாரப் பரிசோதகர்கள் அத்துடன் மற்றைய அனைத்து சுகாதார சேவை பணியாளர்கள் எல்லோரும் கொண்டுள்ள கருத்தையே கொண்டிருக்கின்றோம்.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து அரசாங்கம் தம்மைப் பாதுகாக்கும் என எவரும் நம்பத் தேவையில்லை; -சுய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கல்முனை முதல்வர்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

எமது நாட்டில் கொரோனா வைரஸ் வீரியமடைந்து தீவிரமாக பரவி வருகின்ற அபாய சூழ்நிலையில், பொது மக்கள் மிகவும் பொறுப்புணர்வோடு சுயகட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ளுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எமது நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி, தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றாளர்களினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. டெல்டா பிறழ்வடைந்த வைரஸ் கூட நாடு பூராவும் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். எமது அம்பாறை மாவட்டத்திலும் டெல்டா தொற்றுக்குள்ளான சிலர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

தலைநகர் கொழும்பிலுள்ள வைத்தியசாலைகளில் கட்டில்கள் இன்றியும் இட வசதியின்றியும் கொரோனா தொற்றாளர்கள் அங்கும் இங்குமாகக் கிடந்து அவஸ்தைப்படுகின்ற அவலங்களை ஊடகங்கள் வாயிலாக கண்டுகொண்டிருக்கின்றோம். கொரோனா தொற்றாளர்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஒட்ஸிசனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

நாட்டு நிலைமை இவ்வாறிருக்கையில் கடந்த சில நாட்களாக கல்முனைப் பிராந்தியத்திலும் கொரோனா தொற்று வீதமும் மரணிப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்திருப்பதைக் காண்கின்றோம். இதுவரை இப்பிராந்தியத்தில் 100 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் தொற்று வீதம் இந்த நிலையில் தொடருமாயின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும். எமது பகுதியிலுள்ள வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்களுக்கு போதிய கட்டில் வசதிகளின்றி கஷ்டப்படுகின்றனர்.

கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத அரக்கன் உயிர்களை வகை தொகையின்றி காவு கொண்டு வருகின்ற இந்த அபாய சூழ்நிலையை சமாளிக்க முடியாமல், உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் தடுமாறி நிற்கின்ற அரசாங்கம், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்துதம்மைப் பாதுகாக்கும் என பொது மக்கள் எவரும் நம்பத் தேவையில்லை.

ஆகையினால், இந்த அபாய நிலையை உணர்ந்து, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து, அவரவர் சுயமாக சுகாதார கட்டுப்பாடுகளைப் பேணி பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை மாநகர வாழ் மக்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

முடியுமானவரை வீடுகளில் இருந்து கொள்ளுங்கள். வேலைத் தலங்கள், சந்தைகள் மற்றும் கடைகளுக்கு செல்வோர் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். தேவையின்றி வெளியில் செல்வதையும் கடற்கரை, கடைத்தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவதையும் மரண வீடுகளுக்கு செல்வதையும் திருமண வைபவங்கள் மற்றும் விழாக்களில் பங்குபற்றுவதையும் முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுங்கள்.

இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதோர் இனியும் தாமதியாமல் அவசரமாக அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்- என்று கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்; 30க்கும் மேற்பட்ட நகரங்கள் ஸ்தம்பிதம்..!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் குறைந்தது 31 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 15 நகரங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, திருகோணமலை நகர மற்றும் மாநகர சபை, கேகாலை, சிலாபம், அம்பாறை, வென்னப்புவ, கெக்கிராவ, மொனராகலை, திவுலபிட்டிய, தெரணியகல, ஓரஸ்மங்கண்டிய, வாதுவை, பந்துரகொட, ரிக்கில்லககட ஆகிய பகுதிகளில்  வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அம்பலங்கொட, மரதகஹமுல்ல, வெயாங்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, பலபத்வல, உல்பத, தங்காலை, பதுளை, பலாங்கொடை, வலப்பனே, பண்டாரவளை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மாத்தளை பகுதிகளிலும் வியாபாரம் நடவடிக்கைகள ஸ்தம்பித்தன.

சில நகரங்களில் உள்ள கடைகளை ஒரு வாரத்துக்கும், மற்ற நகரங்களில் இரண்டு வாரங்களுக்கும் மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தளங்களை பதிவு செய்யுமாறு ஊடக அமைச்சு அறிவுறுத்தல்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாடளாவிய ரீதியில் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்து, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களின் பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளுமாறும்  ஊடக அமைச்சு கேட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.

இணையத்தளங்களை பதிவு செய்யும் நடைமுறை 2012ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருகின்றது. நாட்டில் இயங்கும் அனைத்து இணையத்தளங்களும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு வருடமும் அப்பதிவு புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் செல்லுபடித்தன்மை பற்றி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்காது என தகவலறியும் சட்டத்திற்கமைய தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பை தொடர விரும்பும் இலங்கை மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இதன்போது சர்வதேச மற்றும் பொதுநலவாய மட்டத்தில் செயற்படும் பல்கலைக் கழகங்களின் விபரங்கள் உறுதிப்படுத்தப்படும்.

எவ்வாறாயினும் அப்பல்கலைங்களினால் வழங்கப்படும் படங்களின் செல்லுபடித்தன்மை பற்றிய உறுதிப்படுத்தல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்க மாட்டாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டு பல்கலைகழகங்களால் வழங்கப்படும் சகல பட்டங்களும் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்பதை ஊகிக்க முடிகிறது என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை வானொலியில் நாளை முதல் மீண்டும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப நடவடிக்கை..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை வானொலி என்று அழைக்கப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை அலை வரிசைகளில் நாளை புதன்கிழமை (18) தொடக்கம் மீண்டும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை 102.1 மற்றும் 102.3 அலை வரிசைகளில் கடந்த 70 வருட காலமாக முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் தினமும் ஒலிபரப்பாகி வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் இந்த அலை வரிசைகளில் கல்விச் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் குறித்து புதிய ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலந்துரையாடப்பட்டதைத் தெடர்ந்து மீண்டும் இவ்வலை வரிசைகளில் வழமை போன்று முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய இணக்கம் காணப்பட்டிருப்பதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்படி அலை வரிசைகளில் தினமும் முற்பகல் 8.00 மணி தொடக்கம் மு.ப. 10.30 மணி வரையும் இரவு 8.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்தன. அதேவேளை 102.1 அலை வரிசையிலேயே முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணி வரை கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பிறை எப்.எம்.சேவை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சேவை மற்றும் பிறை எப்.எம். ஆகியவற்றின் மூலம் விளம்பரங்கள் ஊடாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் பெரும் தொகை வருமானம் கிடைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, August 16, 2021

கூட்டுத்தொழுகை, ஜும்ஆ போன்றவற்றுக்குத் தடை..!

பள்ளிவாயல்களில் ஐவேளை கூட்டுத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகளுக்கு வக்பு சபையினால் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிகபட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் வக்பு சபை அறிவித்துள்ளது.