Monday, August 23, 2021

தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும்; கல்முனை மாநகர சபை அறிவிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)


கல்முனை மாநகர சபை எல்லையினுள் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் என மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் சுகாதாரப் பிரிவினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் மதஸ்தலங்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகள் யாவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியிலேயே கொட்டப்பட்டு வருகின்ற நிலையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக தற்போது தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரமே அங்கு கொட்டுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையினால், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை ஒரு பையிலும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் உக்க முடியாத பொருட்களை வேறொரு பையிலுமாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது.

2021-08-22ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இப்புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தொடர்ந்தும் வினைத்திறனுடன் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

அத்துடன், மாநகர சபையின் குப்பை சேகரிப்பு வாகனங்கள் அனைத்து வீதிகளுக்கும் கிரமமாக வருகின்ற போதிலும் சிலர் பொறுப்பற்ற முறையில், சமூக உணர்வின்றி, வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். இவ்வாறான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்- என அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

metromirrorweb@gmail.com

No comments:

Post a Comment