Friday, August 20, 2021

ஒரு வாரத்திற்கு நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராகுவதில்லை என கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்..!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

நாளை 21 தொடக்கம் எதிர்வரும் ஒருவார காலத்திற்கு நீதிமன்றத்தின் எந்த ஒரு வழக்கிலும் ஆஜராக போவதில்லை என கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.றமீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல், கல்முனை பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வருகின்ற சந்தேகநபர்கள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.கொரோனா தொற்று நோயின் தீவிரத் தன்மையை கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த விடயம் குறித்து நீதிமன்ற கௌரவ நீதவான்களுக்கும் பொலிஸாருக்கும் எழுத்து மூலமான தகவல் ஒன்றையும் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment