Tuesday, August 17, 2021

இலங்கை வானொலியில் நாளை முதல் மீண்டும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப நடவடிக்கை..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கை வானொலி என்று அழைக்கப்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை அலை வரிசைகளில் நாளை புதன்கிழமை (18) தொடக்கம் மீண்டும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை 102.1 மற்றும் 102.3 அலை வரிசைகளில் கடந்த 70 வருட காலமாக முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் தினமும் ஒலிபரப்பாகி வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் இந்த அலை வரிசைகளில் கல்விச் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் குறித்து புதிய ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலந்துரையாடப்பட்டதைத் தெடர்ந்து மீண்டும் இவ்வலை வரிசைகளில் வழமை போன்று முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய இணக்கம் காணப்பட்டிருப்பதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்படி அலை வரிசைகளில் தினமும் முற்பகல் 8.00 மணி தொடக்கம் மு.ப. 10.30 மணி வரையும் இரவு 8.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்தன. அதேவேளை 102.1 அலை வரிசையிலேயே முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணி வரை கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பிறை எப்.எம்.சேவை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சேவை மற்றும் பிறை எப்.எம். ஆகியவற்றின் மூலம் விளம்பரங்கள் ஊடாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் பெரும் தொகை வருமானம் கிடைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment