-எம்.எஸ்.எம்.ஹனிபா-
காரைதீவு - மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அரபுக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகிய இரு உலமாக்களும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறைக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அறபுக் கல்லூரியின் அதிபர் ஆசிரியர் உட்பட 02 உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு ஏனைய 2 உதவியாளர்களும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது கடும் நிபந்தனையுடன் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர் இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment