Friday, December 27, 2024

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

இலங்கை நிருவாக சேவையின் மூத்த SLAS I அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஆளுநரால் இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்த அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கிவந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டும் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

10 வருடங்கள் உள்ளூராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் கல்முனை மாநகர சபை என்பவற்றை  மிளிரச்செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.

பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) கடமையாற்றினார்.

ஏ.எல்.எம். அஸ்மி ஒரு சிறந்த நிருவாகி, இலங்கை நிருவாக சேவையில் 20 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக  செய்துவரும் ஒருவராவார்.

-எஸ். ஜாபீர்

No comments:

Post a Comment